Thursday, June 30, 2011

தொல்லியல் எச்சமாகுமா யாழ் கோட்டை ?

யாழ்ப்பாண வரலாற்றின் சின்னமாக விளங்குகிறது யாழ் கோட்டை. யாழ் கடல் நீரேரியின் கரையில் இது அமைந்துள்ளது. ஆறு நூற்றாண்டுகளைக் கடந்துவிட்ட நீள் வரலாறு அதில் அடங்குகிறது.

கடந்த தூரம் நீளம்

ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட கோட்டை பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் மிகவும் பலமானதாகவும். அற்புதமானதாகவும் கட்டப்பட்டிருந்தது. கீழைத்தேச நாடுகளிலுள்ள கோட்டைகளில் யாழ்கோட்டை பலமானதாகவும், சிறந்ததாகவும் இருப்பதாக கட்டிடக் கலை நிபுணர்கள் எடுத்துரைத்திருக்கிறார்கள்.




முதலில் முஸ்லீம்களின் சிறிய பண்டகசாலையாக இக்கோட்டை இருந்ததாகவும் பின்னர் போர்த்துக்கேயர் அப் பண்டகசாலையை நாற்சதுரக் கோட்டையாக விரிவுபடுத்தியதாகவும் சில செய்திகள் கூறுகின்றன.

மாறாக சோழர் காலத்து மண்கோட்டையானது போர்த்துக்கேயரால் கற்கோட்டையாக  நவீனப் படுத்தப்பட்டதாகவும் வேறு சிலர் கூறுகின்றனர்.

போர்த்துக்கேயரின் யாழ்    கோட்டை (நன்றி தினகரன்)

1625ம் ஆண்டு போத்துக்கேயரால் கட்டப்பட்டது. 1680ல் ஒல்லாந்தரால் ஐங்கோண புதுவடிவில் கட்டப்பட்டது.


1680ல் ஒல்லாந்தரால்...

பின் 1795ல் ஆங்கிலேயர் வசம் வந்தது.


யாழ்ப்பாண கோட்டையின்     அமைப்பு (நன்றி தினகரன்)

 5 கொத்தளங்களைக் கொண்டதாக இருந்தது. கடல்நீர் ஏரியை அண்டி இரு கொத்தளங்களும், நிலத்தை அண்டி 2 கொத்தளங்களும் அமைந்திருந்தன. இந்தக் கொத்தளங்கள் உயர்ந்த மதில்களால் இணைக்கப்பட்டிருந்தன.

அடிப்பகுதி 40 அடி, உச்சியில் 20அடி. சுற்றிவர அகழி

கோட்டை மதில் அடிப் பகுதியில் 40அடி அகலமானதாகவும், உச்சியில் 20 அடி அகலமாகவும் அமைக்கப்பட்டிருந்தது. மதிலின் வெளிப்பக்கமாக முருங்கைக் கற்களால் அமைக்கப்ட்ட 4 அடிக் கட்டமைப்பு இருந்தது. உட்கோட்டையைச் சுற்றி நீராழி ஓடிக்கொண்டிருக்கும். கோட்டையைச் சுற்றியிருக்கும் 132 அடி அகலமான அகழியிது.

முதல் அரண்

 கோட்டை வாயில் பலம்வாய்ந்து இருந்ததாகத் தெரிகிறது. நீராழிக்கு வெளியேயும் கோட்டை மதில், பெரிய வாயில் இருந்ததற்கான அடையாளங்கள் இப்பொழுதும் இருக்கின்றன.

நான்கு தாழ் கொத்தளங்கள் வெளி மதிற்சுவரோடு இருந்ததாகவும், 19 காவல் அரண்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும், பத்தடிக்கு ஒரு பீரங்கி இருந்ததாகவும் வரலாறுகள் சொல்கின்றன. இராணுவ பாதுகாப்பிற்கும், நிர்வாக நடவடிக்கைகளுக்கும் கோட்டை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கோட்டை கதவைத் தாங்க பலமாக கொளுக்கி

கோட்டையின் வெளி வாயிற் கதவு 6 அங்குலத்திற்கு மேல் தடிப்பானதாக இருந்ததாகவும் போர் யானைகள் முட்டி உடைக்காதிருக்க கூடான ஈட்டிகள அதில் பொருத்தப்பட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

யாழ் கோட்டையிலிருந்த    ஒல்லாந்தத் தேவாலயம் (நன்றி தினகரன்)

கோட்டையின் தென் கிழக்குப் பகுதியில் சதுரங்கத் தேவாலயம் முன்பு இருந்தது. இப்பொழுது அழிக்கப்பட்டுவிட்டது.

கோட்டை இரண்டு வாயில்களைக் கொண்டிருந்தது. ஒன்று நீர்ப்பாதை. மற்றையது நிலப்பாதை. நீர்ப்பாதை கடலோரமாக அமைந்திருந்தது. நில வழிப் பாதையில்தான் பிரதான வாயிற்புறம் அமைந்திருந்தது. இது தொங்கு பாலத்தினால் தரையுடன் இணைக்கப்பட்டிருந்தது.

ஆங்கிலேயர் காலக் கோட்டைக்குள் கவர்னர் பங்களா, ராணி மாளிகை, சிறைச்சாலை என்பன இருந்தன. பிற்காலத்தில் கைதிகள் விசாரிக்கப்படும் இடமாக ராணி மாளிகை மாறியது.

எமக்குத் தெரிய சிறைக் கைதிகளை அடைத்து வைக்கும் இடமாக இருந்தது. பள்ளிச் சுற்றுலாவில் சென்று பார்த்திருக்கிறோம்.

பயமுறுத்தும் தூக்குமேடைக் கட்டிடம்

தூக்கில் இடுவதற்கான தூக்குமேடைக் கட்டிடம் இன்றும் காணக் கூடியதாக இருக்கிறது.

கோட்டையை அண்டிய பகுதியில் 600- 700 வருடங்களுக்கு முந்தியதாகக் கருதப்படும் ஈமச் சின்னம் மனிதர்கள் முறையான விதத்தில் அடக்கம் செய்யப்பட்ட இடம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது விஞ்ஞான ஆய்விற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.




பல மட்பாண்டங்கள் தாழிகள் உட்பட பெருமளவு பொருட்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இவை 12ம் 13ம் நூற்றாண்டாம் காலத்தைச் சேர்ந்த சீன மட்பாண்டப் பொருட்கள் எனச் சொல்கிறார்கள்.

யாழ். பல்கலைக்கழக தொல்லியற்துறைத் தலைவர் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் தலைமையில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.




யாழ்ப்பாணக் கோட்டையின் அகழ்வாராய்ச்சியின் போது ஒல்லாந்தர் காலத்துக்கு முற்பட்ட தொல்லியற் சின்னங்கள் மீட்கப்பட்டதாக இவ்வருட ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. பாண்டியர், பொலநறுவை மன்னர் கால நாணயங்களும் கிடைத்ததாகத் தெரிகிறது. புராதனகால சுக்கா, நாணயங்கள், மட்பாண்ட ஓடுகளும் கிடைத்ததாகப் பத்திரிகைகள் தெரிவித்திருந்தன.

தொல்லியல் எச்சமாக மறைந்து போன எமது  பாரம்பரியப் பொருட்களில் விரைவில் யாழ்கோட்டையையும் சேர்ந்து கொள்ளுமா?

Friday, May 27, 2011

யாழ் இராச்சிய புராதன தலைநகரில் ஆழ்வார் ஆலயம்

யாழ் வடமராட்சி பகுதியில் உள்ள துன்னாலை கிராமத்திற்கு அண்மையில் வல்லிபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ள ஆலயம் இது.  யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ள ஒரு ஊர்தான் வல்லிபுரம் பகுதியாகும்.


வல்லி நாச்சியார் என்றொரு பெண் இருந்தாளாம். அவள் கற்கோளம் கடலில் படகில் ஏறி கடலுள் சென்ற போது மீன் ஒன்று துள்ளி விழுந்து அவள் மடியில் விழுந்ததாம். மீனானது சங்கு சக்ரம் உடையதாகக் காட்சி அளித்தது. அம் மீன் சிறீ சக்கரம் ஒன்றை இவளுக்கு அளித்து மறைந்தது. 

அச்சக்கர வடிவத்தை ஆலயத்தில் வைத்து வழிபட்டு வந்தாள். அவ்வாலயமே வல்லிபுர ஆழ்வார் என அழைக்கப்படுகிறது  எனவும் நம்புகிறார்கள்.

நன்றி vallipuram.wordpress.com

மூலஸ்தானத்தில் சிறீசக்கரம் வழிபடப்பட்டு வருகிறது. இப்பொழுது மிகவும் பெரிய ஆலயமாகக் கட்டப்பட்டுள்ளது. மூன்று வீதிகள் அமைந்துள்ள பாரிய ஆலயமாகும். 

வாயிற் கோபுரமும் பெரியது. ஏழுநிலைகளைக் கொண்ட இந்த ராஜகோபுரம் புராணக் கதைகளைக் கூறும் சிற்பங்களுடன் எழுப்பப் பட்டுள்ளது.



வல்லிபுர ஆழ்வாரை வழிபடமுன் வீதிக்கு எதிர்ப்புறம் அமைந்திருக்கும் பிள்ளையார் கோவிலைத் தர்சித்துச் செல்வதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். 

பிள்ளையார் கோவிலின் முன் பகுதியில் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறார் இந்தக் குட்டிப் பிள்ளையார். 

பிள்ளையாருக்குக் காவல் இருக்கிறாரா அனுமார்?


பிள்ளையார் கோவில் முற்புறம்


பிள்ளையார் கோயிலின் பின் புறமாக கேணிஇருக்கிறது. இதில் நீராடி கோயிலுக்குச் செல்வார்கள். கேணிக்குள் இறங்கி நீராடுவதில்லை. வெளியே நின்று வாளிகளால் நீரெடுத்து நீராடுவர். விசேடதினங்களில் பெரும் கூட்டமாய் மக்கள் நீராடுவதைக் காணலாம்.

பிள்ளையார் கோவிலின் பின்புறமிருக்கும் கேணி

யாழ்பாணத்தில் உள்ள கோவில்களில் எல்லாம் சந்தனமே பிரசாதமாக வழங்கப்படுகையில் இங்கு மாத்திரமே வைஷ்ணவ பாரம்பரியப்படி நாமம் வழங்கப்படுகிறது. இவ்விடத்தின் மேற்குப் புறமாகக் கிடைக்கும் வெண்களியே நாமமாக வழங்கப்படுகிறது. 

தேர் தரித்து நிற்கும் 'தேர் முட்டி'. பின்னணியில் ஒரு மடம்

திருவிழாக்கள் மிகவும் பிரசித்தமானவை.


விழாக் காலத்தின் பின் சுவாமி கேணியில் நீராடுவார். கேணித் தீர்த்தம் என்பார்கள். கோவிலின் பின்புறமாக பிரதான வீதிக்கு அருகில் இக்கேணி அமைந்துள்ளது.

மிகவும் பிரசித்தமானது தேர்த் திருவிழா, மற்றும் கடல் தீர்த்தத் திருவிழாக்களாகும்.


கற்கோவளத்தை அண்டிய சமுத்திரத்தில் கடற் தீர்த்தம் நடைபெறும். இவ்விடத்தை திருபாற்கடல் என அழைப்பார்கள். அந்தி மாலையில் தீர்த்தத் திருவிழா நடைபெறும். அன்று குடா நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெரும் திரளான மக்கள் கடல் தீர்த்தத்தைக் காணச் செல்வார்கள். வேறெங்கும் காணக் கிடைக்காத அரிய காட்சி இதுவாகும்.

லொரி, டிரக்டர், சைக்கிள்,வாகனங்கள் எனப் பலவற்றிலும் மக்கள் வெள்ளமாகத் திரண்டு வருவார்கள். மண்மேடுகள் நிறைந்திருக்கும் இடத்தை கால்நடையாகத் தாண்டிச்சென்று கடற்கரையை அடையலாம். பெரும் அலைகளுடன் மோதும் கடலில் சுவாமியை வள்ளத்தில் ஏற்றிச் சென்று நீராட்டுவார்கள். மக்கள் கடலில் தீர்த்தம் ஆடுவர்.


இது மிகவும் சிறப்பான காட்சியாக இருக்கும்.


இக்கோவில் முதன் முதலில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இரண்டாம் நூற்றாண்டில் இங்கு ஒரு அரசு இருந்ததாகவும் அதன் அரசனாக அழகிரி என்பவன் இருந்ததாகவும் சில ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன. புராதன நகருக்குரிய பல தொல்பொருட் சான்றுகள் கிடைத்ததாகவும் அறிய முடிகிறது. யாழ் இராச்சியத்தின் தலைநகரான சிங்கை நகர் இதுவென பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

சரித்திர ஆதாரங்களுக்கு:-

Vallipuram வல்லிபுரம் விக்கிபீடியா

இத்தலத்தை பற்றிய வரலாற்றை தட்சிண கைலாச புராணம், தட்சிண கைலாச மான்மியம் என்பவற்றிலும் காணலாம் என்றும் அறிய முடிகிறது. சிங்கள மொழியில் 14ம் நூற்றாண்டில் எழுந்த தூது இலக்கியங்களிலும் (சந்தேச காவியங்கள்) இத்தலமகிமை பேசப்படுகின்றதாம்.

சிறிய வயதில் கோயிலுக்குச் சென்று வரும்போது தாமரைப்பூக்கள்,இலைகள் வாங்கிவருவோம். இங்குள்ள கடைகளில்  தாமரை இலையில் உணவு வழங்குவார்கள். கோவிலை சுற்றி பல அன்னதான மடங்கள் உள்ளன. இங்கு ஆவணி ஞாயிறுகளில் நேர்த்திக் கடனாக பொங்கல் செய்து நாகதம்பிரானுக்கு படையலிட்டு அடியார்களுக்கு வழங்குவர்.

இது வல்லிபுர குறிச்சியில் உள்ள தாமரைக்குளம். பிள்ளையார் கோவிலுக்கும் அப்பால் தோட்ட வெளிகளிடையே இந்தப் பாரிய தாமரைக் குளம் அமைந்திருக்கிறது.


கடற் தீர்த்தத்திற்கு சுவாமி செல்லும் வழியெல்லாம் மணற் திட்டிகள் பரந்திருக்கும். கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய மணற் கடற்கரையான  இது பிரபல்யமாகாமல் இருப்பதற்கு நாட்டின் நிலவி வந்த சூழலும், தமிழ் பிரதேசமென்ற அக்கறையீனமுமே காரணம் எனலாம்.


கோயிலுக்கு செல்லும்வழியில் காண்பதற்கு அரிய கிளைகளை உடைய பனை மிகவும் அழகுடன் விரிந்து நிற்கிறது. பிடிபட்டார் உங்கள் கண்களுக்கு விருந்தாக .


மேலும் சில புகழ் பெற்ற தலங்கள் பற்றி....



:- மாதேவி -:

Wednesday, April 6, 2011

நிமிர்ந்தெழும் கடலலையருகே நிறையழகாய் மணற்காடு

யாழ் மாவட்டத்தின் வடமராட்சிப் பகுதியில் கிழக்குக் கரையோரப் பிரதேசத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். பருத்தித்துறையிலிருந்து புலோலி, வல்லிபுரம், அம்பன், குடத்தனை தாண்டிச் செல்வோம் வாறீர்களா?

கால் இல்லை தாவுவான், வாய் இல்லை கத்துவான் அது என்ன ?
அவனிடம்தான் போகின்றோம்.

காடுகள் என்றால் மரம், செடி, கொடிகள் நிறைந்திருக்கும்.
இது மணலாலான காடு. மணற்காடு. கடலோரம் மணல் குவிந்த மணற்காடு கிராமம்.


பனிமலைபோலும் பரந்திருக்கும் வெண்மணல்த் தீவுகள். அதன் முடிவில் பாரிய கடல் ஆர்ப்பரித்து அலை மேலெழுந்து ஓடிவரும் அழகே தனிதான். கடல் என்றாலே பயமும் ஒட்டிக் கொள்கிறது நம் மேல். அழகு என்றால் ஆபத்தும் தானே தேடி வந்துவிடும் போலும்.

அழகிய கடலலைகள் பேரலைகளாகி பல உயிர்களையும் 6 -7 வருடங்களுக்கு முன் காவுகொண்ட இடமும் இதுதான் என்பதை மறக்க முடியுமா…. கடலோரம் சிதைந்து கிடக்கும் கட்டிடங்கள், உடைந்து கிடக்கும் படகுகள், பல சோகக் கதைகள் பேசுகின்றன. எமது நெஞ்சையும் சோகம் பற்றிக் கொள்கிறது நெடிய மூச்சு மேலெழுந்து நிற்கிறது.

சோகத்தைச் சுமந்துகொண்டு வாழும் இவ் மக்களுக்கு வயித்தை நிரப்ப தொழிலும் வேண்டுமல்லவா உயிரைப் பயணம் வைத்து மீண்டும் படகில் ஏறிவிட்டார்கள்.


கடற்தொழிலாளர்களுக்குப் போட்டியாகப் புறப்பட்டுவிட்டார் இவர். மீன்பிடிக்க. படகோட்டி அல்ல. வானப் பரப்பில் சிறகு விரித்துப் பறந்தோடி.


கடற்கரையை நெருங்கும்போதே தூரத்தே  வெண்மணலில் பலவண்ண நிறங்களில் நிரையாய் அடுக்கிய படகுகள் கண்ணுக்கு விருந்தாய் எம்மை வா என அழைக்கின்றன.


கடற்தொழிலாளர்களின் மற்றொரு தொழில் கருவாடு செய்வதாகும். மீன்களை உப்பிட்டு கடும் வெயிலில் காயவைத்துத் தயாரிப்பார்கள். வடபகுதித் தயாரிப்பான இதற்குதென்னிலங்கையில்  நல்ல கிராக்கி.


பல வருடங்களுக்கு முன் சென்றிருந்தோம். பார்க்கும் இடமெல்லாம் பனிமலை போன்றிருந்த மணல் கும்பிகளையும், அருகிருந்த பள்ளங்களையும் வளைத்துச் சென்ற மண்வீதியைக் காணவில்லை. அப்போது வாகனம் செல்வதற்கான தார் வீதி இருக்கவில்லை. ஜீப்பில் மண் கும்பிகளில் ஏறி விழுந்து குடல் குலங்க, கிடங்கில் விழுவோமா என மனங் கலங்க சென்று வந்தோம்.

அவ்வூர் மக்களுக்காக லயன்ஸ் கழகம் சேவை ஒன்று ஏற்படுத்தி இருந்தார்கள் அவர்களுடன் நானும் சென்றிருந்தேன். இங்கிருந்த மண் குவியல்கள் எல்லாம் எங்கே சென்றன.


மக்கள் வீடுகட்ட எடுத்துச்சென்று மறைந்து போயின பல. மீந்திருப்பவை சில. பாதை தவிர்ந்து இருபுறமும் சவுக்கம் காடுகள் வானோங்க நிமிர்ந்து நின்று அழகூட்டுகின்றன இன்றும்.

இப்போது வீதி போடப்பட்டு வாகனத்தில் சுலபமாகச் செல்ல முடிகிறது.

ஆயினும் கடலோரத்தை நெருங்கப் பொடி நடைதான். மண்ணில் கால் புதைத்து சிறிது தூரம் காலாற நடந்து சென்றால் அழகிய வடலிமரங்கள்.



பச்சைக் கம்பளமாகப் படர்ந்து கிடக்கும் அடம்பன் கொடிகள், இராவணண்மீசை, எழுத்தாணிப் பூக்கள், தாழைமரங்கள் என விரிந்து கிடக்கின்றன.


பெருமலையாய்
நிமிர்ந்தெழுந்த
கடல் அலைகள்,
வீச்சடங்கி பரந்தோடி
தரை மேவிக் கால் தழுவும்

தன்கரத்தால் அள்ளிவந்த
சிறு சிப்பிகள் சோகிகள்
கரையோர மணலில்
சுயகோலம் வரைந்ததுபோல
பரந்திருந்து மனம் மலரக்
காத்திருக்கும்.



நாங்கள் சென்றது மதியத்தின் பின். கடற் தொழிலாளர்கள் படகுகளிலும் அருகிலுள்ள மணற் பரப்பிலும் அமர்ந்திருந்து வலைகளைப் பிரித்து சரி செய்து கொண்டிருந்தார்கள். அலையும் அடித்து எழுந்து கரையோரம் ஓடிவருகிறது.


கடலலைகள் படகுகளை தழுவி விழுங்காது காப்பாற்ற அலை எட்டாத தூரத்திற்குத் தள்ளி வருகிறார்கள்

கடலுள் இறங்கிச் செல்ல தடைவிதித்துள்ளார்கள். அதுவும் நன்மைக்கே. சிப்பாய் ஒருத்தர் காவலுக்கு நிற்கிறார்.

”கொழும்பில் இருந்து வருகிறீர்களா” எனக் கேட்டார்.

கணவர் சென்று அவர் மொழியில் பேசி மனங் குளிர்வித்து வந்தார்.

நானும் மகளும் கடற் கரையோரம் காலை நனைத்தபடி செல்கின்றோம்.


அலை அடித்துச் செல்லும்போது சிறு நண்டுகள் கால்கிளப்பி மண்ணுள்ளிருந்து கிளம்பி மீண்டும் மண்ணுள் ஓடிச்சென்று மறைகின்றன.


‘சிறு நண்டு தரை மீதில் படம் ஒன்று கீறும்
சிலவேளை அதைவந்து கடல் கொண்டு போகும்....’

என்ற எமது மூத்த கவிஞர் மஹாகவியின் பாடல் வரிகளில் மனம் நனைய, குளிர் காற்று உடல் தழுவ உளம் குளிர்ந்தோம்.


நண்டு கீறியது. நாம் கீற வேண்டாமா மண்ஓவியம்? கீறினோம்...
கிளிஞ்சல்கள் பொறுக்கினோம்.

அடம்பன் கொடியில் தலைக்கீரிடம், மாலை செய்து மகளிடம் கொடுத்தேன். மகள் போட்டு படம் எடுத்துக் கொண்டாள். மிகவும் அழகாய் வந்தது படம்.

மாலைச்சூரியக் கதிர்கள் கடல்நீரில் பட்டுத் தெறித்து ஒளிவீசி ஜொலித்துக் கொண்டிருந்தன.  நின்றிருந்த அவ்வூர் மக்களிடம் பேசி மகிழ்ந்தோம். கணவருக்குத் தெரிந்த பலர் அங்கிருந்தனர். படகில் ஏறி இருந்து படங்கள் எடுத்துக்கொண்டோம்.

இனிய மாலைப் பொழுதாய் இருந்தபோதும் ஆழ்மனதில் சோகம் நீங்கவில்லை. சுனாமியால் இடம் இழந்த மக்கள் ஓரிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.


நீண்ட காலத்திற்கு முன் மணல் குவியலுள் மறைந்திருந்த பழைமை வாய்ந்த சேர்ச் சுனாமி அலைகளோடு  வெளிவந்து பல கதைகள் கூறிநிற்பதைக் கண்டோம். திரும்பும்போது மனத்தில் மிகுந்த பாரமும் ஏறிக் கொண்டது உண்மைதான்.

உலக நாடுகள் பலவற்றிலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஆழிப் பேரலைகளின் ஆபத்தையும் மக்கள் படும் துன்பங்களையும் நினைவில் கொள்வோம். இன்னல்களால் பலியாகிய மக்களுக்கு அஞ்சலியும் உறவுகளுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வோம்.

மாதேவி

Tuesday, March 22, 2011

உலக தண்ணீர் தினம் 2011. சோகமான புன்னகை

இன்று உலக தண்ணீர் தினம்.  ஐ.நா ‘நோயுள்ள நீர்’ என சென்ற ஆண்டு விடுத்திருந்த அறிக்கையை மீண்டும் நினைவு கொள்வோம்.

இந்த ஆண்டுக்கானது  Water for Cities: Responding to the Urban Challenge.

கோடிக்கணக்கான மக்கள் சுத்தமான நீருக்கு அவதிப்படுகிறார்கள்.

சுத்தமான நீரைப் பெறமுடியாமல் வருடாந்தம் 5 வயதிற்கு உட்பட்ட 18 இலட்சம் சிறுவர்கள் பலியாகுகிறார்கள்.


அசுத்தமான நீரால் ஏற்படும் நோய்களான வயிற்றுப்போக்கு,வாந்திபேதியால் வருடத்துக்கு 22 இலட்சம்பேர்வரை இறப்பதாகக் கூறியுள்ளார்கள். அசுத்தமான நீர் இவ்வாறு மக்களைப் பலியாக்குகிறது.


நீருக்கான நெருக்கடியில் மனித நடவடிக்கைகளும் அடங்கியுள்ளன இவற்றை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாம் கைக்கொண்டு வந்தால் உலகமும் உயிர்களும் வாழும்.



சிரிக்க சிந்திக்க –


ஒருவர் - இன்றைய செய்தி கேட்டீர்களா ?
மற்றவர் - என்ன…. என்ன ?
ஒருவர் - தண்ணிக் கப்பலை பக்கத்து நாட்டுக்காரன் கடத்திக்கொண்டு போட்டான்.
மற்றவர் - இதென்னடா கொடுமை அவன் தண்ணி விற்ற காசில் வல்லரசாகி விடுவானே!!

0.0.0.0.0.

அம்மா – நீண்ட நேரமாய் பாத்ரூமில் நின்று விசில் அடித்துக் குளித்தது போதும் வா வெளியே.
மகன் - நான்  அடிக்கேலை பைப்தான் விசில் அடிக்குது.


அம்மா - !!!

0.0.0.0.0.

நிரூபர் - இந்தத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றதன் ரகசியம் என்ன?
அரசியல்வாதி – நாளொன்றுக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் ஐந்துகுடம் தண்ணி  தருவேன் எனக் கூறியிருந்தேன்.
நிருபர் - !!!


0.0.0.0.0.

பாத்ரூமில்  கணவனின் அலறல் - இன்று காலை ஆருடைய முகத்தில் விளித்தேனோ!
மனைவி – ஏனப்பா
கணவன் - முகம் கழுவ வை…த்…..த..த… ஒருகிளாஸ் தண்ணியை உடை….ச்…சு..ப.;…போட்…டன்.
மனைவி கோபாவேசத்துடன் -  அய்யோ…அய்யோ… இந்த மனுசன் நாசமாகப் போக…..   படித்துப் படித்துச் சொன்னேன்தானே  கவனம் என்று….. துவாயிலை சும்மா முகத்தைத் துடைத்துக்கொண்டு ஆபீசுக்குப் போங்கோ.
கணவன்- !!!

0.0.0.0.0.

Thursday, March 17, 2011

விடுதலை கொடுத்த தலங்கள் விடுதலை பெற்றன

சோழநாட்டு இளவரசி மாருதப்புர வீரவல்லி குன்ம நோய் தாக்கப்பட்டு குதிரைமுகம் உடையவளானாள். அவளுக்கு மருந்துகள் கொடுத்தும் நோய் குணமடையவில்லை. இங்கு வந்து இறைவனை வழிபட்டு நீராடி குதிரைமுகம் நீங்கி அழகிய பெண்ணாகினாள் என தல வரலாறு கூறுகின்றது.

எங்கள் பயணத்தில் நாங்கள் அடுத்து சென்றது மிகவும் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற தலங்கள் இரண்டில் இதுவும் ஒன்றாகும்.



மாவிட்டபுரம் கீரிமலைக்கு அண்மையில் அமைந்துள்ள இடம். வடக்கு எல்லையில் காங்கேசன்துறையும் தெற்கே தெல்லிப்பளையும் அமைந்துள்ளன. யாழ் காங்கேசன் துறை வீதியில் ஒன்பது மைல் தொலைவில் மாவிட்டபுரம் உள்ளது. தொன்மையான ஆலயம் இது.

மாருதப்புரவல்லி கந்தக் கடவுளுக்கு அமைத்த ஆலயம் மாவிட்டபுரம் என அழைக்கப்படுகிறது. அதாவது குதிரை முகம் நீங்கப் பெற்ற இடம். சிதம்பரத்திலிருந்து சிலை செய்து கொண்டுவரப் பட்டு பிரதிட்சை செய்யப்பட்டது என்கிறார்கள். 

இலங்கை ஆலயங்களிலிருந்த தேர்களுள் பெரிய தேர் இங்கு இருந்ததாகச் சொல்கிறார்கள். கோயில் கருங்கற் சிற்பவேலைப்பாடுகளுடன் கட்டப் பட்டுள்ளது. உட்பிரகாரங்களில் அற்புதமான சித்திரங்கள், தூண்கள்,சுவர்கள் காணப்படுகின்றன. மூன்று வீதிகளை உடையது.


போர்த்துக்கேயர் படையெடுத்தபோது கந்தன் சிலையை அவ்வூர் மக்கள் கிணற்றுள் மறைத்து வைத்திருந்தார்கள். அதன்பின் ஆலயம் புணரமைக்கப் பட்டதாகத் தெரிகிறது. கந்தன் உருவத்துடன் வேலும் வைத்து வழிபடுகிறார்கள்.

பழைய காலங்களில் திருவிழாவிற்கு மாட்டுவண்டி கட்டிச் சென்று வந்திருக்கிறார்கள் எம் முன்னோர்கள். எனது பாட்டி தான் மூன்று நாட்கள் அங்கு தங்கி நின்று சப்பறம், தேர், தீர்த்தம் பார்த்து வந்ததாகக் முன்பு கூறியிருக்கிறார். நாங்கள் சென்ற நேரம் மதியம் என்பதால் உள்ளே சென்று படங்கள் எடுக்கமுடியவில்லை.

கீரிமலை நகுலேஸ்வரம் இதுவும் மிகவும் தொன்மை வாய்ந்த சிவத்தலமாகும். பாடல்பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்று. போரினால் மக்கள் செல்லமுடியாது பல வருடங்களாக மூடப்பட்டுக் கிடந்தது. பத்தொன்பது வருடங்களின் பின்பு 2009 இறுதியில் திறந்துவிடப்பட்டது. கோயில் புனரமைக்கப் பட்டுவருகிறது.


கோயிலை அண்டி பழைய மடங்களும் இருக்கின்றன. 

கேணிக்கு முன்பாக  பிள்ளையாருக்கு சிறிய கோவில் உள்ளது. கேணியில் நீராடிய பின்னர் பிள்ளையாருக்கு முதலில் தோப்புக் கரணம் போட்டு வணங்கிவிட்டே பிரதான ஆலயத்திற்குச் செல்வது மரபு.


கீரிமலைக் கேணி இங்குள்ளது. கடல் மட்டத்திலிருந்து நூறுஅடி உயரமான இடத்தில் அமைந்துள்ளது. கடலுடன் இணைக்கப்பட்ட கேணி அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.


ஆண்கள் கடலுடன் அண்டிய கேணியில் நீராடி மகிழலாம் கடல் நீர் உள்ளே வந்து செல்லும். பெண்களுக்கு தனியாக மறைவான இடத்தில் நீராட வசதி இருக்கிறது.


இப்பொழுது கடலுக்குப் பக்கத்தே புதிய மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
புண்ணிய தீர்த்தமாகக் கொண்டு கீரிமலையில் பிதிர்காரியங்கள்  நடத்துவார்கள்.

ஆடிஅமாவாசை பிரசித்தமான நாள். அன்று கடலில் தீர்த்தம் ஆடி பிதிர்காரியங்கள் சிறப்பாக செய்வார்கள். நெருங்க முடியாதபடி சனக்கூட்டம் அலை மோதும்.

மூர்த்தி, தலம்,தீர்த்தம் மூன்றும் கைவரப்பெற்று மிளிர்கிறது. கபாலிகர் பஞ்ச கௌமார மதப்பிரிவினர் இங்கு வாழ்ந்ததற்கான தடயங்களும் கிடைத்திருக்கின்றன என்கிறார்கள்.

ஆதிகாலத்தில் நகுலேஸ்வரம் ‘திருத்தம்பேஸ்வரம்’ என அழைக்கப்பட்டது. யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூலில் விஜயன் ஆட்சியில் பாதுகாப்பிற்காக நான்கு பக்கமும் சிவாலயங்களை அமைத்தான் என்கிறது. ஆனால் விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முதலே இவ்வாலயம் இருந்ததாக புராணங்கள் கூறுவதாகச் சொல்கிறார்கள். முன்பிருந்த ஆலயத்தைப் புனரமைத்திருக்கலாம் என்கிறார்கள்.

பஞ்ச பாண்டவர்களுள் அர்ச்சுனன் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டு நகுலேஸ்வரத்துக்கு வந்ததாக மகாபாரதக் குறிப்புக்கூறுவதாக எடுத்துக் காட்டுகிறார்கள்.


நகுலமுனி சாபம் காரணமாகப் பெற்ற கீரிமுகத்தை நீக்குவதற்காக இந்கு வந்து தங்கியிருந்து புனிததீத்தத்தில் நீராடிகுறை நீக்கப் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. இதனால்தான் கீரிமலை என்ற பெயர் வழங்கப்பட்டது.

நகுலேஸ்வரத்தின் மிகப்பழைய கோயில் கடலில் அமிழ்ந்துவிட்டது. பின்பு இரண்டாவது கோயில் போர்த்துக்கீசப் படையெடுப்பில் அழிக்கப்பட்டது.


அதன் பின் கட்டிய மூன்றாவது கோயில்தான் இது என்ற கருத்தும் இருக்கிறது.

நாங்கள் சென்று பார்த்தபோது கீரிமலை தீர்த்தக் கேணிக்கு அருகே மிகவும் பழமையான கோயில் ஒன்று  இடிந்துபோய் காணப்படுகிறது.

குதிரை முகத்தையுடைய சிலைகளும் இருக்கின்றன. இது மாருதப்புரவீரவல்லியை நினைவுபடுத்துவதாக இருக்கலாம்.

குடாநாட்டுமக்கள் மிகவும் விரும்பிச் சென்று தரிசிக்கும் தலம்.


இப்பொழுது ஜாதி மத இன பேதமின்றி நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்து தர்சித்துச் செல்வதைப் பார்க்கக் கூடியதாக இருந்தது.

குதிரை முகத்திலிருந்தும், கீரி முகத்திலிருந்தும் அடியார்களுக்கு விடுதலை கொடுத்த தலங்கள் இப்பொழுது விடுதலை பெற்று தரிசிக்கக்  கூடியதாக இருப்பது அனைவரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

மாதேவி
0.0.0.0.0.0