Friday, May 27, 2011

யாழ் இராச்சிய புராதன தலைநகரில் ஆழ்வார் ஆலயம்

யாழ் வடமராட்சி பகுதியில் உள்ள துன்னாலை கிராமத்திற்கு அண்மையில் வல்லிபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ள ஆலயம் இது.  யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ள ஒரு ஊர்தான் வல்லிபுரம் பகுதியாகும்.


வல்லி நாச்சியார் என்றொரு பெண் இருந்தாளாம். அவள் கற்கோளம் கடலில் படகில் ஏறி கடலுள் சென்ற போது மீன் ஒன்று துள்ளி விழுந்து அவள் மடியில் விழுந்ததாம். மீனானது சங்கு சக்ரம் உடையதாகக் காட்சி அளித்தது. அம் மீன் சிறீ சக்கரம் ஒன்றை இவளுக்கு அளித்து மறைந்தது. 

அச்சக்கர வடிவத்தை ஆலயத்தில் வைத்து வழிபட்டு வந்தாள். அவ்வாலயமே வல்லிபுர ஆழ்வார் என அழைக்கப்படுகிறது  எனவும் நம்புகிறார்கள்.

நன்றி vallipuram.wordpress.com

மூலஸ்தானத்தில் சிறீசக்கரம் வழிபடப்பட்டு வருகிறது. இப்பொழுது மிகவும் பெரிய ஆலயமாகக் கட்டப்பட்டுள்ளது. மூன்று வீதிகள் அமைந்துள்ள பாரிய ஆலயமாகும். 

வாயிற் கோபுரமும் பெரியது. ஏழுநிலைகளைக் கொண்ட இந்த ராஜகோபுரம் புராணக் கதைகளைக் கூறும் சிற்பங்களுடன் எழுப்பப் பட்டுள்ளது.



வல்லிபுர ஆழ்வாரை வழிபடமுன் வீதிக்கு எதிர்ப்புறம் அமைந்திருக்கும் பிள்ளையார் கோவிலைத் தர்சித்துச் செல்வதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். 

பிள்ளையார் கோவிலின் முன் பகுதியில் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறார் இந்தக் குட்டிப் பிள்ளையார். 

பிள்ளையாருக்குக் காவல் இருக்கிறாரா அனுமார்?


பிள்ளையார் கோவில் முற்புறம்


பிள்ளையார் கோயிலின் பின் புறமாக கேணிஇருக்கிறது. இதில் நீராடி கோயிலுக்குச் செல்வார்கள். கேணிக்குள் இறங்கி நீராடுவதில்லை. வெளியே நின்று வாளிகளால் நீரெடுத்து நீராடுவர். விசேடதினங்களில் பெரும் கூட்டமாய் மக்கள் நீராடுவதைக் காணலாம்.

பிள்ளையார் கோவிலின் பின்புறமிருக்கும் கேணி

யாழ்பாணத்தில் உள்ள கோவில்களில் எல்லாம் சந்தனமே பிரசாதமாக வழங்கப்படுகையில் இங்கு மாத்திரமே வைஷ்ணவ பாரம்பரியப்படி நாமம் வழங்கப்படுகிறது. இவ்விடத்தின் மேற்குப் புறமாகக் கிடைக்கும் வெண்களியே நாமமாக வழங்கப்படுகிறது. 

தேர் தரித்து நிற்கும் 'தேர் முட்டி'. பின்னணியில் ஒரு மடம்

திருவிழாக்கள் மிகவும் பிரசித்தமானவை.


விழாக் காலத்தின் பின் சுவாமி கேணியில் நீராடுவார். கேணித் தீர்த்தம் என்பார்கள். கோவிலின் பின்புறமாக பிரதான வீதிக்கு அருகில் இக்கேணி அமைந்துள்ளது.

மிகவும் பிரசித்தமானது தேர்த் திருவிழா, மற்றும் கடல் தீர்த்தத் திருவிழாக்களாகும்.


கற்கோவளத்தை அண்டிய சமுத்திரத்தில் கடற் தீர்த்தம் நடைபெறும். இவ்விடத்தை திருபாற்கடல் என அழைப்பார்கள். அந்தி மாலையில் தீர்த்தத் திருவிழா நடைபெறும். அன்று குடா நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெரும் திரளான மக்கள் கடல் தீர்த்தத்தைக் காணச் செல்வார்கள். வேறெங்கும் காணக் கிடைக்காத அரிய காட்சி இதுவாகும்.

லொரி, டிரக்டர், சைக்கிள்,வாகனங்கள் எனப் பலவற்றிலும் மக்கள் வெள்ளமாகத் திரண்டு வருவார்கள். மண்மேடுகள் நிறைந்திருக்கும் இடத்தை கால்நடையாகத் தாண்டிச்சென்று கடற்கரையை அடையலாம். பெரும் அலைகளுடன் மோதும் கடலில் சுவாமியை வள்ளத்தில் ஏற்றிச் சென்று நீராட்டுவார்கள். மக்கள் கடலில் தீர்த்தம் ஆடுவர்.


இது மிகவும் சிறப்பான காட்சியாக இருக்கும்.


இக்கோவில் முதன் முதலில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இரண்டாம் நூற்றாண்டில் இங்கு ஒரு அரசு இருந்ததாகவும் அதன் அரசனாக அழகிரி என்பவன் இருந்ததாகவும் சில ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன. புராதன நகருக்குரிய பல தொல்பொருட் சான்றுகள் கிடைத்ததாகவும் அறிய முடிகிறது. யாழ் இராச்சியத்தின் தலைநகரான சிங்கை நகர் இதுவென பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

சரித்திர ஆதாரங்களுக்கு:-

Vallipuram வல்லிபுரம் விக்கிபீடியா

இத்தலத்தை பற்றிய வரலாற்றை தட்சிண கைலாச புராணம், தட்சிண கைலாச மான்மியம் என்பவற்றிலும் காணலாம் என்றும் அறிய முடிகிறது. சிங்கள மொழியில் 14ம் நூற்றாண்டில் எழுந்த தூது இலக்கியங்களிலும் (சந்தேச காவியங்கள்) இத்தலமகிமை பேசப்படுகின்றதாம்.

சிறிய வயதில் கோயிலுக்குச் சென்று வரும்போது தாமரைப்பூக்கள்,இலைகள் வாங்கிவருவோம். இங்குள்ள கடைகளில்  தாமரை இலையில் உணவு வழங்குவார்கள். கோவிலை சுற்றி பல அன்னதான மடங்கள் உள்ளன. இங்கு ஆவணி ஞாயிறுகளில் நேர்த்திக் கடனாக பொங்கல் செய்து நாகதம்பிரானுக்கு படையலிட்டு அடியார்களுக்கு வழங்குவர்.

இது வல்லிபுர குறிச்சியில் உள்ள தாமரைக்குளம். பிள்ளையார் கோவிலுக்கும் அப்பால் தோட்ட வெளிகளிடையே இந்தப் பாரிய தாமரைக் குளம் அமைந்திருக்கிறது.


கடற் தீர்த்தத்திற்கு சுவாமி செல்லும் வழியெல்லாம் மணற் திட்டிகள் பரந்திருக்கும். கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய மணற் கடற்கரையான  இது பிரபல்யமாகாமல் இருப்பதற்கு நாட்டின் நிலவி வந்த சூழலும், தமிழ் பிரதேசமென்ற அக்கறையீனமுமே காரணம் எனலாம்.


கோயிலுக்கு செல்லும்வழியில் காண்பதற்கு அரிய கிளைகளை உடைய பனை மிகவும் அழகுடன் விரிந்து நிற்கிறது. பிடிபட்டார் உங்கள் கண்களுக்கு விருந்தாக .


மேலும் சில புகழ் பெற்ற தலங்கள் பற்றி....



:- மாதேவி -:

14 comments:

  1. கோயிலுக்கு செல்லும்வழியில் காண்பதற்கு அரிய கிளைகளை உடைய பனை மிகவும் அழகுடன் விரிந்து நிற்கிறது. பிடிபட்டார் உங்கள் கண்களுக்கு விருந்தாக .//
    விருந்து ... nice..

    ReplyDelete
  2. நல்ல கோவில்.
    அழகான சுற்றுப் புறச் சூழல்கள்.
    உங்களது பதிவு அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இலங்கையில் அமைந்துள்ள இந்துக்கோவில்களை கண்டு களிக்க முடிந்தது. நல்லதொரு பதிவு.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. மிக்க மகிழ்ச்சி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  5. வாருங்கள் Rathnavel . உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி வை.கோபாலகிருஷ்ணன்.

    தென் இந்தியக்கோயில்களைப் போல பெரியவை அல்ல.

    இவை இப்பொழுதுதான் வளர்ந்து வருகின்றன.

    ReplyDelete
  7. கடற் தீர்த்தத்திற்கு சுவாமி செல்லும் வழியெல்லாம் மணற் திட்டிகள் பரந்திருக்கும். கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய மணற் கடற்கரையான இது பிரபல்யமாகாமல் இருப்பதற்கு நாட்டின் நிலவி வந்த சூழலும், தமிழ் பிரதேசமென்ற அக்கறையீனமுமே காரணம் எனலாம்.

    மனம் லயித்த பதிவில் மனம் வலித்த இடமிது
    கிளையுள்ள பனை ஆச்சர்யம்
    நன்றி உங்களின் நல்ல பகிர்விற்கு

    ReplyDelete
  8. ஆன்மீகப்பழமே வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அருமையான படங்களுடன் பதிவு. எங்கள் கிராமக் கோவிலைப் பார்த்த உணர்வு. அங்கே தாமரைக் குளம் உண்டு. அந்த இலையில் தான் பிரசாதம் தருவார்கள்.. மிகவும் ரசித்துப் படித்தேன்.. நான் பார்க்க விரும்புகிற பகுதிகளை எப்போது வந்து பார்க்கப் போகிறேனோ..

    ReplyDelete
  10. ரம்ய-மான பகிர்வு மாதேவி.

    அதிசய பனை. பகிர்ந்ததற்கு நன்றி.
    (எங்கே ஆளையே காணேல்ல.)

    ReplyDelete
  11. வருகைதந்து கருத்துக்கள் கூறிய

    A.R.ராஜகோபாலன்
    சி.பி.செந்தில்குமார்
    ரிஷபன்
    சத்ரியன்

    உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  12. மகிழ்கின்றேன் இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  13. அறிவுதெரிந்து, 81 ல் கடற்தீர்த்தம் ,நெல்லியடி நண்பர்கள் கூட்டிச் சென்றார்கள் ,அந்த மண்குவியல்களூடு நீளப்பாவாடை, சேலை கட்டிய இளம் பெண்கள் சாரி சாரியாக தாண்டித் செல்வது அந்த வயதில் கண்கொள்ளாக் காட்சி.சாமி குப்பிடப் போனோம் என்று சொல்ல இப்போ மனம் இடம் தரவில்லை.(இலங்கையில் நீளப்பாவாடை, சேலை கோவிலுக்கு மாத்திரமே பெண்கள் அணிவது வழக்கம்)
    அந்த வயதில் அவை ஆனந்தம் தருபவை. இவை இளைஞர்களுக்காக உருவான விழாக்களோ? என இப்போ நான் சிந்திக்கிறேன்.
    இங்கே தான் மகாத்மா காந்தி தரிசித்தவர் என அறிந்தேன்.
    படங்களுக்கு மிக்க நன்றி!; தங்கள் பதிவுகளுக்கு படமே கனம் தருகிறது.

    நீங்கள் இட்டுள்ள கிளைப் பனை, நாம் பனம் பழம், பனையொலை எடுக்கும் பனை வர்க்கம் அல்ல!
    இது அன்று மலேசியா சென்றவர்கள் கொண்டுவந்து இட்ட "பாம்-PALM" இனம்.
    இவை கிளைவிடுவது இயல்பானது.மலேசியா, இந்தோனேசிய காடுகளில் அதிகம்.
    ஆனால் இலங்கையில் நாம் பனம்பழம் பெறும் பனைமரம் கிளையுடன் இருந்துள்ளது., மண்கும்பான், நெடுந்தீவில் இருந்ததாகக் கேள்விப்பட்டுள்ளேன்.
    என் நெடுந்தீவு நண்பன் 64 ல் அப்பனையின் படம் காட்டினார், அதற்கு 4 கிளை, ஒரே அடியில் சுமார் 20 அடிக்கு மேல் நான்கு வட்டுக்களுடன் பிரிந்து சென்று காய்களுடன் இருந்தது.அந்த நான்கு வட்டுக்களும் நீளத்தில் சிறிது வேறுபாடு இருந்தது.
    ஒரு தகவல்... புத்தளம் சென்றால்...கிளைத் தென்னை பற்றி விசாரிக்கவும். அங்கு சுமார் 12 வட்டுக்களுடன் ஒரு செவ்விளநீர்த் தென்னைமரம், ஒரு இஸ்லாமிய அன்பர் தோட்டத்தில் உண்டு.என்னிடம் அதன் படம் உண்டு. 12 வட்டும் காய்த்துக் குலுங்குகிறது.

    ReplyDelete