Thursday, September 24, 2009

சீதா சிறை வைக்கப்பட்ட சீதா எலியஆலய தர்சனத்துடன் ஆரம்பித்தோம் பத்தினித் தெய்வமான சீதையை இராவணன் கவர்ந்து சிறை வைத்திருந்த நந்தவனம் எனக்கூறப்படும் சீதா எலிய கோயிலை தரிசிக்கச் சென்றோம். சிறிய இக் கோவில் அழகில் அனைவரையும் மயக்க வைக்கும். நீண்டு உயர்ந்த மரங்கள் நிறைந்த மலையைப் பின்னணியாகக் கொண்டு இது அமைக்கப்பட்டுள்ளது.சீதா அம்மனுக்கு இலங்கையில் உள்ள ஒரே கோயில் இதுதான்.

சிலர் உலகத்திலேயே இதுதான் சீதா பிராட்டிக்கான ஒரே கோயில் என்கிறார்கள்.

வேறு கோயில்கள் இருந்தால் சொல்லுங்களேன்.


முன்வாசலைத் தொட்டதுமே கோயிலின் பின்புறமுள்ள மலையின் இயற்கை வனப்பு, அருவியின் சலசலக்கும் சத்தம், குளிர் காற்று, ராமர் சீதா, இலட்சுமணன் மூலஸ்தான தரிசனம் என யாவும் சேர்ந்து அகமுகமும் குளிர அத்துணை இனிய அனுபவம் கிடைக்கப் பெறுகிறது.


கோவிலைத் தரிசிப்பதற்கு பிரதான பாதையிலிருந்து கீழே இறங்கிச் செல்ல வேண்டும். வழமையாக மலை மேலிருக்கும் கோயில்களை நோக்கி படிகளால் ஏறிச் சென்று அனுபவப்பட்ட எங்களுக்கு, இது புதுமையாக இருந்தது.

கோயிலிருந்து மேலும் இறங்கினால் பாய்ந்தோடும் அருவி வரும்.கைகள் தானாகவே கூப்பி வணங்கி நிற்கின்றன. ஸ்தான மூர்த்திகளைச் சுற்றி வந்தால் கோயில் பின்புறம் அடைத்த தடுப்புக் கம்பிகள் ஊடே ஓடும் ஆறு சலசலத்து முதலில் அழைக்கிறது.

அதைப் பார்த்துக் கொண்டே பின்புறம் சுற்றி வந்தால் அனுமார் பாதம் பதித்த இடம் கற்பாறையில் தெரிகிறது.


அது மிகவும் தெளிவாகத் தெரியும் வண்ணம் சுற்றி வர மஞ்சள் நிறத்தை வட்டமாக அடித்துக் காட்டியுள்ளார்கள்.

அதன் அருகே ஆற்று நீர் அழகாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மூலஸ்தானத்தைச் சுற்றி வந்தால் இடது மூலையில் பாதம் பதித்த இடத்தைப் பார்த்தவாறே அனுமார் மூலஸ்தானத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரை வணங்கிவிட்டு இடது புறமாகச் சென்றால் படிகளின் ஊடே இறங்கி அவர் பாதம் பதித்திருக்கும் இடத்தை அடைந்து வணங்க முடியும்.

வணங்கிவிட்டு நீரோடை தவழ்ந்து ஓடும் அழகையும் மலையினின்று தழுவி வரும் குளிர் காற்றையும் உட்சுவாசித்துக் கொண்டே உடலும் உள்ளமும் சிலிர்க்க மேலே ஏறி வந்தோம். அனுமார் சந்நிதியைச் சுற்றி வணங்கினோம்.

நாங்கள் சென்ற நேரம் பூசை முடியும் நேரம் ஆதலால் விபூதி குங்குமம் வழங்கினார்கள். குளிருக்கு இதமாக சுடச்சுட சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாக அனைவருக்கும் கொடுத்தார்கள்.

சுவையில் அமிர்தம் போல இருந்தது.

சாப்பிட்டுவிட்டு, கையலம்ப திரும்பிய போது சிறிது சலசலப்பு. திரும்பிப் பார்த்த போது அனுமருக்கு துணையிருக்க வந்துவிட்டார்கள் இருவர். பயமற்று பக்தர்களிடையே வீரநடையில் ஓடித்திரிந்தனர்.இராமர்,சீதா கல்யாணம் காடேறல் பொன்மானைப் பிடித்துத் தரும்படி வேண்டுதல் பரதன் பாதரட்சை பெறுதல் புஸ்பவாகனத்தில் இராவணன் சீதையைக் கவர்ந்து வருதல்,


மற்றும் அசோகவனத்தில் சீதை அனுமார் கணையாளியுடன் சீதையைக் காணுதல் எனத் தல வரலாறு வர்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.தீயிட்ட வாலுடன் அனுமர் திரும்பிச் சென்ற மலை கறுத்த மரங்கள் கொண்டதாகவே காணப்படுகிறது. மண்ணும் கறுப்பாகவே இருக்குமாம்.அழகிய சீதை ஆலயத்தை முன்பும் இரு தடவைகள் தரிசித்து இருந்தாலும் இயற்கையுடன் சேர்ந்த கோயிலின் வடிவ அமைப்பு மீண்டும் மீண்டும் சென்று தரிசிக்கத் தூண்டுகிறது.

கோயிலைத் தாண்டிச் சென்றால் ஹக்கல கார்டினை அடையலாம். இம் முறை நாங்கள் ஹக்கல செல்லாது ஆலயத்துடன் திரும்பிப் புதிய இடங்கள் பார்ப்பதென தீர்மானித்து இருந்தோம்.

ஆயினும் கோயில் வாசலுக்கு எதிர்ப்புறமாக பூங்கன்றுகளின் விற்பனைச் சாலை ஒன்று உள்ளது. அதில் நுழைந்தோம்.


நிறம் நிறமாக, வெவ்வேறு விதமான பூ மரங்கள். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது.


கொழும்புச் சுழலுக்கு ஏற்றதாக ஓரிரு செடிகளை வாங்கிக் கொண்டோம்.


நாம் வாங்கியதில் இதுவும் ஒன்று. சிறிய செடி. பச்சையாகக் காய்க்கும். பின் மேலுள்ளவாறு ஓரேஜ் கலராக வரும்.

கொண்டு வந்தது ஒரு மாதமாகவும் கருகிவிடாமல் இன்னும் உயிரோடு இருப்பதே சந்தோசமாக இருக்கிறது.


மாதேவி

Saturday, September 19, 2009

ஹொலிடே கொண்டாட்டம் 2

தலவாக்கலை நகர் நெருங்கியது மனதும் சிலு சிலுத்துப் பொங்குகிறது. ஆம் சில்லெனக் குளிர் மேலைத் தழுவ எதிரே அருவியினின்று பாயும் நீரைக் கண்குளிரக் கண்டதும் வேறென்ன செய்யும்?

கற் பாறையினின்று கொட்டும் சென் கிளயர் எனும் சிறிய அருவி. சென் கிளயர் பள்ளத் தாக்கில் தெரிகிறது வெண் பால் போன்ற அருவி.அருகே பிரமாண்டமான அழகிய தோற்றத்துடன் காட்சி தரும் St Clares Tea Factory. . மத்திய கால சுவீடிஸ் பாணியில் கட்டப்பட்ட இந்த Mlesna Tea Castle பக்டரி அழகா எதிரே இருக்கும் அருவி அழகா? கிறங்கி நிற்கிறோம்.
உலகப் புகழ் பெற்ற Mlesna Tea இங்குதான் உற்பத்தியாகிறது. வாயிலில் அந்தக் காலத்தில் தேயிலை கொழுந்துகளை அவிப்பதற்கான பென்னம் பெரிய பொயிலர் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.


ஒன்றுக்கு ஒன்று அழகில் போட்டி போடுவனவாய் இவையெல்லாம் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

சுற்றுலாவின் படங்கள் யாவும் சின்னு 'கிளிக்'கியதே.

படத்தின் மேலே கிளிக்குங்கள் காட்சிகள் அழகாக முழுமையாக விரிந்து தெரியும்.

இந்தப் பக்டரி அருகே ஒரு நீண்ட பாலம். அதில் நின்றுதான் மேற் கண்ட நீர் வீழ்ச்சியைப் பாரத்தோம்.

சற்றுத் தூரம் செல்ல சலசலக்கும் டிவோன் (Devon Fall) என்னும் மற்றொரு நீர் வீழ்ச்சி.


கண்ணையும் மனத்தையும் கொள்ளை கொள்ளும் அழகுடன் சோ என்ற இரைச்சலுடன் குன்றின் உச்சியிலிருந்து கொட்டி கற்பாறைகளில் விரைந்து பாய்ந்தோடி வருகிறது.

மழைக்காலத்தில் நயகரா நீர் வீழ்ச்சி போன்று கொட்டிப் பாயும் என இங்குள்ளோர் வர்ணிக்கிறார்கள். அவர்களும் நயகரா நேரில் பார்த்ததில்லை. நானும் பாரத்ததில்லை. நீங்கள் கூறுங்கள்.

இவை காணும் தோறும் குதூகலத்தை அள்ளி வழங்குகின்றன. இயற்கையின் படைப்பில் இவ்வளவு அற்புதங்களா?

சிந்தனையுடன் ரசிக்க வைக்கிறது. இயற்கையின் உவகை எம்மையும் தொற்றிக் கொண்டு மனத்திற்கு இதத்தைக் கொடுப்பதில் வியப்பில்லை.

இருபுறமும் பச்சைப் பசேலென பரந்து விரிந்த மலைச் சரிவின்; ஓரமாக கிளை பரப்பி விரிந்து நின்ற மரத்தில் சிவப்பு நிறப் பூக்கள் பூத்துக் கொட்டுகிறது.

கண்ணைப் பறித்துத் திரும்பிப் பார் பார் என அழைக்கிறது. இவற்றையெல்லாம் பார்த்து மனம் நிறைந்து மகிழ்ச்சி கொள்ள ஹெயர் பின் வளைவுகளுடாக உயர்ந்து சென்று கொண்டிருந்தது பாதை.

அடுத்து அழகு தேவதையின் தோற்றத்தில் அழகிய நுவரெலியா நகர்.


பிரிட்டிஸ் காலக் கட்டிடத்தில் நுவரெலியா போஸ்ட் ஓபீஸ் காண்போரை மயக்க வைக்கிறது. ஐரோப்பிய கட்டிடக் கலைப் பாணியில் எழுந்து நிற்கிறது

சற்றுத் தூரம் சென்றதும் பிரமாண்டமான கிரான்ட்ஹோட்டல்.


வெளி நாட்டுப் பயணிகளுக்கும் பணம் செழித்தவர்கள் தங்குவதற்குமானது. நாளொன்றுக்கு ரூம் வாடகை 15-20 ஆயிரத்தைத் தாண்டுமாம். இது நகருக்கே அழகைக் கொடுக்கிறது.

அருகே கிரான்ட் இன்டியன் ரெஸ்ரோறன்ட் அமைந்துள்ளது. இதுவும் அழகுதான்.

இவற்றை எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டே நகர்வலம் வந்தோம்.

நடுத்தர வர்க்கத்தினர் தங்கிச் செல்லக் கூடிய Angel Park எமது தங்கும் மடமாயிற்று.


இக் ஹோட்டலின் பின் புறம் நுவரேலியா நகரின் மையமாக விளங்கும் விக்டோரியா பார்க் அமைந்துள்ளது. ஹோட்டலின் ஒரு புறம் வீதிக்கு அப்பால் Good Sheperd Convent.

பயணப் பொதிகளை வைத்துவிட்டு உடலுக்கு இதமாக வெந்நீரில் நீராடி சிறிய வோக் செல்லத் தீர்மானித்தோம்.

இரவு 7.30- 8 மணி இருக்கும். குளிர் அதிகரித்து விட்டதால் நகர் அடங்கத் தொடங்கி விட்டது. வீதியில் ஓரிருவர் நடந்து சென்றனர். வாகனங்கள் சில ஓடிக் கொண்டிருந்தன. 15-20 நிமிட நடை தூரம் சென்று அத்தியாவசிய சில பொருட்களை வாங்கிக் கொண்டு ரூம் திரும்பினோம்.

இரவுக் குளிரில் ஜில் என்ற காற்றின் ஊடே வீதியில் நடந்து செல்வதில் சுகம் இருக்கத்தான் செய்தது. யாழ்ப்பாணம் கொழும்பு என வெப்பப் பிரதேசத்தில் வாழும் எங்களுக்கு ஓரிரு நாட்கள் மட்டும் தங்குவதால் குளிர் சுவாத்தியம் மனதுக்குப் பிடித்துப் போய்விடுகிறது.

தொடர்ந்தும் பல வருடங்களாக குளிரிலேயே வாழும் நிலையில் வாழ்க்கைப் பிரச்சனைகள் இருக்கலாம் என்பது லயன் வீடுகளைப் பார்த்ததும் புலப்பட்டது.

அதிகாலை ஆறு மணியளவில் எழுந்து பார்த்த போது நகரம் பனி மூடலுக்கு ஊடாக அமைதியாகக் காட்சியளித்தது.


மேல் மாடி ரூமின் முன்புற யன்னலூடாக நோக்கிய போது அடுத்து இருந்த நிலப்பரப்பில் லீக்ஸ் நாட்டப்பட்டிருந்தது. மரங்களின் இடையே பறவைகளின் சேதாரம் இல்லாது இருக்கப் போலும் சிறிய காகிதக் கொடிகள் நாட்டப்பட்டிருந்தன.

மிகுந்த குளிரிலும் பல்கணியில் சென்று ரசித்தோம்.

வீதியில் சன நடமாட்டம் இல்லை. மழை சிறியதாக தூறத் தொடங்கியிருந்தது. தடித்த கம்பளி கோட்டுடன் ஓரிருவர் குளிர் துரத்த விரைந்து சென்றனர்.

முழங் காலுக்கு கீழ் குளிர் வெடவெடக்க, வெள்ளை யூனி போர்ம், சூஸ் சொக்ஸ் அணிந்த சின்னப் பெண்கள் ஏ.எல் சோதனைக்காக குளிரிலும் புறப்பட்டிருந்தார்கள்.

ஹோலுக்கு வந்து மறுபுறம் உள்ள யன்னல் ஊடே பார்த்த போது அடுத்துள்ள நிலத்தில் கிறீன் கவுஸ் அமைக்கப்பட்டிருந்தது.உள்ளே அழகிய செடிகள் பூத்துக் குலுங்கின.

வெளி நிலப் பரப்பில் சிகப்பு மொட்டுக்கள் விரித்தாற் போல் சிறியதாய் பீற்ரூட் செடிகள் முளைத்திருந்து அழகில் மயங்கியவரை எல்லாம் சாப்பிட வருமாறு அழைத்தன.

சின்னுவிற்கும் மிதுவுக்கும் ஒரே கொண்டாட்டம்தான். நான் முந்தி நீ முந்தி எனப் படங்கள் எடுத்து கிளிக்கிக் கொண்டார்கள்.

எட்டு மணியளவில்தான் குளிருக்கு இதமாகத் தேநீர் கிடைத்தது. நடுஇரவு முதல் Electricity Failure ஆனதால் Electric kettle வேலை செய்யவில்லையாம்.

காலைக் குளியல். குளிரில் தயங்கிய போதும் வெந்நீர்க் குளிப்பு உடலுக்கு இதமாகத்தான் இருந்தது.

குளிப்பு முடிந்ததும் சாப்பாட்டு மேசை வரவேற்றது. சான்ட்விச் தவிர மற்றதெல்லாம் எமது வழமையான உணவுகள்தான். மெத்தென்ற வெள்ளை இடியாப்பம், மஞ்சள் சொதி, இடி சம்பல் கிழங்கு மசாலா என ராஜீ கொண்டு வந்து வைத்தான்.

இடிசம்பல் மாத்திரம் சிங்களப் பக்குவம். ருசியோ ருசி. ரெசிப்பி என்னவெனக் கேட்க வைத்தது. வயிற்றை நிறைத்துக் கொண்டு வாகனத்தில் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம்.

மாதேவி

Friday, September 4, 2009

ஹொலிடே கொண்டாட்டம்

இன்னும் மூன்று நான்கு நாட்களில் ஸ்கூல் ஹொலிடேஸ் முடிந்து விடும். பிள்ளைகள் எல்லோருமே விளையாட்டு மூட் தாண்டி படிக்கத் தொடங்குவதற்கு ஆயத்தமாகிறார்கள். அரை மனத்துடன் தான்.

இந்த நேரத்தில் சற்று முன்னோக்கி ஹொலிடேயின் ஆரம்ப காலத்தில் இருந்த மகிழ்ச்சிப் பொழுது பற்றி அசைபோடத் தோன்றுகிறது.

முதல் ஓரிரு வாரம் தொலைக்காட்சி பார்ப்பது உண்பது உறங்குவது என ஜாலியாகப் பொழுது போனது.

கொறிப்பதற்கு உணவுகளும் காதுக்கு இனிமை சேர்க்க இசையும் ஒன்று கூடின.

வீட்டில் உறவினர் வருகை என அமர்க்களம். வீடே அதிரும் அளவிற்கு ஒரே சத்தமும் சிரிப்பொலியும்தான்.

அம்மா பிள்ளைகளுக்கு விரும்பிய உணவுகளை செய்து அசத்திக் கொண்டிருந்தா. வீடே சமையல் மணத்தில் மூழ்கிக் கிடந்தது.

இரவில் அயல் வீடுகளில் எல்லாம் வெளிச்சம் அணைக்கப்பட்டு தூக்கத்தில் மூழ்கிக் கிடக்க இங்கே இரவு 12 - 2 மணிவரை மின்னொளி பரவிக் கொண்டிருந்தது. பிள்ளைகள் படம் பார்ப்பது அல்லது இணையத்தில் இருப்பது என நேரம் போய் தூங்கப் பின்னிரவு ஆகிவிடும்.

சிறிது நாட்களில் இதுவும் அவர்களுக்கு அலுக்கத் தொடங்கியது.

பகலில் இன்டோர் கேம்ஸ் ஆன Sudoku,Puzzle, Scrabble, chess. அலுமாரி அடியில் ஒளிந்து கிடந்தவை பொழுதுக்கு ஒன்றாய் வெளிவந்து கொண்டே இருந்தன.

அதுவும் சலிக்க Trip என நச்சரிப்புத் தொடங்கியது.

Dad நல்ல மூட்டில் இருக்கும் நேரம் பார்த்து அவரை வளைத்துப் போட்டுவிட்டனர். லீவு எடுப்பதென்பது தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சிம்ம சொப்பனம்தான் எனச் சொல்லவும் வேண்டுமா?

ஒருவாறு இரண்டு நாட்கள் லீவிற்கு ஓகே கூறிவிட்டார். சின்னுவிற்கோ கொண்டாட்டம்தான்.

எங்கே செல்வது என டிஸ்கஸ் பண்ணத் தொடங்கிவிட்டனர்.

ரிப்பில் என்ஜோய் செய்வதற்கு கூடவே மைத்துனி, அவரின் மகள் மிது இருவரும் துணை சேர்ந்தனர்.


செல்லுமிடம் மலை நாடு நுவரெலியா என முடிவாயிற்று.

மலைநாட்டின் கொள்ளை அழகு எத்தனை முறைகள் சுற்றுலாக்களின் போது சென்று ரசித்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் ரசனையில் புதிய மாற்றங்களைக் கொடுக்க வைக்கும் அற்புதமான அனுபவங்களாகத் திகழும்.


கொழும்பில் இருந்து புறப்பட்டால் அவிசாவளையில் ஆரம்பிக்கும் மலைவனப் பாதை. கித்துள், ஈரப்பலா, மிளகு, கொக்கோ, கோப்பிச்செடி என ஒரு புறமாயும் மறுபுறம் கூடல்களாக தென்னை மரங்களாகவும் காட்சி கொடுக்கும்.

பசுமையில் தொடங்கி உயர்ந்து செல்லும் மலைப் பிரதேசத்தில் ரப்பர் மரங்களென அடர்ந்து செல்லும் பாதை.


அவிசாவளையைக் கடந்ததும் கித்துல்கம வருகிறது. ஊரின் பெயரே வாயில் இனித்தது.

கித்துள் மரத்திலிருந்து கள்ளு எடுக்கப்படுகிறது. அதிலிருந்து பெறப்படும் கித்துள் பாணி, கித்துள் கக்குறு ஆகியன சுவையில் பிரசித்தி பெற்றவை.

இவை எமது பனம்பாணி, பனங்கட்டி போன்றது. ஆனால் சுவையில் வித்தியாசம் உண்டு.

மழை வீழ்ச்சி மிக அதிகமான இடம் இதுவாகும்.

எயர் கொண்டிசனை அணைத்து வாகனத்தின் கண்ணாடியைத் திறக்க கொழும்பை தூற்ற வேண்டும் போலிருந்தது. அத்தனை சுகமான சுவாத்தியம்.
உடலுக்கு இதமான குளிர்காற்று தழுவிச் செல்லும். குளிரும் அதிகரித்து உடலை சிலிர்க்கச் செய்கிறது.

இங்கு வசிப்பவர்கள் எவ்வளவு பாக்கியசாலிகள்!

மேலே செல்லச் செல்ல தேயிலைச் செடிகள், சைப்பிரஸ் மரங்களென விரிந்து செல்லும் அழகோ கொள்ளை அழகுதான்.

ஹினிகத்தனை தாண்ட வட்டவளை வருகிறது.

வட்டவளையின் மலைச் சரிவுகள் நாற்புறமும் பரந்து அழகிய மலைப் படிவங்களாக கவர்ந்து இழுக்கிறது. இங்கு விளையும் தேயிலைக்கு உயர்ரகம் எனப் பெயர் உண்டு.


Zesta வின் தேயிலைத் தொழிற்சாலைப் பெயர் கண்ணில் பட்டது. அழகிய பெரிய ரீ கப் வடிவில் விளம்பரப் பலகை பிரயாணிப்பவரை வரவேற்கிறது. இது இயற்கையுடன் சேர்ந்து அழகு தருகிறது.

வீதி ஓரத்தில் அவர்களது தேநீர் விடுதி வாகனத்தில் போகும்போது தெரிந்தது.

இறங்கிப் பார்க்க பொழுது கிட்டவில்லை.

மலைச் சரிவுகளில் அழகிய வட்டவளை நகரின் கட்டிடங்கள், பங்களாக்கள் கொண்ட வியூ மாலை நேர மூடு பனியில் படிந்து மனதைக் கவர்ந்து, வாகனம் முன்னேற, பின்நோக்கி மறைகின்றன.

ஹோலிடே கொண்டாட்டம் தொடரும்.....

மாதேவி