Monday, September 12, 2011

யாழ் மக்களின் உள்ளங்கவர் அரசன்

நல்லூர்க் கந்தன் யாழ் இந்துக்களின் மனதில் என்றும் நிறைந்தவன். பண்டைக் கால அரசுகள் முதல் இன்றைய அரசுகள் வரை ஆட்சிகள் மாறியபோதும் மக்கள் மனதைப் புனிதப்படுத்தி என்றென்றும் அவர்கள் உள்ளத்தில் அரசனாக வீற்றிருப்பது நல்லூர் கந்தன்தான்.

எங்களைக் காப்பவனின் வரலாற்றை முழுமையாகப் பேணாதவர்களாக நாம் இருப்பது வருந்தத்தக்கது.


13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சிசெய்த ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கலிங்கமாகன் அல்லது கூழங்கை சக்கரவர்த்தியால் கட்டுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. ஆரிய சக்கரவர்த்திகள் நல்லூரை இராசதானியாக்கி ஆண்டு வந்த காலத்தில் மன்னன் சென்று வணங்கிய தலை சிறந்த ஆலயம் இது.


15 ஆம் நூற்றாண்டில், தென்னிலங்கையைச் சேர்ந்த கோட்டே அரசனின் சார்பில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சப்புமால் குமாரயா எனப்பட்ட சண்பகப்பெருமாள் என்பவனே நல்லூரைக் கட்டுவித்தானென்றும் சிலர் கூறுவர். சிங்கை பரராஜசேகரன் இவ்வாலயத்தைப் புனரமைத்து சிறந்ததாக ஆக்கியதாகவும் சொல்கிறார்கள்.

போர்த்துக்கேயப் படையெடுப்பில் ஆலயம் அழித்தொழிக்கப்பட்டது. பின்னர் மாப்பாணர் முதலியார் பரம்பரையினரே இவ் வாயலயத்தை அமைத்தனர் என்கிறது யாழ்பாண வைபவம் என்ற நூல்.


போர்த்துக்கீசருக்கு முந்திய நல்லூரின் அமைப்புப் பற்றியும், அங்கிருந்த கட்டிடங்கள் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ளக்கூடிய அளவுக்குப் போதிய தகவல்கள் இல்லை. யாழ்ப்பாண மன்னனான ஆரியச் சக்கரவர்த்திகளின் அரண்மணையை அண்டி பழைய கோவில் அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது.

யாழ் மண்ணில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் இது. ஆலய நிர்வாகம் மிகவும் சிறப்பானது. நேர அட்டவணை, பூஜை என தினப்பூசைகள் நேரம் தவறாமல் நடைபெற்று வருகின்றன. இன்றும் ஒரு ரூபா மட்டுமே கொடுத்து அடியார்கள் பூசைக்கு அர்ச்சனை செய்ய முடிவது இந்த ஒரு கோவிலில்தான்.


25 நாட்கள் ஆலய உற்சவ விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் விழாவிற்காகச் சென்று விரதம் இருந்து நல்லூர் கந்தனை வழிபடுவார்கள். சப்பறத் திருவிழா, மஞ்சம், தேர்த்திருவிழா, தீர்த்தம், பூங்காவனம், மிகவும் சிறப்பாக நடைபெறும். கோடான கோடி மக்கள் கலந்து கொள்வர்.தேர்த் திருவிழா அன்று சுவாமியைத் தேரில் வைத்து வடம் பிடித்து இழுத்து வருவார்கள். தேர் இருப்பிடம் அடைந்ததும் சுவாமிக்கு பச்சை சாத்தி அலங்கரித்து கோயில் இருப்பிடம் கொண்டு செல்வர். தேர்த் திருவிழாவில் காவடி, தீ மிதித்தல், கற்பூரச் சட்டி, பறவைக் காவடி, தூக்குக் காவடி, அங்கப் பிரதிஸ்டை, அடி அழித்தல், என அடியார்கள் தங்கள் நேர்த்திக் கடன்கனை நிறைவேற்றுவர்.

யாழ் மண்ணின் சித்தர்களில் ஒருவரான யோகர் சுவாமி, நல்லூர்க் கந்தனின் தேரடியில் அமர்ந்திருந்து வெகு நேரம் தியானத்தில் இருப்பார் எனச் சொல்வார்கள்.

கோவிலின் பிரதான கோபுரம் கிழக்குப் பார்த்த வண்ணம் இருக்கிறது. இப்பொழுது தெற்குப் புறத்திலும் ஒரு புதிய கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப் புகழ் மிக்க இவ்வாலய வருடாந்த உற்சவம் தேர், தீர்தத் திருவிழா மிகவும் சிறப்புடன் நிறைவு பெற்றுள்ளது. கந்தன் தேரில் வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.


குடா நாட்டு மக்களுடன் புலம் பெயர் மக்கள், வெளிநாட்டினர், தென்னிலங்கை மக்கள் என சகல பாகத்திலிருந்தும் மக்கள்   வருகை தந்து திருவிழாக்களைச் சிறப்பித்திருந்தனர்.

இலட்சக்கணக்கான கந்தன் அடியார்கள் இவ் விழாவில் பங்கு பற்றி கந்தன் அருள் பெற்றுள்ளார்கள். 

யாழ் தலங்களை வலம் வர:-


மாதேவி
0.0.0.0.0.0.0

14 comments:

 1. வரலாற்றுத் தகவல்கள், புகைப்படங்கள் என சிறப்பகப் பதிவு செய்துள்ளீர்கள்.

  ReplyDelete
 2. அழகிய படங்களும் அருமையான விளக்கங்களும் எங்கள் உள்ளங்களையும் கவர்ந்தன. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். vgk

  ReplyDelete
 3. அருமையான பதிவு.
  பிரம்மாண்டமான கோவில்.
  அழகான, கம்பீரமான தேர்.
  உங்களது பதிவிற்கும், உங்கள் முயற்சிக்கும் மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வருகைக்கு மகிழ்கின்றேன். உங்கள் கருத்துக்கு நன்றி Dr.எம்.கே.முருகானந்தன்.

  ReplyDelete
 5. வாருங்கள் வை.கோபாலகிருஷ்ணன்.

  நல்லூர் கந்தன் உங்களைக் கவர்ந்ததில் மகிழ்ச்சி. பாராட்டுக்கு மிக்கநன்றி.

  ReplyDelete
 6. உங்கள் வாழ்த்துக்கு மிக்கநன்றி Rathnavel . வருகைக்கு மகிழ்கின்றேன்.

  ReplyDelete
 7. அழகான் படங்கள் அருமையான விளக்கங்கள் எல்லாமே நல்லா இருக்கு.

  ReplyDelete
 8. வரலாற்றுச் சான்றுகளுடன் புகைப்படங்களுடன்
  அருமையான விளக்கங்களுடன் கோவிலையும்
  திருவிழாவினையும் நேரடியாகப் பார்ப்பதைப் போல
  மிக அழகாகப் பதிவிட்டுத் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. நல்லூர் கந்தன் பற்றி தகவல்கள் அறிய மிக்க மகிழ்ச்சி. படங்களும் சேர்த்து பார்க்க இரட்டிப்பானது.

  ReplyDelete
 10. யாழ் மக்களின் உள்ளங்கவர் அரசனை மட்டும் நாங்கள் பார்க்க கொடுத்து வைக்கவில்லை போலும்.
  நாங்கள் இலங்கை வந்த போது பார்க்க முடியவில்லை. ஆனால் உங்கள் பதிவின் மூலம் பார்த்து விட்டேன் மாதேவி மகிழ்ச்சி.

  ReplyDelete
 11. யாழ் மக்களின் உள்ளங்கவர் அரசன் நல்லூர் கந்தனின் ஆலயம் பற்றி அற்புதமான படங்களும் அருமையான பகிர்வும் சிறப்புற அளித்த தங்களுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. திரத்தலத்தின் தகவல்கள் பலவற்றை அறிந்து கொள்ள உதவும் இப்பதிவிற்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
 13. நல்லூர் கந்தனைத் தர்சித்த

  லஷ்மி
  ரமணி
  ரிஷபன்
  கோமதி அரசு
  இராஜராஜேஸ்வரி
  வியபதி
  உங்கள் அனைவருக்கும் கந்தன் அருள் கிடைக்கவேண்டுகின்றேன்.

  ReplyDelete
 14. பல தகவல்களை அழகிய படங்களுடன் தந்திருக்கும் இப்பதிவு இலங்கையின் பெருமையைக் கூறுவதாக அமைந்துள்ளது அங்கு வந்து பார்க்க இயலாதவர்களுக்கு என்றே எழுதப்பட்டுள்ளது போல இருக்கிறது.பாராட்டுக்கள்

  ReplyDelete