Thursday, March 17, 2011

விடுதலை கொடுத்த தலங்கள் விடுதலை பெற்றன

சோழநாட்டு இளவரசி மாருதப்புர வீரவல்லி குன்ம நோய் தாக்கப்பட்டு குதிரைமுகம் உடையவளானாள். அவளுக்கு மருந்துகள் கொடுத்தும் நோய் குணமடையவில்லை. இங்கு வந்து இறைவனை வழிபட்டு நீராடி குதிரைமுகம் நீங்கி அழகிய பெண்ணாகினாள் என தல வரலாறு கூறுகின்றது.

எங்கள் பயணத்தில் நாங்கள் அடுத்து சென்றது மிகவும் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற தலங்கள் இரண்டில் இதுவும் ஒன்றாகும்.மாவிட்டபுரம் கீரிமலைக்கு அண்மையில் அமைந்துள்ள இடம். வடக்கு எல்லையில் காங்கேசன்துறையும் தெற்கே தெல்லிப்பளையும் அமைந்துள்ளன. யாழ் காங்கேசன் துறை வீதியில் ஒன்பது மைல் தொலைவில் மாவிட்டபுரம் உள்ளது. தொன்மையான ஆலயம் இது.

மாருதப்புரவல்லி கந்தக் கடவுளுக்கு அமைத்த ஆலயம் மாவிட்டபுரம் என அழைக்கப்படுகிறது. அதாவது குதிரை முகம் நீங்கப் பெற்ற இடம். சிதம்பரத்திலிருந்து சிலை செய்து கொண்டுவரப் பட்டு பிரதிட்சை செய்யப்பட்டது என்கிறார்கள். 

இலங்கை ஆலயங்களிலிருந்த தேர்களுள் பெரிய தேர் இங்கு இருந்ததாகச் சொல்கிறார்கள். கோயில் கருங்கற் சிற்பவேலைப்பாடுகளுடன் கட்டப் பட்டுள்ளது. உட்பிரகாரங்களில் அற்புதமான சித்திரங்கள், தூண்கள்,சுவர்கள் காணப்படுகின்றன. மூன்று வீதிகளை உடையது.


போர்த்துக்கேயர் படையெடுத்தபோது கந்தன் சிலையை அவ்வூர் மக்கள் கிணற்றுள் மறைத்து வைத்திருந்தார்கள். அதன்பின் ஆலயம் புணரமைக்கப் பட்டதாகத் தெரிகிறது. கந்தன் உருவத்துடன் வேலும் வைத்து வழிபடுகிறார்கள்.

பழைய காலங்களில் திருவிழாவிற்கு மாட்டுவண்டி கட்டிச் சென்று வந்திருக்கிறார்கள் எம் முன்னோர்கள். எனது பாட்டி தான் மூன்று நாட்கள் அங்கு தங்கி நின்று சப்பறம், தேர், தீர்த்தம் பார்த்து வந்ததாகக் முன்பு கூறியிருக்கிறார். நாங்கள் சென்ற நேரம் மதியம் என்பதால் உள்ளே சென்று படங்கள் எடுக்கமுடியவில்லை.

கீரிமலை நகுலேஸ்வரம் இதுவும் மிகவும் தொன்மை வாய்ந்த சிவத்தலமாகும். பாடல்பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்று. போரினால் மக்கள் செல்லமுடியாது பல வருடங்களாக மூடப்பட்டுக் கிடந்தது. பத்தொன்பது வருடங்களின் பின்பு 2009 இறுதியில் திறந்துவிடப்பட்டது. கோயில் புனரமைக்கப் பட்டுவருகிறது.


கோயிலை அண்டி பழைய மடங்களும் இருக்கின்றன. 

கேணிக்கு முன்பாக  பிள்ளையாருக்கு சிறிய கோவில் உள்ளது. கேணியில் நீராடிய பின்னர் பிள்ளையாருக்கு முதலில் தோப்புக் கரணம் போட்டு வணங்கிவிட்டே பிரதான ஆலயத்திற்குச் செல்வது மரபு.


கீரிமலைக் கேணி இங்குள்ளது. கடல் மட்டத்திலிருந்து நூறுஅடி உயரமான இடத்தில் அமைந்துள்ளது. கடலுடன் இணைக்கப்பட்ட கேணி அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.


ஆண்கள் கடலுடன் அண்டிய கேணியில் நீராடி மகிழலாம் கடல் நீர் உள்ளே வந்து செல்லும். பெண்களுக்கு தனியாக மறைவான இடத்தில் நீராட வசதி இருக்கிறது.


இப்பொழுது கடலுக்குப் பக்கத்தே புதிய மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
புண்ணிய தீர்த்தமாகக் கொண்டு கீரிமலையில் பிதிர்காரியங்கள்  நடத்துவார்கள்.

ஆடிஅமாவாசை பிரசித்தமான நாள். அன்று கடலில் தீர்த்தம் ஆடி பிதிர்காரியங்கள் சிறப்பாக செய்வார்கள். நெருங்க முடியாதபடி சனக்கூட்டம் அலை மோதும்.

மூர்த்தி, தலம்,தீர்த்தம் மூன்றும் கைவரப்பெற்று மிளிர்கிறது. கபாலிகர் பஞ்ச கௌமார மதப்பிரிவினர் இங்கு வாழ்ந்ததற்கான தடயங்களும் கிடைத்திருக்கின்றன என்கிறார்கள்.

ஆதிகாலத்தில் நகுலேஸ்வரம் ‘திருத்தம்பேஸ்வரம்’ என அழைக்கப்பட்டது. யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூலில் விஜயன் ஆட்சியில் பாதுகாப்பிற்காக நான்கு பக்கமும் சிவாலயங்களை அமைத்தான் என்கிறது. ஆனால் விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முதலே இவ்வாலயம் இருந்ததாக புராணங்கள் கூறுவதாகச் சொல்கிறார்கள். முன்பிருந்த ஆலயத்தைப் புனரமைத்திருக்கலாம் என்கிறார்கள்.

பஞ்ச பாண்டவர்களுள் அர்ச்சுனன் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டு நகுலேஸ்வரத்துக்கு வந்ததாக மகாபாரதக் குறிப்புக்கூறுவதாக எடுத்துக் காட்டுகிறார்கள்.


நகுலமுனி சாபம் காரணமாகப் பெற்ற கீரிமுகத்தை நீக்குவதற்காக இந்கு வந்து தங்கியிருந்து புனிததீத்தத்தில் நீராடிகுறை நீக்கப் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. இதனால்தான் கீரிமலை என்ற பெயர் வழங்கப்பட்டது.

நகுலேஸ்வரத்தின் மிகப்பழைய கோயில் கடலில் அமிழ்ந்துவிட்டது. பின்பு இரண்டாவது கோயில் போர்த்துக்கீசப் படையெடுப்பில் அழிக்கப்பட்டது.


அதன் பின் கட்டிய மூன்றாவது கோயில்தான் இது என்ற கருத்தும் இருக்கிறது.

நாங்கள் சென்று பார்த்தபோது கீரிமலை தீர்த்தக் கேணிக்கு அருகே மிகவும் பழமையான கோயில் ஒன்று  இடிந்துபோய் காணப்படுகிறது.

குதிரை முகத்தையுடைய சிலைகளும் இருக்கின்றன. இது மாருதப்புரவீரவல்லியை நினைவுபடுத்துவதாக இருக்கலாம்.

குடாநாட்டுமக்கள் மிகவும் விரும்பிச் சென்று தரிசிக்கும் தலம்.


இப்பொழுது ஜாதி மத இன பேதமின்றி நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்து தர்சித்துச் செல்வதைப் பார்க்கக் கூடியதாக இருந்தது.

குதிரை முகத்திலிருந்தும், கீரி முகத்திலிருந்தும் அடியார்களுக்கு விடுதலை கொடுத்த தலங்கள் இப்பொழுது விடுதலை பெற்று தரிசிக்கக்  கூடியதாக இருப்பது அனைவரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

மாதேவி
0.0.0.0.0.0

7 comments:

 1. கூற்றாயினவாறு விளக்ககளீர்.. கொடுமை பல செய்தன நான் அறியேன்.. ஏற்றாய் அடிக்கே.. இரவும் பகலும்..

  ReplyDelete
 2. ஆன்மீகத்தில் பயணக்கட்டுரை..? அழகு

  ReplyDelete
 3. //பழைய காலங்களில் திருவிழாவிற்கு மாட்டுவண்டி கட்டிச் சென்று வந்திருக்கிறார்கள் எம் முன்னோர்கள். எனது பாட்டி தான் மூன்று நாட்கள் அங்கு தங்கி நின்று சப்பறம், தேர், தீர்த்தம் பார்த்து வந்ததாகக் முன்பு கூறியிருக்கிறார்//

  நாங்களும் இலங்கை வந்து தலங்கள் தரிசித்து இலங்கை கலைப்பொருளாய் மாட்டு வண்டி வாங்கி வந்தோம்.

  உங்களை நினைத்துக்கொண்டே இருந்தேன்.

  10ம் தேதியிலிருந்து 16ம் தேதி வரை இருந்தோம். திருகேதிஸ்வரம், திருகோணமலை என்ற இரண்டு பாடல் பெற்ற தலயாத்திரைக்காக வந்தோம்.
  மாத்தலை முத்துமாரி அம்மன், பொன்ன்ம்பலேஸ்வரர் கோவில்,(இந்த கோவிலில் பஞ்சமூர்த்தி புறப்பாடு திருவிழா பார்த்தோம்) கண்டி, கதிர்காமம், மாணிக்க விநாயகர் கோவில், சின்ன கதிர்காமம் அனுராதபுரம் ஆகிய கோவில்கள் போனோம். நீங்கள் சொல்வது போல் ரம்யமாய் இருந்த்தது ஊர்.

  ReplyDelete
 4. வாருங்கள் சி.பி.செந்தில்குமார்.

  தனித்தனியே இடுகைகள் இட்டதற்கு நன்றி.


  நான் அண்மையில் சென்ற எங்கள் ஊர் கோயில்கள் பற்றி அறிவதற்காகத் தந்ததுதான் இது.

  இந்தியாவைப்போன்று பெரிய... பிரமாண்டகோயில்கள் இங்கு இல்லை.

  ReplyDelete
 5. கருத்துக்கு நன்றி Rathnavel.

  ReplyDelete
 6. வாருங்கள் கோமதி அரசு.

  எங்கள் நாட்டுக்கு வந்து பிரசித்தி பெற்ற தலங்களை வணங்கிச் சென்றுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது.

  மாட்டுவண்டி எங்கள் நாட்டை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.

  உங்கள் அனுபவங்களையும் பதிவாகத் தாருங்கள்.

  கதிர்காமம், திருக்கேதீஸ்வரம், அனுராதபுரம்,மாத்தளை அண்மையில் செல்லவில்லை.

  ReplyDelete