Wednesday, December 22, 2010

மாங்காய்த் தீவில் கிருஸ்மஸ் ஒளித் திருவிழா

அனைவருக்கும் இனிய கிருஸ்மஸ் தின வாழ்த்துக்கள்

உலகெங்கும் உள்ள கிருஸ்தவர்கள் அனைவரும் பாலகன் யேசு பிறந்த டிசம்பர் 25ம் திகதியை கிருஸ்மஸ் தினமாகக் கொண்டாடி வருகின்றனர்.


2010 ஆண்டுகளுக்கு முன் அவதரித்த அவர் இன்றும் நிதம் நிதம் கோடிக்கணகான மகள் உள்ளங்களில் நிறைந்திருந்திருக்கிறார். நம்பிக்கையூட்டி, வாழ்வில் நிம்மதியை நிறைவித்து போதிக்கவும் புதுமைகள் செய்யவும் செய்கிறார்.


முற்று முழுதாக சைவப் பாரம்பரியம் நிறைந்த கிராமத்தில் பிறந்த எனக்கு முதல் முதல் கிருஸ்மஸ் பற்றிய நினைவுகளுக்கு காலாக இருப்பவர் வேதக்கார அம்மா என எங்கள் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி சாமுவேல்  முது அன்னையாவர்.

கரோல் பாட்டுக்கள், கிருஸ்மஸ் பப்பா ஆகியவை எமக்கு புதுமையானதாகவும், ஆச்சரியம் ஊட்டுவதாகவும் அமைந்திருந்தன.

விசேட தினத்தில் அவர் அனுப்பும் கேக்கின் சுவை இன்றும் வாயில் நீர் ஊற வைக்கிறது.

பியானே இசையில் முதல் முதல் கிறங்கியதும் அவரது இல்லத்தில்தான். இசைக்கு மேலாக பெரிய பெட்டகம் போன்ற கறுத்த அந்த வாத்தியம் எங்களுக்கு கிளர்ச்சியளிப்பதாக இருந்தது.

சின்னுவின்  கிறிஸ்மஸ்ற் பொழுதுகளில் கீதங்கள் இசைக்கப் பழக்கிய  செல்வி நல்லதம்பி  ரீச்சருக்கும் எங்கள் அன்பும் நன்றியும் என்றும் இருக்கும்.


இப்பொழுது கொழும்பு வாசி்.

அண்மையில் கடைத்தெருவுக்கு சென்றிருந்தேன்.


பம்பலப்பிட்டி மஜஸ்டிக் சிட்டி இது மிகவும் பிரபலமான Shopping complex . பலநூறு கடைகள் அங்கு நிறைந்திருக்கும். உடைகள், பொம்மை, நகை,செருப்பு, கம்பியூட்டர், டிவீடி, உணவுவகை என எந்தப் பொருளின் பெயரைச் சொன்னாலும் அவற்றிற்கான கடைகள் அங்கிருக்கும்.

பண்டிகைக் காலம் என்பதால் அழகுற அலங்கரித்திருக்கிறார்கள்.கண்டுகளிக்க ஒரே சனக்கூட்டம். நேரம் போனது தெரியவில்லை.


பெரிய கிருஸ்மஸ் மரம் வைத்து, பலூன், ஒளிர் விளக்குகள் என அலங்காரம் பிரமாதம்.


இசைக் குழு தனது கைவரிசையைக் காட்டுவதற்கு தயார் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.


இறங்கி வந்தால் சன்டா குழந்தைகளுக்கு ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார். கையில் கமரா இல்லை. மொபைல் போன் கமராவில் சிறைப் பிடித்தோம் அவரை.


வெளியே வந்தால் கண்ணைப் பறிக்கும் மஞ்சள் ஒளிக்குமிழ்கள் மனத்துக்கு உச்சாகத்தைத் தந்துகொண்டிருக்கின்றன.


அவற்றையும் அடக்கினோம் மொபைல் கமராவில்.காலி வீதி ஓரமாகவும், ஸ்டேசன் வீதி முடக்கிலும்  அலங்கார விளக்குகள் ரம்யமாக ஒளிர்ந்து கொண்டிருந்தன.


வீதி ஓர மரத்தில் மின் குமிளிகள் ஓணான் போல ஊர்ந்து ஏறி ஒளி பரப்பிக் கொண்டிருக்கின்றன.


அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டுவோம் பரமபிதாவிடம்.

Saturday, December 18, 2010

சின்னச் சின்னச் மிருகங்களின் சிங்கார வீட்டினுள்ளே

ஜீன் தொடக்கம் செப்படம்பர் வரை மின்னேரிய தேசிய வனத்தில் சுற்றுலா சென்று பார்க்க ஏற்ற காலமாக இருக்கும். முன்பதிவுகளில் ஆனையார், குரங்கார், மான்கள், பார்த்துவிட்டோம்.

ஏனைய இங்கு வாழும் மிருகங்கள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். லெபேர்ட்ஸ், Fishing cats, sambar deers, Spotted cat, Sloth bear, இருப்பதாகச் சொல்கிறார்கள்.
 

அந்தோ பரிதாபம். நாங்கள்தான். மிருகங்கள் அல்ல.

அவர்கள் எங்கள் முகத்தில் முழிக்காமல் தப்பிவிட்டார்கள்.

இருந்தும் எங்களில் முழித்தோர் சிலர் கீழே.

அவர்களிடம் அன்றைய முழிவியளம் எப்படி என்று கேட்டுப் பாருங்கள்.

முதலில் முழித்தவர் மொனிட்டர். ஒரு மரக் குத்தியில் அசையாது இரை விழுங்கக் காத்திருந்தார். அவரைக் கண்டு கொண்டு அப்பால் செல்ல

ஒருவர் ஓட்டமாக ஓடிச் சென்று திரும்பி நின்று போஸ் கொடுக்கிறார்


பாருங்கள். சிவத்தக் கண்ணார். கோழி பிடிக்க தடங்கல் ஏற்படுத்திய எம்மைப் பார்த்து ஒரு முறைப்பு.

நாமும் அவரின் காலை உணவை ஏன் கெடுப்பான் என விலத்திச் சென்றோம்.

சற்றுத் தொலைவு செல்லு மட்டும் ஒருவரையும் காணவில்லை. கீரிப்பிள்ளையாரின் சாபம் எம்மில் ஒட்டிக் கொண்டதோ?

நாங்களும் விடாது தொடர்ந்தோம். குளக்கரை ஓரம் ஆகா நண்பர்களாய் மூவர் தூரத்தே முத்திரிகைத் தோட்டத்தைத் தேடி ஓடிக்கொண்டு இருக்கிறார்களோ?


எந்தப் பறவை வடையாகப் போகிறதோ? அவர்களைத் தடுப்பது நம்மால் முடிந்த காரியமா?

நரிகள் முகத்தில் முழித்தாயிற்று. அப்பொழுது இன்று வெற்றிதான். எமக்கா நரியார்களுக்கா? பார்ப்போம்.

மோகன் மீண்டும் காட்டிற்குள் வாகனத்தைச் செலுத்துகிறார்.

வெற்றி நமக்குத்தான். அது என்ன?

தேன் கூடு. இனிய தேன் சுவைத்தது போல் வெள்ளை நிறத்தாலான கூட்டை அதிசயத்துடன் பார்த்துக் கொண்டோம்.

உங்கள் காட்சிக்கு.

வாகனம் ஓடுகிறது. காட்டின் ஊடே எறும்பார்கள் கூடிக் கட்டிய அழகிய உயர்ந்த வீட்டின் உள்ளே எத்தனை எத்தனை பாம்பார்க்களோ? நினைக்கவே உஸ் சத்தம் கேட்பதுபோல இருக்கிறது. பறநாகம்  எதுவும்  இருக்குமோ? எம்மைப்  பாய்ந்து கொத்துமே எனப் பயந்து ஒரே பாய்ச்சலாய் வாகனம் ஓட ஓட கிளிக்குக் கொண்டு பறந்தோம்.

காட்டு வெளி வந்தததும்தான் மூச்சே வந்தது. புல் தரையில் வாகனம் ஓட பெரிய உடும்பார் ஒருவர் ஊர்ந்து செல்கிறார். அப்புறம் என்ன?


குளக்கரை ஓரம் மீன் பிடித்துக் கொண்டு இருப்போர் சிறிய கைவலை வீசிக் கொண்டு இறால் நண்டு மீன்கள், பிடித்துக் கொண்டு இருந்தார்கள்.


மீன் சாப்பிடுவோராக இருந்தால் ஹொட் ஹொட் ஆக வாங்கி சமைத்து உண்ணலாம்.

வனப் பகுதியில் திரியும் ஏனையோர் யாவர்?

கரையோரம் பெரிய அளவில் காட்டு எருமையார்களின் கூட்டம். கிட்டச் செல்லவே பயத்தைத் தந்தது. கூரிய கொம்பால் பிரட்டிப் போட்டால் என்ன செய்வது? தூர இருந்தே பார்த்துக் கொண்டோம்.

காட்டின் உள்ளே மீண்டும் புகுந்தோம். Watch tower தென்பட்டது. எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம். ஏணிப்படியில் மூச்சிரைக்க ஏறினோம்.

உயரே சென்று காட்டை நாற்புறமும் ரசித்தோம். தூரத்தே யானையார் கூட்டம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை சூரியனின் கதிரில் சிறகடித்துப் பறந்து திரியும் பறவையார்கள், அழகிய நீண்ட கடல் நீர் சூரிய ஒளியில் வெளிறித் தளதளத்துக் கொண்டிருந்தது.


பாரிய உயர்ந்த பச்சை நிற மரங்களின் கிளைகள் கண்ணுக்குக் குளிர்ச்சியைத்தந்தது, தூரத்தே அழகு சேர்க்கும் மலைக் குன்றுகள் என பலப்…பல…

படியால் இறங்கி கீழே வரவேண்டுமே மெதுவாய் பயந்தபடியே இறங்கி வந்தோம்.

அருகே கொடுக்காய்ப் புளியை நினைவூட்டும் ஏதோ…கொத்துக் கொத்தாய் காட்டுக்காயாக இருக்கும்போலும்

இறங்கிநின்று பார்த்து படம் எடுத்துக்கொண்டோம்.

மிகுந்த கவலையுடன் வாகனத்தில் ஏறி மின்னேரிக்கு  நன்றி கூறிக்கொண்டு வெளியே வந்தோம். இனிய பயணம் முடிவுக்கு வந்தது.

இவ்வளவு நேரமும் பசியே தெரியவில்லை. இப்பொழுது கிள்ளத்தொடங்கியது. வெளியே தெருஓரத்தில் கலைப்பொருட்கள் விற்கும் கடை ஒன்று. மின்னேரிய பறவைகளின் ஞாபகமாக சின்னு தனது கார்டனில் வைக்க ஒரு ‘பேட்ஸ் கவுஸ்’ விரும்பி வாங்கிக் கொண்டாள். அதையும் சுமந்தபடி ஹோட்டல் புப்வேயை நோக்கிச் சென்றோம்.

சிவப்பு, வெள்ளைச் சாதங்கள், இடியாப்பம், அப்பம், புட்டு, கறிவகைகள் என வெட்டினோம். வயிறுநிறைய…. ‘காட்டுப்பசி’ அல்லவா.

வாழ்க்கையில் இனிய பயணங்கள் மீண்டும் வரும் என நம்புவோம்.   

மாதேவி