Saturday, November 29, 2008

செக்கச் செவந்த பழம் தேனாட்டம் இனிக்கும் பழம்

காலையில் தொடங்கி இரவு வரை ஓட்டம்.. ஓட்டம்.

யாரைக் கேட்டாலும் “நேரம் இல்லை”.

“எல்லாம் ஒரு சாண் வயித்துக்காக” என்ற பதில் வரும்.

25- 30 வருடங்கள் பின்நோக்கிப் பார்த்தோமானால் அப்பொழுதும் இந்த இதே வயிறுதானே?

அப்பொழுது ஆசைகள் ஓரளவு கட்டுக்குள் இருந்தன. ஆசைப்படுவதற்கும் வாங்கிக் குவிப்பதற்கும் படோபடப் பொருட்கள் அதிகம் இல்லை. இப்பொழுது கடை கொள்ளாப் பாவனைப் பொருட்கள்? டிஜிட்டல் ரிவி, டிஜிட்டல் கமரா,விடியோ, மொபைல், கொம்பியூட்ர், டிவீடி, மிக்ஸி…

வாழ்க்கைச் செலவோ ஜெட் வேகத்தில் மேலே சென்று கொண்டிருக்கிறது. ஆனால் ஆசை அதைவிட வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கிறது.

ஓரிரு தலைமுறைகள் தாண்டுவதற்கிடையில் வாழ்க்கை முறையில்தான் எத்தனை மாற்றங்கள்? பிறந்த ஊரை விட்டுப் பிரிந்தோம். வேலை செய்யும் நகரை நோக்கி நகர்ந்தோம். நகரின் நெருங்கிய நொருங்கிய, சூழல் மாசடைந்த வாழ்க்கையே இசைவாகிவிட்டது. இயற்கை கிராமச் சூழல் கனவாகிவிட நகரச் சூழலின் தொடர் மாடிகளுக்குள் சிறையானோம்.

சூரியனைக் காண்பது பலருக்கு வீதிக்கு இறங்கினால்தான் கை கூடும். விடிவதும் சாய்வதும் மணிக் கூட்டைப் பார்த்துத்தான். இத்தகு வாழ்க்கைக்கு அனைவரும் பழக்கப்பட்டுக் கொண்டோம். நகரங்களில் பெரும்பாலும் அனைவரும் மாடிமனை வீட்டு வாசிகளாகிவிட்டோம்.

கிராமத்தில் வசிப்பதைவிட நகரங்களில் சில வசதிகளும் உண்டு. வசிப்பதற்கு அளவான அடக்கமான வீடுகள், கூட்டுவதும், துடைப்பதும் சுலபம். வீட்டு வேலைகள் குறைவு, உழைப்புக்கு ஒதுக்க வேண்டியது அதிகம்.

இருந்தும் அடிக்கடி கிராமத்தை நினைக்கத் தோன்றும்.இலந்தைப் பழம் என்றொரு சொல். 2ம் வகுப்பு தமிழ்பாடப் புத்தகத்தில். பழவகைகள் என்ற பாடத்தில் வருகிறது. “இலந்தைப்பழமா அது எப்படி இருக்கும்” என்றுதான் கேட்கிறார்கள் குழந்தைகள். இதுதான் இலந்தைப்பழம் என்று எங்கள் பிள்ளைகளுக்கு இங்கு காட்ட முடியுமா? சந்தைக்குப் போனாலும் காணக் கிடைக்காது.

‘இலந்தைக் காணி’ சிறுவர்களாக நாங்கள் ஓடி ஆடி கிராமங்களில் திரிந்த போது அடிக்கடி விசிட் செய்யும் இடம். ‘இலந்தைக் காணி’ இது இடு பெயர். இப் பெயரில் ஒவ்வொரு ஊரிலும் பெரிய நிலப்பரப்புக்கள் இருந்தன. உள்ளே சென்றால் கொண்டாட்டம்தான்.

முள்ளுக் குத்தாவிடில்!

பத்துப் பதினைந்து இலந்தை மரங்களாவது இருக்கும். ஊர்ப் பிள்ளைகளைக் கேட்டால் எவரும் சொல்வார்கள். “இது சீனி இலந்தை, இது மாப்பிடியான இலந்தை, புளி இலந்தை, அது வேப்பங்காய் இலந்தை”.

இறுதியில் இருப்பது புழு இலந்தை.

ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு பெயர். அடுக்கிக் கொண்டே போவார்கள். பொறுக்கி வாயில் போடுவோம். மிகுதியை மடியில் கட்டி வந்தும் சாப்பிடுவோம்.

அந்தப் பழங்களின் ருசி, அந்தச் சூழல் இவை எல்லாம் எங்கள் குழந்தைகளுக்கு கிடைக்குமா? கூட்டிச் சென்று காட்டும் காலமும் மலை ஏறிவிட்டது.

இதே போன்றுதான் பனைமரம்; படத்தில் காட்டி “இதுதான் பனை. கிளை இல்லாதது” என்று பாடமாகக் கற்பிக்க வேண்டிய நிலை. ‘பேரதெனியா போடனிக்கல் கார்டனு’க்கு கூட்டிக் கொண்டு போய்த்தான் காட்ட வேண்டியுள்ளது. வடமராட்சி வல்லிபுர ஆழ்வார்; கோவிலுக்கு செல்லும் வழியில் கிளைப் பனைகளை பார்த்துப் பரவசம் அடைந்ததும் நினைவுக்கு வருகிறது.

இந்நிலையில் குழந்தைகளுக்காக நாமும் மரம் செடி நடுவோம்.
பனைமரமா நட முடியும்?

துளசிச் செடி, கற்பூரவள்ளிச் செடி, மிளகாய்ச் செடி, கருவேற்பிலை, தூதுவளை, நித்திய கல்யாணி என அடுக்கு மாடியாக இருந்தாலும் கூட ஓரிரு செடிகளையாவது வளர்க்கலாம் அல்லவா?.

காற்றின்றி, ஒளியின்றி நோஞ்சல் செடியாக வளர்ந்தாலும் கூட. வீட்டில் வளரும் ஓரிரு செடிகளிலிருந்து ஒட்சிசனையாவது பெறுவோம். காய்த்தால் பூத்தால் ரசிப்போம். உண்ண முடிந்தால் உண்போம். அதனின்று வரும் சிறு நலத்தையாவது பெற முயல்வோம்.

அத்துடன் குழந்தைகளின் இயற்கை அறிவையும் வளர்ப்போம்.


முடிந்தவரை இயற்கை வளங்களையும் காப்போம்.

:- மாதேவி -:

1 comment: