நகரமயமாக்கல் திட்டங்கள் வந்ததால் ஒழிந்தவை பல. இவற்றில் பசுமை மரங்களும் அடங்கும்.
வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள்.
தலைநகர்கள் வானுயரும் கட்டிடங்களால் உயர்ந்து நிற்க பசுமைத் தாவரங்கள் கருகி அழிந்து மண்ணோடு மண்ணாகிவிடுவது வேதனைக்கு உரியது.
கட்டடக் காடுகளாக இயற்கையைத் தொலைத்து நிற்கும் கொழும்பு மாநகரின் ஒரு பகுதி இது. சீமேந்துக் கலவையால் மாசடைந்து நோய்கள் பரப்பி நிற்கும் இங்கு வளியைச் சுத்தமாக்கி பிராண வாய்வை வெளியே விட ஒரு சில மரங்கள்தான் மனிதனின் கோடரிக்குத் தப்பியிருக்கின்றன.
இவற்றையாவது காப்பாற்றி அடுத்த சந்ததிக்குக் கையளிப்போமா?
முன்னைய காலத்தில் வாகனங்கள் புழக்கத்தில் இல்லாத காலம். கால் நடையாகவே மனிதர்கள் நீண்டதூரப் பயணம் செய்வார்கள். மாட்டு வண்டிப் பயணமும் இருந்தது. அவ்வேளையில் இடையிடையே வெயிலுக்குத் தங்கிச் செல்ல தெருவோரங்களிலுள்ள மர நிழல்கள் பெரிதும் உதவின.
Thanks:- worldthrulens.wordpress.com |
உணவுப் பொருட்களை தலையில் சுமந்து எடுத்துச் செல்பவர்கள் அதை இறக்கி வைத்து இளைப்பாற மரநிழல்களின் கீழ் சுமைதாங்கி கல்லுகள் இருந்தன. இப்பொழுது இவை எல்லாமே காணமல் போய்விட்டன.
நன்றி vidiyalmora.blogspot.com |
தென்னஞ்சோலை, மாஞ்சோலைகள், நிழல் தரும் வேப்பமரங்களும் அவற்றின் இதமான சுகம் தரும் காற்றும் கனவாகின்றன.
மனித வாழ்வின் இருப்பிட நெருக்கடிகளால் தொடர் அடுக்குமாடி வீடுகள் தோன்ற பலமரங்களும் அழிக்கப்பட்டு விட்டன.
வாகனப் பயணங்கள் அதிகரிக்க நகரங்களில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டன. அதனால் ஏற்படும் சத்தங்கள், அவை கக்கும் புகைகள் என்பவற்றால் காற்றில் கரியமலை வாயுவின் அதிகரிப்பு கூடியது மனிதனுக்கு சுவாசிக்க நல்ல காற்று இல்லை.
வீடுகளும் காற்றில்லா வீடுகள், 24மணிநேரமும் செயற்கை மின்விசிறிக் காற்றும் அதன் வெப்பம் என நகரமயமானதின் விளைவுகள். பலவீடுகளில் போதிய காற்றின்றி இருமல் , சளி,ஆஸ்த்மா , மூக்கடைப்பு, என பல வியாதிகளால் மக்கள் அவதிப்படுகின்றார்கள்.
மரங்கள் அழிவதால் ஏற்படும் வெப்ப அதிகரிப்பு, மழையின்மை, இவற்றைத் தடுக்க மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். இருக்கும் மரங்களை முடிந்த அளவில் பாதுகாக்க வேண்டும்.
வீடுகளில் முடிந்த அளவில் பயன்தரு மரங்களை நாட்டி வளர்த்துப் பயன்பெற வேண்டும்.
மாடிவீட்டுபல்கனிகளிலும் சிறிய சாடிகளில் வளர்த்து மகிழலாம். பாவித்துக் கழித்த தயிர்ச்சட்டி, செடி வளர்க்கக் கை கொடுக்கிறது.
இதனால் வீட்டின் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியையும் பேணலாம். வண்ணத்துப் பூச்சிகள், குருவிகள், அணில்கள் என பலரையும் விருந்தாளிகளாய் அழைத்து மகிழலாம்.
குடித்துக் கழித்த மினரல் வோட்டர் போத்தலில் அந்தூரியம் செடி வளர்கிறது.
மரத்தின் பயன்கள் பலவாகும் காய், கனி, நிழல், நீர், மழை, பறவைகள் இருப்பிடம், இயற்கைச் சுழற்சி, சுத்தமான காற்று, மருத்துவ குணம், மனஅமைதி, மண்ணரிப்பைத் தடுத்தல், நிலத்தடி நீர் மேம்பாடு, நுண்ணுயிர்கள் பெருகுதல் எனப்பல.
பட்ட பின்னும் விறகாகும். காய்ந்த இலை பசளையாகவும் கைகொடுக்கும்.
பல இடங்களில் வீதிப் பராமரிப்புகளால் பாரிய மரங்கள் அழிக்கப்பட்டு வருவதை காணலாம்.
முன்பெல்லாம் அரசடிச் சந்தி, ஆலடி, வேம்படி என்றெல்லாம், மரத்தின் பெயர்களால் சந்திகள் பலவும் இருந்தன.
பூவரசங்குளம், நாவல்காடு, தாளையடி, ஈச்சங்குளம், வாழைத்தோட்டம்,என்ற பெயர்களையுடைய பல இடங்களும் மரங்கள் கூட்டங்களாக இருந்ததை அடையாளம் காட்டின.
மரக்கடத்தல், காடழித்தலை தடுக்கவேண்டும். தவறும்போது தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
மரநடுகை, பசுமை பராமரிப்பு, காடுவளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பவற்றை ஊக்கப்படுத்த வேண்டும். மக்களிடையே அவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சுவரை வளைத்துக் கட்டி மரத்தைப் பாதுகாத்திருக்கிறார்கள் |
உலகம் முழுவதிலும் இம்மாதம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சிகள் பலவும் நடைபெற்றுள்ளன. இலங்கையிலும் நாடளாவிய ரீதியில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்று இருந்தன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சினாலும் பல நிகழ்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.
300 ஏக்கர் பரப்பளவுள்ள கல்விசார் வனச் சரணாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அரிய வகையான தாவரங்களைப் பாதுகாப்பதற்காகவும் பூங்கா ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Thanks:- www.contourline.lk |
பாடசாலைகளில் மரம் நடும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. சில ஊர்களில் விளையாட்டு மைதானங்களைச் சுற்றியும் மரம் நடுகைகள் நடைபெற்றுள்ளது வரவேற்பிற்குரியது.
உலகளாவிய ரீதியில் பல்லாண்டு பழைமைவாய்ந்த மரங்கள் இருக்கின்றன.
சில பாரிய மரங்களாகும்
நன்றி maunarakankal.blogspot.com |
நன்றி abuanu.blogspot.com |
நன்றி zeyaan.wordpress.com |
மரங்களை வளர்த்து நலம்பெறுவோம்.
"செந்தாளம் பூவில் நின்றாடும் தென்றல் என்மீது மோதுதம்மா....."
"சின்னக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கு குக்கு கூ....கூ......" என்று பாடிக்கொண்டே மகிழ்வுடனும் நலத்துடனும் வாழ்வோம்.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவலையில் நிழல்தேடி ஓடி வந்த குரங்கார் மதில் மீதமர்ந்து இளைப்பாறுகிறார்.
-மாதேவி-
0.0.0.0.0.0.0.0.0