கொழும்பு நகரின் மிகவும் பெரிய பூங்கா என்றே சொல்ல வேண்டும். மிகவும் பழமையான இந்தப் பூங்கா மியூசியத்திற்கு அண்மையில் கொழும்பு மாநகரின் நகர மண்டபத்திற்கு எதிர்ப்புறமாக இருக்கிறது.
Town hall Colombo |
இலங்கையில் பிரிட்டிஸ்காரர் ஆட்சி செய்தபோது அமைக்கப்பட்டது இப் பூங்கா. விக்டோரியா இராணியின் ஆட்சிக்குப் பின் அவரின் பெயரால் விக்டோரியா பார்க் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது.
1950 பின் நாட்டில் எழுந்த தேசிய அலையின் பின் துட்டகைமுனுவின் தாயாரான விகாரமகாதேவியின் ஞாபகமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
துட்டகைமுனுவின் தாயாரான விஹாரமகாதேவிசிலை |
கெளதம புத்தரின் மாபெரும் சிலையானது, முகப்பு வாயிலை நோக்கி உள்ளே அமைக்கப்பட்டுள்ளது.
கெளதம புத்தர் |
நகரத்தில் இப்படி ஒரு சோலை வனமா என ஆச்சரியப்பட வைக்கும். பாரிய பெரிய மரங்கள் நிழல் பரப்பி குளிர்மை சேர்க்கின்றன.
கீதமிசைக்கும் குருவிகள் |
பெரிய புளிய மரங்களில் பறவைக் கூட்டங்களும் வெளவால்களும் தமக்கு வீடமைத்து மகிழ்கின்றன.
தலைகீழாக சர்க்கஸ் காட்டுகிறார்கள் |
பறவைகள் ஒலிக்கும் பாடல்களையும் வண்ணத்துப் பூச்சிகள் பறந்து திரிவதையும் அமைதியாக அமர்ந்திருந்து இன்புறலாம்.
கொழும்பு நகராட்சி மன்றத்தினாரால் மேற்பார்வை செய்யப்பட்டு மிகவும் சுத்தமாக அழகாகப் பேணப்படுகிறது. இந்த மரக் குகையின் வாசலில் மக்கள் நின்று படம் எடுத்துக்கொள்கின்றார்கள்.
மரத்துள் குகை |
பெரிய மரங்களின் கீழ் மக்கள் ஓய்வாக அமர்ந்திருக்க கூடியதாக பல இடங்களில் இருக்கைகள் அமைத்துச் சுத்தமாக பேணிக்காக்கிறார்கள்.
தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே.. |
காலை எட்டு முதல் மாலை 6 வரை பார்வையாளர்களுக்கு திறந்து வைக்கப்படுகிறது. பூங்காவில் உள் நுழைந்து இலவசமாகச் சென்று பொழுதைக் கழித்து வரலாம்.
பலரும் உணவுப் பொதிகளுடன் குடும்பமாக வந்திருந்து அமர்ந்து உணவருந்தி மரநிழல்களின் கீழ் இளைப்பாறி துயின்று செல்கிறார்கள்.
வீட்டுக்காரியிடமிருந்து விடுதலை பூவுலகிலிருந்து அல்ல. |
பூங்காவின் மத்தியில் ஒரு சிற்றுண்டிச் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
சிற்றுண்டடிச் சாலை |
குதிரை வண்டிகளும் சவாரிக்குக் காத்திருக்கின்றன. ஆமையாரும் குதிரைகளுடன் ஓட்டப்போட்டி போட தயாராக நிற்கின்றார்.
ஓட்டத்தில் போட்டி குதிரைக்கும் ஆமைக்கும் |
சிறுவர் பூங்கா இதன் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. குழந்தைகள் ஓர்புறம் பந்தடித்து விளையாடுகிறார்கள். இட நெருக்கடியில் வாழும் மக்களுக்கு இப்படி ஒரு இடம் நகரின் மத்தியில் இருப்பது பெரும் வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.
"பொறு பொறு நான் நீலப் பந்து வாங்கி வாறேன்" |
பூங்காவின் நடுவே சென்றுவர அழகான பாதைகள் அமைக்கபட்டுள்ளன. ஓரங்களில் மரச் செடிகள் அழகு சேர்த்து நிற்கின்றன.
உடல் நலம்பேண நடைப் பயிற்சி மேற்கொள்வோரும் ஒருபுறம் நடை பயில்கின்றார்கள்.
"கொலஸ்டரோலைக் குறைக்கட்டாம்" |
பூங்காவின் உள் இடையிடையே செயற்கைக் குளங்கள் அமைத்துள்ளார்கள் அதிலிருந்து நீர் தெறித்து ஓடி அழகூட்டிக் கொண்டிருப்பதுடன் குளிர்ச்சியையும் தருகின்றது.
மற்றொரு பெரும் தடாகமும் அதன் மேல் ஒரு தொங்கு பாலமும் அனைவரையும் கவர்ந்து இழுத்து நிற்கின்றது.
பூரணை நாளில் நடைபாதையின் இருபுறமும் மாலையில் அகல்விளக்குகள், மெழுகு விளக்குகள் ஏற்றி புத்தபிரானை வணங்கித் துதிக்கிறார்கள்.
மியூசியக் காட்சியாக... |
சிறுவர்களுக்காக இரயில் வண்டியும் முன்னர் இங்கு ஓடிக்கொண்டிருந்தது. இப்பொழுது பராமரிப்பின்றி நிற்கிறது. அது ஒன்றுதான் குறையாகத் தெரிகிறது.
குழந்தைகள் விளையாட ஊஞ்சல்கள், சீ சோக்கள், மோட்டார் கார்கள், பொம்மை மிருகங்கள் எனப் பலவும் புதிதாக அமைக்கப்பட்டு பல்வேறு வர்ணங்களில் கவர்ந்து நிற்கின்றன.
பூமரங்களின் மலர்க் காட்சியும் விற்பனைகளும் பொதுவாக வாரந்தோறும் நடைபெற்று வந்தன. இப்போது வேறு இடத்தில் நடைபெறுகின்றது.
வீதிப் போக்குவரத்து விதிமுறைகளைக் காட்டும் சமிக்கைக் பலகைகளுடன் பொம்மை வீதி அமைக்கப் பட்டிருக்கின்றது.
பூங்காவுக்குப் போனால் தும்பு முட்டாசு சாப்பிடாமல் இருக்க முடியுமா? தும்பு முட்டாய் வாங்கலையோ.... தும்பு முட்டாய்....
இங்கு வந்து இயற்கைக் காற்றை சுவாசித்து ஓய்வாக மரநிழலில் அமர்ந்து சிற்றுண்டியும் கொறித்து இன்புற்ற உங்களுக்கு தென்றலென இலைகளை அசைத்து நன்றி கூறுகின்றன பசிய மரங்கள்.
பூங்காவுக்கு மீண்டும் செல்லலாம்.......
மாதேவி
0.0.0.0.0.