Monday, December 17, 2012

Beira லேக்கில் ஒரு குட்டித் தீவு

லேக் ஓரமாக நடந்து செல்கின்றோம். மேலே சற்று உயர ரோட்டில் வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
சாலை ஓர பெரிய மரங்கள் கிளைவிரித்து நிற்கின்றன. பல மரங்களின் அடிப்பாக வேர்கள் சிமெந்து தரையில் வேர் பாச்சி வெளித்தள்ளி முறுகிப் பருத்துக் காணப்படுகின்றன.

லேக் ஓரம் பேரீச்சமரம் குலை தள்ளி நிற்கின்றது. அடடா... பறித்துச் சாப்பிடாமல் விட்டுவிட்டார்களே.


காக்கைக் கூட்டத்தாரும் எங்கிருந்தோ சுட்டு வந்த தேங்காய் மூடியை கொத்தித் தின்னுகின்றன.

 

லேக்கில் கூளக்கடாக்கள் குடில் அமைத்து இனிய இல்லறம் நடத்துகின்றன. சில அடிதடிகளும் அவர்களுக்குள்.

 


பிரமச்சாரி ஒருவர் தனி உலகில் நீந்தி மகிழ்கின்றார்.


பல அன்னப் பட்சிகளும் நீந்தி மகிழ்கின்றன. நாமும் பட்சியுடன் பட்சியாக மாறி நீரில் ஓடி மகிழ்கின்றோம். அம்மாவின் முதுகில் குட்டியார் ஏறிச் சவாரி செய்கிறார்.மாலைச் சூரியன் நீரில் தெறித்து ஒளி தருகின்றான்.வாத்துக் கூட்டத்தாரும் ஓட்டப் போட்டி வைத்து மகிழ்கின்றார்கள்.


லேக் ஓரமிருந்து குட்டிப் பூங்காத் தீவிற்கு அலுமினிய சீட் பூட்டிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.கீழே லேக் நீர் ஓட பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்று பூங்காவை அடையலாம். நீர் ஓட்டத்தில் பாலத்தில் நடந்து செல்லும்போது பாலமே ஆடுவதுபோல உணர்வு ஏற்படுகிறது. விரைந்து நடந்தால் அலுமினிய சீட்டின் தாம்தோம் சத்தமும் பயமுறுத்துகிறது.

ஜோடி ஜோடியாகவும் குடும்பமாகவும் பலர் பாலத்தைக் கடந்து குட்டித் தீவிற்கு வருகின்றார்கள். பாலத்திலிருந்து அன்னப் பட்சிகள் ஓடித்திரியும் அழகையும் கூளக்கடாக்கள் சிறகு விரித்து வானத்தில் பறக்கும் அழகையும் கண்டு களிக்கலாம்.குட்டிப் பூங்காத் தீவில் மரங்களின் கீழே இருக்கைகள் அமைத்துள்ளார்கள்.அமர்ந்திருந்து லேக்கின் மறுகரையையும் சுற்றியுள்ள கட்டடங்களையும் கோவிலையும் பார்த்து மகிழலாம்.
சிறுசிறு அழகிய மரங்கள் குட்டித் தீவின் ஓரமாக நாட்டப்பட்டுள்ளன. பூஞ்செடிகள் கரையோரமாக நிரையாக நின்று பூத்துக் குலுங்கி கண் சிமிட்டுகின்றன.
தீவின் நடுவே கூடாரம் அமைத்து மக்கள் அமர்ந்திருக்க வசதி செய்துள்ளார்கள்.
பலரும் வந்திருந்து நாட்பொழுதை இனிமையாகக் கழித்து செல்கின்றார்கள்.
வெளிநாட்டினரும் வருகின்றார்கள். நாங்கள் சென்ற நேரம் சீன நாட்டவர்கள் வந்து அமர்ந்திருந்தார்கள்.

குட்டித் தீவைப் பார்க்க மிகவும் சுறுசுறுப்பாக ஒரு அழகிய வெள்ளையரும் வோக்கிங் வருகின்றார். அவரின் மகிழ்ச்சியைப் பார்த்து நாங்கள் குதூகலிக்கின்றோம்.


தீவிற்கு நடுவே அமைந்திருந்த சிறிய சுற்றுச் சுவரில் அமர்ந்திருந்து சூழலை ரசித்தோம். சூரியனும் இருள் சூழ மறைந்து இறங்குகின்றான். மக்கள் வீடு திரும்புகிறார்கள்.விளையாடி மகிழ்ந்த குழந்தைகள் மனமின்றி எப்போ திரும்பி வருவோம் என பெற்றோரிடம் கேட்டபடி சென்றார்கள்.


வெள்ளைக் குட்டியாரும் ஓடித் திரிந்து மகிழ்ந்து ஓய்ந்து களைத்து நிற்கின்றார்.


நாங்களும் படங்களைக் கிளிக்கிக் கொண்டு பாலத்தால் நடந்து வருகின்றோம்.

நீரில் சூரியக் கதிரும் பட்டு செவ்நிறமாக தெறிக்கின்றது.

பாலத்தால் இறங்கி படிகளில் ஏறி வீதிக்கு வருகின்றோம்.


ஐஸ் வண்டியும் நிற்கின்றது.


ஒருவர் அமைதியாக மரத்தின கீழ் கண் மூடி அமர்ந்திருக்கின்றார். 
நாம் ரோட்டைக் கடந்து மறுபுறம் வருகின்றோம்.


கோவறு குதிரையார் ஒருத்தர் தெருவோரம் உள்ள காணியில் புல் மேய்ந்து கொண்டு நின்றார்.


சிறிது தூரம் நடந்து விட்டு நாமும் இனிதாக வீடு திரும்பினோம்.


மாதேவி.

Tuesday, December 4, 2012

புராதன கலை நயத்துடன் Beira ஏரிக்குள் நவீன ஆலயம்

நான்கு பக்கமும் தண்ணீர் சூழ சிறிய தீவாக அமைந்திருப்பது இலங்கை. இத் தீவிற்குள் ஒரு குட்டித் தீவாக கொழும்பு மாநகரில் அமைந்துள்ளது Beira lake..


Beira Lake இல் அமைந்துள்ள இந்த Seema Malakaya கோயிலை 1985ம் ஆண்டு திரு Geoffrey Bawa வடிவமைத்தார்.

இது சிறிலங்கன், தாய், இந்தியன், சைனா கட்டடக் கலைகள் கலந்த கலைநுட்பம் நிறைந்த சிறிய மண்டபம். கலை நயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.   

இரண்டு மணடபங்கள் அடங்குகின்றன. முதலாவதும் பெரியதுமானது மக்கள் கூடும் இடமாக அமைந்துள்ளது. மற்றது பெளத்த பிக்குகளின்  பயிற்சி மற்றும் தியான மண்டபமாக இருக்கின்றது.


வாயிலில் பாத பகொடா Pada Pagoda


முன் முகப்பில் புத்தரின் சயன உருவம் சிலையாக வடிக்கப்பட்டு வரவேற்கிறது. மண்டப மரவேலைப்பாடுகள் வியக்க வைக்கின்றன.மரத்தாலான அழகிய மண்டபம் அமைக்கப்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்து இழுத்து நிற்கிறது.

மிக அழகிய மண்டபத்தின் தோற்றம் தூரத்தே வரும்போதே வா வா என அழைத்து வரவேற்கிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பிரதானமாக வந்து பார்த்துச் செல்லும் பிரசித்தமான இடமாக மிளர்கின்றது.


சாதி ,மத வேறுபாடின்றி மக்கள் பலரும் வந்து தர்சித்துச் செல்கின்றார்கள். பிரபல தொழில் அதிபர் அமீர்முசாஜி அவர்கள்  வெண்சிங்கச் சிற்பத்தை வழங்கி இருக்கிறார்.


பிராத்தனை மண்டபத்துடன் நூதனசாலையும், நூல்நிலையமும் அமைந்துள்ளன.  சுற்றிவரும் பாதையில் இருந்து வலதுபுறம் மரப்பாலம் அமைத்து சத்தியத்தின் பொக்கிச சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது.


இருபுறமும் நீர் ஓட சிறிது தூரம் நடந்து சென்று மண்டபத்து வாசலை அடைகின்றோம்.


வாத்துக்கள் ஒரு புறம் நீச்சலடிக்கின்றன. கூளக்கடாக்கள் பறந்து திரிகின்றன. இரு கைகளையும் நீட்டி அவற்றைப் பிடிக்க தோன்றுகிறது.

 குளிர் காற்று நம்மை சிலிர்க்க மண்டப வாயிலின் இருபுறமும் உள்ள வெண்சிங்கங்களின் அழகில் கிறங்கி நிற்கின்றோம்.


மண்டப வாயிலின் நடுநாயகமாக அரைசந்திர வட்டக்கல் அமைந்திருந்து வரவேற்கின்றது.


அதை ஒட்டி  பெண்சிலைகள் ....


......இருபுறம் நிற்கும் படிகளில் ஏறிச் சென்று மண்டபத்தை அடையலாம்.


மரவேலைப்பாட்டு மண்டபத்திலிருந்து உள்ளழகையும், வெளியேதெரியும் ......


.........ஏரியினதும் கொழும்பு மாநகரினதும் அழகையும் பார்த்து ரசிக்கலாம்.

உள்ளே நடுநாயகமாக  கண்ணாடிப் பெட்டிக்குள் அழகிய புத்தர் சிலை.


இருபுறமும் உருவங்கள். கல்லால் ஆன யானைகள்,


பழையகால கற்சிற்பம் ............


.........என பலவும் இருக்கின்றன.


வணங்கி வெளியே வருகின்றோம். வெளியில் மண்டபத்தைச் சுற்றி அழகிய பாதை.

தியானமிருக்கும் கௌதம புத்தரின் வெண்கலச் சிலைகள் பலவித முத்திரைகளுடன் வரிசையாக பாதையைச் சுற்றி அமைந்திருந்து நம்மையும் கலை நயத்தில் திளைக்க வைக்கின்றன.

பாதையிலிருந்து சுற்றிவர இருக்கும் கட்டிடங்கள், .......பசிய உயர்ந்த மரங்கள். ஓடும் நீர் அருகே இருக்கும் குட்டித் தீவுப்பூங்கா, தூரத்தே வீதியில் ஓடிக்கொண்டிருக்கும் வண்டிகள், ....


 நீரில் நீந்தும் வெண்நிற வாத்துக்கள், நீர்க்காகங்கள், பறவைகள், காகங்கள்


என சுற்றுப்புறம் நம்மை ஒரு வெளி உலகிற்கு அழைத்து மகிழ்வைத் தருகின்றன.

ரசித்தபடி பாதையைச்சுற்றி வந்து மீண்டும் முகப்பிற்கு வருகின்றோம். முகப்பின் இடதுபுறம் பாதைக்கு மேலே படிக்கட்டுகள் அமைத்துள்ளார்கள்.


ஏறிச் சென்று மரத்தின் கீழ் அமைந்துள்ள பெரிய புத்தர் சிலையை வணங்கலாம்.

 பிள்ளையாரும் ஒருபுறம் சிறிய கட்டிடத்தில் வீற்றிருக்கிறார்.அனுராதபுரகால பாரிய சிலையும் ஒன்று உயர்ந்து நிற்கிறது.


மறுபுறம் முருகன் ஆறுமுக ஸ்கந்தனாக,


இன்னோர் புறம் கோழி வாகனத்தின் மேல் கிருஷ்ணர், கோழி ஒன்றும் கூடவே தூங்குகின்றது.

 வைரபர்,..

இவற்றையெல்லாம் கண்டு களித்துக் ......

...கீழே இறங்கி மரப் பாதையால் வெளிவந்து லேக் ஓரமாக பாதையில் நடக்கின்றோம்.

Beira Lake இல் உள்ள சீமா மாலகய கோவிலைப் பற்றிய வீடியோவைக் கீழே காணலாம்.  Uploaded by safarifox 2010.


அடுத்து லேக்கையும் குட்டிப் பூங்காவையும் கண்டு களிக்க வாருங்கள்....