Wednesday, December 21, 2011

பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை.


மார்கழிப் பூவே... மார்கழிப் பூவே...பாடிக்கொண்டே ஆரம்பிப்போமா ?

மலர் என்றாலே நினைவுக்கு வருவது இனிய நறுமணம், அழகு, மென்மை, காதல்.

சங்கப் பாடல்களிலே மலர்களை பெண்களுக்கு உவமையாக வர்ணித்திருப்பதைக் காணலாம்.

காந்தள்

காந்தள் கையழகி, ரோஜா வதனத்தாள்.....

செண்பகம்

நொச்சி, தும்பை, கொன்றை, பாதிரி, புங்கை,  குரந்தை, வாகை, வெட்சி, குறிஞ்சி மலர், இருவாட்டி, அரளி, முல்லை, பிச்சி, மல்லிகை, பன்னீர், ஆம்பல், அல்லி, குமுதம், தாளம்பூ, செண்பகம், மனோரஞ்சிதம், சம்பங்கி, ரோஜா, துளசி, பவளமல்லி, நந்தியாவட்டை, சாமந்தி,சூரியகாந்தி,மந்தாரை எனப் பற்பல மலர்கள் பூத்து மணம்பரப்பி நிற்கின்றன.

மனோரஞ்சிதம்

மகிழம்பூ, செண்பகப்பூ, மரிக்கொழுந்து, நாகலிங்கப்பூ, புன்னை, செவ்வரத்தை, கனகாம்பரம், என அடுக்கிக் கொண்டே போய்,  ஓர்க்கிட், எகஸ்சோரா, போகன்விலா, அந்தூரியம் எனப் பலப்பல உருவாக்கங்கள் இழுத்துக் கொள்ளுகின்றன எம் மனங்களை.

நாகலிங்கப்பூ

சங்கப் பாடல்களில், மிகவும் புகழ்பெற்ற குறிஞ்சி மலர் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மலரும் என்பது பலரும் அறிந்ததுதான். மலைச்சாரலிலே பலவகையான பூக்கள் இருந்தபோதும் தேன் நிறைந்த இம் மலருக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

குறிஞ்சிப்பூக்கள்

குறிஞ்சி செடிகளின் தலையில் நீலநிறப் பூக்கள் மணியைக் கவிழ்த்தாற்போல காட்சி கொடுப்பதாக கவிஞர் ஒருவர் சொல்கின்றார். இம் மலரில் இருநூற்றி ஐம்பது வகைகள் இருப்பதாக கூறுகின்றார்கள். ஐம்பத்தொன்பது வகை தென்னிந்தியாவில் உள்ளது என்கிறார்கள்.குறிஞ்சி மலரின் தேன் மருத்துவத்தில் அதிக இடத்தைப் பிடிக்கின்றது. அதனால்தான் குறிஞ்சித் தேனுக்கு அதிக கிராக்கி. 

நிலங்களை ஐந்நிலங்களாக பூக்களின் பெயர்களாலேயே குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் எனப் பிரித்திருந்தார்கள்.

குறிஞ்சிப் பாட்டில் பூக்களின் பெயர்கள் நிறைந்த பாடல் இருக்கின்றது. அரசர்கள் போரில் வெற்றிபெற்று திரும்பும்போது வாகை மலர்மாலை சூடி வருவார்கள்.

அரசிமார் தாளம்பூ ஜடை போட்டிருப்பார்கள்.

பெண்கள் தலையில் சூடிக்கொண்டார்கள். காதலின் பரிசாகவும் பூக்கள் பண்டைய காலம்தொட்டு; அங்கம் வகிக்கின்றன. பூக்களை மாலையாகக் கட்டி திருமணநாளில் அணிந்து கொண்டனர்.  பூக்களை மாலையாகத்தொடுத்து இறைவனுக்கு சாத்தி வணங்கினர். பின்னர் பெண்கள் பூச்சரங்கள், கதம்பங்கள், மாலைகள் எனத்தொடுத்து அணிந்தார்கள்.

'கார்நறுங்கொன்றை' என கொன்றையைப் புகழ்ந்து பாடியுள்ளார் கவிஞர். முல்லைக்கு தேர்கொடுத்த பாரிவள்ளலையும் அறிவோம்.

அனிச்சம்

அனிச்சம் பூவை விருந்தினருக்கு உவமையாக 'மோப்பக் குழையும் அனிச்சம்'என்கிறார் வள்ளுவர். 

குவளை மலரின் மணம் வீசுகின்ற திரண்ட கரிய கூந்தலையும், ஆம்பல் மலரின் மணம்; தரும் பவள வாயினையும் உடையவளே என்றெல்லாம் காதலன் காதலியை வர்ணித்திருப்பதைக் காணலாம்.

அல்லி, ஆம்பல் இனத்தில் ஐம்பது வகையான கொடிகள் உள்ளன.
மல்லிகை( JASMINUM SAMBAC) இருநூறு இனங்கள் உள்ளன என்கிறார்கள்.

வேறோரிடத்தில் காதலன் காதலியைப் பிரிந்து செல்கின்றான் 'நெய்தல் மலர்போன்ற அவளது கண்' என்கூடவே வருகின்றதே என நினைக்கின்றான.;
நாட்டுப் பாடல்களிலும், சிறுவர் பாடல்களிலும் பூக்கள் தனியிடம் பிடித்துள்ளன.

நறுமண மலர்களிலிருந்து அத்தர், பன்னீர், ரோஸ் எசன்ஸ் செய்து கொள்கிறார்கள்.

இறைவனுக்கு அர்ச்சிக்கும் பூக்கள் சிறந்த இடத்தை வகிக்கின்றன. காட்டுப்பூக்கள், மயானப்பூக்கள், நீர்ப்பூக்கள், செடிப்பூக்கள், கொடிப்பூக்கள், மரப்பூக்கள் எனப் பலவகையாக இருக்கின்றன.

இமையமலைச் சாரலில் பல்வகையான அரிய அழகிய பூக்கள் காணப்படுகின்றன.

பூக்கள் பல மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன. அதனால்தான் பல்நெடும் காலமாக மருத்துவத்தில் பயன் படுத்தி வருகின்றார்கள். உணவாகவும் உட்கொள்ளப் படுகின்றன. 'டேன்டேலியன் மலர்கள்' வைனாக தயாரிக்கப் படுகின்றன. 'ஹாப்ஸ் மலர்கள்' பீரை சுவையூட்டப் பயன்படுத்தப்படுகின்றன.

ஓணம் பண்டிகையில் பூ அலங்காரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
மார்கழியில் கோலத்தில் பிள்ளையார் வைத்து  பூசணிப்பூக்களால் வணங்குவார்கள்.

தைப்பொங்கலன்று ஆவாரம் பூக்கள், கண்ணுப் பூக்களை வீட்டு வாயிலில் வைப்பார்கள்.ஆவாரம் பூவின் மஞ்சள் நிறம் மங்கலத்தின் அடையாளமாகக் கொள்ளப்படுகின்றது.

ஐம்பதாண்டுகளுக்கு ஒருமுறை மலரும் பூ கார்ட்ஸ் என்கிறார்கள்.

நெப்பந்திசு (NEPENTHES)    பூச்சியை உண்ணும் தாவரம். இது ஒருவகை குடுவைபோன்ற தோற்றத்தை உடையன. பூக்களின் முனைகளில் நீண்ட மயிர்கள் நீட்டிக் கொண்டிருக்கும்.

நெப்பந்திசு

பூக்களின் கவர்ச்சியாலும், தேனாலும், வாசனையாலும் ஈர்க்கப்படும் பூச்சிகள் மயங்கி பூவினுள் செல்லும். பூவின் வழுவழுப்பான சுரத்தலினால் பூச்சிகள் குடுவையின் உள்ளே விழுந்து விடும். பூச்சிகள் வெளியே வரமுடியாதவாறு பூக்களின் உள்நோக்கி வளைந்திருக்கும் மூடிகள் தடுத்துவிடுகின்றன.

அதிக அளவில் ஒரே தடவையில் பூக்கும் பூக்கள் வைனீஸ்விக்டோரியா என்ற தாவரத்தில் பூக்கின்றன.

ஐம்பதாண்டுகளுக்கு ஒருமுறை மலரும் பூ 'கார்ட்ஸ்' என்கிறார்கள்.

உலகின் மிகச் சிறிய மலர் 'வொல்பியா ' எனப் படுகின்றது. இவை குலைவடிவில் இலகுவாக வீழ்ந்து விடக் கூடியதாக இருக்கின்றன. இதில் இரண்டுவகை இனங்கள் உள்ளன..

கிளிபோலவே சொண்டு தலை, வால் என அச்சொட்டாக ஒரு பூ தாய்லாந்து தேசத்தில் இருக்கிறது. கிளிப்பூ (Parrot Flower) என அழைக்கப்படும் இது அங்கும் இப்பொழுது அரிதாகவே காணப்படுகிறதாம்.

கிளிப்பூ


இயற்கையின் படைப்பில் பூக்கள் எவ்வாறேல்லாம் அதிசயிக்க வைத்து மகிழ்ச்சி தருகின்றன..பூக்களின் சமையலுக்கு பூக்களைப் பறியுங்கள்  பதிவைக் கிளிக்குங்கள்.

:-மாதேவி-:
0.0.0.0.0.0.0
Saturday, October 15, 2011

நீந்தி மகிழ கசூரினா கடற்கரைக்கு வாங்க

உயர்ந்த சவுக்க மரங்களுடன் இயற்கையின் படைப்பில் உருவான அழகிய கடற்கரை வடபகுதியின் கிழக்குக் கடற்கரை மணற்காடு ஒருவித அழகைத் தருகிறது என்றால் இங்கு கசூரினாவில் இன்னொரு அழகு மிளிர்கின்றது.


சவுக்க மரங்கள் நிறைந்திருப்பதால் கசூரினா Casuarina beach என்ற காரணப் பெயர் வந்திருக்கலாம். கடல் அரித்தாலும் சாய்திடாது மண்ணில் பற்றுக் கொண்டு இறுகப் பற்றி நிற்கும் சவுக்க மரங்கள் இதன் விசேஷம்.


வெற்றுக் கட்டுமரத்தில் கரைநோக்கி வருகிறார்கள் மீனவர்கள். மீன்கள் ஒழித்து ஓடிவிட்டனவா?

மகிழ்ச்சியான செய்தி அலைகள் அள்ளிச் சென்றுவிடும் என்ற பயம் இன்றி இங்கு குளித்து மகிழலாம்.


மணற்காட்டுக் கடல் ஆர்ப்பரிக்கும் கடல் என்பதால் அங்கு குளிக்க அனுமதி இல்லை.இங்கு மக்கள் தொலை தூரத்திலும் சென்று நீந்தி மகிழ்வதைக் காணலாம்.

மாலைச் சூரியனின் தண்மையான ஒளிக்கதிரில் நீச்சலிட்டு மகிழ்கிறார்கள் சுற்றுலா வந்தவர்கள்.

இவரைப்போல கடலில் மூழ்கிவிடுவேன் என கை உயர்த்தி உதவிக்கு மற்றவர்களை அழைக்க வேண்டிய அவசியம் இங்கில்லை. மிகவும் பாதுகாப்பான கடல்.


வட பகுதியின் காரை நகரில் இக்கடற்கரை அமைந்துள்ளது.யாழ் நகரில் இருந்து ஏறத்தாள இருபது கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. 45 நிமிடத்தில் வாகனத்தில் சென்றடையலாம்.


யாழ் குடாவின் மிகச் சிறந்த கடற்கரை எனலாம். பெரியஅலைகள் இல்லாத அமைதியான நீலக்கடல். கடலுள் சில மைல்கள் தூரம் வரை நடந்து செல்ல முடியும் என்கிறார்கள்.


வடக்கில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களில் இதுவும் ஒன்று. வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளை தன்னகத்தே இழுத்துக் கொள்ளும் இடமாக மிளிர்கின்றது.


சிலர் குடித்துக் கும்மாளமிடுவதும், காதல் சோடிகள்  கண்ணியக் குறைவாக நடப்பதும் சூழலுக்கு ஒவ்வாததாக மற்றவரை நாண வைக்கிறது.

சாரணியர் பயிற்சி முகாம்கள் இங்கு நடப்பதுண்டு. மிகவும் பிரபல்யமான இடமாக இருந்தாலும் லக்ஸரி ஹோட்டேல்ஸ் இங்கு கிடையாது. தங்கி இருந்து ரசிக்க விரும்புவோர் கடற்கரை ஓரம்  குறைந்த விலையில் வாடகைக்கு வீடுகள் எடுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.


பொலித்தீன் பைகளும் வெற்றுப் போத்தல்களும், உண்டு மிஞ்சிய எச்சங்களும் எனச் சூழல் மாசுபடாது இவ்வாறு அழகாக இருக்க எல்லோரது ஒத்துழைப்பு அவசியம்.

சுனாமியாலும் போராலும் பெரிதும் பாதிக்கபப்ட்டிருந்தது. போர் நின்ற பின் ஒரு சில வருடங்களாக மக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


யாழ் பெரு நிலப்பரப்பிலிருந்து காரை நகருக்குச் செல்லும் பாதை இப்பொழுது திருத்தப்பட்டு போக்குவரத்திற்கு வசதியாக இருக்கின்றது.


பெருந்திரளாக மக்கள் இங்கு வருகிறார்கள். கடலில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள்.


உப்பு நீரில் குளித்து வந்தவர்கள் தங்களை நல்ல நீரில் கழுவிக் கொள்ள நன்நீர்க் கிணறு இருக்கிறது.


கழிப்பிட வசதியும் உடைமாற்றுவதற்கான இடமும் இருக்கின்றன. ஆனால் சுகாதாரமானதாக அவை இல்லை. அவற்றைச் சீர்செய்துகொள்வது அவசியம்.


இயற்கை வழங்கியுள்ள அழகை பண்புடன் பாதுகாத்து வருவது மக்கள் கைகளில்தான் தங்கியுள்ளது. இங்கு வரும் மக்கள் இதற்கு ஒத்துழைப்பு நல்கி சுற்றுச் சூழலையும் கெடாது பாதுகாப்பார்களேயானால் அதுவே அவர்கள் இயற்கைக்குச் செய்யும் கைமாறாக இருக்கும்.


இயற்கையைப் பேணி நமக்கு அளித்துள்ள வளங்களைக் காத்து இன்புற்று இருப்போம்.

:-மாதேவி-:

Monday, September 12, 2011

யாழ் மக்களின் உள்ளங்கவர் அரசன்

நல்லூர்க் கந்தன் யாழ் இந்துக்களின் மனதில் என்றும் நிறைந்தவன். பண்டைக் கால அரசுகள் முதல் இன்றைய அரசுகள் வரை ஆட்சிகள் மாறியபோதும் மக்கள் மனதைப் புனிதப்படுத்தி என்றென்றும் அவர்கள் உள்ளத்தில் அரசனாக வீற்றிருப்பது நல்லூர் கந்தன்தான்.

எங்களைக் காப்பவனின் வரலாற்றை முழுமையாகப் பேணாதவர்களாக நாம் இருப்பது வருந்தத்தக்கது.


13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சிசெய்த ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கலிங்கமாகன் அல்லது கூழங்கை சக்கரவர்த்தியால் கட்டுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. ஆரிய சக்கரவர்த்திகள் நல்லூரை இராசதானியாக்கி ஆண்டு வந்த காலத்தில் மன்னன் சென்று வணங்கிய தலை சிறந்த ஆலயம் இது.


15 ஆம் நூற்றாண்டில், தென்னிலங்கையைச் சேர்ந்த கோட்டே அரசனின் சார்பில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சப்புமால் குமாரயா எனப்பட்ட சண்பகப்பெருமாள் என்பவனே நல்லூரைக் கட்டுவித்தானென்றும் சிலர் கூறுவர். சிங்கை பரராஜசேகரன் இவ்வாலயத்தைப் புனரமைத்து சிறந்ததாக ஆக்கியதாகவும் சொல்கிறார்கள்.

போர்த்துக்கேயப் படையெடுப்பில் ஆலயம் அழித்தொழிக்கப்பட்டது. பின்னர் மாப்பாணர் முதலியார் பரம்பரையினரே இவ் வாயலயத்தை அமைத்தனர் என்கிறது யாழ்பாண வைபவம் என்ற நூல்.


போர்த்துக்கீசருக்கு முந்திய நல்லூரின் அமைப்புப் பற்றியும், அங்கிருந்த கட்டிடங்கள் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ளக்கூடிய அளவுக்குப் போதிய தகவல்கள் இல்லை. யாழ்ப்பாண மன்னனான ஆரியச் சக்கரவர்த்திகளின் அரண்மணையை அண்டி பழைய கோவில் அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது.

யாழ் மண்ணில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் இது. ஆலய நிர்வாகம் மிகவும் சிறப்பானது. நேர அட்டவணை, பூஜை என தினப்பூசைகள் நேரம் தவறாமல் நடைபெற்று வருகின்றன. இன்றும் ஒரு ரூபா மட்டுமே கொடுத்து அடியார்கள் பூசைக்கு அர்ச்சனை செய்ய முடிவது இந்த ஒரு கோவிலில்தான்.


25 நாட்கள் ஆலய உற்சவ விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் விழாவிற்காகச் சென்று விரதம் இருந்து நல்லூர் கந்தனை வழிபடுவார்கள். சப்பறத் திருவிழா, மஞ்சம், தேர்த்திருவிழா, தீர்த்தம், பூங்காவனம், மிகவும் சிறப்பாக நடைபெறும். கோடான கோடி மக்கள் கலந்து கொள்வர்.தேர்த் திருவிழா அன்று சுவாமியைத் தேரில் வைத்து வடம் பிடித்து இழுத்து வருவார்கள். தேர் இருப்பிடம் அடைந்ததும் சுவாமிக்கு பச்சை சாத்தி அலங்கரித்து கோயில் இருப்பிடம் கொண்டு செல்வர். தேர்த் திருவிழாவில் காவடி, தீ மிதித்தல், கற்பூரச் சட்டி, பறவைக் காவடி, தூக்குக் காவடி, அங்கப் பிரதிஸ்டை, அடி அழித்தல், என அடியார்கள் தங்கள் நேர்த்திக் கடன்கனை நிறைவேற்றுவர்.

யாழ் மண்ணின் சித்தர்களில் ஒருவரான யோகர் சுவாமி, நல்லூர்க் கந்தனின் தேரடியில் அமர்ந்திருந்து வெகு நேரம் தியானத்தில் இருப்பார் எனச் சொல்வார்கள்.

கோவிலின் பிரதான கோபுரம் கிழக்குப் பார்த்த வண்ணம் இருக்கிறது. இப்பொழுது தெற்குப் புறத்திலும் ஒரு புதிய கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப் புகழ் மிக்க இவ்வாலய வருடாந்த உற்சவம் தேர், தீர்தத் திருவிழா மிகவும் சிறப்புடன் நிறைவு பெற்றுள்ளது. கந்தன் தேரில் வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.


குடா நாட்டு மக்களுடன் புலம் பெயர் மக்கள், வெளிநாட்டினர், தென்னிலங்கை மக்கள் என சகல பாகத்திலிருந்தும் மக்கள்   வருகை தந்து திருவிழாக்களைச் சிறப்பித்திருந்தனர்.

இலட்சக்கணக்கான கந்தன் அடியார்கள் இவ் விழாவில் பங்கு பற்றி கந்தன் அருள் பெற்றுள்ளார்கள். 

யாழ் தலங்களை வலம் வர:-


மாதேவி
0.0.0.0.0.0.0

Thursday, June 30, 2011

தொல்லியல் எச்சமாகுமா யாழ் கோட்டை ?

யாழ்ப்பாண வரலாற்றின் சின்னமாக விளங்குகிறது யாழ் கோட்டை. யாழ் கடல் நீரேரியின் கரையில் இது அமைந்துள்ளது. ஆறு நூற்றாண்டுகளைக் கடந்துவிட்ட நீள் வரலாறு அதில் அடங்குகிறது.

கடந்த தூரம் நீளம்

ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட கோட்டை பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் மிகவும் பலமானதாகவும். அற்புதமானதாகவும் கட்டப்பட்டிருந்தது. கீழைத்தேச நாடுகளிலுள்ள கோட்டைகளில் யாழ்கோட்டை பலமானதாகவும், சிறந்ததாகவும் இருப்பதாக கட்டிடக் கலை நிபுணர்கள் எடுத்துரைத்திருக்கிறார்கள்.
முதலில் முஸ்லீம்களின் சிறிய பண்டகசாலையாக இக்கோட்டை இருந்ததாகவும் பின்னர் போர்த்துக்கேயர் அப் பண்டகசாலையை நாற்சதுரக் கோட்டையாக விரிவுபடுத்தியதாகவும் சில செய்திகள் கூறுகின்றன.

மாறாக சோழர் காலத்து மண்கோட்டையானது போர்த்துக்கேயரால் கற்கோட்டையாக  நவீனப் படுத்தப்பட்டதாகவும் வேறு சிலர் கூறுகின்றனர்.

போர்த்துக்கேயரின் யாழ்    கோட்டை (நன்றி தினகரன்)

1625ம் ஆண்டு போத்துக்கேயரால் கட்டப்பட்டது. 1680ல் ஒல்லாந்தரால் ஐங்கோண புதுவடிவில் கட்டப்பட்டது.


1680ல் ஒல்லாந்தரால்...

பின் 1795ல் ஆங்கிலேயர் வசம் வந்தது.


யாழ்ப்பாண கோட்டையின்     அமைப்பு (நன்றி தினகரன்)

 5 கொத்தளங்களைக் கொண்டதாக இருந்தது. கடல்நீர் ஏரியை அண்டி இரு கொத்தளங்களும், நிலத்தை அண்டி 2 கொத்தளங்களும் அமைந்திருந்தன. இந்தக் கொத்தளங்கள் உயர்ந்த மதில்களால் இணைக்கப்பட்டிருந்தன.

அடிப்பகுதி 40 அடி, உச்சியில் 20அடி. சுற்றிவர அகழி

கோட்டை மதில் அடிப் பகுதியில் 40அடி அகலமானதாகவும், உச்சியில் 20 அடி அகலமாகவும் அமைக்கப்பட்டிருந்தது. மதிலின் வெளிப்பக்கமாக முருங்கைக் கற்களால் அமைக்கப்ட்ட 4 அடிக் கட்டமைப்பு இருந்தது. உட்கோட்டையைச் சுற்றி நீராழி ஓடிக்கொண்டிருக்கும். கோட்டையைச் சுற்றியிருக்கும் 132 அடி அகலமான அகழியிது.

முதல் அரண்

 கோட்டை வாயில் பலம்வாய்ந்து இருந்ததாகத் தெரிகிறது. நீராழிக்கு வெளியேயும் கோட்டை மதில், பெரிய வாயில் இருந்ததற்கான அடையாளங்கள் இப்பொழுதும் இருக்கின்றன.

நான்கு தாழ் கொத்தளங்கள் வெளி மதிற்சுவரோடு இருந்ததாகவும், 19 காவல் அரண்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும், பத்தடிக்கு ஒரு பீரங்கி இருந்ததாகவும் வரலாறுகள் சொல்கின்றன. இராணுவ பாதுகாப்பிற்கும், நிர்வாக நடவடிக்கைகளுக்கும் கோட்டை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கோட்டை கதவைத் தாங்க பலமாக கொளுக்கி

கோட்டையின் வெளி வாயிற் கதவு 6 அங்குலத்திற்கு மேல் தடிப்பானதாக இருந்ததாகவும் போர் யானைகள் முட்டி உடைக்காதிருக்க கூடான ஈட்டிகள அதில் பொருத்தப்பட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

யாழ் கோட்டையிலிருந்த    ஒல்லாந்தத் தேவாலயம் (நன்றி தினகரன்)

கோட்டையின் தென் கிழக்குப் பகுதியில் சதுரங்கத் தேவாலயம் முன்பு இருந்தது. இப்பொழுது அழிக்கப்பட்டுவிட்டது.

கோட்டை இரண்டு வாயில்களைக் கொண்டிருந்தது. ஒன்று நீர்ப்பாதை. மற்றையது நிலப்பாதை. நீர்ப்பாதை கடலோரமாக அமைந்திருந்தது. நில வழிப் பாதையில்தான் பிரதான வாயிற்புறம் அமைந்திருந்தது. இது தொங்கு பாலத்தினால் தரையுடன் இணைக்கப்பட்டிருந்தது.

ஆங்கிலேயர் காலக் கோட்டைக்குள் கவர்னர் பங்களா, ராணி மாளிகை, சிறைச்சாலை என்பன இருந்தன. பிற்காலத்தில் கைதிகள் விசாரிக்கப்படும் இடமாக ராணி மாளிகை மாறியது.

எமக்குத் தெரிய சிறைக் கைதிகளை அடைத்து வைக்கும் இடமாக இருந்தது. பள்ளிச் சுற்றுலாவில் சென்று பார்த்திருக்கிறோம்.

பயமுறுத்தும் தூக்குமேடைக் கட்டிடம்

தூக்கில் இடுவதற்கான தூக்குமேடைக் கட்டிடம் இன்றும் காணக் கூடியதாக இருக்கிறது.

கோட்டையை அண்டிய பகுதியில் 600- 700 வருடங்களுக்கு முந்தியதாகக் கருதப்படும் ஈமச் சின்னம் மனிதர்கள் முறையான விதத்தில் அடக்கம் செய்யப்பட்ட இடம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது விஞ்ஞான ஆய்விற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.
பல மட்பாண்டங்கள் தாழிகள் உட்பட பெருமளவு பொருட்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இவை 12ம் 13ம் நூற்றாண்டாம் காலத்தைச் சேர்ந்த சீன மட்பாண்டப் பொருட்கள் எனச் சொல்கிறார்கள்.

யாழ். பல்கலைக்கழக தொல்லியற்துறைத் தலைவர் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் தலைமையில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
யாழ்ப்பாணக் கோட்டையின் அகழ்வாராய்ச்சியின் போது ஒல்லாந்தர் காலத்துக்கு முற்பட்ட தொல்லியற் சின்னங்கள் மீட்கப்பட்டதாக இவ்வருட ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. பாண்டியர், பொலநறுவை மன்னர் கால நாணயங்களும் கிடைத்ததாகத் தெரிகிறது. புராதனகால சுக்கா, நாணயங்கள், மட்பாண்ட ஓடுகளும் கிடைத்ததாகப் பத்திரிகைகள் தெரிவித்திருந்தன.

தொல்லியல் எச்சமாக மறைந்து போன எமது  பாரம்பரியப் பொருட்களில் விரைவில் யாழ்கோட்டையையும் சேர்ந்து கொள்ளுமா?

Friday, May 27, 2011

யாழ் இராச்சிய புராதன தலைநகரில் ஆழ்வார் ஆலயம்

யாழ் வடமராட்சி பகுதியில் உள்ள துன்னாலை கிராமத்திற்கு அண்மையில் வல்லிபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ள ஆலயம் இது.  யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ள ஒரு ஊர்தான் வல்லிபுரம் பகுதியாகும்.


வல்லி நாச்சியார் என்றொரு பெண் இருந்தாளாம். அவள் கற்கோளம் கடலில் படகில் ஏறி கடலுள் சென்ற போது மீன் ஒன்று துள்ளி விழுந்து அவள் மடியில் விழுந்ததாம். மீனானது சங்கு சக்ரம் உடையதாகக் காட்சி அளித்தது. அம் மீன் சிறீ சக்கரம் ஒன்றை இவளுக்கு அளித்து மறைந்தது. 

அச்சக்கர வடிவத்தை ஆலயத்தில் வைத்து வழிபட்டு வந்தாள். அவ்வாலயமே வல்லிபுர ஆழ்வார் என அழைக்கப்படுகிறது  எனவும் நம்புகிறார்கள்.

நன்றி vallipuram.wordpress.com

மூலஸ்தானத்தில் சிறீசக்கரம் வழிபடப்பட்டு வருகிறது. இப்பொழுது மிகவும் பெரிய ஆலயமாகக் கட்டப்பட்டுள்ளது. மூன்று வீதிகள் அமைந்துள்ள பாரிய ஆலயமாகும். 

வாயிற் கோபுரமும் பெரியது. ஏழுநிலைகளைக் கொண்ட இந்த ராஜகோபுரம் புராணக் கதைகளைக் கூறும் சிற்பங்களுடன் எழுப்பப் பட்டுள்ளது.வல்லிபுர ஆழ்வாரை வழிபடமுன் வீதிக்கு எதிர்ப்புறம் அமைந்திருக்கும் பிள்ளையார் கோவிலைத் தர்சித்துச் செல்வதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். 

பிள்ளையார் கோவிலின் முன் பகுதியில் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறார் இந்தக் குட்டிப் பிள்ளையார். 

பிள்ளையாருக்குக் காவல் இருக்கிறாரா அனுமார்?


பிள்ளையார் கோவில் முற்புறம்


பிள்ளையார் கோயிலின் பின் புறமாக கேணிஇருக்கிறது. இதில் நீராடி கோயிலுக்குச் செல்வார்கள். கேணிக்குள் இறங்கி நீராடுவதில்லை. வெளியே நின்று வாளிகளால் நீரெடுத்து நீராடுவர். விசேடதினங்களில் பெரும் கூட்டமாய் மக்கள் நீராடுவதைக் காணலாம்.

பிள்ளையார் கோவிலின் பின்புறமிருக்கும் கேணி

யாழ்பாணத்தில் உள்ள கோவில்களில் எல்லாம் சந்தனமே பிரசாதமாக வழங்கப்படுகையில் இங்கு மாத்திரமே வைஷ்ணவ பாரம்பரியப்படி நாமம் வழங்கப்படுகிறது. இவ்விடத்தின் மேற்குப் புறமாகக் கிடைக்கும் வெண்களியே நாமமாக வழங்கப்படுகிறது. 

தேர் தரித்து நிற்கும் 'தேர் முட்டி'. பின்னணியில் ஒரு மடம்

திருவிழாக்கள் மிகவும் பிரசித்தமானவை.


விழாக் காலத்தின் பின் சுவாமி கேணியில் நீராடுவார். கேணித் தீர்த்தம் என்பார்கள். கோவிலின் பின்புறமாக பிரதான வீதிக்கு அருகில் இக்கேணி அமைந்துள்ளது.

மிகவும் பிரசித்தமானது தேர்த் திருவிழா, மற்றும் கடல் தீர்த்தத் திருவிழாக்களாகும்.


கற்கோவளத்தை அண்டிய சமுத்திரத்தில் கடற் தீர்த்தம் நடைபெறும். இவ்விடத்தை திருபாற்கடல் என அழைப்பார்கள். அந்தி மாலையில் தீர்த்தத் திருவிழா நடைபெறும். அன்று குடா நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெரும் திரளான மக்கள் கடல் தீர்த்தத்தைக் காணச் செல்வார்கள். வேறெங்கும் காணக் கிடைக்காத அரிய காட்சி இதுவாகும்.

லொரி, டிரக்டர், சைக்கிள்,வாகனங்கள் எனப் பலவற்றிலும் மக்கள் வெள்ளமாகத் திரண்டு வருவார்கள். மண்மேடுகள் நிறைந்திருக்கும் இடத்தை கால்நடையாகத் தாண்டிச்சென்று கடற்கரையை அடையலாம். பெரும் அலைகளுடன் மோதும் கடலில் சுவாமியை வள்ளத்தில் ஏற்றிச் சென்று நீராட்டுவார்கள். மக்கள் கடலில் தீர்த்தம் ஆடுவர்.


இது மிகவும் சிறப்பான காட்சியாக இருக்கும்.


இக்கோவில் முதன் முதலில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இரண்டாம் நூற்றாண்டில் இங்கு ஒரு அரசு இருந்ததாகவும் அதன் அரசனாக அழகிரி என்பவன் இருந்ததாகவும் சில ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன. புராதன நகருக்குரிய பல தொல்பொருட் சான்றுகள் கிடைத்ததாகவும் அறிய முடிகிறது. யாழ் இராச்சியத்தின் தலைநகரான சிங்கை நகர் இதுவென பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

சரித்திர ஆதாரங்களுக்கு:-

Vallipuram வல்லிபுரம் விக்கிபீடியா

இத்தலத்தை பற்றிய வரலாற்றை தட்சிண கைலாச புராணம், தட்சிண கைலாச மான்மியம் என்பவற்றிலும் காணலாம் என்றும் அறிய முடிகிறது. சிங்கள மொழியில் 14ம் நூற்றாண்டில் எழுந்த தூது இலக்கியங்களிலும் (சந்தேச காவியங்கள்) இத்தலமகிமை பேசப்படுகின்றதாம்.

சிறிய வயதில் கோயிலுக்குச் சென்று வரும்போது தாமரைப்பூக்கள்,இலைகள் வாங்கிவருவோம். இங்குள்ள கடைகளில்  தாமரை இலையில் உணவு வழங்குவார்கள். கோவிலை சுற்றி பல அன்னதான மடங்கள் உள்ளன. இங்கு ஆவணி ஞாயிறுகளில் நேர்த்திக் கடனாக பொங்கல் செய்து நாகதம்பிரானுக்கு படையலிட்டு அடியார்களுக்கு வழங்குவர்.

இது வல்லிபுர குறிச்சியில் உள்ள தாமரைக்குளம். பிள்ளையார் கோவிலுக்கும் அப்பால் தோட்ட வெளிகளிடையே இந்தப் பாரிய தாமரைக் குளம் அமைந்திருக்கிறது.


கடற் தீர்த்தத்திற்கு சுவாமி செல்லும் வழியெல்லாம் மணற் திட்டிகள் பரந்திருக்கும். கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய மணற் கடற்கரையான  இது பிரபல்யமாகாமல் இருப்பதற்கு நாட்டின் நிலவி வந்த சூழலும், தமிழ் பிரதேசமென்ற அக்கறையீனமுமே காரணம் எனலாம்.


கோயிலுக்கு செல்லும்வழியில் காண்பதற்கு அரிய கிளைகளை உடைய பனை மிகவும் அழகுடன் விரிந்து நிற்கிறது. பிடிபட்டார் உங்கள் கண்களுக்கு விருந்தாக .


மேலும் சில புகழ் பெற்ற தலங்கள் பற்றி....:- மாதேவி -: