Saturday, July 13, 2013

புகையென மூடுபனித் துளியாய் வீசி எறியும் துன்ஹிந்த நீர்வீழ்ச்சி

பதுளை மாவட்டத்தில் துன்ஹிந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பதுளை நகரிலிருந்து 5 கிலோமீற்றர் தூரத்தில் பதுளை மஹியங்கன பாதையில் உள்ளது. இலங்கையில் உள்ள நீர்விழ்ச்சிகளில் மிகவும் அழகுடையது இது.


யூன் யூலை சிறப்பான காலநேரம். 210 அடி உயரத்திலிருந்து பாய்கிறது.
Smoky dew drops spray என்கிறார்கள்.


வழியில் kuda dunhinda என்ற சிறிய நீர் வீழ்ச்சியையும் காண முடியும். குளிப்பதற்கு தடை இருக்கின்றது. கற்பாறைகளுடன் கூடிய மிக ஆழமான இடம். அதனால் அபாயமானது பாரக்கச் சென்ற ஓரிருவர் காணாமலும் போயிருக்கிறார்கள். Dhunhinda Addaraya என்ற சிங்கள டிராமா துன்ஹிந்த பிரதேசத்தைச் சேர்ந்த அசோக ஹந்தகம என்பவரால் தயாரிக்கப்பட்டது.


பசுமையான பள்ளத்தாக்குகளும் மலைகள் சிறு ஓடைகள் இனிய குளிர்காலநிலை என சுற்றிவர ரம்யமான சூழல் மனதை மயக்கும் பாதையின் ஆரம்பத்தில் சிறிய கடைகள். குளிர்பானம் ரீ, தொதல், கொறிப்பதற்கு அவித்த சோளம், உப்பு மிளகாய் இட்ட அன்னாசித் துண்டுகள். சியம்பல எனும் சிறிய கற்புளி, கண்ணுக்கு விருந்தாக கலைப் பொருட்கள், அழகிய தொப்பிகள் என பற்பல கடைகள். இவற்றைப் பார்த்தவாறே வாயிலில் ரிக்கற் பெற்றுக்கொண்டு ஆளுக்கு 20 ரூபாய். நடையைத் தொடர்ந்தோம்.


சமதரை அல்ல. மண்மலைப் பாதை. மேடு பள்ளமாய் வளைந்து நெளிந்து சென்றது பாதை. நீர்வீழ்ச்சியைக்காண ஒருமைலுக்கு மேல் செல்லல் வேண்டும். இடையிடையே கடைகளில் இளைப்பாறி இருப்பதற்கு ஆசனங்கள் வைத்திருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் கடந்து அரை மைல் அளவு வந்துவிட்டோம். மலையின் ஓரத்தில் சீமென்தினால் கட்டிய ஒரு வியூ அமைத்துள்ளார்கள். ஆகா!  அழகு கொள்ளை அழகு. இங்கிருந்து அதள பாதாளத்தில் பாயும் நீர் வீழ்ச்சியின் அழகை கண்களால் பருகி மகிழ்ந்தோம்.

ஓய்வாக இருந்து செல்ல அங்கே ஆசனங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அப்பால் பயணத்தைத் தொடர்ந்தோம். பாதைஓரப் பாறைகளில் நின்ற மரக் கொப்பிலிருந்து எம் இனத்தார்கள் இறங்கி அங்கும் இங்கும் எம்மை நோக்கி ஓடி வந்தார்கள். குட்டிகளும் கூடவே பறந்து வந்தன. சிலர் பழங்கள் கொடுத்தனர். கொடுத்த பழத்தைப் பிடுங்கி வாயில் இட்டுக் கொண்டு சிலர் தா... தா எனக் கையை நீட்டிய படியே கிட்ட ஓடிவந்தனர்.


கண்டு கிளிக்குக் கொண்டே நகர்கின்றோம். அமைதியான இயற்கை அழகு பாதை எங்கும் படிகள் கிடையாது. கற்பாறைகள்தான் இடையிடையே இருந்தன. மேலே ஏறி கீழே இறங்கி எனச் சென்று கொண்டிருந்தோம்.

அடுத்து வந்ததே ஆடு .. ஆடு ... பாலம்....


ஒருவாறு ஏறி ஆடி ... இரு புறமும் கைகளையும் பிடித்து ஆடிச்சென்று இறங்கினோம்.


அதைத் தொடர்ந்து பாதை சீரானதாக இல்லலை. அந்தோ!  மலையின் ஓரமாய் பாதை சென்றது. கீழே அதளபாதாளம். கரணம் தப்பினால் ....... நிச்சயம்.  மிகவும் மெதுவாக அடி மேல் அடி வைத்து பூனையார்கள் ஆனோம். கீழே இறங்கிச் செல்கின்றது பாதை. கற்படிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காலை அகல எட்டி வைத்து இறங்குவதே மிகவும் சிரமமாக இருந்தது.

இந்தா வந்துவிடும் நீர் வீழ்ச்சி அருகே கண்டு மகிழலாம் என்று எண்ணம். இளைத்துக் களைத்து செல்லுகின்றோம். சில இடங்களில் ஒருவருக்கு ஒருவர் ஏறி இறங்க கைகொடுத்து உதவுகின்றோம். கீழே செல்லச் செல்ல பாதை மிகவும் மோசமாக இருந்தது. முன்னால் நானும் மைத்துனியும் பின்னால் பிள்ளைகள் கணவர்.

ஓரிடத்தில் திடீரென பாதாளப் படிகள். பள்ளத்தைப் பார்த்து திகைத்து நின்றது மனம். கீழிருந்து மிகவும் சிரமத்துடன் ஏறி வந்த பெண்ணுக்கு ஒதுங்கி வழி விட்டபடியே யோசனையில் நான் நின்றிருந்தேன். படிகள் எட்டியே இருந்தன. மேலே வந்த பெண்மணி 'கொச்சர கதறராய் '  ரொம்ப கரைச்சல் என்றார்.

இதைக் கேட்டதும் எனக்கு கிலி பற்றிக் கொண்டது.



'சிறீபாத கொந்தாய்' சிவனொளிபாதம் நல்லது எனவும் பெண்மணி கூற நானும் மைத்துனியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி தொடர்வதில்லை திரும்புவது என்றும் இவ்வளவே நீர் வீழ்ச்சி பார்த்தது போதும் முதல் வியூவிற்கே மீண்டும் சென்று பார்த்து மகிழ்வோம் எனப் பேசிக் கொண்டோம்.

நாங்கள் திரும்பிச் செல்வதாகக் கூறிவிட்டோம்;.

பிள்ளைகள், கணவர் தொடர்ந்தார்கள். துன்ஹிந்தையை அருகே பார்க்க.

நாங்கள் மீண்டு வந்து மேல் உள்ள வியூவில் நின்றபடியே நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டு ஆடுபாலத்தில் ஏறி இறங்கி முன்வாயிலை அடைந்தோம்.


கடையில் போட்டிருந்த ஆசனத்தில் களைதீர அமர்ந்து பார்த்திருந்தோம். சற்று நேரம்செல்ல போன் கோல் மதியம் ஆகிவிட்டதா ஹோட்டலில் சென்று உணவை அருந்திவிட்டு அவர்களுக்கு பார்சல் வாங்கி வாருங்கள் என்றார்கள்.
சற்றுதள்ளி நல்ல ஹோட்டல் ஒன்று இருந்தது. சென்று ரைவரும் நாங்களும் சாப்பிட்டுவிட்டு  மீண்டு வந்து காத்திருந்தோம்.

சற்று நேரம் செல்ல மூவரும் போரில் வெற்றி கொண்ட வீரர்கள் போல களைத்த உடலும் பெருமிதம் பொங்கும் முகத்துடனும் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.

அடடா வந்துவிட்டார்களே என்று பார்த்தபோது பின்புறமாய் கையைக் கட்டிக் கொண்டு வந்தார் கணவர். கூட ஒருவர் கைகளில் என்ன என எட்டிப் பார்த்தபோது அட! தன்னைப் போல ஒருவரைக் கூட்டி வந்துவிட்டாரே.


கீழே செல்லச் செல்ல பாதைகள் மிகவும் மோசமாக இருந்ததாக சொன்னார்கள்.

நீங்கள் வராததும் நல்லதே என்றாள் மகள்.

கீழே சென்று பார்க்க கட்டிடம் கட்டி இருக்கிறார்கள். அங்கிருந்து கொட்டும் நீர்வீழ்சியின் அழகைக் கண்டு களித்தார்களாம்.

பலரும் கட்டிடத்துடனே பார்த்து ரசித்துவிட்டு திரும்பிவிட்டார்களாம். தாங்களும் ஓர் சிலரும் கீழே ஒடுங்கிய மலைப் பாதை வழியே சென்றார்களாம்.  ஒடுங்கிய பாதையின் இருபுறங்களிலும் புல்கள் கற்களும் சறுக்கீஸ் விளையாட்டுக் காட்டின. அவற்றையும் தாண்டி கீழே சென்று துன்ஹிந்த நதியில் கால் பதித்து அருகே கொட்டும் நீரையும் கண்டு களித்து திரும்பியதாகச் சொன்னார்கள்.


"ஓரிடத்தில் சிரமப்பட்டு நிலத்தில் இருந்து அருகிருந்த பாறைகளைப் பற்றி ஒரு காலை கீழே விட்டு அது சரியாக தரையில் பதிந்ததை உறுதிப்படுத்திய பின் மிகவும் சிரமத்துடன் மற்றக் காலையும் கீழே போட்டு இறங்கினார்களாம். கரணம் தப்பினால் துன்ஹிந்தவில் குருதி ஆறு பாய்ந்திருக்கும்." என்றாள் மகள்.

துன்ஹிந்தையில் கால் பதித்த மூன்று ஜோடிப் பாதங்கள் வாழ்க! என வாழ்த்திவிட்டோம்.

0..0.0.0..0

19 comments:

  1. மிகவும் அழகான படங்களுடன் அருமையான பதிவு.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

      Delete
  2. அழகான இடம்...! அருவி பிரமாண்டம்....!

    ReplyDelete
    Replies
    1. மலைகளில் ஏறிஇறங்கி பழகியவர்களுக்கு இலகுவாக இருக்கும் நமக்கு சற்று சிரமம்தான்.

      மிக்கநன்றி.

      Delete
  3. நீர்வீழ்ச்சியைப் பார்க்க ஆவல் தூண்டுகிறது

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ரசனைக்கு நன்றி.

      Delete
  4. அமைதியான இயற்கை அழகு
    படங்கள் மனம் நிறைத்தது ..
    பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  5. பிரம்மாண்டமான அருவி. படங்களும் ரசிக்க வைத்தன. எங்களால் இலங்கைக்கு வர முடிகிறதோ இல்லையோ உங்கள் பதிவு மூலம் பார்த்து ரசித்தோம்.

    ReplyDelete
    Replies
    1. பல இடங்களுக்கும் சுற்றுலா செல்லும் நீங்கள் ஒருதடவை இலங்கைக்கு வந்தால் ரசித்திடலாம். பயணம் அமைய வாழ்த்துகள்.

      நன்றி.

      Delete
  6. அருமையான காணோளி
    அதைப் பார்த்து உங்கள் புகைப்படங்களைப் பார்க்க
    உடன் பயணித்து பார்ப்பதைப் போல இருந்தது
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  7. பயணித்து மகிழ்ந்ததற்கு நன்றி.
    துன்கிந்தை பாயும் அழகு கண்கொள்ளாக்காட்சிதான்..

    இம்முறை மலைநாட்டில் மழைஅதிகம் பெய்ததால் தலவாக்கலை நகரில் அமைந்திருக்கும் சென்கிளையஸ்,டிவோன் நீர்வீழ்சிகளிலும் நீர் கொட்டி அழகாக பாய்ந்தது. மக்கள் கண்டு களித்திருக்கின்றார்கள்.
    மிக்கநன்றி.

    ReplyDelete
  8. நீர்வீழ்ச்சி காணொளி மிக அருமை மாதேவி.
    அழகாய் பாதையில் கூட்டி சென்றீர்கள். நன்கு ரசித்தோம் நீர்வீழ்ச்சியை.
    இயற்கை அழகு நிறைந்த திகில் ஊட்டும் பாதை தான்.

    ReplyDelete
    Replies
    1. பாதைதிகிலானதுதான். ஆனால் நீர்வீழ்ச்சி மிகுந்தஅழகு. அழகுஎன்றால் ஆபத்தும் இருக்கும்போல :)
      வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.

      Delete
  9. ஓ!..பயமாக உள்ளது. இவ்வளவு நவீனத்துவம் வளர்ந்தும் ஏன் இப்பாதையைச் சரியாகச் சீர் செய்ய வில்லையோ! பதுளைக்குச் சென்றுள்ளேன் . அந்த நண்பர்கள் குடும்பம் ஏன் எங்களிற்கு இதைக் காட்ட வில்லையோ? 2-3 நாட்கள் நின்று நாவலப்பிட்டியா சென்றோம். ம்..பெருமூச்சுத் தான் விட முடிகிறது.
    மிக்க நன்றி. இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. இயற்கை அள்ளிக்கொட்டும் இடங்கள் பலவும் நம்நாட்டில் இப்படித்தான் இருக்கின்றன என்பது கவலையே.

      நன்றி.

      Delete
  10. எங்கள் நாட்டிலேயே எத்தனை அழகுப் பொக்கிஷங்கள்.நானும் போயிருக்கிறேன் இங்கு மாதேவி !

    ReplyDelete
  11. மாங்காய் தீவில் அழகு கொட்டிக்கிடக்கிறதே..

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  12. Engal naaddin azake thani azaku.kandy nuwareliya innum azaku
    Jaffna athay vida azaku .nantry

    ReplyDelete