Sunday, January 23, 2011

மட்டக்களப்பு மாவட்டம் கமராப் பார்வை - வெள்ள அனர்த்தத்திற்கு முன்.

அண்மையில் பெய்த மழையினால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளான இடம் மட்டக்களப்பு மாவட்டம். கிழக்கு மாகாணம் முழுவதுமே பாதிப்பிற்கு உள்ளானது.

பல இலட்சம் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி வீடுகளை இழந்து, நிர்க்கதியாகித் துயருற்றனர். இன்னல்களை அனுபவித்து வரும் மக்களுக்கு அனுதாபங்களைத் தெரிவிப்போம்.


சுனாமியால் இழந்தது அளப்பரியது. ஆனால் அதனையும் தாண்டி முன் நகர்ந்தனர் மக்கள். இப்  பெருவெள்ள அனர்த்தங்களிலிருந்து மீண்டு ,புதுவாழ்வு பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டும். அதற்காக பிரார்த்திப்போம். முயற்சிப்போம்.



சுனாமியிலிருந்து பாதுகாக்க அலையால் அள்ளுப்படாது இருக்க கூம்பு வடிவில், பொத்துவிலில் கட்டிய வீடுகள்.

மட்டக்களப்பு வாவி நகருக்கு அழகூட்டிக் கொண்டிருக்கிறது. மீன்பாடும் தேன்நாடு என்ற பெயரையும் தன்னகத்தே கொண்டு மிளிர்ந்து நிற்கிறது.

வாவியோர வீடு

ஆலயங்கள் பள்ளிவாசல்கள் சூழ உள்ள இடம். வியாபார ஸ்தலமாகவும் திகழ்கிறது.

மணிக்கூட்டுக் கோபுரம் நகரின் மத்தியில்.


அதன் அருகே குழந்தைகளின் விளையாட்டுப் பூங்கா.


நகரத்தின் வாயில் முதல் கிழக்கு மாகாணம் முழுவதுமே நீண்ட நெடும் பாலங்கள். அவற்றில் பல புதியவை.  துரித வளர்ச்சிக்கு சான்றாக நிற்கின்றன.


இவை கண்ணுக்குக் குளிர்ச்சி, மனித வாழ்வின் நெருக்கமான ஊடாடலுக்கு பேருதவி. எளிதான போக்குவரத்திற்கு பெரும்பேறு.


வயல்கள் நிறைந்த விவசாயக் கிராமங்களும் இங்கிருப்பதால் மட்டக்களப்பு அரிசி, அவல், கஜீ ஆகியவற்றிக்கு பெயர் பெற்றது.

பண்ணைகள் இருப்பதால் எருமைத் தயிர் பிரபல்யமாக இருக்கிறது. எருமைத் தயிர் சட்டிகளில் உறைய வைக்கப்பட்டு பிறமாநிலங்களுககு எடுத்துவரப்பட்டு விற்பளையாகிறது. மட்டக்களப்பு ரெயின் என்றாலே உறியில் அடுக்கப்பட்ட தயிர்கள்தான் கூடை கூடையாக இறங்கும்.

வாவி இருப்பதால் மீன்கள் இங்கு அதிகம். மீன் உணவுக்குப் பெயர் பெற்றது.

வாவியில் மீன்பிடிப் படகுகள்

இங்கு விளையும் இறால் சிங்க இறால் என் அழைக்கப்படும். இந்த இறால் மிகவும் பெரியதாக இருக்கும்.


தென்னந்தோப்புடன் கூடிய வீடுகளை காணக் கூடியதாக இருந்தது. வாழைச்சேனை இங்கு உள்ளது. இலங்கையில் உள்ள ஒரே ஒரு காகித உற்பத்திச் சாலை இதுதான்.


கிழக்குப் பல்கலைக் கழகம் இங்கு அமைந்துள்ளது.


 கல்வி குழந்தைகளின் அடிப்படை உரிமை. அதனை இழக்க வேண்டிய காலகட்டம் இருந்தது. இலவசமாகக் கிடைக்கும் அதனைப் பயன்படுத்த வேணடிய வலு வேண்டும். கல்வி கிட்டினால் வாழ்வு உன்னதமாகும்.


நலவியலுக்கான பீடம் நகரிலுள்ளது.


பிரபல இராம கிருஷ்ண மிசன் இங்குள்ளது.

காத்தான்குடி,  ஓட்டமாவடி போன்ற பல்வேறு பாரம்பரியக் கிராமங்களும் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளன.


மாந்தீரிகத்திற்குப் பெயர் பெற்ற இடமாகவும் இருக்கிறது. மருத்துவம், நோய் தீர்த்தல், தற்காப்புப் பாவனைக்கு மாந்திரீகம் செய்வார்கள். நாட்டுக் கூத்து, இசை நாடகம், பறை, வில்லுப்பாட்டு கலைகளின் பிறப்படமாகவும் இருந்திருக்கிறது.

நாட்டுப்புறக் கலைகள் பற்றி ஈழத்துப் பூராடனார் பல நூல்களைத் தந்துள்ளார்.

பல கோயில்களைத் தன்னகத்தே கொண்ட நகர்.


மாமாங்கம் பிள்ளையார், கொக்கட்டிச் சோலை தான்தேன்றீஸ்வரர், பட்டிப்பளை தந்தாமலை முருகன் ஆலயம்,  இது இந்துக்களின் பூர்வீக வழிபாட்டிடமாகும். இது சின்னக் கதிர்காமம் என்றும் அழைக்கப்படுகிறது.

இவ்வாறு பல சிறப்புக்களுடன் மட்டக்களப்பு நகர் விளங்குகின்றது.

மாதேவி