Thursday, December 25, 2008

மாம்பழ ரிறிப்

மாம்பழமாம் மாம்பழம் .
சுவையான மாம்பழம்.
கறுப்பாக இருக்காது .
கறுத்தகொழும்பு மாம்பழம்.
கவர்ந்திழுக்கும் கண்களை..


மூக்கை நிறைக்கும் வாசனை
முத்தமிட்டாலும்
தொற்றுமே
சூப்பித் தின்ற போதிலும்
நக்கிய கொட்டையை
வீசியெறிய
விடாது...

இன்னும் இன்னும்
மாம்பழங்கள்
செம்பாடு, அம்பலவி
வெள்ளைக் கொழும்பு, விலாட்
கிளி மூக்கு
என்றெல்லாம்
இன்னும் இன்னும்
எத்தனையோ..


பச்சைதின்னி
தெரியுமா? ...
கல்லில் குத்தி
உடைத்தெடுத்து
கார உப்பு
கலந்தெடுத்து
வாயிலிட்டால்
சுவை என்ன?
குட்டீசுகளிடம் கேளுங்க..


வரண்ட மண் யாழ்ப்பாணம்.
மழையைக் காண முடியாது.
என்றபோதும்
கெட்டியான மாம்பழ
விளைச்சலுக்கு
உலகெங்கும் பிரபலம்..


அவற்றின சுவை
சொல்லி மாளாது
வாரீங்களா
ஒரு ரிறிப் அடிப்போம்.
சுவைத்து மகிழ்வோம்..

மாம்பழ விலை
இருபத்தைந்து
போய்வர பிளெனுக்கு
இருபத்தைந்தாயிரம்
மட்டுமே...
------மாதேவி--------


Saturday, November 29, 2008

செக்கச் செவந்த பழம் தேனாட்டம் இனிக்கும் பழம்

காலையில் தொடங்கி இரவு வரை ஓட்டம்.. ஓட்டம்.

யாரைக் கேட்டாலும் “நேரம் இல்லை”.

“எல்லாம் ஒரு சாண் வயித்துக்காக” என்ற பதில் வரும்.

25- 30 வருடங்கள் பின்நோக்கிப் பார்த்தோமானால் அப்பொழுதும் இந்த இதே வயிறுதானே?

அப்பொழுது ஆசைகள் ஓரளவு கட்டுக்குள் இருந்தன. ஆசைப்படுவதற்கும் வாங்கிக் குவிப்பதற்கும் படோபடப் பொருட்கள் அதிகம் இல்லை. இப்பொழுது கடை கொள்ளாப் பாவனைப் பொருட்கள்? டிஜிட்டல் ரிவி, டிஜிட்டல் கமரா,விடியோ, மொபைல், கொம்பியூட்ர், டிவீடி, மிக்ஸி…

வாழ்க்கைச் செலவோ ஜெட் வேகத்தில் மேலே சென்று கொண்டிருக்கிறது. ஆனால் ஆசை அதைவிட வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கிறது.

ஓரிரு தலைமுறைகள் தாண்டுவதற்கிடையில் வாழ்க்கை முறையில்தான் எத்தனை மாற்றங்கள்? பிறந்த ஊரை விட்டுப் பிரிந்தோம். வேலை செய்யும் நகரை நோக்கி நகர்ந்தோம். நகரின் நெருங்கிய நொருங்கிய, சூழல் மாசடைந்த வாழ்க்கையே இசைவாகிவிட்டது. இயற்கை கிராமச் சூழல் கனவாகிவிட நகரச் சூழலின் தொடர் மாடிகளுக்குள் சிறையானோம்.

சூரியனைக் காண்பது பலருக்கு வீதிக்கு இறங்கினால்தான் கை கூடும். விடிவதும் சாய்வதும் மணிக் கூட்டைப் பார்த்துத்தான். இத்தகு வாழ்க்கைக்கு அனைவரும் பழக்கப்பட்டுக் கொண்டோம். நகரங்களில் பெரும்பாலும் அனைவரும் மாடிமனை வீட்டு வாசிகளாகிவிட்டோம்.

கிராமத்தில் வசிப்பதைவிட நகரங்களில் சில வசதிகளும் உண்டு. வசிப்பதற்கு அளவான அடக்கமான வீடுகள், கூட்டுவதும், துடைப்பதும் சுலபம். வீட்டு வேலைகள் குறைவு, உழைப்புக்கு ஒதுக்க வேண்டியது அதிகம்.

இருந்தும் அடிக்கடி கிராமத்தை நினைக்கத் தோன்றும்.இலந்தைப் பழம் என்றொரு சொல். 2ம் வகுப்பு தமிழ்பாடப் புத்தகத்தில். பழவகைகள் என்ற பாடத்தில் வருகிறது. “இலந்தைப்பழமா அது எப்படி இருக்கும்” என்றுதான் கேட்கிறார்கள் குழந்தைகள். இதுதான் இலந்தைப்பழம் என்று எங்கள் பிள்ளைகளுக்கு இங்கு காட்ட முடியுமா? சந்தைக்குப் போனாலும் காணக் கிடைக்காது.

‘இலந்தைக் காணி’ சிறுவர்களாக நாங்கள் ஓடி ஆடி கிராமங்களில் திரிந்த போது அடிக்கடி விசிட் செய்யும் இடம். ‘இலந்தைக் காணி’ இது இடு பெயர். இப் பெயரில் ஒவ்வொரு ஊரிலும் பெரிய நிலப்பரப்புக்கள் இருந்தன. உள்ளே சென்றால் கொண்டாட்டம்தான்.

முள்ளுக் குத்தாவிடில்!

பத்துப் பதினைந்து இலந்தை மரங்களாவது இருக்கும். ஊர்ப் பிள்ளைகளைக் கேட்டால் எவரும் சொல்வார்கள். “இது சீனி இலந்தை, இது மாப்பிடியான இலந்தை, புளி இலந்தை, அது வேப்பங்காய் இலந்தை”.

இறுதியில் இருப்பது புழு இலந்தை.

ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு பெயர். அடுக்கிக் கொண்டே போவார்கள். பொறுக்கி வாயில் போடுவோம். மிகுதியை மடியில் கட்டி வந்தும் சாப்பிடுவோம்.

அந்தப் பழங்களின் ருசி, அந்தச் சூழல் இவை எல்லாம் எங்கள் குழந்தைகளுக்கு கிடைக்குமா? கூட்டிச் சென்று காட்டும் காலமும் மலை ஏறிவிட்டது.

இதே போன்றுதான் பனைமரம்; படத்தில் காட்டி “இதுதான் பனை. கிளை இல்லாதது” என்று பாடமாகக் கற்பிக்க வேண்டிய நிலை. ‘பேரதெனியா போடனிக்கல் கார்டனு’க்கு கூட்டிக் கொண்டு போய்த்தான் காட்ட வேண்டியுள்ளது. வடமராட்சி வல்லிபுர ஆழ்வார்; கோவிலுக்கு செல்லும் வழியில் கிளைப் பனைகளை பார்த்துப் பரவசம் அடைந்ததும் நினைவுக்கு வருகிறது.

இந்நிலையில் குழந்தைகளுக்காக நாமும் மரம் செடி நடுவோம்.
பனைமரமா நட முடியும்?

துளசிச் செடி, கற்பூரவள்ளிச் செடி, மிளகாய்ச் செடி, கருவேற்பிலை, தூதுவளை, நித்திய கல்யாணி என அடுக்கு மாடியாக இருந்தாலும் கூட ஓரிரு செடிகளையாவது வளர்க்கலாம் அல்லவா?.

காற்றின்றி, ஒளியின்றி நோஞ்சல் செடியாக வளர்ந்தாலும் கூட. வீட்டில் வளரும் ஓரிரு செடிகளிலிருந்து ஒட்சிசனையாவது பெறுவோம். காய்த்தால் பூத்தால் ரசிப்போம். உண்ண முடிந்தால் உண்போம். அதனின்று வரும் சிறு நலத்தையாவது பெற முயல்வோம்.

அத்துடன் குழந்தைகளின் இயற்கை அறிவையும் வளர்ப்போம்.


முடிந்தவரை இயற்கை வளங்களையும் காப்போம்.

:- மாதேவி -:

Thursday, November 13, 2008

மணநாள் பான விருந்து


மெல்லுடல்
ரீங்கரிக்கும் வீணையெனும்
குரலோசை
சிட்டெனப் பறக்கும்
சுறுசுறுப்பு
கண்டதும் காதல் பிறக்காதா?


பிறந்தது காதல்
மயங்கினேன் அவளில்
ஆயினும்
ஏற்பாளா என்னை
வெறுப்பாளா?
சேரிக்கரையான் என


கண்ணால் காதல் பேச
சென்றேன் அவளகம் தேடி
பங்களாக்களின் வீதி
வெற்று கோலாப் போத்தல்கள்
சிதறிக் கிடந்தன
அந்தஸ்தின் சின்னமா
அகங்காரத்தின் முகமா?


மெல்லிடையாள் பின்நகர்ந்து
களவாய்ப் பின்தொடர்நதேன்
பட்டு மெத்தையில்
சரிந்தாள் சோர்வாக
பசிக் களையா
அல்ல
உண்ட களை
எந் நாசியில் படர்ந்தது
அவள் மேனியில் பிறந்த உணவின் நெடி


போஸாக்கு உணவு
புரதமோ அளவிற்கதிகம்
கொழுப்பிற்கும் குறைவில்லை
பூரித்து மினுங்கியது அவள் முகம்
பாதங்களும் கவர்ந்திழுத்தன


தினம் தினம் தொடர்ந்தேன்
பாவம் என்றெண்ணினாளோ
மோகத்தை புரிந்து கொண்டாளோ
என் கருமேனியில் மயங்கினாளோ?
காதலில் வீழ்ந்தாள்!
கல்யாணமும் வேண்டுமென்றாள்.


விடுவேனா வாய்ப்பை
பெண்வீட்டு மாப்பிளையானாலும்
பரவாயில்லை
மார்கழிக் கூதலுக்கு
மெதுமெது மெத்தை
அணைப்பதற்கு அவள்.
வாய் திறந்தால்
வயிறு நிறையுமளவு
உணவு.
வேறென்ன வேணும்


திருமண நாள்
விருந்தினர் பலர் கூடினர்
அனைவருக்கும் இனிய பானம்
வைன் கலரில்
கண்ணுக்கும் கவர்ச்சி
உடலுக்கும் தென்பு.. உற்சாகமும் கூட

சொகுசு பங்களாக்களில்
கொழுத்த மனிதர்கள் மது
பானங்களில் திளைத்தனர்.
பாடினோம்
பறந்தோம்
பாடிப்பாடிப் பறந்தோம்.
மறைவில் அவர்தம் மேனியில்
படர்ந்தோம்.
வாயிடைப் பிறந்த
மென் ஸ்ரோவால்
உறிஞ்சினோம்
அவர் தம் தமனிகளிலிருந்து
மணநாள் விருந்தாயிற்று!


பாடுவோம்
பறப்போம்
எம் இனம்
பெருக்குவோம்


பரப்புவோம்
டெங்கு, சிக்கன் குனியா
மலேரியா, யானைக் கால்நோய்
இன்னும் பல.. பல நோய்கள்
பெருக்குவோம்.

-: மாதேவி :-


Wednesday, November 12, 2008

மற்றொரு வருகை

நாலு மாதங்கள் கூட ஆகவில்லை. தயிர் அவலோடு உங்களை சாப்பாட்டு விருந்துக்கு அழைத்து. இப்பொழுது சற்று தைரியம் வந்துவிட்டது, வேறும் ஏதும் எழுதலாம் என்று.

எதை எழுதுவது எனத் திட்டம் ஏதும் இல்லை. ஆயினும் சொல்வதற்கு விடயங்களுக்கும் வார்த்தைகளுக்கும் பஞ்சமா? நெஞ்சமெல்லாம் நிறைந்து கிடக்கிறதே.

படித்ததில் ரசித்ததை, பார்த்ததில் நெகிழ்ந்ததை, உள்ளத்தைக் குடைந்ததை. இவற்றை எல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள மற்றொரு வருகை இது.

"மூட்டைப் பூச்சியால
மூட்டை தூக்க முடியாது

பட்டாம் பூச்சியால பட்டம்
விட முடியாது."

" ஒரு எறும்பு நினைச்சா 1000 யானையை
கடிக்க முடியும். ...ஆனா 1000 யானை
நினைச்சாலும் ஒரு எறும்பை
கடிக்க முடியாது"

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இவை இருக்கிறம் 05.10.2008 இதழில்
வெளிவந்த இரு ஜோக்குகள்.

அல்லது படிப்பினையா?

இந்த இதழில் குசேலன் திரைப்படம் பற்றி ஒரு கட்டுரை
வந்துள்ளது. ஓர தொழில் முறை கொலைகாரனின் படம் என
தலைப்பிடப்பட்டுள்ளது.

'எழுத்தாளர் சுதேசமித்திரன் அம்புருதா பெப்ரவரி 2008 இதழில் எழுதிய கட்டுரையின் இறுதிப் பகுதி இதாம்.

கானா பிரபாவின் 'ஓய்ந்துவிட்ட கான சுரம்' மறைந்த நாதஸ்வர மேதை கானமூர்த்தி பற்றிய பதிவு மிக அருமையாக 'இருக்கிறது.'

மருத்துவம், அனுபவம், சிறுகதை, சினிமா, ஜோக்ஸ் என வாசிப்பதற்கு சுவையாக இருக்கிறது 'இருக்கிறம்'

தொடர்புகளுக்கு

இருக்கிறம்
3, டொரிங்டன் அவனியூ
கொழும்பு 07.

:- மாதேவி -: