Wednesday, April 6, 2011

நிமிர்ந்தெழும் கடலலையருகே நிறையழகாய் மணற்காடு

யாழ் மாவட்டத்தின் வடமராட்சிப் பகுதியில் கிழக்குக் கரையோரப் பிரதேசத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். பருத்தித்துறையிலிருந்து புலோலி, வல்லிபுரம், அம்பன், குடத்தனை தாண்டிச் செல்வோம் வாறீர்களா?

கால் இல்லை தாவுவான், வாய் இல்லை கத்துவான் அது என்ன ?
அவனிடம்தான் போகின்றோம்.

காடுகள் என்றால் மரம், செடி, கொடிகள் நிறைந்திருக்கும்.
இது மணலாலான காடு. மணற்காடு. கடலோரம் மணல் குவிந்த மணற்காடு கிராமம்.


பனிமலைபோலும் பரந்திருக்கும் வெண்மணல்த் தீவுகள். அதன் முடிவில் பாரிய கடல் ஆர்ப்பரித்து அலை மேலெழுந்து ஓடிவரும் அழகே தனிதான். கடல் என்றாலே பயமும் ஒட்டிக் கொள்கிறது நம் மேல். அழகு என்றால் ஆபத்தும் தானே தேடி வந்துவிடும் போலும்.

அழகிய கடலலைகள் பேரலைகளாகி பல உயிர்களையும் 6 -7 வருடங்களுக்கு முன் காவுகொண்ட இடமும் இதுதான் என்பதை மறக்க முடியுமா…. கடலோரம் சிதைந்து கிடக்கும் கட்டிடங்கள், உடைந்து கிடக்கும் படகுகள், பல சோகக் கதைகள் பேசுகின்றன. எமது நெஞ்சையும் சோகம் பற்றிக் கொள்கிறது நெடிய மூச்சு மேலெழுந்து நிற்கிறது.

சோகத்தைச் சுமந்துகொண்டு வாழும் இவ் மக்களுக்கு வயித்தை நிரப்ப தொழிலும் வேண்டுமல்லவா உயிரைப் பயணம் வைத்து மீண்டும் படகில் ஏறிவிட்டார்கள்.


கடற்தொழிலாளர்களுக்குப் போட்டியாகப் புறப்பட்டுவிட்டார் இவர். மீன்பிடிக்க. படகோட்டி அல்ல. வானப் பரப்பில் சிறகு விரித்துப் பறந்தோடி.


கடற்கரையை நெருங்கும்போதே தூரத்தே  வெண்மணலில் பலவண்ண நிறங்களில் நிரையாய் அடுக்கிய படகுகள் கண்ணுக்கு விருந்தாய் எம்மை வா என அழைக்கின்றன.


கடற்தொழிலாளர்களின் மற்றொரு தொழில் கருவாடு செய்வதாகும். மீன்களை உப்பிட்டு கடும் வெயிலில் காயவைத்துத் தயாரிப்பார்கள். வடபகுதித் தயாரிப்பான இதற்குதென்னிலங்கையில்  நல்ல கிராக்கி.


பல வருடங்களுக்கு முன் சென்றிருந்தோம். பார்க்கும் இடமெல்லாம் பனிமலை போன்றிருந்த மணல் கும்பிகளையும், அருகிருந்த பள்ளங்களையும் வளைத்துச் சென்ற மண்வீதியைக் காணவில்லை. அப்போது வாகனம் செல்வதற்கான தார் வீதி இருக்கவில்லை. ஜீப்பில் மண் கும்பிகளில் ஏறி விழுந்து குடல் குலங்க, கிடங்கில் விழுவோமா என மனங் கலங்க சென்று வந்தோம்.

அவ்வூர் மக்களுக்காக லயன்ஸ் கழகம் சேவை ஒன்று ஏற்படுத்தி இருந்தார்கள் அவர்களுடன் நானும் சென்றிருந்தேன். இங்கிருந்த மண் குவியல்கள் எல்லாம் எங்கே சென்றன.


மக்கள் வீடுகட்ட எடுத்துச்சென்று மறைந்து போயின பல. மீந்திருப்பவை சில. பாதை தவிர்ந்து இருபுறமும் சவுக்கம் காடுகள் வானோங்க நிமிர்ந்து நின்று அழகூட்டுகின்றன இன்றும்.

இப்போது வீதி போடப்பட்டு வாகனத்தில் சுலபமாகச் செல்ல முடிகிறது.

ஆயினும் கடலோரத்தை நெருங்கப் பொடி நடைதான். மண்ணில் கால் புதைத்து சிறிது தூரம் காலாற நடந்து சென்றால் அழகிய வடலிமரங்கள்.பச்சைக் கம்பளமாகப் படர்ந்து கிடக்கும் அடம்பன் கொடிகள், இராவணண்மீசை, எழுத்தாணிப் பூக்கள், தாழைமரங்கள் என விரிந்து கிடக்கின்றன.


பெருமலையாய்
நிமிர்ந்தெழுந்த
கடல் அலைகள்,
வீச்சடங்கி பரந்தோடி
தரை மேவிக் கால் தழுவும்

தன்கரத்தால் அள்ளிவந்த
சிறு சிப்பிகள் சோகிகள்
கரையோர மணலில்
சுயகோலம் வரைந்ததுபோல
பரந்திருந்து மனம் மலரக்
காத்திருக்கும்.நாங்கள் சென்றது மதியத்தின் பின். கடற் தொழிலாளர்கள் படகுகளிலும் அருகிலுள்ள மணற் பரப்பிலும் அமர்ந்திருந்து வலைகளைப் பிரித்து சரி செய்து கொண்டிருந்தார்கள். அலையும் அடித்து எழுந்து கரையோரம் ஓடிவருகிறது.


கடலலைகள் படகுகளை தழுவி விழுங்காது காப்பாற்ற அலை எட்டாத தூரத்திற்குத் தள்ளி வருகிறார்கள்

கடலுள் இறங்கிச் செல்ல தடைவிதித்துள்ளார்கள். அதுவும் நன்மைக்கே. சிப்பாய் ஒருத்தர் காவலுக்கு நிற்கிறார்.

”கொழும்பில் இருந்து வருகிறீர்களா” எனக் கேட்டார்.

கணவர் சென்று அவர் மொழியில் பேசி மனங் குளிர்வித்து வந்தார்.

நானும் மகளும் கடற் கரையோரம் காலை நனைத்தபடி செல்கின்றோம்.


அலை அடித்துச் செல்லும்போது சிறு நண்டுகள் கால்கிளப்பி மண்ணுள்ளிருந்து கிளம்பி மீண்டும் மண்ணுள் ஓடிச்சென்று மறைகின்றன.


‘சிறு நண்டு தரை மீதில் படம் ஒன்று கீறும்
சிலவேளை அதைவந்து கடல் கொண்டு போகும்....’

என்ற எமது மூத்த கவிஞர் மஹாகவியின் பாடல் வரிகளில் மனம் நனைய, குளிர் காற்று உடல் தழுவ உளம் குளிர்ந்தோம்.


நண்டு கீறியது. நாம் கீற வேண்டாமா மண்ஓவியம்? கீறினோம்...
கிளிஞ்சல்கள் பொறுக்கினோம்.

அடம்பன் கொடியில் தலைக்கீரிடம், மாலை செய்து மகளிடம் கொடுத்தேன். மகள் போட்டு படம் எடுத்துக் கொண்டாள். மிகவும் அழகாய் வந்தது படம்.

மாலைச்சூரியக் கதிர்கள் கடல்நீரில் பட்டுத் தெறித்து ஒளிவீசி ஜொலித்துக் கொண்டிருந்தன.  நின்றிருந்த அவ்வூர் மக்களிடம் பேசி மகிழ்ந்தோம். கணவருக்குத் தெரிந்த பலர் அங்கிருந்தனர். படகில் ஏறி இருந்து படங்கள் எடுத்துக்கொண்டோம்.

இனிய மாலைப் பொழுதாய் இருந்தபோதும் ஆழ்மனதில் சோகம் நீங்கவில்லை. சுனாமியால் இடம் இழந்த மக்கள் ஓரிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.


நீண்ட காலத்திற்கு முன் மணல் குவியலுள் மறைந்திருந்த பழைமை வாய்ந்த சேர்ச் சுனாமி அலைகளோடு  வெளிவந்து பல கதைகள் கூறிநிற்பதைக் கண்டோம். திரும்பும்போது மனத்தில் மிகுந்த பாரமும் ஏறிக் கொண்டது உண்மைதான்.

உலக நாடுகள் பலவற்றிலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஆழிப் பேரலைகளின் ஆபத்தையும் மக்கள் படும் துன்பங்களையும் நினைவில் கொள்வோம். இன்னல்களால் பலியாகிய மக்களுக்கு அஞ்சலியும் உறவுகளுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வோம்.

மாதேவி