Wednesday, May 22, 2013

சிவனார் பாதம் பதித்த சிவனொளி பாத மலை

சிவனொளி பாத (Sri pada- Adam's Peak ) பருவகால யாத்திரை இம்மாதம் 24 வெசாக் பௌர்ணமி தினத்தன்று முடிவடைகிறது. சமன் தெய்வமும் உபகணங்களும் நல்ல தண்ணி நகரிலிருந்து இரத்தினபுரியில் உள்ள பெல்மதுல்ல ரஜமஹா விகாரைக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.

எதிர் வரும் டிசம்பர் பௌர்ணமி தினத்தில் மீண்டும் யாத்திரை காலம் ஆரம்பிக்கும். நிரத்தரமாக வெளிச்சம் தரக் கூடிய மின்குமிழ்கள் மலையின் உச்சியில் வெளிச்ச வீடு போல பொருத்தப்பட உள்ளன என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.

இவ் வருடம் பெப்ரவரியில் குறிப்பிட்ட ஒருநாளில் மட்டும் 4 இலட்சத்துக்கும் அதிகமான யாத்திரீகர்கள் தர்சிக்கச் சென்றிருக்கின்றார்கள்.

Thanks :- goldensrilanka.com
திருமணமாகிய போது கணவர் வேலை புரிந்த இடம் பதுளை மாவட்டம். ரயிலில் செல்லும்போதே ஹட்டனுக்கு அப்பால் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உயர்ந்து நின்ற மலைச் சிகரம் ஆசையைத் தூண்டிவிட்டது. அங்கிருந்தபோதே செல்ல வேண்டும் என நினைத்திருந்தேன்.

சேர்ந்து செல்வதற்கு ஒருவரும் முன்வரவில்லை. இவ்வளவு தூரம் ஏறமுடியாது என்றார்கள் சிலர். எனது ஆசையும் நிறைவுறாது தொடர்ந்தது. பல வருடங்களின் பின்புதான் ஒரு சித்திரை வருடப் பிறப்பு செல்வதற்கான நேரம் கிட்டியது. மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. துணைக்கு இப் பயணத்தில் எங்கள் சகோதரர் குடும்பத்தாரையும் நாத்தனார் குடும்பத்தாரையும் கூட அழைத்துச் சென்றோம்.

எல்லோருமாக 12 பேர் ஒரு வாகனத்தில் செல்ல தயார்ப்படுத்தியிருந்தார் கணவர். கொழும்பிலிருந்து ரம்பொடை ஆஞ்சனேயர் கோயில் சென்று தர்சித்தோம். அங்கிருந்து நுவரெலியா சென்று பகல்பொழுது நகரைச் சுற்றிவிட்டு சாயந்திரம் ஹட்டன் மஸ்கலியா வழியாக சிவனொளிபாத மலை சென்றோம். மாலை ஆகிவிட்டது. விடுதியில் பொருட்களைப் போட்டுவிட்டு குளித்து உணவருந்தி மலை ஏறுவதற்கான குளிர் தொப்பி, ஆடைகள் அணிந்து தயாராகினோம்.

அடிவாரத்தில் நின்று மலையைப் பார்ததும் திகைத்துத்தான் போனோம். மின்னொளியில் வானத்தைத் தொடுமாறு நின்றது. அடிவாரக் கடைகளில் பத்திக் குச்சுகள், தீப்பெட்டி, அட்டைக் கடிக்குத் தப்ப சித்தாலேப தைலம் எல்லாம் வாங்கிக் கொண்டோம். கடைக்காரர் நூல் பந்தும் கொடுத்தார்கள். வாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பிதோம். அல்ல ஏற ஆரம்பித்தோம்.

கடல் மட்டத்திலிருந்து 2243 மீட்டர் ( 7359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலை. சப்ரஹமுவ மத்திய மாகாணங்களுக்கு இடையேயான எல்லையில் அமைந்துள்ளது. சிவன் நடனமாடும்போது இமயமலையில் ஓர்காலையும் சிவனொளிபாத மலையில் ஓர்காலையும வைத்தார் என்பது இந்துக்களின் ஐதீகம்.

மலை உச்சியில் இருக்கும் 1.8 மீட்டர் அளவான பாறையில் அமைந்துள்ள பாதத்தை இந்து மதத்தவர்கள் சிவனின் பாதச் சுவடியாகவும், பௌத்த மதத்தவர்கள் கௌதம புத்தரின் பாதச்சுவடியாகவும், கிறீஸ்தவர்கள் சென்ட் தோமஸ் பாதச்சுவடியாகவும், இஸ்லாமியர்கள் ஆதாமின் பாதச்சுவடியாகவும் சொல்லி வழிபட்டு வருகிறார்கள்.

அதி உயர் மலை உச்சி என்பதால் பருவகால யாத்திரை மட்டும் செல்ல முடியும்;. நல்ல தண்ணி என்ற இடத்திலிருந்து மலை உச்சிக்குச் செல்வதற்கான பாதை ஆரம்பிக்கிறது. வெள்ளை உடைதரித்த வயது முதிர்ந்த மாது இரு கை கூப்பிய வண்ணம் பாடிக் கொண்டே தள்ளாத வயதிலும் படி ஏறிச் செல்வதைக் காண எமக்கும் கால்கள் விரைந்து சென்றன.

மதவேறுபாடின்றி சுற்றுலாப்ப பயணிகள் உள் நாட்டு மக்கள் என கூட்டம் கூட்டமாக ஏறிச் செல்வதைக் காணலாம். இடையிடையே வெளிச்சங்கள் அமைத்துள்ளார்கள். சிறு கோவில்கள் அங்கங்கே தரிசித்துக் கொண்டே செல்ல அமைந்துள்ளன. இருபுறமும் அடர்ந்த புதர்கள் மரங்கள் என இருக்க அங்கங்கே சீரில்லாப் படிகளும் வந்து ஏறுவதில் சிரமம் கொடுத்தன.

தாகசாந்திக்கு இடையிடையே சிறுகடைகளில் தேநீர் சிறு உணவு எனக் கிடைக்கின்றன. எம்மையும் முந்திக்கொண்டு  பெட்டிகளுடன் பாரத்தை சுமந்தபடியே ஏறிச் செல்கிறார்கள் சிலர்.

Thanks :- www.dailynews.lk 

பாதித்தூரம் அளவிற்கு ஏறிவந்துவிட்டோம். எங்களுடன் வந்தவர்களில் சிலர் இனிமேல் முடியாது திரும்பிப் போவோம் என்றுவிட்டார்கள். என்ன செய்வது என்று சங்கடமாக இருந்தது. எனக்கோ மனதில் ஏமாற்றம். இடையில்உள்ள கடையோரத்தின் இருக்கையில் தங்கியிருங்கள் முடிந்தவர்கள் மேலே சென்று வருவோம் என முடிவு எடுத்தோம்.

ஐந்து ஆறு பேர் ஏறத் தீர்மானித்தோம்.சற்றுப் படிகள் ஏறிச் சென்றுவிட்டோம். பின்னால் அழைக்கும் குரல் எல்லோருமே சேர்ந்து கொண்டார்கள். ஆறதலாக ஏறுவோம் எனச் சொல்லி அவர்களையும் அழைத்துச் சென்றோம்.

இடையிடையே மர இருக்கைகளாலான மர இருக்கைகளில் இருந்து கால்களுக்கு ஓய்வு கொடுத்து ஏறினோம். சற்று வெளிச்சமற்ற இருபுறமும் மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒருவர் அட்டைக் கடி என்றார். எமக்கும் பயம் தொற்றியது. பயத்தில் எங்கள் காலகளைப் பார்த்துக் கொண்டோம். கடித்தவரின் காலை விட்டு இறங்க மறுத்தது அட்டை. பத்திக் குச்சை ஏற்றி வைக்க அட்டையார் விழுந்துவிட்டார்.

சீமெந்துப் படிகளைத் தாண்டி இன்னும்மேலே ஏறிச் செல்கிறோம். மலையும் உயர்ந்து செல்வதால் படிகளும் நெருக்கமாகச் செல்கின்றன. ஏறுவோர் இறங்குவோர் என கம்பிக் கட்டினால் பிரிக்கப்பட்டிருந்தது பாதை.

Thanks:- chaise1kashmika.blogspot.com 

பாதை நீண்டே பல மைல்கள் உயர்ந்து செல்வது தெரிகிறது. அவ்விடம் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும். பயத்தில் தலையே சுற்றுகிறது.

இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே என முன்னேறுகின்றோம். மிகுந்த செங்குத்தான படிகள் இந்தா வந்துவிட்டோம் என நினைத்து வந்த வழியைத் திரும்பிப் பார்க்கின்றோம். நீண்ட அனகொண்டா பாம்பின் வால் போல பல மைல்கள் தூரம் பாதை இறங்கிச் செல்வது தெரிகின்றது. ஆரம்பத்தில் இருந்த விகாரைகோயிலும் தெரிகின்றது. இவ்வளவு தூரமா ஏறி வந்துவிட்டோம் என மலைப்புத்தான் ஏற்பட்டது. இன்னும் முன்நோக்கி கால் எடுத்து வைக்கின்றோம். எல்லோரும் களைத்தாகிவிட்டது.

இந்திய யாத்திரையில் ஏறிய திருக்கழுக்குன்றமலை, உச்சிப்பிள்ளையார், சரவணபெரகுல, இலங்கையிலுள்ள கதிர்காம கதிரமலை எல்லாமே சிறிய மலைக்குன்றுகள் சுலபமாக ஏறி இறங்கியிருந்தோம். இது அவற்றைவிட 4 - 5 மடங்கு தூரம் கூடியதாக எனக்குத் தெரிந்தது.

செங்குத்தாக படிகள் நெருக்கிக் கொண்டே வருகின்றன.

Thanks :- www.srilankaguardian.org
சிவ...சிவ... நீதான் அருளவேண்டும்; என்றவாறே ஏறுகின்றேன். இந்திய சுற்றுலா பிரயாணி ஒருவரும் ஓரிடத்தில்; எங்களுடன் சேர்ந்து கொண்டார். மூச்சு இளைக்க அளவளாவினோம். இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். இன்னும் சிறிது தூரம்தான என ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டே நெருங்கிய உச்சிப் படிகளில் மிகவும் சிரமமாகவே ஏறிக் கொண்டிருக்கிறோம்.

அவர் விடை பெற்று முன்னே செல்கிறார். நாம் எம் உறவினர்களுக்காகக் காத்து நிற்கிறோம். அனைவரும் சேரந்த பின்னர் மீ;ண்டும் ஏறத் தொடங்கினோம். சிறிது தூரத்தில் ஒரு தேநீர்க் கடை. எல்லோரும் களைப்பிற்கும் குளிரைப் போக்கவும் தேநீர் அருந்துவோம் என கடைக்குள் நுழைக்கின்றோம். குளிருக்கு இதமாக சுவையாக தேநீர் கிடைத்தது களைப்பும் நீங்கியது.

மேலே ஏறத் தொடங்குகிறோம். சிறிது தூரம் செல்லவும் அண்மிக்கிறது மலை உச்சி. ஆகா! மகிழ்ச்சியோ மகிழ்ச்சி அனைவர் முகங்களிலும். கோயில் கட்டிடங்கள் தெரிகின்றன. கீழ் தட்டு மண்டபத்தில் மக்கள் இளைப்பாறி இருக்க மண்டபம் இருக்கிறது. பலர் உறங்கிக் கொண்டிருந்தனர். சிலர் நிலத்தில் இருந்து கொண்டிருந்தனர். நாங்கள் மேலே உள்ள மண்டபத்தில் அமைந்துள்ள பாதச் சுவடியைத் தரிசிக்கச் சென்றோம். புத்தர் படம் சிவன் படம் இரண்டும் வைக்கப்பட்டிருந்தன.

1890 இல் இருந்த பழைய கோயில் படம் கீழே.

Thanks :- http://srilankamemories.blogspot.com/2010/07/1890-scowen-sripada.html
பாதத்தை ஒட்டி மஞ்சள் அங்கி வைத்து தாமரைப் பூக்களால் அர்ச்சித்து இருந்தார்கள். சிவனை நினைத்து நாமும் தொட்டு ஆசை தீர வணங்கினோம். வெட்டிய பழத் தட்டுக்களை கைகளில் ஏந்திய வண்ணம் கொண்டு வந்து வைத்து வழிபட்டு எடுத்துச் செல்கிறார்கள்.கீழ் மண்டபத்திற்கு இறங்கி வருகின்றோம். மண்டபத்து மூலையில் பெரிய மணி ஒன்று கட்டப்பட்டுள்ளது. செல்வோர் அதை அடிக்கின்றார்கள். எத்தனை தரம் செல்கின்றோமோ அத்தனை தரம் அடிக்க வேண்டும் என்கின்றார்கள். மண்டபத்தி;னுள்ளே செல்ல முடியவில்லை. நிறைந்த ஆட்கள் வாயிலோடு ஒட்டியே இருக்க இடம் கிடைத்தது.

குளிரும் சொல்லி முடியாது. பலமாக வீசும் காற்று நடுக்கத்தைக் கொடுத்தது.'மந்தியும் குளிரில் நடுங்கி குந்தியிருக்கும்'' என நாமும் ஒடுங்கி உறைந்து இருந்தோம். நடுங்கும் குளிரில் சூரிய விடியலுக்காகக் காத்திருந்தோம். விடியல் ஆரம்பிக்கும் முன்பே வெளியே படிகளில் வந்து ஓரமாக இடங்களைப் பிடித்துக் கொண்டோம். குளிரும் தந்தியடிக்கத் தொடங்கியது. உடலே விறைத்துவிட்டது. அதை யார் பொருட் படுத்தியது. உதயம் பாரத்தால் ஆயிற்று என ஆவலுடன் கிழக்கு வானைப் பார்த்தபடி இருந்தோம்.

இருண்ட வானின் அடியில் மஞ்சள் ஓரஞ் வண்ணங்கள் தெரிய ஆரம்பித்தன. செம்பந்து மெதுவாக மேல் எழத் தொடங்கியது அதன் அழகைச் சொல்லி முடியாது. செங்கோள் மஞ்சள் வர்ணமாகி இளம்கதிர்களைப் பரப்பி மேல் எழுந்து வருகின்றான். மகிழ்ச்சியில் கைதட்டி அனைவரும் ஆர்ப்பரித்தோம்.

நீங்களும் வீடியோவில் சூரிய உதயத்தைப் பாருங்களேன்..

இது போல் காட்சியை வாழ்நாளில் எங்குமே கண்டதில்லை. கண்கள் கூசுமாப் போல கதிர்கள் வீச மக்களும் மலை உச்சியிலிருந்து விரைந்து இறங்க நாங்களும் எழுந்து இறங்கி வருகின்றோம் பல மைல்தூரங்கள்.

வாழ்க்கையில் ஓரிரு தடவைதானும் சிவனொளிபாதமலையை தர்சிப்பது இயற்கை காட்சிகளுடன் பலஅனுபவங்களையும் மிகுந்த மகிழ்ச்சியையும் தரும்.

வி  ஜ பிகள் ஹெலியில் சென்று மலையில் இறங்கக் கூடியதாக ஹெலி இறங்கு தளம் அமைக்கலாம் என திட்டம் போடப்பட்டுள்ளது. இது நடந்தால்

ஒருகாலத்தில் பொதுமக்களுக்கும் இலகுவாக செல்ல வசதி வரலாம் என நம்பிக்கை கொள்வோம்.

இங்கு இணைக்கப்பட்டவை இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் ஆகும். நாம் எடுத்த புகைப்படங்கள் ஹாட் டிஸ்கிலிருந்து விழுந்து தற்கொலை செய்துவிட்டன.

:- மாதேவி -:
0.0.0.0..

11 comments:

 1. சிவ...சிவ... நீதான் அருளவேண்டும்; என்றவாறே ஏறுகின்றேன்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அருமையான பதிவு. அற்புதமான படங்களும் விளக்கங்களும். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 3. 'மலை'க்க வைத்தது... மிக்க நன்றி...

  ReplyDelete
 4. வாழ்க்கையில் ஓரிரு தடவைதானும் சிவனொளிபாதமலையை தர்சிப்பது இயற்கை காட்சிகளுடன் பலஅனுபவங்களையும் மிகுந்த மகிழ்ச்சியையும் தரும்.//

  உங்கள் பகிர்வால் நாங்களும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம் மாதேவி.
  ஏறி போகும் வரை மலைப்பாய் இருக்கும் ஏறியவுடன் சிவபாதம் தரிசித்தவுடன் புத்துணர்வும், மகிழ்ச்சியும் அளவில்லா ஆனந்தமும் கிடைத்து இருக்கும்.

  ஒருகாலத்தில் பொதுமக்களுக்கும் இலகுவாக செல்ல வசதி வரலாம் என நம்பிக்கை கொள்வோம்.//
  நிச்சயமாய் நடக்கும். நம்பிக்கைதான் வாழ்க்கை.

  ReplyDelete
 5. உங்கள் நீண்ட கருத்துக்கு மகிழ்கின்றேன்.

  நீங்கள் சொன்னதுபோல் அளவில்லா ஆனந்தம்தான் தர்சித்துவிட்டோமே என்று.

  மிக்கநன்றி.

  ReplyDelete
 6. அப்போது நாங்கள் கழுத்துறை தேயிலைத் தோட்டத்தில். எஸ்டேட் வீட்டிலிருந்து பார்த்தால் சிவனொளிபாத மலையும் படி வெளிச்சமும் சிறு பாம்பு போலத் தெரியும்.
  1974 அப்படி . ஓரு சிங்களக் கங்காணி, இவரது (assistent) உதவியாளர், (இவர் field officer ) நான், கணவர், என்று சென்றோம். நாம் சாதாரணமாகச் சென்றோம் எந்தத் தைலமோ, தொப்பியோ இல்லை. மணியை போகும் எண்ணிக்கைக்கேற்ப அடிக்க வேண்டுமென்றனர். நான் இது எனது முதல் தடவை தானே என்று அடித்து விட்டுத் தான் வந்தேன். கால் நோ, துடை நோக்கள் எடுபட 3 நாட்கள் எடுத்தது.
  மிக நன்றி கட்டுரைக்கும் படங்களும்.
  மிக நன்று.

  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் கோவைக்கவி.
   உங்கள் இனிய பயணத்தையும் பகிர்ந்துகொண்டதில் மகிழ்கின்றேன். எங்களுக்கும் கால்நோ இருந்தது.

   வருகைக்கு நன்றி.

   Delete
 7. ஆகா! மகிழ்ச்சியோ மகிழ்ச்சி அனைவர் முகங்களிலும். கோயில் கட்டிடங்கள் தெரிகின்றன.

  அருமையான வீடியோ பதிவும் கண்கொள்ளாக்காட்சி ..

  பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete