Tuesday, June 25, 2013

பனி விழும் மலர் வனம்....

பூக்களின் வண்ணங்கள், சுகந்த மணம், அழகு என்பன எம்மை அதன் பால் ஈர்த்து லயிக்கச் செய்கின்றன. பூக்களின் நறுமணங்களால் கவரப்பட்டு தேனீக்கள், வண்டுகள், பூச்சிகள், குருவிகள் அவற்றில் தேன் அருந்த வருகின்றன.

மகரந்த சேர்க்கையை பரவலாக்கி தமது இனத்தைப் பெருக்க தாவரங்கள் பூச்சிகளை கவரும் விதமாக பலவண்ணப் பூக்களையும் நறுமணத்தையும் உருவாக்குகின்றன. இதனால்தான் நாமும் மலர்களில் கிறங்கிப்போய் நிற்கின்றோம்.


இரவில் மலரும் மல்லிகை முல்லை மலர்கள் பூச்சிகளைக் கவர்ந்து இழுக்கும் அதீத வாசனையைத் தருகின்றன.  பூ இதழ்களில் உள்ள எசன்ஸ் ரசாயனப் பொருள் அதீத மணத்தைத் தருவதால் தொலைவில் உள்ள பூச்சிகளும் கவர்ந்து வருகின்றன.


மஞ்சள், வெள்ளை, சிவப்பு, நீல, பலவண்ண மலர்கள் பூத்து நிரம்பிய மலைகள், ஓக்கிட் காடுகள், பூந்தோட்டங்கள் அழகில் மயக்குகின்றன.


குறிஞ்சி மலைகள், பிச்சி, ரோஜா, என ரம்யமான இனிய பூக்களின் மணம் காற்றில் மிதந்து வந்து மனதிற்கு இதம் தருகின்றன.



மூதூர் பிரதேசத்தில் மல்லிகைத்தீவு என்று அழைக்கப்படும் இடம் இருக்கின்றது.

நானிலங்கள் மலர்களின் பெயர்களால் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

உலகில் அதிகமாக பூக்கள் மலர்வது நெதர்லந்து நாட்டில்தான்.


வசந்த காலத்தில் இலைகள் புதியதாகத் தோன்றி வண்ண மலர்களைப் போல தோற்றம் தருகின்றன.


புதிய மாவிலைக் கொழுந்து இலைகள் சிவந்த நிறத்தை உடையனவாக தோன்றுகின்றன. பொதுவாக கொழுந்தான புதிய இலைகள் குருத்துப் பச்சை, சிவப்பு ஓரென்சு நிறங்களாக இருக்கின்றன.

இவற்றில் கரோட்டினொயிட் எனும் நிறமிகள் காணப்படுவதால் இலைகள் அவ்வாறு தோன்றுகின்றன. இந்த நிறங்கள் பூச்சித் தாக்கத்தையும் தடுக்கின்றன. இதனால் கொழுந்துகளுக்கு பாதுகாப்பு ஏற்படுகிறது. சூரிய ஒளியின் தாக்கத்தையும் குறைக்கின்றது.

வசந்தகாலத்தில் மலர்கண்காட்சிகள் நடாத்தி மகிழ்கிறார்கள்.


பூக்களின் மணங்கள் ஐந்து வகையாக இருக்கும் என்கிறார்கள் தாவரவியல் வல்லுனர்கள். இன்டோலாயிட் மணங்கள், அமினொயிட் மணங்கள், பென்சொலாட் மணங்கள், மெழுகு மணங்கள், டெரபினோயிட் மணங்கள் எனப்படும். அனைத்துத் தாவரங்களின் பூக்களும் இவற்றில் அடங்கும்.


இலங்கைக்கு உரித்தான இனங்களாக 1025 பூக்கும் தாவரங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சிங்கராச வனத்தில் மட்டும் 820 பூக்கும் தாவர இனங்கள் இருக்கின்றன.


இலங்கையில் பெரதேனியா, ஹக்கல, கம்பஹாவில் உள்ள ஹெனரத்கொட ஆகிய இடங்களில் தாவரவியல் பூங்காக்கள் உள்ளன.


இந்த மூன்றும் பிரிட்டிஸ் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன. ஹெனரத்கொடவில் 1876 ம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தாவரவியல் பூங்காவே பிரிட்டிஸ்காரரால் ஆரம்பிக்கப்பட்ட கடைசி மலர் வனம் ஆகும்.


மிரிஜவில Mirijjawila எனும் இடத்தில் வரட்சி மண்டல பூந்தோட்டம் உள்ளது. இது கொழும்பு கதிர்காமம் பாதையில் ஹம்பந்தோட்டவில் உள்ளது. இடது புறம் மத்தள சர்வதேச விமான தளமும், வலது புறம் ஹம்பந்தோட்ட துறைமுகமும் உள்ளன. 300 ஏக்கர் விஸ்தாரமுள்ள இப் பூங்காவனம் இன்னும் வளர்ச்சிடைந்து கொண்டிருக்கிறது.

இயற்கையை ரசிப்போம் வாழ வழிவகுப்போம். வண்ணமலர்களையும் நாட்டி மனதுக்கு புத்துணர்சி பெறுவோம்.

மாதேவி

Wednesday, May 22, 2013

சிவனார் பாதம் பதித்த சிவனொளி பாத மலை

சிவனொளி பாத (Sri pada- Adam's Peak ) பருவகால யாத்திரை இம்மாதம் 24 வெசாக் பௌர்ணமி தினத்தன்று முடிவடைகிறது. சமன் தெய்வமும் உபகணங்களும் நல்ல தண்ணி நகரிலிருந்து இரத்தினபுரியில் உள்ள பெல்மதுல்ல ரஜமஹா விகாரைக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.

எதிர் வரும் டிசம்பர் பௌர்ணமி தினத்தில் மீண்டும் யாத்திரை காலம் ஆரம்பிக்கும். நிரத்தரமாக வெளிச்சம் தரக் கூடிய மின்குமிழ்கள் மலையின் உச்சியில் வெளிச்ச வீடு போல பொருத்தப்பட உள்ளன என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.

இவ் வருடம் பெப்ரவரியில் குறிப்பிட்ட ஒருநாளில் மட்டும் 4 இலட்சத்துக்கும் அதிகமான யாத்திரீகர்கள் தர்சிக்கச் சென்றிருக்கின்றார்கள்.

Thanks :- goldensrilanka.com
திருமணமாகிய போது கணவர் வேலை புரிந்த இடம் பதுளை மாவட்டம். ரயிலில் செல்லும்போதே ஹட்டனுக்கு அப்பால் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உயர்ந்து நின்ற மலைச் சிகரம் ஆசையைத் தூண்டிவிட்டது. அங்கிருந்தபோதே செல்ல வேண்டும் என நினைத்திருந்தேன்.

சேர்ந்து செல்வதற்கு ஒருவரும் முன்வரவில்லை. இவ்வளவு தூரம் ஏறமுடியாது என்றார்கள் சிலர். எனது ஆசையும் நிறைவுறாது தொடர்ந்தது. பல வருடங்களின் பின்புதான் ஒரு சித்திரை வருடப் பிறப்பு செல்வதற்கான நேரம் கிட்டியது. மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. துணைக்கு இப் பயணத்தில் எங்கள் சகோதரர் குடும்பத்தாரையும் நாத்தனார் குடும்பத்தாரையும் கூட அழைத்துச் சென்றோம்.

எல்லோருமாக 12 பேர் ஒரு வாகனத்தில் செல்ல தயார்ப்படுத்தியிருந்தார் கணவர். கொழும்பிலிருந்து ரம்பொடை ஆஞ்சனேயர் கோயில் சென்று தர்சித்தோம். அங்கிருந்து நுவரெலியா சென்று பகல்பொழுது நகரைச் சுற்றிவிட்டு சாயந்திரம் ஹட்டன் மஸ்கலியா வழியாக சிவனொளிபாத மலை சென்றோம். மாலை ஆகிவிட்டது. விடுதியில் பொருட்களைப் போட்டுவிட்டு குளித்து உணவருந்தி மலை ஏறுவதற்கான குளிர் தொப்பி, ஆடைகள் அணிந்து தயாராகினோம்.

அடிவாரத்தில் நின்று மலையைப் பார்ததும் திகைத்துத்தான் போனோம். மின்னொளியில் வானத்தைத் தொடுமாறு நின்றது. அடிவாரக் கடைகளில் பத்திக் குச்சுகள், தீப்பெட்டி, அட்டைக் கடிக்குத் தப்ப சித்தாலேப தைலம் எல்லாம் வாங்கிக் கொண்டோம். கடைக்காரர் நூல் பந்தும் கொடுத்தார்கள். வாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பிதோம். அல்ல ஏற ஆரம்பித்தோம்.

கடல் மட்டத்திலிருந்து 2243 மீட்டர் ( 7359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலை. சப்ரஹமுவ மத்திய மாகாணங்களுக்கு இடையேயான எல்லையில் அமைந்துள்ளது. சிவன் நடனமாடும்போது இமயமலையில் ஓர்காலையும் சிவனொளிபாத மலையில் ஓர்காலையும வைத்தார் என்பது இந்துக்களின் ஐதீகம்.

மலை உச்சியில் இருக்கும் 1.8 மீட்டர் அளவான பாறையில் அமைந்துள்ள பாதத்தை இந்து மதத்தவர்கள் சிவனின் பாதச் சுவடியாகவும், பௌத்த மதத்தவர்கள் கௌதம புத்தரின் பாதச்சுவடியாகவும், கிறீஸ்தவர்கள் சென்ட் தோமஸ் பாதச்சுவடியாகவும், இஸ்லாமியர்கள் ஆதாமின் பாதச்சுவடியாகவும் சொல்லி வழிபட்டு வருகிறார்கள்.

அதி உயர் மலை உச்சி என்பதால் பருவகால யாத்திரை மட்டும் செல்ல முடியும்;. நல்ல தண்ணி என்ற இடத்திலிருந்து மலை உச்சிக்குச் செல்வதற்கான பாதை ஆரம்பிக்கிறது. வெள்ளை உடைதரித்த வயது முதிர்ந்த மாது இரு கை கூப்பிய வண்ணம் பாடிக் கொண்டே தள்ளாத வயதிலும் படி ஏறிச் செல்வதைக் காண எமக்கும் கால்கள் விரைந்து சென்றன.

மதவேறுபாடின்றி சுற்றுலாப்ப பயணிகள் உள் நாட்டு மக்கள் என கூட்டம் கூட்டமாக ஏறிச் செல்வதைக் காணலாம். இடையிடையே வெளிச்சங்கள் அமைத்துள்ளார்கள். சிறு கோவில்கள் அங்கங்கே தரிசித்துக் கொண்டே செல்ல அமைந்துள்ளன. இருபுறமும் அடர்ந்த புதர்கள் மரங்கள் என இருக்க அங்கங்கே சீரில்லாப் படிகளும் வந்து ஏறுவதில் சிரமம் கொடுத்தன.

தாகசாந்திக்கு இடையிடையே சிறுகடைகளில் தேநீர் சிறு உணவு எனக் கிடைக்கின்றன. எம்மையும் முந்திக்கொண்டு  பெட்டிகளுடன் பாரத்தை சுமந்தபடியே ஏறிச் செல்கிறார்கள் சிலர்.

Thanks :- www.dailynews.lk 

பாதித்தூரம் அளவிற்கு ஏறிவந்துவிட்டோம். எங்களுடன் வந்தவர்களில் சிலர் இனிமேல் முடியாது திரும்பிப் போவோம் என்றுவிட்டார்கள். என்ன செய்வது என்று சங்கடமாக இருந்தது. எனக்கோ மனதில் ஏமாற்றம். இடையில்உள்ள கடையோரத்தின் இருக்கையில் தங்கியிருங்கள் முடிந்தவர்கள் மேலே சென்று வருவோம் என முடிவு எடுத்தோம்.

ஐந்து ஆறு பேர் ஏறத் தீர்மானித்தோம்.சற்றுப் படிகள் ஏறிச் சென்றுவிட்டோம். பின்னால் அழைக்கும் குரல் எல்லோருமே சேர்ந்து கொண்டார்கள். ஆறதலாக ஏறுவோம் எனச் சொல்லி அவர்களையும் அழைத்துச் சென்றோம்.

இடையிடையே மர இருக்கைகளாலான மர இருக்கைகளில் இருந்து கால்களுக்கு ஓய்வு கொடுத்து ஏறினோம். சற்று வெளிச்சமற்ற இருபுறமும் மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒருவர் அட்டைக் கடி என்றார். எமக்கும் பயம் தொற்றியது. பயத்தில் எங்கள் காலகளைப் பார்த்துக் கொண்டோம். கடித்தவரின் காலை விட்டு இறங்க மறுத்தது அட்டை. பத்திக் குச்சை ஏற்றி வைக்க அட்டையார் விழுந்துவிட்டார்.

சீமெந்துப் படிகளைத் தாண்டி இன்னும்மேலே ஏறிச் செல்கிறோம். மலையும் உயர்ந்து செல்வதால் படிகளும் நெருக்கமாகச் செல்கின்றன. ஏறுவோர் இறங்குவோர் என கம்பிக் கட்டினால் பிரிக்கப்பட்டிருந்தது பாதை.

Thanks:- chaise1kashmika.blogspot.com 

பாதை நீண்டே பல மைல்கள் உயர்ந்து செல்வது தெரிகிறது. அவ்விடம் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும். பயத்தில் தலையே சுற்றுகிறது.

இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே என முன்னேறுகின்றோம். மிகுந்த செங்குத்தான படிகள் இந்தா வந்துவிட்டோம் என நினைத்து வந்த வழியைத் திரும்பிப் பார்க்கின்றோம். நீண்ட அனகொண்டா பாம்பின் வால் போல பல மைல்கள் தூரம் பாதை இறங்கிச் செல்வது தெரிகின்றது. ஆரம்பத்தில் இருந்த விகாரைகோயிலும் தெரிகின்றது. இவ்வளவு தூரமா ஏறி வந்துவிட்டோம் என மலைப்புத்தான் ஏற்பட்டது. இன்னும் முன்நோக்கி கால் எடுத்து வைக்கின்றோம். எல்லோரும் களைத்தாகிவிட்டது.

இந்திய யாத்திரையில் ஏறிய திருக்கழுக்குன்றமலை, உச்சிப்பிள்ளையார், சரவணபெரகுல, இலங்கையிலுள்ள கதிர்காம கதிரமலை எல்லாமே சிறிய மலைக்குன்றுகள் சுலபமாக ஏறி இறங்கியிருந்தோம். இது அவற்றைவிட 4 - 5 மடங்கு தூரம் கூடியதாக எனக்குத் தெரிந்தது.

செங்குத்தாக படிகள் நெருக்கிக் கொண்டே வருகின்றன.

Thanks :- www.srilankaguardian.org
சிவ...சிவ... நீதான் அருளவேண்டும்; என்றவாறே ஏறுகின்றேன். இந்திய சுற்றுலா பிரயாணி ஒருவரும் ஓரிடத்தில்; எங்களுடன் சேர்ந்து கொண்டார். மூச்சு இளைக்க அளவளாவினோம். இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். இன்னும் சிறிது தூரம்தான என ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டே நெருங்கிய உச்சிப் படிகளில் மிகவும் சிரமமாகவே ஏறிக் கொண்டிருக்கிறோம்.

அவர் விடை பெற்று முன்னே செல்கிறார். நாம் எம் உறவினர்களுக்காகக் காத்து நிற்கிறோம். அனைவரும் சேரந்த பின்னர் மீ;ண்டும் ஏறத் தொடங்கினோம். சிறிது தூரத்தில் ஒரு தேநீர்க் கடை. எல்லோரும் களைப்பிற்கும் குளிரைப் போக்கவும் தேநீர் அருந்துவோம் என கடைக்குள் நுழைக்கின்றோம். குளிருக்கு இதமாக சுவையாக தேநீர் கிடைத்தது களைப்பும் நீங்கியது.

மேலே ஏறத் தொடங்குகிறோம். சிறிது தூரம் செல்லவும் அண்மிக்கிறது மலை உச்சி. ஆகா! மகிழ்ச்சியோ மகிழ்ச்சி அனைவர் முகங்களிலும். கோயில் கட்டிடங்கள் தெரிகின்றன. கீழ் தட்டு மண்டபத்தில் மக்கள் இளைப்பாறி இருக்க மண்டபம் இருக்கிறது. பலர் உறங்கிக் கொண்டிருந்தனர். சிலர் நிலத்தில் இருந்து கொண்டிருந்தனர். நாங்கள் மேலே உள்ள மண்டபத்தில் அமைந்துள்ள பாதச் சுவடியைத் தரிசிக்கச் சென்றோம். புத்தர் படம் சிவன் படம் இரண்டும் வைக்கப்பட்டிருந்தன.

1890 இல் இருந்த பழைய கோயில் படம் கீழே.

Thanks :- http://srilankamemories.blogspot.com/2010/07/1890-scowen-sripada.html
பாதத்தை ஒட்டி மஞ்சள் அங்கி வைத்து தாமரைப் பூக்களால் அர்ச்சித்து இருந்தார்கள். சிவனை நினைத்து நாமும் தொட்டு ஆசை தீர வணங்கினோம். வெட்டிய பழத் தட்டுக்களை கைகளில் ஏந்திய வண்ணம் கொண்டு வந்து வைத்து வழிபட்டு எடுத்துச் செல்கிறார்கள்.



கீழ் மண்டபத்திற்கு இறங்கி வருகின்றோம். மண்டபத்து மூலையில் பெரிய மணி ஒன்று கட்டப்பட்டுள்ளது. செல்வோர் அதை அடிக்கின்றார்கள். எத்தனை தரம் செல்கின்றோமோ அத்தனை தரம் அடிக்க வேண்டும் என்கின்றார்கள். மண்டபத்தி;னுள்ளே செல்ல முடியவில்லை. நிறைந்த ஆட்கள் வாயிலோடு ஒட்டியே இருக்க இடம் கிடைத்தது.

குளிரும் சொல்லி முடியாது. பலமாக வீசும் காற்று நடுக்கத்தைக் கொடுத்தது.'மந்தியும் குளிரில் நடுங்கி குந்தியிருக்கும்'' என நாமும் ஒடுங்கி உறைந்து இருந்தோம். நடுங்கும் குளிரில் சூரிய விடியலுக்காகக் காத்திருந்தோம். விடியல் ஆரம்பிக்கும் முன்பே வெளியே படிகளில் வந்து ஓரமாக இடங்களைப் பிடித்துக் கொண்டோம். குளிரும் தந்தியடிக்கத் தொடங்கியது. உடலே விறைத்துவிட்டது. அதை யார் பொருட் படுத்தியது. உதயம் பாரத்தால் ஆயிற்று என ஆவலுடன் கிழக்கு வானைப் பார்த்தபடி இருந்தோம்.

இருண்ட வானின் அடியில் மஞ்சள் ஓரஞ் வண்ணங்கள் தெரிய ஆரம்பித்தன. செம்பந்து மெதுவாக மேல் எழத் தொடங்கியது அதன் அழகைச் சொல்லி முடியாது. செங்கோள் மஞ்சள் வர்ணமாகி இளம்கதிர்களைப் பரப்பி மேல் எழுந்து வருகின்றான். மகிழ்ச்சியில் கைதட்டி அனைவரும் ஆர்ப்பரித்தோம்.

நீங்களும் வீடியோவில் சூரிய உதயத்தைப் பாருங்களேன்..

இது போல் காட்சியை வாழ்நாளில் எங்குமே கண்டதில்லை. கண்கள் கூசுமாப் போல கதிர்கள் வீச மக்களும் மலை உச்சியிலிருந்து விரைந்து இறங்க நாங்களும் எழுந்து இறங்கி வருகின்றோம் பல மைல்தூரங்கள்.

வாழ்க்கையில் ஓரிரு தடவைதானும் சிவனொளிபாதமலையை தர்சிப்பது இயற்கை காட்சிகளுடன் பலஅனுபவங்களையும் மிகுந்த மகிழ்ச்சியையும் தரும்.

வி  ஜ பிகள் ஹெலியில் சென்று மலையில் இறங்கக் கூடியதாக ஹெலி இறங்கு தளம் அமைக்கலாம் என திட்டம் போடப்பட்டுள்ளது. இது நடந்தால்

ஒருகாலத்தில் பொதுமக்களுக்கும் இலகுவாக செல்ல வசதி வரலாம் என நம்பிக்கை கொள்வோம்.

இங்கு இணைக்கப்பட்டவை இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் ஆகும். நாம் எடுத்த புகைப்படங்கள் ஹாட் டிஸ்கிலிருந்து விழுந்து தற்கொலை செய்துவிட்டன.

:- மாதேவி -:
0.0.0.0..

Friday, April 19, 2013

கங்குல் கரைய கவி இனம் பாட


உலகில் வாழும் பறவை இனங்களில் அறிவுத் திறன் மிக்கது காகம்.  இவற்றில் உள்ள சிறப்பு அம்சம் எந்தப் பருவநிலையுள்ள கண்டங்களிலும் வாழும் திறன் பெற்றவை.

தென்னமெரிக்கா மற்றும் பெருங்கடலுக்கு அப்பால் காணப்படும் சிறு தீவுகளைத் தவிர உலகெங்கும் காணப்படும் பறவை இது.

குட்மோனிங்  இன்னுமா தூங்குகிறாய்

Carvidae (கார்விடே) குடும்பத்தைச் சார்ந்தது இது. இவற்றில் நாற்பது இனங்கள் இருக்கின்றன. பொதுவாக கரிய நிறம் கொண்டவை.

ஆனால் அரிதாக வெண் நிறக் காக்கைகளும் இருக்கின்றன.

Thanks :- www.tumblr.com
குப்பைகளையும் வீணான உணவுப் பொருட்களையும் உண்டு வாழும் பறவையினம்.

சுற்றுப்பற சூழல் பாதுகாப்பிலும் முக்கிய பங்கு இதற்கு இருக்கின்றது. 'தோட்டி' என்ற பெயரும் இதற்கு உண்டு.

வயல்களில் உள்ள பூச்சிகளையும் உண்பதால் 'உழவர்களின் நண்பன்' என்றும் அழைக்கிறார்கள்.

கொக்குகளுடன் நண்பனாக வயலில் பூச்சி புளு தேடல்

ஆசியாவில் பெரும்பாலும் இருப்பவை கரியன் காகம், வீட்டுக் காகம் ஆகியவையே.

அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பிய இனங்கள் பலவும் இருக்கின்றன.

தமிழர் நம்பிக்கையில் விரத நாட்களில் காக்கைக்கு உணவிட்டு உண்ணும் பழக்கம் இருக்கின்றது. அவுஸ்திரேலிய பூர்வகுடி மக்களும் காக்கைகளை கலாசாரத்தின் சின்னமாகவும் மூதாதையரின் அம்சமாகவும் கருதினார்கள்.

பஜ்ஜி சுட்ட ஓர்நாளில் அடுப்பில் வேகும் போதே மணத்தில் அடுக்களை பல்கனியில் வந்து கூப்பிடத் தொடங்கிவிட்டார்கள் இருவர். ஒருவர் பஜஜியுடன் ஓடிவிட்டார் மற்றவர் சாப்பிடுகின்றார்.  

சிவ பூசைக்காக அகத்திய முனிவர் கொண்டு வந்து கங்கை நீரை வைக்க விநாயகர் காகமாக உருவெடுத்து வந்து கமண்டலத்தைத் தட்டிவிட நீர் வழிந்து ஓடி காவிரி ஆறு ஆகியது என புராணங்கள் சொல்கிறது. காகங்கள் பற்றி இலக்கியத்திலும் வந்திருக்கின்றன.

தேங்காய் சாப்பிட ஆசையாக இருக்கு எனக்கும் தாவேன்

'கில்காமேஸ்'  என்ற நூல் காகங்கள் பற்றியது உலகின் பழமையான நூலாகக் கருதப்படுகின்றது. ஐரிஸ் புராணங்களின் படி காகங்கள் போர் மற்றும் இறப்பிற்கான 'மாரிகின்' என்ற கடவுளாகக் கருதப்படுகின்றது.

சனிபகவானின் வாகனமாகவும் கொள்கிறார்கள்.


மத்திய ஆசியாவில் முதன் முதலில் தோன்றியதாக கருதுகிறார்கள். பின்னர் வட அமெரிக்கா ஆபபிரிக்கா ஐரோப்பா அவுஸ்திரேலிய நாடுகளுக்கு பரவியதாகக் கூறப்படுகிறது.

காக்கைகள் மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும் திறன் உள்ளவையாக இருக்கின்றன. இவை உணவைப் பகிர்ந்து உண்ணும் குணத்தை உடையன.
இருபது வருடங்கள் வரை உயிர் வாழக் கூடிய பறவை.
கூட்டாக உண்டு மகிழ்வோம்

பெண் காகங்கள் மூன்று வருடத்திலும், ஆண்காகாங்கள் ஐந்து வருடத்திலும் பருவமடைந்து கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.

Thanks :- commons.wikimedia.org

பெரும்பாலும் ஏப்ரல் மாதத்தின் பின்பே முட்டை இடுகின்றன. முட்டைகள் நீல பச்சைப் பின்னணியில் மண்நிறப் புள்ளிகள் கொண்டவையாக இருக்கும். நாலு ஐந்து முடடைகள் இடும்.

nature.gardenweb.com
முட்டை வெளி வந்து 6 வார காலத்தில் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கத் தயாராகிவிடும்.

அமெரிக்கக் காடுகளில் வாழ்ந்த காகம் அதி கூடுதலாக முப்பது வருடங்கள் வாழ்ந்ததாக சொல்கின்றார்கள்.

கிளிகளைப் போல் காகங்களும் மனிதக் குரலில் பேசும் திறன் பெற்றவை எனச் சொல்லப்படுகிறது.

சொல்லேன் என்ன வாங்கித்தர ஜஸ்கிறீமா சோடாவா மைலோவா.

அமெரிக்க மீன்வள உயிரினங்கள் சேவை மையத்தில் தகவலின் படி
ஹவாயன் காகம், மரியனா காகம் உலகின் அழிந்து போன உயிரினங்களின் வகைகளில் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளனவாம்.

இலங்கையில் 'காக்கைத் தீவு' என்ற இடமும் இருக்கின்றது.

பாலர் பாடல்களில், கதைகளில் காக்கையாருக்கு முக்கிய இடம் உண்டு.

'அண்டங்காக்கா கொண்டைக்காரி'... என்று பாடத் தோன்றுகிறதா.

நவீன கால புத்திசாலிக் காக்காவை பாருங்கள் ..........


0.0.0..0.

Thursday, April 4, 2013

தெஹிவல மிருகக் காட்சிசாலையில் மிருகங்கள், ஊர்வன.

காட்டில் இயற்கையுடன் மிருகங்களைக் காண்பது மிகுந்த அழகைத்தரும். எவ்வேளையும் காட்டுக்குப் போக  முடியுமா? அதுவும் எல்லாவற்றையும் பார்க்க முடியுமா?  எல்லா மிருகங்களும் ஓர் இடத்தில் இருந்தால் நிகர் ஏது அதுதான் கூட்டாக இருந்து விட்டார்கள் இங்கே.

நாங்கள் நகருக்கு வந்துவிட்டோம் நீங்கள் எல்லோரும் காட்டுக்குப் போங்கள்  என்று எம்மைப் பார்த்து  கேட்கின்றன.


யாரங்கே நான்தான் வீட்டுக்கு ராஜா வாக்கும் நகரு அப்பாலே


துணிவிருந்தால் கிட்டே வா பார்த்து விடுகின்றேன்.

லஞ்ச் சாப்பிடுகின்றேன் நிமிர்ந்து பார்க்க மாட்டேன்.



நான் வெளியே வரமாட்டேன் முடிந்தால் பிடித்துக்கொள்.


எனக்கு ஹைதராபாத் பிரியாணிதான் வேண்டும்.


 டான்ஸ் ஆட வருகின்றாயா.
மின்னேரிய வன சரணாலயத்தில் யானைகள் மத்தியில் நாம்


 எங்களைப்போல ஒற்றுமையாக இருக்க பழகிக்கொள்ளுங்கள்.


 எப்படி என்னுடைய ஒய்யாரம்

புள்ளிச் சட்டை போட ஆசையாக இருக்கின்றதா.


 தன்னந்தனியே


எப்படி வெளியே வரலாம்

 நாம இருவர்

 கூட்டுக் குடும்பமாக இருக்க கத்துக்குங்கள்.

நான் ரெடி இப்போ எடுத்துக்கோ



என்னுடைய ஊஞ்சலாட்டத்தை பாரு



வெள்ளைக்காரன் நானே



ஒட்டகத்தை கட்டிக்கோ பாடல் கேட்டதில்லையா


 விஐ பி வருகின்றார் வரவேற்கின்றோம்.



தனியே இருக்க பயமாக இருக்கிறது துணைக்கு கூட இருக்க வாங்களேன்.



ஹெல்மட் அணிவது முக்கியம் என்னைப் பார்த்து போட்டுக்கொள்ளுங்கள்.



என்னுடைய வீட்டைபார்த்து கட்டிக்கொள்ளுங்கள்.


 என்னைப் போல் நீந்துங்கள்.


கண்ணாடியுக்குள்ளால் வருவேன்


கார் சில்லு வேண்டுமா எடுத்துக்கோ


 ஓட்டப்போட்டிக்கு பயிற்சி எடுக்கின்றோம் யாரங்கே குழப்புவது


எனக்கான உணவை நானே  சுமந்துகொள்வேன்..

மின்னேரியா தேசிய வனத்தில் நாம்

-: மாதேவி :-