Showing posts with label பதின்ம நினைவுகள். Show all posts
Showing posts with label பதின்ம நினைவுகள். Show all posts

Friday, March 5, 2010

பதின்ம நினைவுகள் தொடர் 2

வீட்டின் பின் முற்றத்தில் கிணறு.
அதை சுற்றி கமுக மரங்கள், வாழை மரங்கள்.
கருவேற்பிலை ஒரு புறமிருக்க
அதற்கு சற்றே தள்ளி மாமரங்கள் இருபுறமும் நின்று சோலையாக இருக்கும். உச்சி வெயிலுக்கு குளிர்மையைத் தரும்.


கிணற்றை ஒட்டி பெரிய சீமேந்துத் தொட்டி.

இந்தத் தொட்டிதான் எனக்கு மிகவும் பிடித்தது.

எனது அக்கால சுவிமிங் பூல் அல்லவா?

அண்ணாமார்கள் கடல், குளம் எனக் நீந்தவும் குளிக்கவும் செல்வார்கள்.

எங்களுக்கு இதெல்லாம் கிடைக்காது.

லீவு நாட்களில் தொட்டியை நிரப்பிவிட்டு தொட்டியில் ஏறி இருந்து காலையும் கையையும் அடிப்பேன். எனது நீச்சல் அழகைப் பார்த்து கிணற்று நீரில் வந்த மீன்கள் தோற்றுப் போய் ஓடிவிடும்.

மீன்களுள்ளும் ஒரு விஸ்வாமித்திரர் இருந்தார் போல!

தொட்டிக்கு வந்ததே கேடு. தொட்டியை இடித்துவிட்டு அவ்விடத்தில் பாத் ரூம் கட்டுவோம் என அப்பா தீர்மானித்தார்.

தொட்டியும் ஒரு நாள் என்னை விட்டு விரைந்து போயே விட்டது.

சில நாட்களில் குளியல் அறை நிமிர்ந்து நின்றது.

0.0.0.0.0.0.0

"ஐயோ! ஐயோ! படுபாவி...
... அடிக்கிறான் ஓடி வாங்கோ!"

இரவு ஒன்பது மணிக்கு நாங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள மாலுக்குள் இருந்து லூடோ விளையாட்டில் இருந்தோம்.

விளையாட்டுக் குசியில் காதில் விழுந்தும் உறைக்கவில்லை.

'சந்திரா மாமி கத்துகிறாளே! ஓடுங்கடா' என்றான் பெரிய அண்ணா.

சூடுகண்ட பூனை போல துள்ளி விழுந்தோம்.

மாமி அவித்துத் தந்த தேங்காய்க் குழல் புட்டும், சிவப்பு அரிசிமாத் தோசையும் எங்களை நாலுகால் குதிரைப் பாய்ச்சல் பாயவைத்தது.

வேலிகளைப் புட்டுக் கொண்டு பறந்து சென்று நான்காம் வீட்டில் உள்ள மாமி வீட்டு விறாந்தையில் மூச்சிழுத்தபடி நின்றோம்.


மாமியின் புருசனைப் பார்க்கப் பயமாக இருந்தது. கண்ணெல்லாம் சிவந்து கோபத்தில் ஆவேசமாக நின்றார். ஏதா புளித்த வாடை குப்பென மூக்கை வெருட்டியது.

'குடித்திருக்கிறார் போலை. அம்மம்மாவைக் கூட்டி வாங்கோ' என ஒருவன் கத்தினான்.

இருநூறு யார் ஓட்டப் போட்டியில் முதலாவதாக வந்த எங்களுள் ஒருத்தன், கொளுவிக் கிடந்த கேட்டையும் உதைத்துக் கொண்டு அம்மம்மாவைக் கூட்டி வரப் பறந்தான்.

அடுத்த இரண்டாவது நிமிடம் அம்மம்மா ஓட்டக்காரனை மிஞ்சிய வேகத்தில் வந்துவிட்டார்.

அதற்குள் மாமியின் புருசன் தாள்பாள் கொட்டனை ஓங்கிக் கொண்டு முன்னேறினார்.

எங்களை அடிக்க எனப் பயந்து என் கால்கள் பின்வாங்கின. ஆனால் அவர் மாமியை நோக்கித்தான் நகர்ந்தார்.

ஓங்கிய கொட்டன் கீழிறங்குவதற்குள் அம்மம்மா குறுக்கே பாய்ந்தா.
இறுகப் பற்றினா கொட்டனை.

"என்னடா கை நீளுதோ"

மாமியை அடிக்க ஓங்கிய கை வெலவெலத்தது.

அம்மம்மாவிற்கு இந்தப் பலமா!

அம்மம்மாவைக் கண்டதும் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடும் தெருநாயைப் போல இவரும் ஒடுங்கியது எமக்கு ஆச்சரியமாக இருந்தது.

"இண்டைக்குக் குடிச்சுப் போட்டு கண்மண் தெரியாமல் நிக்குது" கையை அமத்தியபடியே சொன்னா மாமி.

"கையில் நோ" எனவும் முனகினா.

மறுநாள் அம்மம்மாவும் மாமியும் ஒட்டகப்புலம் பயணமானார்கள்.

திரும்பி வரும்போது கையில் நோ எண்ணெய் குப்பி.

அடுத்த வாரம் முழுவதும் நாங்கள் பொட்டுக்குள்ளால் மாமி வீட்டை எட்டிப்பார்க்கவே இல்லை!

மாமிவீட்டு எண்ணை மணம் எங்கடைவீடு வரை அடித்தது.

அருகில் உள்ள பரியாரி மாமா சூரியனைக் கும்பிடக் கூட கிழக்குப்பக்கம் திரும்பவில்லை நீண்ட நாட்களுக்கு.



தன்னிடம் எண்ணை வாங்க வரவில்லை என்ற கோபத்தில்.

ஒரு வருடத்துள் பொட்டு வேலிகள் யாவும் படிப்படியாக மதில்களாயின.

வேலிப் பொட்டுக்குள்ளால் மாமியைக் காப்பாற்றுவது போன்ற நன்மைகளும் இனி நடக்காது.

நமது கீரிப் பாச்சல்களும் நின்றே போய்விட்டது.

மாதேவி
0.0.0.0.0.0

Saturday, February 27, 2010

பதின்ம நினைவுகள்

பாடசாலைகள், நூல்நிலையம், கோயிற் பணிவேலைகள் என ஊரின் முக்கிய வேலைகளில் முன்நின்று வந்த பிரபலமான ஒருவர்தான் எனது அப்பா.

மிகவும் அன்பானவர். அதே நேரம் கண்டிப்பையும் நல்லொழுக்கத்தையும் கடைப்பிடித்தவர். எங்களிலும் எதிர்பார்ப்பவர்.

சிறுவயதில் தந்தை தாயாரை இழந்து விட குடும்ப பாரம் சுமந்தவர். தனது அயராத முயற்சியால் முன்னேறி தென் பகுதியில் வியாபாரம் செய்து நல்ல நிலையில் இருந்தார்.

புகைப்படம் நன்றி uyirmmai.com

சத்தம் போட்டுப் பேசத் தெரியாத மிகவும் சாதுவான அம்மா.

இவர்களுக்கு நண்டு சிண்டுகள் என எத்தனை எனக் கேட்கப்படாது....

ஆனால் குசேலர் வீடு அல்ல.

அப்பாவிற்கு கட்டுப்பட்டே அனைவரும் வளர்ந்தோம். பிள்ளைகளுக்கு இடையே பதின்மத்தின் கீழ் வயதில் கூட சண்டைகள் வருவதில்லை. ஒட்டுறவுவோடுதான் இருந்தோம்.

இதில் கடைக்குட்டியாக நான்.

உருப்பட்ட மாதிரித்தான் எனச் சொல்வது கேட்கிறது.

அக்கா ஒருவர். ஏனையோர் அண்ணாமார்தான்.

அக்காவிற்கும் எனக்குமான வயது வித்தியாசம் 10. என் மீது மிகுந்த அன்பானவர். கூடிய வயது இடைவெளியே எம்மை நன்கு பிணைத்தும் இருக்கலாம்.

சிறுவயதில் எனக்கான உடைகளை தானே தைத்து எனக்குப் போட வைத்து அழகு பார்ப்பார் அக்கா.

எனது பதின்ம வயதிற்கு எட்ட முன்பே அக்காவின் திருமணம் நடைபெற்றது. நம் ஊர் வழக்கப்படி பெண்கள் திருமணத்தின் பின்பு அப்பா அம்மாவுடன்தான் வசித்து வருவார்கள். அம்மம்மாவும் எங்களுடனேயே இருந்தார்.

பெண்ணிற்குத்தான் வீடு பண்ட பாத்திரங்கள் கொடுப்பார்கள். அதிலேயே போண்டியாகி விடுவார்கள் பலபேர்.

ஆண் பிள்ளைகளுக்கு கொடுக்கும் வழக்கம் இல்லை. ஆண்கள் திருமணம் முடித்து பெண் வீட்டிற்கே போய் விடுவார்கள். இப்பொழுதும் இந்த வழக்கம்தான் இருக்கிறது. ஆனால் என் அப்பாவை ஆண்பிள்ளைகளுக்கும் சீதனம் கொடுத்தவர் என சிலர் சீண்டுவார்கள்.

மாமனார் மருமகன் கொடுமை இருந்ததாகத் தெரியவில்லை :)

இம்முறைப்படி அக்காவும் அத்தானும் எங்களுடனேயே ஒரு வருடம் இருந்தார்கள். அப்பா அவர்களுக்கு நமது வீட்டுக்கு அருகே புதிய வீடு கட்டத் தொடங்கியிருந்தார். கட்டி முடிந்ததும் அவர்கள் அங்கே குடி போனார்கள்.

அத்தான் வெளி ஊரில் வேலை என்பதால் அக்காவிற்கு உதவியாக அம்மம்மா பெரும்பாலும் அங்கேயே இருப்பார்.

அக்காவும் தனியே சென்றுவிட வீட்டு ராணி யாரென உங்களுக்குப் புரிந்திருக்கும்.

இருந்தாலும் அதட்ட அடம்பிடிக்க மாட்டேன். நல்ல பிள்ளையாகவே இருப்பேன். சந்தேகம் என்றால் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பாருங்களேன்.

எல்லாம்தான் கிடைத்துவிடுமே. பிறகு ஏன் பிரளி செய்வான் என எண்ணம். :)
அண்ணாமார்களும் தங்கையின் மேல் உயிராக இருந்தார்கள் எனச் சொல்ல வேண்டியதில்லை.

பத்து வயதுவரை எங்கள் வீட்டில் இருபுறத்து வேலிகளிலும் பொட்டுக்கள் இருக்கும். ஒரு வீட்டியிலிருந்து மற்றதற்கு தவழ்ந்து சென்று வரக் கூடிய பொட்டுக்கள்.

கீரிப்பிள்ளை போல அவற்றிற்குள்ளால் நுழைந்து ஒவ்வொரு வீடுகளாய் கடந்து ஐந்தாம் வீட்டில் உள்ள ராஜன் தம்பி வீடுவரை சென்று விளையாடி வருவேன்.

அவர்களும் அவ்வாறே தவழல்தான் தெருவால் சுற்றிப் போகும் வழக்கம் எல்லாம் இருந்ததில்லை. அணில்கள் போல எல்லோருக்கும் பொட்டுக்களே பாதைகளாக இருந்தன.

இடைப்பட்ட வீடுகளில் பிள்ளைகள் இல்லை. இருந்தும் அன்னியோன்யமாக அனுமதித்திருந்தார்கள்.

ராஜன் வீட்டு நெல்லிக்காய் கொய்யா மரம் ஏறுவதிலிருந்து மாமி வீட்டு விளாம் பழம், கமலா அக்கா வீட்டு ஆட்டுக் குட்டி, மாட்டுக் கன்றுவரை குறுமன்களுக்குத்தான் சொந்தமாக இருந்தன.

லீவு நாட்களில் அண்டை அயலிலுள்ள பிள்ளைகள் எல்லாம் கூடி விளையாடுவோம். மாபிள் குண்டு, கிரிக்கற், கிளித்தட்டு, சடுகுடு, உயரம் பாய்தல் எனத் தொடர்ந்தது. தென்னை மரங்களில் கட்டிய ஊஞ்சல்கள் .....

கிளிசரியா மரத்துப் பொன்வண்டுகள் எமது நெருப்புப் பெட்டிக்குள் சிறையாவர்கள்.
தும்பி, தம்பளப் பூச்சி யாவும் கைக்குள் அடங்கின.

மயில் இல்லாவிடினும் அவற்றின் சிறகுகள் புத்தகங்களுக்குள்.

வீட்டு முற்றத்திலேயே பூங்காவனம், தேர்த் திருவிழாவிற்கும் குறைவில்லை. மேளக் கச்சேரி, கதாப்பிரங்கம் வில்லுப்பாட்டு என தொடர்கதையாக நடைபெறும்.

சின்ன மேளம் என பையன்கள் ஆட்டமும் போடுவார்கள்.

இதில் குண்டாக நல்ல வளர்த்தியாக சிவத்தப்பையன் ஒருவன் இருப்பான். புதிய கோலிக் குண்டுகள் வைத்திருப்பான் முகம் சுளிக்காமல் எங்களுக்கும் தருவான்.

மிகவும் நல்ல உள்ளம் அவனிடத்தில் இருந்தது. எல்லோருடனும் சிரிக்கப் பேசி எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்பான். ஒருவருடனும் சண்டைக்குப் போக மாட்டான். எல்லோருக்குமே அவனைப் பிடித்திருந்தது.

அடிக்கடி வருத்தம் வரும் அவனுக்கு. ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருப்பான். பின் சுகமாகி வீடு வந்ததும் விளையாட வந்துவிடுவான். நாங்கள் மகிழ்ந்திருப்போம்.

வழமையாகப் இப்படியாகச் சென்று அட்மிட் ஆகி திரும்பி வரும் அவன் ஒரு முறை மீண்டும் விளையாட வரவேயில்லை.

"அவன் வயிறு வீங்கி ஆஸ்பத்திரியிலேயே செத்துவிட்டான்" என்று அண்ணா கூறினார்.

அதுதான் முதல் கேட்ட சாவு இடியாக இருந்தது.

இவனைப் புதைப்பார்களா? ஏரிப்பார்களா? என்ற கேள்வி சிறுசுகள் எல்லோருக்கும் எழுந்தது.

"எரித்தால் அவனுக்குச் சுடாதா?" எனக் கேட்டேன்.

செத்த வீட்டுக்குப் போகவிடமாட்டார்கள்.

அன்று மரண ஊர்வலத்தை ஒழித்து நின்று களவாகப் பார்க்க முடிந்தது. பாவம் அவனெனக் கூறி அழத்தான் முடிந்தது எங்களால்.

நீண்டகாலமாக மாபிள் விளையாட்டை விளையாட மனமே வரவில்லை. அவன் எங்களுக்குத் தந்திருந்த புதிய மாபிள்க் குண்டுகள் எப்போதும் அவன் நினைவை எழுப்பிக் கொண்டே இருந்தன.
புகைப்படம் நன்றி veyililmazai.blogspot.com/2006/12/21.html

ஒரு நல்ல நண்பனை இழந்த சோகம் எல்லோர் மனங்களிலும் இன்றும் நிலைத்து நிற்கிறது.

சிலர் பகிர்ந்தார்கள். பகிரும்படி கேட்டிருந்தார்கள்.

நானும் ஏதோ சொன்னேன். இன்னும் சொல்வேன்.

நீங்களும் உங்கள் பதின்ம வயது டயறியையும் பிரித்து பார்த்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன.

மாதேவி.