Friday, August 24, 2012

கொழும்பில் கம்பீரத்துடன் எழுந்து நிற்கும் வஜிராப் பிள்ளையார்


இலங்கையில் வரலாற்றுப் புகழ் மிக்க தலங்கள் பல உண்டு. தலைநகர் கொழும்புவிலும் பல கோயில்கள் இருக்கின்றன.

வஜிரா பிள்ளையார் ஆலயம் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ளது. இப்பொழுது புணருத்தாரண வேலைகள் நடைபெறுகின்றன.



புதிய ஐந்து நிலைக் கோபுரம் கண்கவர் வர்ணங்களுடன் ஏற்கனவே எழுந்து நிற்கிறது.

இலங்கையின பாடல்பெற்ற சில தலங்கள் பற்றிப் பார்ப்போம்.

திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தலமாகும். "தாயினும் நல்ல தலைவனென்றடியார்.... எனத் தொடங்கி  கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே" எனப் பாடி முடித்துள்ளார்.



மன்னாரை அண்டிய மாதோட்டத்தில் திருக்கேதீஸ்வரம் கேது பூசித்ததால் இப்பெயர் வந்தது எனவும் கொள்கிறார்கள். இத் தலத்தைப் போற்றி சுந்தரமூர்த்தி நாயனாரும், திருஞான சம்பந்தரும் பாடியுள்ளார்கள். 'நத்தார் படை ஞானன்......செத்தார் எலும்பணிவான் திருக்கேதீச்சரத்தானே.' என முடித்துள்ளார்.

வடபகுதியில் கீரிமலையில் அமைந்துள்ள நகுலேஸ்வரம். இதுவும் பாடல் பெற்ற தலமாகும்.

மேற் கூறிய மூன்று ஆலயங்களுடன் திருத்தம்பலேஸ்வரம், முன்னேஸ்வரம் என ஐம்பெரும் சிவஸ்தலங்கள் பிரசித்தமானவை.

தலைநகர் கொழும்புவில் பொன்னம்பலவாணேசர் கோயில் விஜயநகர் கட்டடக்கலையைத் தழுவி கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. 

மயூரபதி அம்மன் ஆலயம், தெகிவளை விஷ்ணு கோயில், பம்பலப்பிட்டி மாணிக்கப் பிள்ளையார், பம்பலப்பிட்டி கதிரேசன் கோயில்,  என மேலும் பல பிரசித்தி பெற்று விளங்குகின்றன.

தென்னிலங்கையில் கதிர்காமக் கந்தன் புகழ் பெற்ற தலம். முருகன் வள்ளி நாயகியை திருமணம் செய்த தலமாகவும் கூறுகிறார்கள். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம்.


யாழ் நல்லூரில் அமைந்துள்ள நல்லூர் கந்தன், தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் என பற்பல கோயில்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன.

விநாய வணக்கம் பண்டு தொட்டே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சங்க கால இலக்கியங்களில் விநாயகர் பற்றிய குறிப்புகள் இல்லை. பல்லவர்கால சிற்பங்களில் முதல் முதலாக விநாயகர் புடைச் சிற்பமாகக் காணப்படுகிறார்.
பிற்கால சோழர் காலத்திலும் பல விநாயக சிலைகள் கோயில்களில் அமைக்கப்பட்டன. திருஞான சம்பந்தர்  'பிடியதன் உருவுமை.... என விநாயகரை தொழுது பாடியுள்ளார்.

இறை வணக்கத்தில் முதலில் விநாயகரை வணங்கிய பின்பே ஏனைய கடவுளரை வணங்குவார்கள். பிள்ளையாரை சந்தணம், சாணியில் பிடித்து வைத்து வணங்கும் வழக்கமும் இருக்கின்றது.

Thanks:- http://paravaigal.wordpress.com

மார்கழிமாதத்தில் அதிகாலையில் முற்றத்தில் கோலமிட்டு சாணிப்பிள்ளையார் பிடித்து வைத்து பூசணிப்பூ,பீர்க்கம் பூவைத்து வணங்குவார்கள். சாணிப்பிள்ளையாரை எடுத்துச்சென்று கடல்,ஆறுகளில் விடுவார்கள்.


அறுகம் புல், எருக்கலை, தும்பை, கொன்றை விநாயகருக்கு அர்ச்சிக்கும் பூக்களில் சிறப்புப் பெறுகின்றது. ஆவணிமாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி விநாயக விரதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. திருவெம்பாவைக்கு முன் விநாயகர் கதை விநாயக புராணம் 21 நாட்கள் விரதம் இருந்து படிப்பார்கள். ஊருக்கு ஊர் ஆலமரம் அரச மரங்கள் ஆற்றங்கரைகளில் அமர்ந்திருந்து மக்களைக் காப்பவரும் இவர்தான்.

பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தது மோதகம் எள்ளுருண்டை, அப்பம் அவல், கரும்பு,
நன்றி :- vadaliyooraan.blogspot.com

பம்பலப்பிட்டியில் காலி வீதியை ஒட்டி மேற்குத் திசையை நோக்கியபடி அமைந்துள்ளது வஜிராப் பிள்ளையார் ஆலயம். இப்பொழுது புனருத்தாரண வேலைகள் நடைபெறுவதால்


மூலஸ்தான விநாயகரை அருகே இருக்கும் சிறிய மண்டப்தில் தற்காலிகமாக வைத்து பூஜைகள்  செய்து வழிபட்டு வருகின்றார்கள்.


புதிய ஐந்து நிலைக் கோபுரத்தில் புராணக் கதைகளைக் கூறும் தெய்வச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோபுரத்தைச் சுற்றிலும் வெளிப் பிரகார மதிற்சுவர்களின் மேல் விநாயகரின் பல்வேறு உருவங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.


கோயிலின் உட்புறம் சென்று பார்க்கலாமா எனக்கேட்டோம் ஆம் என அனுமதி கிடைத்தது. சிறிது திறந்திருந்த கோயிலின் பெரிய கதவினூடாக உள்ளே சென்றோம்.

கோயிலின் உட்பிரகார மேற்குப் பக்க சுவர்களில் சிவ தாண்டவ நடனங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.


ஒரே நிலையில்  பிள்ளையார், சிவன் பார்வதி, முருகன் ஸ்தானங்கள் அமைக்கபட்டுள்ளன.


வடக்குச் சுவர்களில் முருகனின் ஆறுபடை வீடுகளும்


அம்மனின் பல்வேறு திருவுருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன.


மூலஸ்தானத்தைச் சுற்றி வந்தால் பின்புறம்  தீர்த்தக் குளம் அமைக்கப்பட்டுள்ளது.


குளத்தின் பின்புறம் முருகன் சிவன் அம்மனுக்கு ஸ்தானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.


கிழக்குப்புற வீதியி;ல் பல சிவலிங்கங்களும் நந்திகளும் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அவற்றைச் சுற்றி வந்தால் யாக குண்டல மண்டபம் அமைந்திருப்பதைக் காணலாம்.



அவற்றையும் கடந்து வந்தால் சமய குரவர்கள் மண்டபம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்னும் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கோயில் வெளிவீதியில் நேர்த்திக் கடனாக நேர்ந்து விடப்பட்ட பசுக்களை தென்னந்தோப்பு நிழலில் கொட்டில்கள் அமைத்துப் பராமரித்து வருகின்றார்கள்.


கோமாதா எங்கள் குலமாதா  பசி தீர்க்க ஒரு கட்டுப் புல்லை கோயில் கடையில் வாங்கி கொடுத்து மகிழ்ந்தோம்.


அம்மா என்குது கன்றுக் குட்டி.

புறாக் கூட்டத்தாருக்கு வீட்டில் இருந்து ஒரு பையில் அரிசி எடுத்துச் சென்றோம்.

சிட்டுக்களுடன் சிட்டாக சிட்டுக்களும் மகிழ்கின்றன.


கூட்டத்திலே வெள்ளைப் புறா ஒன்று.


அபிஷேகத்திற்கு இளநீர், பால், பழம், கற்பூரம் ஊதுபத்தி வாங்கிக் கொடுத்து கண்குளிர அபிஷேகம் பூசைகள் கண்டு வணங்கி வந்தோம்.

சீரடி பாபாவும் ஒருபுறம் வீற்றிருக்கிறார். வியாழக் கிழமை மாலைகளில் பஜனை நடைபெறுகின்றது.


தற்காலிகமாக அமர்ந்துள்ள விநாயகருக்கு எதிர்புறம் உள்ள கட்டிடத்தில்


விஷ்ணுவும் வீற்றிருக்கின்றார்.

ஆஞ்சநேயரும் வணங்கி நிற்கின்றார்.



நரஸிம்கமுர்த்தியும் கோபாவேசத்துடன் அருள்கின்றார். அவர் கோபம் தணிய வணங்கி விடை பெற்றோம்.



மாதேவி