Sunday, January 25, 2009

ஒரு பிளட்ஸ் வீட்டுக்காரியின் க(த)ண்ணீர்க் கதை

எங்களுக்கெல்லாம் தொடர் மாடிவீடு ஒன்றில் வீடு கிடைத்தவுடன் ஒரே குதூகலம். இனிமேல் வேலை சற்றே குறைவு. சிறிது ரெஸ்ட் கிடைக்கும்.

ஹாயாக இருக்கலாம். மிக்க எதிர்பார்ப்புக்களுடனும் குதூகலத்துடனும் குடி புகுந்தோம்.

காலை அவசரத்தில் முற்றம் கூட்டும் வேலை இல்லை. உள்வீட்டை மாத்திரம் ஒரு தட்டு தட்டினால் சரி. மண் கூட வராது. வெறும் தூசிதான்.

சுதந்திரமாக கேட்பார் யாருமில்லை என்றாற் போல தன்போக்கில் வளர்ந்திருக்கும் பூமரங்களையும் புல்லையும் அடிக்கடி வெட்டி துப்பரவாக்கி அழகுபடுத்தும் வேலையும் கிடையாது. காற்றில் அடித்து வரும் பக்கத்து வீட்டு மாவிலைகளையும் சொப்பிங் பைகளையும் பொறுக்கத் தேவையில்லை.


ஒரே ஜாலி. கனவுகள் ஏராளம்.

ஒவ்வொரு படிபடியாக முழங்கால் துவளப் படியேறும் துன்பம் இல்லை. சொகுசு லிப்ட் சவாரி. ஏழாம் மாடியின் மொட்டைமாடி வெளியில் நின்றால் கொழும்பு மாநகரம் முழுவதுமே கண்களுக்குள் சிறையாகும்.

கனவுகள் எல்லாமே நன்றாகத்தான் இருந்தன.

இன்று காலை வழமைபோலப் பொழுது விடிந்தது.

மார்க்கற் சென்று மரக்கறிகள், கீரை, பழங்கள் வாங்கிக் கொண்டு காலாற மெதுநடையில் திரும்பி எங்கள் வீதியால் வந்து கொண்டிருந்தேன். வழியில் எங்கள் மாடி மனையில் வசிக்கும் இரு பெண்கள். எனது கைவலிக்கத் தொங்கும் மரக்கறிப் பைகளைப் பார்த்துவிட்டு ஒரு சிறு சிரிப்பு.

'இன்றைக்கு என்னென்று சமைக்கப் போறா' எனச் சிரித்தார்களோ?

விடயம் புரியாவிட்டாலும் அவர்கள் சிரிப்புக்கு எதிர்வினையாக என் முகத்தில் பதில் முறுவல்.

'தண்ணி நின்றுவிட்டது. மோட்டார் வேலை செய்யவில்லை' என குறும்புச் சிரிப்புடன் அவர்களிடம் இருந்து பதில் வந்தது.

வந்த சிரிப்பு எங்கே போனது என்றே தெரியவில்லை.

மெதுநடை குதிரை நடையாக விரைந்தது.

எமது வீடு கீழே முதல் மாடியில். அடித் தண்ணியாவது வரும். அதையாவது பிடித்து இண்டையப்பாட்டை முடிப்பம்.

கதவு திறந்ததும் திறவாததுமாக குசினியை நோக்கி ஓடினேன். சமைக்கத் தண்ணி வேண்டுமே. பைகளை ஒரு ஓரமாக வீசி எறியாத குறையாக வைத்துவிட்டு குழாயைத் திருகினேன். நல்ல காலம் தண்ணீர் லேசாக வந்து கொண்டிருந்தது. மதியம் சாப்பிட வரும் மனுஷனுக்கு, பாடசாலையால் வரும் பிள்ளைகளுக்கு சாப்பாடு தயார் படுத்திவிடலாம். சற்று நம்பிக்கை பிறந்தது.

பாத்திரம் ஒன்றில் ஒழுகும் நீரை நிறைய விட்டுவிட்டு பாத்ரூமை நோக்கி பாய்ந்தேன. மார்பிள் தரையில் வழுக்கி விழாத குறையாக. வாளியை எடுத்து குழாயைத் திறந்து வைத்தபோது வயதான கிழவனின் வாயிலிருந்து எச்சில் ஒழுகுவதுபோல நீர் சிந்தியது. கிடைப்பது மிச்சம் என எண்ணியபடி மீண்டும் குசுனிக்கு விரைந்தேன்.

பாத்திரத்து நீரை ஒரு துளியும் சிந்தாது பக்குவமாக எடுத்து வைத்துவிட்டு இன்னொரு பாத்திரத்தை நிரப்பலுக்காக வைத்தேன். அடுத்த பாத்ரூமை நோக்கி ஓடினேன். வாளியை வைத்தேன். குழாயைத் திருப்பிவிட்டேன். மீண்டும் நீர் நிறைந்து கொண்டிருக்கும் முதல் பாத்ரூமை நோக்கி ஓடினேன். அப்பாடா! வாளி நிறைந்திருந்தது. தப்பித்தேன்.

சற்று நிம்மதி. முகம் கழுவவும், பாத்ரூம் போனால் ஊற்றவும் தண்ணி போதும்.

மறுபடி குசினி நீரை எடுத்து வைத்து பானை ஒன்றை வைத்து நிரப்பத் தெடங்கினேன். இப்பொழுது குசினிக் குழாயில் மட்டும் தண்ணீர் வந்தது. பாத்ரூமில் அடியோடு தண்ணீர் ஓடும் சத்தம் இல்லை.

குசினிக்குள்தான் ஒழுகிக் கொண்டிருந்தது.

'உங்களுக்குத் தண்ணீர் வருகிறதா எனக்கு இல்லை' நிமிர்ந்து பார்த்தேன். தண்ணி ஓடும் சப்தம் கேட்டுவிட்டது போலும்.

மேல் வீட்டுப் பெண்மணி தனது வீட்டிலிருந்து எமது குசினிப் பைப்பை நோக்கியவாறு கேட்டார். கண்ணாடி யன்னல்களால் இப்படியும் பல இன்பங்கள்!
வீட்டில் சமைப்பதிலிருந்து சகலமும் மேல் மாடியினருக்கு விருந்துதான் போலும்.

வேண்டாம் தொல்லை எனத் திரைச்சீலையைத் தட்டிவிட்டால் இருட்டு மூடிவிடும்.

தடார்! தடார்!

ஒழுகும் தண்ணீர் ஓசை காணாமல் போய்விட்டது.

வாயிற் கதவு தட்டப்படும் ஓசைதான்.

வந்து திறந்தால். 5 லீட்டர் கானுடன் மேல்வீட்டுக்காரி!

'நான் கொஞ்சம் தண்ணி பிடிக்கிறேன்' எனது பதிலுக்குக் காத்திருக்காது குசினியை நோக்கி விரைந்தார்.

எனது பானையை ஒரு புறம் தூக்கி ஒதுக்கி வைத்துவிட்டு மிச்ச கொஞ்சத்தையும் தான் பிடித்துக் கொண்டு சென்றுவிட்டா.

அவவிற்கும் குழந்தைகள் இருப்பது நினைவு வந்தது.

என்ன கூறுவது எனத் தெரியாத நிலையில் நான். மிகுதியாக வந்த நீரைப் பிடிக்க. பானையை மீண்டும் வைத்தேன். பயறு சோயா சாப்பிட்டவனுக்கு வாய்வு பறிவது போலச் சத்தம் எழுந்தது.

காற்றுத்தான் வந்து கொண்டிருந்தது!.


கழுவிச் சுத்தம் செய்ய அதிக தண்ணீ தேவைப்படும் கீரை பிரிட்ஜில் தஞ்சம் புகுந்தது என்று சொல்லத் தேவையில்லை.

மரக்கறிகளுடன் சமையலை ஒருவாறு முடித்தேன்.
கீழே ஏதேதோ சத்தம் மோட்டர் திருத்துகிறார்கள் போலும்.

மதியத்தின் பின்பு சற்று தண்ணீர் வருவது போலத் தோன்றியது. இதுவும் ஒரு வாளியுடன் முடிந்து விட்டது.

அடடா தண்ணி வருமா வருமா என அரற்றியபடியே பொழுது கழிந்தது.

அடிக்கடி குழாயைத் திருகிப் பார்ப்பதில் நேரம் கடந்தது.

குழாய்தான் அழுதது.

அன்று வேறு என்ன வேலை.

மாலையில் திருகினால் மீண்டும் ஒரு வாளி மட்டும்.

இரவு உணவு பச்சை மிளகாய், வெங்காயத்துடன். மதியச் சோற்றுக்கு தண்ணீர் ஊற்றிச் சாப்பிட வேண்டி நேரவில்லை!

பச்சை மிளகாய் வெங்காயத்தை வெட்டிப் போட்டு ரொட்டி சுட்டு, இடிசம்பல் வாழைப்பழத்துடன் கழிந்தது.

அதிகாலையை யோசித்ததுமே பயம் பற்றிக் கொண்டது. ஒவ்வொருவராக ரொயிலட் போய்வர எப்படிச் சமாளிப்பது?

இரவே வாளிகளுடன் கீழே சென்று தரையோடு தரையாகப் படுத்திருந்து மிகவும் சிரமத்துடன் சம்மிலிருந்து நீரை வாளியால் கோலி எடுத்து, லிப்ட்டின் உதவியுடன் மேலே கொண்டு வந்தார் எங்கள் வீட்டுக்காரர்.

அதிகாலையும் புஷ் புஷ் சத்தம்தான்!

தண்ணீர் குழாயில் வரவேயில்லை.

வாளியில் இருந்த நீரில் உடலைக் கழுவிக் கொண்டு கணவர் பிள்ளைகள் சென்று விட்டார்கள்.

காலை 9 மணியளவில் நீர் வரத் தொடங்கியது. மீண்டும் நிரப்பல்கள்!

இவை முடித்து குளியல் தொடங்க தண்ணீர் குறையத் தொடங்கியது. அரைவாசிக் குளியலுடன் குழாயில் காற்றுத்தான் வந்தது. Dry Cleaning செய்யாத குறை.

ஒருவாறு முடித்துக்கொண்டு வெளியே வந்தால் மழை சோ எனக் கொட்டிக் கொண்டிருந்தது.

வெளியே மழை கொட்டுகிறது. குழாயில் காற்று.

சிமென்ட் சுவர்களுக்கள் சிறை. யன்னலை அடைத்தால் மூச்சுவிடக் காற்று இல்லை. பைப்பைத் திறந்தால் ஓசையுடன் வருகிறது.

என்ன வாழ்க்கை! சலித்துவிட்டது.

வசதிகளைத் தேடி இயற்கையைப் புறக்கணித்தோம்.

இயற்கை அள்ளிக் கொட்டுகிறது.

வசதியில் சற்று தடங்கல் ஏற்பட்டாலும் வாழ்வே நரகமாகிவிடுகிறது.

தொடர் கதைகள் தொடர்கின்றன. வெற்றுப் பிளாஸ்டிக் ஐஸ்கிறீம் கோப்பைகள் தயிர் கோப்பை, இட்லிப் பாத்திரம், குக்கர், ரைஸ்குக்கர் பாத்திரம் என சமையல் மேடையச் சுற்றி யாவரும் 'கொலர் அப்பில்' தண்ணீரில் மூழ்கிவிட்டார்கள்.

அவர்களுக்கும் வெளிவீதி உலா மவுசு கிடைத்துள்ளது.

தொடர்கதை முடிவது எப்போ?

என்றாவது முடிவது சாத்தியமா?

மோட்டர் திருத்தி விட்டார்கள்.

திருப்திதான். ஆனால் !

நீர்த் தேக்கங்களில் நீர் குறைந்து வருகிறது. விரைவில் 'வோட்டர் கட்' வரப்போகிறது. ரூபவாஹினி செய்தி சொல்கிறது.

நித்திய கண்டம்தான்.

நாய்க்கு நடுக்கடல் போனாலும் நக்குத் தண்ணீர்தான்.

கொழும்பில் மழை. குழாயில் காற்று

குழாயடிச் சண்டைகளை ஏளனமாகப் பார்த்த காலம் மலை ஏறப்போகிறதா? அதன் தாற்பரியம் இப்பொழுது எங்களுக்கும் புரிந்துவிட்டது.

இரண்டு மூன்று நாட்களாக பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து முதுகு வலி வந்து மருந்துகள் எடுத்தது பிறிதொரு கதை.

கிணறு, ஆறு, குளம் என இயற்கையை விட்டு செயற்கைக்கு மாறியதால் வந்த வினைகள்தான் இவைகளா? .......

மாதேவி