Monday, September 16, 2013

சுட்டி முயலாருக்கு குட்டை வால் வந்தது எப்படி? - பாலர் கதைகதை கேட்க வாறீங்களா?  குழந்தைகளே! ஒரு இரகசியம் சொல்லப் போகிறேன்.


அடர்ந்த காடு நெடுது உயர்ந்து வானை முட்டும் மரங்கள். பரந்து விரிந்து கிளை பரப்பி நிற்கும் கூடல்கள்.

அவற்றின் கீழே சிறு மரங்கள். படரும் கொடிகள், புதர்கள் புல்லுகள் முட்செடிகள் என நிறைந்து இருக்கும் இடம். மிருகங்கள். பறவைகள், ஊர்வன என்பனவற்றின் வீடும் அதுதான். 


கீச் கீச் என இசைக்கும் குருவிகள். ரீங்காரம் பாடும் வண்டு. தாவிப் பறந்து திரியும் குரங்கார் கூட்டம். தோகை விரித்தாடும் மயில்கள். நிலம் அதிர நடந்து வரும் பெரிய யானைக் கூட்டம். கழுத்தை நீட்டி நிமிர்ந்து வரும் ஒட்டகச் சிவிங்கிகள்.

வேறு காட்டு மிருகங்கள் நீங்கள் சொல்லுங்கள் குழந்தைகளே!

சிங்கம்... புலி... கரடி,... மான்.. நரி.. முயல்.....

நன்று நன்று இப்படி இருக்கும் காட்டில் காட்டிற்கு ராஜா யாரு?

சிங்கம். ஆமாம். ஒரு நாள் சிங்க ராஜா நீர் அருந்த குளக் கரைக்கு சென்றார். குளத்தில் தண்ணீர் குடித்துவிட்டு நிமிர்ந்த போது தனது நிழலை அங்கு கண்டார். எதுவோ ஒன்று தனது கம்பீரத்தை குறைப்பதாக நினைத்தார். அது எது என தனது உருவத்தை தலையிலிருந்து உடல் வரை பார்த்தார்.


இப்பொழுதான் புரிந்தது வால் இல்லை என. மிருகங்களுக்கு அப்பொழுது வால் இருக்கவில்லை.


சிங்க ராஜா யோசித்தார். வால் இருந்தால் தனது அழகு மேலும் கம்பீரமாகத் தோன்றும் என்று. உடனே மரக் குத்தியில் வால் ஒன்றைச் செதுக்கி தனக்கு ஒட்ட வைத்தார்.


நதிக் கரைக்கு மீண்டும் சென்று பார்த்தார். கம்பீரம் கூடியிருந்தது. சிங்க ராஜாவிற்கு மிக்க மகிழ்ச்சி.


சிங்க ராஜாவைப் பார்த்த நரியார் "அழகாக இருக்கிறாய் ராஜாவே" என்றார்.

சிங்க ராஜா நினைத்தார் எனக்கு மட்டும் வால் உண்டு மற்றைய மிருகங்கள் பாவமே அவற்றிற்கும்; வால் செய்து கொடுப்போம் என்று. வால் தயாரிப்பில் சிங்க ராஜாவுடன் நரியாரும் வரிக் குதிரையாரும் வேறு சில மிருகங்களும் ஈடுபட்டன.

ஒரு வாரம் மரவால் தயாரிப்பில் களிந்துவிட்டது. சிங்க ராஜா நரியாருக்கு கட்டளை இட்டார் ஏனைய மிருகங்களுக்கு அறிவிக்கும்படி.

டும்....டும்...டும் என பறை ஓலித்தது

"சிங்க ராஜாவின் அறிவிப்பு மிருகங்களே நாளை எல்லோரும் வந்து வால் பொருத்திச் செல்லுங்கள்"

டும்... டும்... டும்...

காடெல்லாம் சென்று அறிவித்தார் நரியார். மிருகங்கள் எல்லாம் கூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன.

பொழுது விடிந்தது. புலியார், நரியார் முதலே சென்று வால் பொருத்திவிட்டார்கள். ஏனைய யானைக் கூட்டம, ஒட்டகத்தார்கள், எருமை மாடுகள் வேறு நீங்கள் சொல்லுங்கள் பிள்ளைகளே

ஓநாய் கூட்டம்.. மாடுகள்.. மரைகள்...

சரி.. சரி

இப்படியாக அனைவரும் வால் பொருத்தியபடி தங்கள் வீடுகளுக்குச் செல்கிறார்கள். பொந்தின் உள்ளே இருந்து முயலார் ஒருத்தர் இப்பொழுதுதான் நித்திரை கலைந்து மெதுவாக எட்டிப் பார்க்கிறார்.

 அவருக்கு காலை பனிக் குளிரில் வெளியே வரப் பயம். தனது வெள்ளை ஜக்கற் சட்டை நனைந்து சிலிர்த்துவிடும் என்று பதுங்கி இருந்த படியே வால் வாங்கப் போவோமா வேண்டாமா என நினைக்கின்றார்.


அதற்குள் குளிர் காற்றுடன் மழையும் தூறல் எடுக்க சோம்பல் பட்டு தனது பொந்து வீட்டினுள் சென்று தூங்கிவிட்டார்.

நேரமோ மதியம் தாண்டி மாலை நேரம் ஆகிவிட்டது. அனைத்து மிருகங்களும் வால் பொருத்திக் கொண்டு சென்றுவிட்டன. இவரோ இன்னமும் தூக்கத்தால் எழும்பவில்லை. வாலும் பொருத்தப் போகவில்லை.


வெளியில் பலத்த சண்டைச் சத்தம். அந்தச் சத்தத்தில்தான் அவரது தூக்கம் கலைந்தது. வெளியே வந்து எட்டிப் பார்க்கிறார்.

பூனையார் ஒருவரும் நாயார் ஒருவரும் என்னுடைய வால் அழகா? உன்னுடைய வால் அழகா?

"எனக்குத்தான் நீண்ட வால்" என்கிறது பூனை.

நாயோ "என்னுடையதுதான் அழகு" என்கிறது.

கோபம் முற்றி ஒருவரை ஒருவர் பாய்ந்து கடித்து மோதுகின்றனர்.


முயலாரோ நடுங்கி  ஒட்டி மறைந்து பார்க்கிறார். கோப உக்கிரகத்தில் நாயார் பூனையாரைப் பலமாகத் தாக்கி பூனையாரின் வாலில் ஒரு துண்டைதனது பல்லால் கடித்து துண்டித்துவிட்டார்.


வாலில் ஒரு சிறு பகுதியை இழந்த பூனையார் சீறியபடியே நாயைத் துரத்தித் துரத்தித் தாக்கியபடி ஓடுகிறார்.


இவற்றை எல்லாம் வாயிலில் இருந்து பார்த்த முயலார் மெதுவாக வெளியே வந்து துண்டித்துக் கிடந்த சிறியவாலை எடுத்து தனக்குப் பொருத்திக் கொண்டார்.


அதுவும் அழகாகவே இருந்தது. முயலாருக்கும்; மகிழ்ச்சியாயிற்று. பாய்ந்து பாய்ந்து ஓடினார்.

பண்ணையில் பார்த்த முயலார்கள் பற்றி அறியப்போகின்றீர்களா ? 


பண்ணை ஒன்றிற்கு சென்றபோது இக்கதை நினைவுக்கு வந்தது.

எனது குழந்தைகளுக்கு சிறுவயதில் வாங்கிய ஆங்கில கதைப்புத்தகம் ஒன்றில் வந்த கதை இது.


அவர்கள் அந்நாளில் விரும்பிக் கேட்பார்கள்.


புத்தகம் இப்பொழுது கையில் இல்லை. எனது நினைவில் உள்ளதை சுருக்கமாகத் தந்திருக்கின்றேன்.
சிங்கராஜாவின் படங்களின் கலையாக்கம் மகள் (சின்னு) செய்து தந்தவையாகும். அவளுக்கு எனது நன்றிகள்.

-மாதேவி-