Tuesday, October 29, 2013

நிலாவெளிக் கடலை எழிலூட்டும் புறாமலை (Pigeon Island)

உல்லாசப் பயணிகள் இலங்கையை நோக்கி படை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். யுத்த காலத்தின் பின் வருகை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இலங்கையின் இயற்கை அழகு அவர்களைக் கவர்ந்து இழுக்கிறது. விடுமுறையைக் கழிப்பதற்காக அக் காலங்களில் பெரும் தொகையாக வருகின்றார்கள்.கிழக்கு இலங்கையின் இயற்கை எழில் அனைவரையும் தன்வசம் இழுத்துக் கொள்ளும். அழகு கொஞ்சும் மாவட்டமாக திருகோணமலை விளங்குகிறது.கோணேசர் ஆலயம், கன்னியா நீரூற்று புராதன சின்னங்கள் கிண்ணியா சேருவில நிலாவெளிகடல் புறாமலை என உல்லாசப் பயணிகளுக்கு கண்டு களிக்க அநேக இடங்கள் இங்கு இருக்கின்றன.


படகுப் பயணம் சூரியக் குளியல் நீச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த இடம்.

திருகோணமலையில் இருந்து 20கிலோ மீற்றர் தூரத்தில் வடமேற்கில் அமைந்துள்ளது நிலாவெளி.

  • இது கரையோரப் பிரதேசமாக இருக்கிறது.இங்கு கடலில் மீன்பிடித்தொழில் நடைபெறுகிறது. 
  • மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்று.
  • நட்சத்திர சுற்றுலா விடுதிகள் பலவும் இங்குள்ளன. 
  • சுனாமியின் தாக்கமும் இங்கு அதிகம் ஏற்பட்டு காலப்போக்கில் மாற்றம் பெற்றுள்ளது.திருமணமானபின்பு நிலாவெளி சென்றிருந்தோம். கணவனின் பாட்டனார் பல வருடங்களுக்கு முன் அங்கு சென்று குடியேறியிருந்தார்கள்.

வீட்டிற்கு முன்னால் வெங்காயத் தோட்டம். வீட்டின் ஒரு பக்கத்திலே கத்தரி, பூசணி, வெண்டித் தோட்டங்கள் சூழ்ந்திருக்க பழைய வீடுகள் இரண்டு. வீட்டின் பின்புறம் கிணறு. கிணற்றைச் சுற்றி எலுமிச்சை மரங்கள். வாழைத் தோட்டங்கள். பலா முருங்கை இளநீர் தென்னை கமுகு மரங்கள் என சோலை வனம்.

அடுத்த காணியில் பசுமாடு கன்றுகளுடன் மாட்டுக் கொட்டகம்.

காலை மாலை என பாலுக்கு எந்நேரமும் குறைவில்லை. நெல் வயல்கள் உப்பளம் என சற்று தொலைவே இருக்கின்றன. வீட்டில் இருந்து பார்த்தால் நிலாவெளிக் கடல் தெரியும். இடையே இவர்களுக்குச் சொந்தமான தென்னம் தோட்டங்கள். அவற்றின் ஊடே நடந்து சென்றால் கடலை அடையலாம்.


பாட்டியும் கடல் குளியலுக்கு தம்பி தங்கை கூட்டத்துடன் சேர்ந்து கொண்டாள். ஆசை தீர அனைவரும் கடலில் குளித்து வந்தோம். நின்ற ஒரு வாரமும் கடல் குளியல்தான். அவ்வளவு ஆனந்தம்.

உப்பளம் நெல்வயல் அதை ஒட்டிக் கோயில் எனச் சுற்றிப் பார்த்தோம். அப்பொழுதுதான் உல்லாசப் பயணிகளுக்கான ஹோட்டல்கள் முளைக்கத் தொடங்கியிருந்தன. குடும்பமாக அங்கும் ஒரு விசிட் அடித்தோம்.


இம் முறை சென்ற போது முன்னால் இருந்த வெங்காயத் தோட்டத்தில் வீடு கட்டி இருக்கிறார்கள். இப்பொழுதும் வீட்டைச் சுற்றி வர மாதுளை, கொய்யா மரங்கள், வாழை என இருந்ததால் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் கடற்கரையையும் தென்னந்தோட்டங்களையும் வீட்டுவாயிலில் நின்றபடியே காணமுடியவில்லை என்பது ஏமாற்றமே.

காலத்தின்மாற்றத்தால் தென்னந்தோப்புகள் எல்லாம் நவீன ஹோட்டல்களாக மாறிவிட்டிருந்தன. கட்டிடங்கள் கடலை மறைத்துவிட்டன. அவற்றைத்தாண்டித்தான் கடலுக்கு செல்லக் கூடியதாகஇருந்தது

கோணேசர் கோயில் கன்னியா புறாமலை எனச் சுற்றி வந்தோம்.


நிலாவெளிக் கடற்கரையில் இருந்து புறாமலை 2.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.


நிலாவெளிக் கடற்கரை மிகவும் அழகானது. ஆதற்கு மேலும் அழகு ஊட்டி நிற்பது புறாமலை. முன்னர் மக்கள் தனியாரின் படகுகளில் சென்று குளித்து சாப்பிட்டு மகிழ்ந்து வருவார்கள்.

புறாமலை என்று சொன்ன போதும் இவற்றில் இரண்டு தீவுகள் உள்ளன. பெரிய தீவு சுமார் 200 மீற்டர் நீளமும் 100 மீற்றர் அகலமும் கொண்டது.


இப்பொழுது இவ்விடம் தேசிய விலங்கு சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது. படகு போக்குவரத்து நடாத்துகின்றார்கள்.மலையைச் சுற்றி ஆழம் குறைந்த கடல். அழகிய முருங்கைக் கற்களோடு கூடியது. கற்களைப் பாரத்து இரசிக்கலாம்.


புறாக்கள் அக் காலத்தில் இங்கு நிறைந்திருந்ததால் புறாமலை என்ற பெயர் வந்தது.


இங்கு 100 வகையான பவளப் பாறைகளும் முன்னூறு வகையான பவள பாறை மீன்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்


சூரிய ஒளியில் Glittering coral  சிறு சிறு வர்ணக் கற்கள் தெறிக்கும் அழகே தனிதான்.  நீரினினுள் கடல் வாழ் மீன்கள் உயிரினங்கள் நீந்திச் செல்வதை கண்டு மகிழலாம்.


 வெண் மணலுடன் கூடிய இடம் சிறுமரங்கள் கிளை பரப்பி நிழல்களாக கூடலாக அமைந்திருக்கும். அவற்றின் கீழ் அமர்ந்து கடலை இரசித்தோம்.


அப்புறம் ஆனந்தக் கடல் குளியல்.மீன்களும் காலைத் தொட்டு சுவைத்துச் சென்றன. கடல் குளியலுடன் பசியும் பிடிக்க கொண்டு சென்ற உணவுகளை மரங்களின் கீழ் அமர்ந்து ஒரு பிடி பிடித்தோம்.

சூரியனும் மதியத்தைத் தாண்டிச் சென்றான். திரும்ப மனமில்லாது மீண்டும் படகில் ஏறி வந்தோம்.

மாதேவி