Wednesday, March 17, 2010

நீரின்றி அமையாது வாழ்க்கை


மனிதர்களுக்கும் ஏனைய ஜீவராசிகளுக்கும் உயிர் வாழ்வதற்கு சுத்தமான நீர் மிகவும் அவசியம் என சிறுவயது முதலே படித்து வருகிறோம்.

நாம் பருகுவது சுத்தமான நீராக இருக்க வேண்டும்.
நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்து எடுத்த நீர் அல்லது பில்டரில் வடிகட்டிய நீர் குடிப்பதற்கு ஏற்றது.
குழாய் நீரை நேரடியாக எடுத்து அருந்துவதை நிறுத்த வேண்டும்.

நீரில் பக்றீரியாக்கள் இருப்பதால் டயரியா, டைபொயிட், கொலரா, மஞ்சள் காமாலை போலியோ, குடற் புழுக்கள், போன்ற நோய்கள் வரும் என்பதை நாங்கள் எல்லோரும் அறிந்திருக்கிறோம். ஆயினும் எத்தனை பேர் இதனை சரியாகக் கடைப்பிடிக்கிறோம்?

ஆனால் உலக சுகாதார ஸ்தாபனம் மேற் கூறிய நோய்களுக்கு மேலாக நீரினாலும் நீர் மாசடைவதாலும் பரவும் நோய்கள் என நீண்டதொரு பட்டியலையே தந்திருக்கிறது.

• Anaemia
• Arsenicosis
• Ascariasis
• Campylobacteriosis.
• Cholera.
• Cyanobacterial Toxins
• Dengue and Dengue Haemorrhagic Fever.
• Diarrhoea .
• Drowning
• Fluorosis
• Guinea-Worm Disease (Dracunculiasis).
• Hepatitis.
• Japanese Encephalitis.
• Lead Poisoning.
• Leptospirosis
• Malaria .
• Malnutrition .
• Methaemoglobinemia
• Onchocerciasis (River Blindness).
• Ringworm (Tinea)
• Scabies
• Schistosomiasis.
• Spinal Injury
• Trachoma.
• Typhoid and Paratyphoid Enteric Fevers.


ஆபிரிக்க நாடுகளில் நீர் பற்றாக் குறையால் முகத்தை நன்கு சுத்தம் செய்யாததாலும், இலையான்கள் (ஈ) பெருகுவதாலும் ரக்கோமா (tracoma)நோய் ஏற்பட்டு குணப்படுத்த முடியாத பார்வை இழப்புகள் இன்றும் நடப்பது எத்தனை கொடுமை.


6 மில்லியன் மக்கள் ஏற்கனவே நிரந்தரப் பார்வை இழப்பிற்கு ஆளாகியிருக்கிறார்கள். மேலும் 146 மில்லியன் மக்கள் பார்வை இழக்கும் ஆபத்தை எதிர் நோக்குகிறார்கள்.

போதியளவு சுத்தமான நீர் கிடைக்காமையால் ஏற்படக் கூடிய ஆபத்திற்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்.

கிராமங்களில் வீட்டுக் கூரைகளின் பீலிகளை ஒட்டி கீழே பெரிய தொட்டிகள் கட்டி வைத்திருப்பார்கள். மழைக் காலத்தில் பீலிகளிலிருந்து விழும் நீர் தொட்டிகளில் நிரம்பி இருக்கும். பாத்திரங்கள் வீடு கழுவ, உடைகள் அலச, பூமரங்கள் பயிர்கள் நீர்ப் பாய்ச்சுவதற்கும், இந் நீரைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

மழை நீர் மிகவும் சுத்தமானது. அதில் இரசாயனப் பொருட்கள் கலக்க வாய்ப்பில்லை.

எங்கள் முன்னோர் நேரடியாகப் பெறும் மழை நீரை எடுத்து வைத்து தேநீர் தயாரிக்கவும் பருப்பு அவிக்கவும் பயன்படுத்துவார்கள்.
அவற்றின் தரமோ சொல்லி மாளாது.

ஏனெனில் எமது யாழ்ப்பாண நீர் பல பகுதிகளில் சற்று உவர்ப்பாக இருப்பதால் பருப்பு அவிவது குறைவு. தேநீரும் சற்று சுவை குறைவாகவே இருப்பதால் அவ்வாறு மழை நீரை பயன்படுத்தி சமையலை அசத்துவார்கள்.

மழை நீர் சேகரிப்பு என்பது கடலை அண்டியுள்ள உப்பு நீர் உள்ள பிரதேசங்கள், நிலத்தடி நீர் வளம் குறைவாக இருக்கும் பிரதேசங்கள், ஆழக் கிணறு ஊற்றுக்கள், வரண்ட பூமியில் உள்ளவர்களுக்கு மிகவும் பயன்தர வல்லன.


முன்னைய காலத்தில் குளம், ஏரி, கேணிகள் மழை நீரைத் தேக்கி வைத்து நீர் பாசனத்திற்கும், விலங்குகள் குடிப்பதற்கும் இருந்தன.
சலவைத் தொழிலாளர் தொழில் செய்வதற்கு என்றே தனியான குளங்களும் இருந்தன.

அத்துடன் வெள்ள நீர் கடலுடன் கலக்காது நிலத்தடி நீராகச் சேகரிப்பதற்கும் இவை அவசியமானவையாகும்.

நிலத் தட்டுப்பாடுகள் காரணமாக இருந்த கேணி குளங்கள் பல படிப்படியாக வீட்டு மனைகளாகவும், விளையாட்டுத் திடல்களாகவும் மாறியதை நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன்.


கோயில்கள் தோறும் குளம் வைத்திருப்பது எமது மரபு.
இன்றும் பெரும்பாலான குளங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இவற்றில் எத்தனை குளங்கள் சுத்தமாக இருக்கின்றன?
புனித நதிகள் யாவும் படும்பாடு சமயச் சடங்குகள் என்ற பெயரால் தொலைக்கின்றோம்.

உயிர் வாழ்வதற்குச் சுத்தம் முதலாம் பட்சம் சமயச் சடங்குகள் இரண்டாம் பட்சம் என்ற நிலையை எப்போ உணரப் போகிறோம்?

அணு மின்நிலையம், நூல் பனியன் தொழிற்சாலை, உலோகக் கழிவுகளை ஆறுகளில் கலக்க விடுவதால் மீன்கள் ஆடுமாடுகள் இறப்பதையும் அந்த நீரை பயன்படுத்தும் மனிதர்களுக்கு வரும் நோய்கள் பற்றியும் அன்றாடம் நிறையச் செய்திகளைத்தான் பத்திரிகைகளில் படித்துக் கொண்டிருக்கிறோம்.

"வெப்ப மிகுதியால் நீர்த் தேக்கங்களில் தண்ணீர் வற்றி விட்டது தண்ணீர் வெட்டு".
"குடி நீர் கிடைக்காமையால் மக்கள் பெரும் கஷ்டம்" என்ற செய்திகள் தொடர்ந்தபடிதான் இருக்கின்றன.

குடிநீருக்காக பல மைல் தூரம் குடத்துடன் நடந்து செல்லும் சனங்கள் எத்தனையோ பேர் கிராமங்களில் இருப்பதை இன்றும் காண்கிறோம்.

கழிவு நீரைப் பயன்படுத்தல்

உலகம் முழவதும் எத்தனை நாடுகள் நீர்ப் பற்றாக் குறையினால் துன்பப்படுகிறார்கள் என்பதை இங்குள்ள வரை படத்தைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.


நீர் கிடைக்காமல் இருப்பது பரிதாபத்திற்குரியது. ஆனால் கிடைக்கும் நீரையும் சரியான முறையில் பயன்படுத்தத் தெரியாது எத்தனை நாடுகள் துன்பப்படுகின்றன.

கழிவு நீரை மீள் சுழற்சிசெய்வதை இப்பொழுது பல நாடுகள் செய்யத் தொடங்கியுள்ளன. வருடாவரும் 1,500 cubic kilometres கழிவு நீர் உலகளாவிய பெறப்படுகிறது.

கழிவு நீரில் நோயை உண்டாக்கும் கிருமிகள் மட்டுமின்றி பல போசனைப் பொருட்களும் உள்ளன.

கிருமிகளை நீக்கினால் நல்ல பசளையைப் பெற முடியும். நீரை நீர்ப்பாசனத்திற்கும், மிகுதியை சக்தி உற்பத்திக்கும் பயன்படுத்த முடியும்.

வளர்முக நாடுகளில் 80 சதவிகிதமான கழிவு நீர்கள் சுத்தப்படாது வெளியேற விடப்படுகின்றன.

அதனால் பல விதமான நோய்கள் பரவுகின்றன. இவற்றை சரியான முறையில் சுத்திகரித்தால் பயிர்களுக்காவது போதிய நீர் கிடைக்கும்.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு கிடைக்கும் நீரையும் அளவுடன் பயன் படுத்துவோம். மாசு படுத்தாது பாதுகாப்போம். எதிர் காலத்தில் நீருக்காக ஏற்படப் போகும் பிரச்சனைகளைத் தடுப்போம்.

காடுகள் எரியூட்டலைத் தடுப்போம்.

இயற்கை எமக்கு அளித்துள்ள வளங்களை அழியாது பாதுக்காத்துக் கொண்டோமேயானால் பருவ மழைகள் நீர் வளம் குன்றாது. பூமியில் வெப்பமும் அதிகர்க்காது தடுக்கலாம்.

புவியைக் காத்து நாமும் வளம்பெறுவோம். வருங்கால சந்ததிக்கும் விட்டுச் செல்வோம்.

உலகத் தண்ணீர் தினத்திற்கான தொடர் பதிவுக்கு அழைத்த சந்தனமுல்லை கிளிக் பண்ணுங்கள் அவர்களுக்கு நன்றி.

இத் தொடரைத் தொடர்ந்தும் கொண்டு செல்ல எனது பதிவுலக நண்பர்களில் சிலரான

ஜெஸ்வந்தி கிளிக் பண்ணுங்கள் ,

அமைதிச் சாரல் கிளிக் பண்ணுங்கள்

சின்ன அம்மிணி கிளிக் பண்ணுங்கள் ஆகியோரை அழைக்கிறேன்.

மாதேவி


Friday, March 5, 2010

பதின்ம நினைவுகள் தொடர் 2

வீட்டின் பின் முற்றத்தில் கிணறு.
அதை சுற்றி கமுக மரங்கள், வாழை மரங்கள்.
கருவேற்பிலை ஒரு புறமிருக்க
அதற்கு சற்றே தள்ளி மாமரங்கள் இருபுறமும் நின்று சோலையாக இருக்கும். உச்சி வெயிலுக்கு குளிர்மையைத் தரும்.


கிணற்றை ஒட்டி பெரிய சீமேந்துத் தொட்டி.

இந்தத் தொட்டிதான் எனக்கு மிகவும் பிடித்தது.

எனது அக்கால சுவிமிங் பூல் அல்லவா?

அண்ணாமார்கள் கடல், குளம் எனக் நீந்தவும் குளிக்கவும் செல்வார்கள்.

எங்களுக்கு இதெல்லாம் கிடைக்காது.

லீவு நாட்களில் தொட்டியை நிரப்பிவிட்டு தொட்டியில் ஏறி இருந்து காலையும் கையையும் அடிப்பேன். எனது நீச்சல் அழகைப் பார்த்து கிணற்று நீரில் வந்த மீன்கள் தோற்றுப் போய் ஓடிவிடும்.

மீன்களுள்ளும் ஒரு விஸ்வாமித்திரர் இருந்தார் போல!

தொட்டிக்கு வந்ததே கேடு. தொட்டியை இடித்துவிட்டு அவ்விடத்தில் பாத் ரூம் கட்டுவோம் என அப்பா தீர்மானித்தார்.

தொட்டியும் ஒரு நாள் என்னை விட்டு விரைந்து போயே விட்டது.

சில நாட்களில் குளியல் அறை நிமிர்ந்து நின்றது.

0.0.0.0.0.0.0

"ஐயோ! ஐயோ! படுபாவி...
... அடிக்கிறான் ஓடி வாங்கோ!"

இரவு ஒன்பது மணிக்கு நாங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள மாலுக்குள் இருந்து லூடோ விளையாட்டில் இருந்தோம்.

விளையாட்டுக் குசியில் காதில் விழுந்தும் உறைக்கவில்லை.

'சந்திரா மாமி கத்துகிறாளே! ஓடுங்கடா' என்றான் பெரிய அண்ணா.

சூடுகண்ட பூனை போல துள்ளி விழுந்தோம்.

மாமி அவித்துத் தந்த தேங்காய்க் குழல் புட்டும், சிவப்பு அரிசிமாத் தோசையும் எங்களை நாலுகால் குதிரைப் பாய்ச்சல் பாயவைத்தது.

வேலிகளைப் புட்டுக் கொண்டு பறந்து சென்று நான்காம் வீட்டில் உள்ள மாமி வீட்டு விறாந்தையில் மூச்சிழுத்தபடி நின்றோம்.


மாமியின் புருசனைப் பார்க்கப் பயமாக இருந்தது. கண்ணெல்லாம் சிவந்து கோபத்தில் ஆவேசமாக நின்றார். ஏதா புளித்த வாடை குப்பென மூக்கை வெருட்டியது.

'குடித்திருக்கிறார் போலை. அம்மம்மாவைக் கூட்டி வாங்கோ' என ஒருவன் கத்தினான்.

இருநூறு யார் ஓட்டப் போட்டியில் முதலாவதாக வந்த எங்களுள் ஒருத்தன், கொளுவிக் கிடந்த கேட்டையும் உதைத்துக் கொண்டு அம்மம்மாவைக் கூட்டி வரப் பறந்தான்.

அடுத்த இரண்டாவது நிமிடம் அம்மம்மா ஓட்டக்காரனை மிஞ்சிய வேகத்தில் வந்துவிட்டார்.

அதற்குள் மாமியின் புருசன் தாள்பாள் கொட்டனை ஓங்கிக் கொண்டு முன்னேறினார்.

எங்களை அடிக்க எனப் பயந்து என் கால்கள் பின்வாங்கின. ஆனால் அவர் மாமியை நோக்கித்தான் நகர்ந்தார்.

ஓங்கிய கொட்டன் கீழிறங்குவதற்குள் அம்மம்மா குறுக்கே பாய்ந்தா.
இறுகப் பற்றினா கொட்டனை.

"என்னடா கை நீளுதோ"

மாமியை அடிக்க ஓங்கிய கை வெலவெலத்தது.

அம்மம்மாவிற்கு இந்தப் பலமா!

அம்மம்மாவைக் கண்டதும் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடும் தெருநாயைப் போல இவரும் ஒடுங்கியது எமக்கு ஆச்சரியமாக இருந்தது.

"இண்டைக்குக் குடிச்சுப் போட்டு கண்மண் தெரியாமல் நிக்குது" கையை அமத்தியபடியே சொன்னா மாமி.

"கையில் நோ" எனவும் முனகினா.

மறுநாள் அம்மம்மாவும் மாமியும் ஒட்டகப்புலம் பயணமானார்கள்.

திரும்பி வரும்போது கையில் நோ எண்ணெய் குப்பி.

அடுத்த வாரம் முழுவதும் நாங்கள் பொட்டுக்குள்ளால் மாமி வீட்டை எட்டிப்பார்க்கவே இல்லை!

மாமிவீட்டு எண்ணை மணம் எங்கடைவீடு வரை அடித்தது.

அருகில் உள்ள பரியாரி மாமா சூரியனைக் கும்பிடக் கூட கிழக்குப்பக்கம் திரும்பவில்லை நீண்ட நாட்களுக்கு.தன்னிடம் எண்ணை வாங்க வரவில்லை என்ற கோபத்தில்.

ஒரு வருடத்துள் பொட்டு வேலிகள் யாவும் படிப்படியாக மதில்களாயின.

வேலிப் பொட்டுக்குள்ளால் மாமியைக் காப்பாற்றுவது போன்ற நன்மைகளும் இனி நடக்காது.

நமது கீரிப் பாச்சல்களும் நின்றே போய்விட்டது.

மாதேவி
0.0.0.0.0.0