Saturday, May 12, 2012

வெளவாலை வாவென்று கூறி.......


இரு இறகுகளுடன் பறவையாக சிறகடித்து பறந்து திரிந்தாலும் வெளவால்  ஒரு மிருகம் என்றே சொல்கிறார்கள்.


மிருகம் பாதி பறவை பாதி கலந்து செய்த உருவம். எனக் கூறலாமா?
அதிலும் இது ஒரு பாலூட்டி மிருகம் என்பது குறிப்படத்தக்கது. உலகெங்கும் உள்ள பாலூட்டிகளில் 20 சதவிகிதத்தை வெளவால்கள் பிடித்துள்ளன.

இராப் பட்சி என்ற பெயரும் உண்டு.  வாவல், வெளவால், எனவும் சொல்வார்கள்.

இருட்டில் கண் தெரியுமா?

"மாலையான பின்தான் இதற்குக் கண் தெரியும் அதன் பின்தான் பறந்து திரியும்" என்று பலரும் நம்பினாலும் இது தவறான கூற்று என விஞ்ஞானிகள் செய்த ஆய்வு சொல்கிறது.

சில வெளவால்களின் கண்களைக் கட்டி பறக்கவிட்டபோது அவை நன்றாகவே தடைகளைத் தாண்டி பறந்து சென்றன. பின்பு இவற்றின் காதுகளையும் வாயையும் கட்டிவிட்டுப் பறக்கவிட்டபோது தட்டுத்தடுமாறி மோதி பறந்து திரிந்தன. இதன் மூலம் விஞ்ஞானிகள் இவைகள் பறப்பதற்கு கண் முக்கியமல்ல கீச்சிடுவதற்கு வாயும் எதிரொலிகளைக் கேட்பதற்கு காதும் இருந்தால்  அவற்றால் பறக்க முடியும் என்பதை அறிந்தார்கள்.

அல்ராசோனிக் சவுண்ட் ஓசையைக் ஒலித்துக்கொண்டுதான் இவை பறக்கின்றன. இவை பறக்கும்போது முன்னால் உள்ள பொருளில் மோதி திரும்பவும் அவ்வொலி இவற்றின் காதுகளை அடையும். இவ்வோசையை வைத்து வெளவால்கள் முன்னால் இருக்கும் பொருளை அறிந்து கொள்கின்றன. இதை எக்கோ லொக்கேஷன் என்கிறார்கள்.

வாழுமிடங்கள்


குகைகள், மரப்பொந்துகள், அடர்ந்த மரங்கள், மண்டபங்களின் இருட்டான இடங்களில் தலைகீழாகத் தொங்கி சிறகுகளால் முகத்தை மூடித் தூங்கிவிடும்.



பெரிய இலைகளைப் பறித்து கூடு கட்டி அதில் வாழும் இனமும் இருக்கிறது. அதிக கனமான இறக்கைகள்தான் அவை தலைகீழாகத் தூங்க காரணம்.



வெளவால்களின் உணவு

கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் வாழும் இனம். பழங்கள் பூக்கள், புழு, பூச்சிகளை உண்ணும் பிராணி. ஓர் சில மீன், தவளை உண்ணும் வெளவால்களும் இருக்கின்றன.


  • பூச்சி புழுக்களை உண்ணும் வெளவால்களே அதிகமானவை 70 சதவிகிதம் அவ்வாறானவை. 
  • 20 சதவிகிதம் மட்டுமே பழங்களை உண்பவையாகும்.

1000 ற்கும் மேற்பட்ட இனங்கள் இருக்கின்றன என்கிறார்கள்.

இரத்தம் குடிக்கும் வெளவால்கள்

பயப்படாதீர்கள் விலங்குகளின் இரத்தம் குடித்து வாழும் இனமும் இருக்கின்றன. இவற்றை வம்பயர் vampire bats என்கிறார்கள். இதில் மூன்று வகைகள் உண்டு.


  1. Common Vampire bat, 
  2. White winged Vampire bat, 
  3. Hairy legged Vampire bat  
ஆகியனவே அவையாகும்.

இவை அமெரிக்க நாடுகளான மெக்சிகோ, பிரேசில், சிலி, ஆர்ஜன்ரீனா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றனவாம். இவை பெரும்பாலும் பாலுாட்டி மிருகங்களின் இரத்தத்தையே உணவாகக் கொள்கின்றன. ஒரு சில மனித இரத்தத்தையும் உணவாகக் கொள்ளும். கடுமையான இருளில் பறக்கும் இவை மிக மெல்லிய சத்தத்தையே எழுப்பிப் பறக்கும் தன்மை கொண்டவை.


சூழலுக்கு உதவுபவை

தாவரப் பரம்பலுக்கும், (விதைகளை பரவச் செய்தல்) பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கும் உதவும் பிராணியாகவும் வெளவால் இருக்கிறது. துருவப் பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் வாழும்.

உடலமைப்பு

வெளவால்களின் இறக்கைகள் 6 அங்குலம் முதல் 6 அடிகள் வரை இருக்கும். இதன் கால்கள் சிறியனவையாக வலிமையற்று இருக்கும். காதுகள் நீண்டு இருக்கும். பற்கள் கூரியனவாக இருக்கும்.

பூமியில் 6 கோடி வருடங்களுக்கு மேலிருந்தே வெளவால்கள் வாழ்ந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

வெளவால் தீவு  

மத்திய அமெரிக்காவில் பனாமாவில் பாரோகொனராரோ தீவு இது வெளவால் தீவு என்றே அழைக்கப்படுகிறது. இங்கு ஆயிரக்கணக்கான வெளவால்கள் சிறகடித்துப் பறக்கின்ற ஓசைகளை இரவானதும் கேட்கலாம். 74 வகையான வெளவால் இனங்கள் இங்கு இருக்கின்றன என்கிறார்கள்.

விமானத்தில் ஏறிப்பறக்க ஆசைப்பட்ட ஒரு வெளவாலாரால் பயணிகள் போட்ட கூச்சலால் விமானமே திருப்பப்பட்டதாம். ஐயோ! பாவம் வெளவாலாருக்கு ஏமாற்றம் நீண்ட தூரம் விமானப் பயணம் செய்ய முடியவில்லையே. இருந்தாலும் அவர் ஹீரோதான்.


பட்ஸ்மன் (Bat man) பற்றியும் சொல்லாவிட்டால் எப்படி? படங்கள் சிறுவர்கள் பெரியவர்களை ஆகர்ச்சித்து இழுத்திருக்கினறன.

பட் ப்ளவரும்;(Bat flower) பூத்துக் குலுங்குகிறது பாருங்கள்.


வெளவால் மீன் ;(Bat fish) இருப்பது தெரியும்தானே. அது உணவாக உண்ணப்படும் மீனாகும்.


வெளவால் செட்டை அடித்துப் பறக்கும் அதன் கீழ் சுகமாய் தூங்க ஆசையா? இதோ அனுபவிப்போம் வாருங்கள்.



ஆபத்தான வெளவால்கள்

வெளவாலின் மிக ஆபத்தான அம்சம் அது நீர்வெறுப்பு நோயைப் (Rabies) பரப்பக் கூடியது என்பதுதான். மிகக் குறைந்த அளவு (5%) ற்குக் குறைவானவையே அவ்வாறு பரப்பும் என்கிறார்கள். அமெரிக்காவில் நீர்வெறுப்பு நோய்க்கு ஆளானவர்களில் பெரும்பாலானவர்கள் வெளவாலால் கடியுண்டவர்களாகும். ஆனால் இலங்கையில் அவ்வாறு பரவுவதாகத் தகவல்கள் இல்லை.காரணம் இங்கு அத்தகைய வெளவால்கள் இருப்பதாகத் தகவல் இல்லை.

காப்பாற்றுங்கள் வெளவால்களை

கவலையான விடயம் உண்பதற்காக வேட்டையாடப்படுவதாகும். தடை செய்யப்பட்டிருந்தாலும் அதையும் மீறி சிலர் இவற்றை வலை வீசி பிடிப்பதுதான் கொடுமை.

'மரம்பழுத்தால்  வெளவாலை வாவென்று கூறி இரந்து அழைப்பார் யாருமிலர்'

மாதேவி

Saturday, April 7, 2012

கிக்கி கிக்கி என்று வண்ணக்கிளி ஒன்று சத்தமிட்டே செல்லும்....

ஆசையுடன் பெத்தம்மா என்று அழைத்ததில்லையா? அவர்தான் கிளிப்பிள்ளை. அஞ்சுகம், தத்தை, கிள்ளை, என்ற பெயர்களும் இலக்கியத்தில் உண்டு.

சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை இது.

இந்தியாவில் அதிகப்படியான மக்கள் வீடுகளில் வளர்க்கும் பறவையினம் கிளி என்கிறார்கள். மகிழ்ச்சியான செய்தி இவற்றுள் ஏறத்தாள 86 இனங்களைச் சேர்ந்த 372 வகைகள் இருக்கின்றன.

கூண்டுக்குள் அடைபெற்ற சிறைக் களி

பச்சைக் கிளி ஒன்றையே நாம் கிளி (Parrot) என எண்ணிக் கொண்டிருந்தாலும் Macaws, Amazons, Lorikeets, Lovebirds, Cockatoos போன்ற யாவுமே இனத்தைச் சார்ந்தவைதான்.

கிளியினப் பறவைகள் அனைத்தும் வளைந்த சொண்டைக் கொண்டன.


கால்கள் ஒவ்வொன்றிலும் முன்பக்கம் பார்ப்பதாக இரண்டும், பின்பக்கம் பார்ப்பதாக இரண்டுமாக மொத்தம் நான்கு விரல்கள் அமையப்பெற்றிருக்கும்.


இவ்வாறிருப்பதை உயிரியலில் zygodactyls என்பார்கள்.





அலகின் மேற்புறத்தை மட்டுமே அசைக்க முடியும்.

கேட்கும் சக்தி இதற்கு அதிகம். உணவாக காய்கள், பழங்கள், மொட்டுக்கள், பூக்கள், கொட்டைகள், விதைகளையும் உண்ணும். நெற்கதிர், மாங்காய், மிளகாய்ப்பழம், கொய்யாப் பழம், பயிற்றங்காய், பீன்ஸ் காய்கள், மிகவும் பிடித்தமானவை. கோவைப் பழத்தை விரும்பி உண்ணும்.

ஆயினும் இவற்றில் சில பூச்சி புளுக்களையும் உண்ணக் கூடியவையாகும்.

உலக வளர்ச்சி, சுற்று சூழல் பாதிப்பு, ஏனைய உயிரினங்கள் மீதான அக்கறையீனம் காரணமாக இவ்வினமும் குறைந்துகொண்டே போகின்றது.

மாம்பழக் காலத்தில் கிராமத்து வீடுகளில் கூட்டமாக வரும் கிளிகளைத் துரத்த மணிகட்டி அடிப்பார்கள்.


மிளகாய்த் தோட்டங்களில் வலையால் மூடியிருப்பதைக் காணலாம்.

வெப்ப மண்டல, அதிவெப்ப மண்டலக் கண்டங்களில் வாழும் பறவையினம். ஆயினும் ஆஸ்திரேலியா, மத்திய அமெரிக்கா, தென் ஆபிரிக்கா போன்ற இடங்கள் கிளிகளின் வெவ்வேறு வகையினங்களுக்குப் பிரிசித்தமானவை ஆகும்.

இவற்றின் ஆயுற்காலம் 50 ஆண்டுகள் என்கிறார்கள். இவற்றின் நீளம் 8 செ.மி முதல் ஒரு மீற்றர் வரையாகும். எடை பத்துக் கிறாம் இல் இருந்து 4 கிலோ வரை இருக்கும்.

ஆண்டுக்கொருமுறை முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும். தனக்கெனக் கூடு கட்டி வாழும் இனம் அல்ல. தென்னை, பனை, இலுப்பை மரங்களின் பொந்துகளில் பெரும்பாலும் வசிக்கும்.

மனிதர்களைப் போல ஒலி எழுப்பக் கூடியவை. பயிற்சி அளிக்கும் கிளிகள் சில வார்த்தைகளை உச்சரிக்கும்.




"கிக்கி கிக்கி என்று
வண்ணக்கிளி ஒன்று சத்தமிட்டே செல்லும்
......" இந்த வரிகள் எந்தப் பாடலில் வருகின்றது சொல்லுங்கள் பார்க்கலாம்.

விடை தெரியல்லையா? 

 "காகிதத்தில் " வலைப்பதிவிற்கு செல்ல இது வழி

ஆபிரிக்காவைச் சேர்ந்த ஆண் சாம்பல் நிறக் கிளிகளை பார்க்க செல்கிறீர்களா? உசாராக இருங்கள். மனிதர்களின் பேச்சைப் புரிந்து கொள்வதில் சிறந்து விளங்குகின்றன இவ் இனம்.

உங்கள் பேச்சிற்கு பதில் பேச்சுத் தர தயாராகிவிடும். கவனம்.
ஒலிகளைத் துல்லியமாகக் கவனித்து மீண்டும் உச்சரிக்கக் கூடியன என்கிறார்கள். இவை முன்னால் பேசுவதற்கு பயப்படாமல் இருக்க முடியுமா சொல்லுங்கள்.

இவை 120 வகையான ஒலிகளை எழுப்பும் தன்மை உள்ளனவாம்.
சாம்பற் கிளிகள் 35,000 ரூபா வரை விற்பனையாகின்றன.

நன்கு வளர்ந்த கிளி ஒரு இலட்சம் ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பச்சைக் கிளிகள், பஞ்ச வரண்க் கிளிகள், வெள்ளை, நீலமான கிளிகள், வீட்டில் அழகு வளர்ப்பிற்காகவும் கிளி ஜோசியத்திற்காகவும், வாஸ்த்துவிற்காகவும் வளர்க்கப்படுகின்றன.


சிஐடி பொலிஸ் கிளி பற்றி கேள்விப்பட்டீர்களா?

இங்கிலாந்தில் கிளி ஒன்று உயிங் உயிங் என்று சவுண்ட் கொடுத்து கொள்ளையரையே விரட்டி அடித்திருக்கிறது. பாருங்களேன். இதற்கு தங்கப் கோப்பை ஒன்று பரிசளிக்கலாமா?

தனது கூட்டத்தில் ஒருவரை விழுங்கிய சாரைப்பாம்பாரை கொத்திக் கொத்தி ஆக்கிரோசமாகத் துரத்தின கிளிக் கூட்டங்கள் என்ற செய்தியும் சில வருடங்களுக்கு முன் வெளியாகியிருந்தது.

ஸ்ரீ லங்கா ஹாங்கிங் பரட் என்ற சிறிய இனமானது 13 செ.மி நீளம் உள்ளது.


குறுகிய வால், சிவப்புக் கிரீடம் உள்ளது. நாடியும் தொண்டையும் பேர்ள் புளு கலர் கொண்டது. காடுகளில் பெரும்பாலும் வசிக்கும்.

இரண்டு,மூன்று முட்டைகளை இடும்.



ஸ்ரீ லங்கன் முத்திரையிலும் இடம் பிடித்துள்ளது.




Flicer ல் கிளி

கிளி மீன் Parrot fish இருந்ததே அறிந்திருப்பீர்களே!


கிளிப் பூ பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோமே. கிளிப்பூ வைப் பாரக்காதவர்கள் கிளிக்குங்கள். பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை.  

இலக்கியங்களில் கிளி

சங்க இலக்கியங்களில் கிளிகள் பற்றிய செய்திகள் இருக்கின்றன. மலைவாழ் மக்களிலே பெண்கள் தினைப்புலங்களிற்குச் சென்று கிளியோட்டி முற்றிய தினைக் கதிர்களைக் காப்பது கடமையாகவும் விளையாட்டாகவும் இருந்திருக்கிறது. 

மலைவாழ் மகளிர் தினைப் புலங்களில் கிளியோட்டி தினைப் புலத்தினில் விளைந்த முற்றிய தினைக் கதிர்களைக் காத்தனர் என்பது சங்க இலக்கியத்தில் பலவிடங்களில் பேசப்படுகின்றது.

'களைப்பூக் குற்றுத் தொடலை தை இப்புனக்கிளி படியும் பூங்கட் பேதை'  
எனக் குறுந் தொகையில் ஒரு வரி வருகிறது.  

களைப்பு பூக்களைப் பறித்து மாலை தொடுப்பதும், தினைப் புனத்தில் காவல் செய்து கிளி ஓட்டுதலும் மலைவாழ் பெண்களின் விளையாட்டு என்பதைச் சுட்டுகிறது.

ஆண்டாள் பாடல்களில் கிளி பல இடங்களில் வருகிறது. அதில் கீழ் வரும் பாடல் கிளி பேசுவது பற்றியும் பாடுகிறது.

'கூட்டி லிருந்து கிளியெப்போதும்
கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்,
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில்
உலகளந் தான் என்று உயரக் கூவும்..'

கிளி தட்டு விளையாடப் போவோம் வாறீங்களா.


சின்ன வயசில் விளையாடியதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

கிளி பற்றிப் பேசும்வேளையில் ஒவ்வொரு ஊரிலும் வாழ்ந்த கிளி மாமா, கிளி மாமிகள் பற்றியும் ஞாபகம் வந்திருக்குமே.

சின்னக் கிளி, செல்லக்கிளி போன்ற பெயர்களுக்கும் குறைவிருக்கவில்லை.

அது சரி, நம்ம நாட்டு பிரசித்த நகரான கிளிநொச்சி  உலகெங்கும் பேசப்படுகிறதே. விக்கிபீடியாவில் கிளிநொச்சி

அதற்கு அந்த பெயர் வந்ததற்கு காரணம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.



-: மாதேவி :-

Sunday, February 26, 2012

வண்ணத்துப் பூச்சியில் மயங்கவும் வண்ணத்துப் பூச்சியாகப் பறக்கவும்

வசந்தம் வந்தது எனச் சொல்லாமல் சொல்லி செட்டை அடித்து மகிழ்ந்து திரியும். பல வர்ண நிறங்களால் அழகிய பட்டுச் சட்டை தரித்து அனைத்துக் கண்களையும் கவர்ந்து இழுப்பார். அதன் அழகில் எல்லோரும் மயங்கி நிற்பதில் ஆச்சரியமில்லை.

பட்டாம் பூச்சி, தட்டாரப் பூச்சி, வண்ணாத்திப் பூச்சி என்ற பெயர்களாலும் அழைப்பார்கள்.


சிறுவயதில் வண்ணத்துப் பூச்சியார்களாகி கைகளை சிறகுகளாக்கிப் பாடிய பாலர் பாடல் ஒன்று நினைவுக்கு வருகின்றது.


வண்ணத்துப் பூச்சி வண்ணத்துப் பூச்சி
பறக்கிறது பார் பறக்கிறது பார்
அழகான செட்டை அழகான செட்டை
அடிக்குது பார் அடிக்குது பார்

சிவப்பு மஞ்சள் நீலம் பச்சை
 பொட்டுக்கள் பார் பொட்டுக்கள் பார்
 தொட்டதுமுடனே தொட்டதுமுடனே
 பட் என பறக்கிறது பார்

தேனதைக் குடித்து தேனதைக் குடித்து
களிக்குது பார் களிக்குது பார்
வண்ணத்துப் பூச்சி வண்ணத்துப் பூச்சி
பறக்கிறது பார் பறக்கிறது பார்.

எங்க வீட்டு வண்ணத்துப் பூச்சி
பறக்கிறது பார் பறக்கிறது பார்

வண்ணத்துப் பூச்சிகள் இலைகளில் முட்டைகளைப் போடும். அவை 3-12 நாட்களில் கட்டர்பிலர்களாக வெளி வரும். இவை இலைகளை உண்டு வளரும்.


இரு வாரங்களின் பின் கம்பளிப் புழுவாக வளர்ந்து திரியும். மயிர்கொட்டி, மசுக்குட்டி என்றும் அழைப்பார்கள். கம்பளிப் புழுக்கள் இலைகளின் அடிப்புறம் ஒட்டிக் கொண்டு இருந்து தலை கீழாகத் தொங்கும். அது தோலை சிறிது சிறிதாகக் கழற்றி கூட்டுப் புழுவாக மாறிவிடும்.


இவையே இரு வாரங்களின் பின் வண்ணத்துப் பூச்சிகளாக வெளிவருகின்றன. பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும். உணவு உற்பத்திக்கு வழிகோலும் ஒரு அழகிய உயிரினம்.

இவை வண்ணத்தை மாற்றிக் கொள்ளும் இயல்புடையன. சூழலுக்கு ஏற்றதுபோல தமது வண்ணங்களை மாற்றிக் கொள்ளும்.மீண்டும் பழைய வர்ணத்திற்குத் திரும்பும் என்கிறார்கள் இதன் ஆராச்சியாளர்கள்.

Blue glaxy tiger butterfly. Thanks:- dreamstime.com
இவற்றின் வண்ணங்களுக்கு நிறமிகள் அல்ல. அவற்றின் கலங்களின் அமைப்புத்தான் காரணம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

Ceylon Rose Butterfly Thanks:- http://en.wikipedia.org/wiki/Butterflies_of_Sri_Lanka

பறவைகள் பருவ காலங்களில் கண்டம் விட்டுக் கண்டங்களுக்குச் செல்வதுபோல வண்ணத்துப் பூச்சிகளிலும் சில இனங்கள், குறிப்பாக மோனார்ச் Monarch இனங்கள் நீண்ட நாட்கள் வாழும் இயல்புடையவை. 4000- 4800 கிலோ மீற்றர் தூரம் வரை நீண்ட தூரங்கள் பறந்து செல்லும் வல்லமையுடையன.


 

வசந்தம் வந்ததற்கு அறிகுறியாக சில மாதங்களுக்கு முன் மெக்சிகோ நாட்டில் பெரும்தொகையான வண்ணத்துப் பூச்சிகள் ஒன்று கூடியிருக்கின்றன. அதைப் பல நாட்டினரும் சென்று கண்டு களித்திருக்கிறார்கள்.


வண்ணத்துப் பூச்சிகளில் காடுகளில் வசிப்பவையில் சில விஷமுள்ளவை. வண்ணத்துப் பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகை இனங்கள் உள்ளன என்கிறார்கள். தென்னிந்தியாவில் 315 வகைகள் இருக்கின்றனவாம்.

இலங்கையில் சிவனொளிபாத யாத்திரை காலத்தில் பெரும்தொகையான வண்ணத்துப் பூச்சிகள் கூட்டமாக அப் பகுதியில் சிறகடித்துப் பறந்து செல்வதைக் காணலாம்.

Thanks:- ceylonbestholiday4u.lk
வண்ணத்துப்பூச்சி சரணாலயம் தெஹிவல மிருகக் காட்சிச் சாலையில் இயற்கையொடு இசைந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல இன வண்ணத்துப் பூச்சிகளைக் கண்டு களிக்கலாம்.

இப்பொழுது கொலம்பியாவில் வீட்டுவளர்புப் தொழிலாகவும் வண்ணத்துப்பூச்சிகளை வளர்க்கிறார்கள். வண்ணத்துப்பூச்சிகளின் ஆராச்சிகள் விரிவடைந்திருப்பதால் வளர்ப்பும் அதிகரித்து இருப்பதாகச் சொல்கிறார்கள்.

சிங்கப்பூரில் ஷாங்கி விமான நிலையத்தில் பட்டாம் பூச்சிப் பூங்கா அமைத்து இனங்கள் அழியாமல் காத்து வருகிறார்கள்.



3500 வருடங்களுக்கு முன்பிருந்தே எகிப்தில் வண்ணத்துப் பூச்சிகள் வர்ணம் தீட்டப்பட்டிருக்கினறன. பெரும்பாலும் ஆலயங்கள் கட்டிடங்களில் செதுக்கப்பட்டிருப்பதும் காண முடிகிறது.

இப்பொழுதும் ஆடை ஆபரண அணிகலங்களில் வண்ணத்துப் பூச்சிகள் முதலிடம் பிடித்து வருவதைக் காணலாம்.


சிறுவர்கள், இளம் வயதினர், பெரும்பாலும் விரும்பி அணிந்திருப்பதைக் காணலாம்.


மரங்களை அழிப்பதால் அமர்வதற்கே இடமின்றி அலைந்து திரிகின்றன வண்ணத்துப் பூச்சிகள்.

ஆனால் தபால் முத்திரையிலும் தேசங்கள் கடந்து பறந்து திரிகிறது.

அண்மையில் படித்த கவிதை ஒன்று,

பேசிப்பழக ஆசைதான்....   என்று தொடங்கி


"....ஓவியம் தீட்ட ஆசைதான்
ஆனாலும்
வண்ணத்துப் பூச்சியே
நீதான் என் யன்னல் ஓரம்
மழைச்சாரலுக்குக்
கூடத் தங்குவதில்லையே..."

இக் கவிதை மனதில் சோகமாக அமர்ந்து விட்டது. இயற்கையைப் பேணுவதில் நாம் காட்டும் அக்கறையின்மை பல உயிரினங்கள் அரிதாகிக் கொண்டே செல்கின்றன. இந்நிலையில் வண்ணத்துப்பூச்சியார் விதிவிலக்கா?


வண்ணத்துப்பூச்சிகளை கவர்ந்து இழுக்கக் கூடியதாக தோட்டங்கள் அமைத்தால் அவற்றைப் பாதுகாக்கலாம். அவற்றின் உணவுக்காக மலர்த் தோட்டங்களை அமைப்பதுடன் கவரும் வகையில் செடிகள் கொடிகள் அமைத்தால் அவற்றின் இனவிருத்திக்கும் வழிவகுக்கும் என்கிறார்கள்.

பூக்கள் இருக்கும் அனைத்துச் செடிகளிலும் தேனை அருந்தாது தனக்குப் பிடித்த செடியின் பூவை மட்டும் பருகும். அடர் சிவப்பு நிறப் பூக்கள் வண்ணத்துப்பூச்சிக்குப் பிடித்தமானவை. செம்பருத்திப் பூக்கள், சூரியகாந்தி, டெய்சி, பெடூனியா இனங்கள் சில வகை அல்லிப் பூக்கள், மஞ்சள் கூம்பு மலர்கள் பிடித்தமானவை எனச் சொல்கிறார்கள்.

என்ன? பூந்தோட்டம் அமைக்கத் தயாராகிவிட்டீர்களா?


வீட்டில் தோட்டம் அமைப்பதின் மூலம் அழியும் இனத்தைப் பாதுகாக்கலாம்.. உங்களைச் சுற்றியும் அழகிய வண்ணக் கூட்டத்தினர் சிறகடித்துப் பறப்பர்.

நீங்களும் இரு கைகளையும் விரித்து  அவையுடன் சேர்ந்து மகிழ்ச்சியாகப் பறக்கலாம்.

மாதேவி

Wednesday, December 21, 2011

பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை.


மார்கழிப் பூவே... மார்கழிப் பூவே...



பாடிக்கொண்டே ஆரம்பிப்போமா ?

மலர் என்றாலே நினைவுக்கு வருவது இனிய நறுமணம், அழகு, மென்மை, காதல்.

சங்கப் பாடல்களிலே மலர்களை பெண்களுக்கு உவமையாக வர்ணித்திருப்பதைக் காணலாம்.

காந்தள்

காந்தள் கையழகி, ரோஜா வதனத்தாள்.....

செண்பகம்

நொச்சி, தும்பை, கொன்றை, பாதிரி, புங்கை,  குரந்தை, வாகை, வெட்சி, குறிஞ்சி மலர், இருவாட்டி, அரளி, முல்லை, பிச்சி, மல்லிகை, பன்னீர், ஆம்பல், அல்லி, குமுதம், தாளம்பூ, செண்பகம், மனோரஞ்சிதம், சம்பங்கி, ரோஜா, துளசி, பவளமல்லி, நந்தியாவட்டை, சாமந்தி,சூரியகாந்தி,மந்தாரை எனப் பற்பல மலர்கள் பூத்து மணம்பரப்பி நிற்கின்றன.

மனோரஞ்சிதம்

மகிழம்பூ, செண்பகப்பூ, மரிக்கொழுந்து, நாகலிங்கப்பூ, புன்னை, செவ்வரத்தை, கனகாம்பரம், என அடுக்கிக் கொண்டே போய்,  ஓர்க்கிட், எகஸ்சோரா, போகன்விலா, அந்தூரியம் எனப் பலப்பல உருவாக்கங்கள் இழுத்துக் கொள்ளுகின்றன எம் மனங்களை.

நாகலிங்கப்பூ

சங்கப் பாடல்களில், மிகவும் புகழ்பெற்ற குறிஞ்சி மலர் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மலரும் என்பது பலரும் அறிந்ததுதான். மலைச்சாரலிலே பலவகையான பூக்கள் இருந்தபோதும் தேன் நிறைந்த இம் மலருக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

குறிஞ்சிப்பூக்கள்

குறிஞ்சி செடிகளின் தலையில் நீலநிறப் பூக்கள் மணியைக் கவிழ்த்தாற்போல காட்சி கொடுப்பதாக கவிஞர் ஒருவர் சொல்கின்றார். இம் மலரில் இருநூற்றி ஐம்பது வகைகள் இருப்பதாக கூறுகின்றார்கள். ஐம்பத்தொன்பது வகை தென்னிந்தியாவில் உள்ளது என்கிறார்கள்.குறிஞ்சி மலரின் தேன் மருத்துவத்தில் அதிக இடத்தைப் பிடிக்கின்றது. அதனால்தான் குறிஞ்சித் தேனுக்கு அதிக கிராக்கி. 

நிலங்களை ஐந்நிலங்களாக பூக்களின் பெயர்களாலேயே குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் எனப் பிரித்திருந்தார்கள்.

குறிஞ்சிப் பாட்டில் பூக்களின் பெயர்கள் நிறைந்த பாடல் இருக்கின்றது. அரசர்கள் போரில் வெற்றிபெற்று திரும்பும்போது வாகை மலர்மாலை சூடி வருவார்கள்.

அரசிமார் தாளம்பூ ஜடை போட்டிருப்பார்கள்.

பெண்கள் தலையில் சூடிக்கொண்டார்கள். காதலின் பரிசாகவும் பூக்கள் பண்டைய காலம்தொட்டு; அங்கம் வகிக்கின்றன. பூக்களை மாலையாகக் கட்டி திருமணநாளில் அணிந்து கொண்டனர்.  பூக்களை மாலையாகத்தொடுத்து இறைவனுக்கு சாத்தி வணங்கினர். பின்னர் பெண்கள் பூச்சரங்கள், கதம்பங்கள், மாலைகள் எனத்தொடுத்து அணிந்தார்கள்.

'கார்நறுங்கொன்றை' என கொன்றையைப் புகழ்ந்து பாடியுள்ளார் கவிஞர். முல்லைக்கு தேர்கொடுத்த பாரிவள்ளலையும் அறிவோம்.

அனிச்சம்

அனிச்சம் பூவை விருந்தினருக்கு உவமையாக 'மோப்பக் குழையும் அனிச்சம்'என்கிறார் வள்ளுவர். 

குவளை மலரின் மணம் வீசுகின்ற திரண்ட கரிய கூந்தலையும், ஆம்பல் மலரின் மணம்; தரும் பவள வாயினையும் உடையவளே என்றெல்லாம் காதலன் காதலியை வர்ணித்திருப்பதைக் காணலாம்.

அல்லி, ஆம்பல் இனத்தில் ஐம்பது வகையான கொடிகள் உள்ளன.
மல்லிகை( JASMINUM SAMBAC) இருநூறு இனங்கள் உள்ளன என்கிறார்கள்.

வேறோரிடத்தில் காதலன் காதலியைப் பிரிந்து செல்கின்றான் 'நெய்தல் மலர்போன்ற அவளது கண்' என்கூடவே வருகின்றதே என நினைக்கின்றான.;
நாட்டுப் பாடல்களிலும், சிறுவர் பாடல்களிலும் பூக்கள் தனியிடம் பிடித்துள்ளன.

நறுமண மலர்களிலிருந்து அத்தர், பன்னீர், ரோஸ் எசன்ஸ் செய்து கொள்கிறார்கள்.

இறைவனுக்கு அர்ச்சிக்கும் பூக்கள் சிறந்த இடத்தை வகிக்கின்றன. காட்டுப்பூக்கள், மயானப்பூக்கள், நீர்ப்பூக்கள், செடிப்பூக்கள், கொடிப்பூக்கள், மரப்பூக்கள் எனப் பலவகையாக இருக்கின்றன.

இமையமலைச் சாரலில் பல்வகையான அரிய அழகிய பூக்கள் காணப்படுகின்றன.

பூக்கள் பல மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன. அதனால்தான் பல்நெடும் காலமாக மருத்துவத்தில் பயன் படுத்தி வருகின்றார்கள். உணவாகவும் உட்கொள்ளப் படுகின்றன. 'டேன்டேலியன் மலர்கள்' வைனாக தயாரிக்கப் படுகின்றன. 'ஹாப்ஸ் மலர்கள்' பீரை சுவையூட்டப் பயன்படுத்தப்படுகின்றன.

ஓணம் பண்டிகையில் பூ அலங்காரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
மார்கழியில் கோலத்தில் பிள்ளையார் வைத்து  பூசணிப்பூக்களால் வணங்குவார்கள்.

தைப்பொங்கலன்று ஆவாரம் பூக்கள், கண்ணுப் பூக்களை வீட்டு வாயிலில் வைப்பார்கள்.ஆவாரம் பூவின் மஞ்சள் நிறம் மங்கலத்தின் அடையாளமாகக் கொள்ளப்படுகின்றது.

ஐம்பதாண்டுகளுக்கு ஒருமுறை மலரும் பூ கார்ட்ஸ் என்கிறார்கள்.

நெப்பந்திசு (NEPENTHES)    பூச்சியை உண்ணும் தாவரம். இது ஒருவகை குடுவைபோன்ற தோற்றத்தை உடையன. பூக்களின் முனைகளில் நீண்ட மயிர்கள் நீட்டிக் கொண்டிருக்கும்.

நெப்பந்திசு

பூக்களின் கவர்ச்சியாலும், தேனாலும், வாசனையாலும் ஈர்க்கப்படும் பூச்சிகள் மயங்கி பூவினுள் செல்லும். பூவின் வழுவழுப்பான சுரத்தலினால் பூச்சிகள் குடுவையின் உள்ளே விழுந்து விடும். பூச்சிகள் வெளியே வரமுடியாதவாறு பூக்களின் உள்நோக்கி வளைந்திருக்கும் மூடிகள் தடுத்துவிடுகின்றன.

அதிக அளவில் ஒரே தடவையில் பூக்கும் பூக்கள் வைனீஸ்விக்டோரியா என்ற தாவரத்தில் பூக்கின்றன.

ஐம்பதாண்டுகளுக்கு ஒருமுறை மலரும் பூ 'கார்ட்ஸ்' என்கிறார்கள்.

உலகின் மிகச் சிறிய மலர் 'வொல்பியா ' எனப் படுகின்றது. இவை குலைவடிவில் இலகுவாக வீழ்ந்து விடக் கூடியதாக இருக்கின்றன. இதில் இரண்டுவகை இனங்கள் உள்ளன..

கிளிபோலவே சொண்டு தலை, வால் என அச்சொட்டாக ஒரு பூ தாய்லாந்து தேசத்தில் இருக்கிறது. கிளிப்பூ (Parrot Flower) என அழைக்கப்படும் இது அங்கும் இப்பொழுது அரிதாகவே காணப்படுகிறதாம்.

கிளிப்பூ


இயற்கையின் படைப்பில் பூக்கள் எவ்வாறேல்லாம் அதிசயிக்க வைத்து மகிழ்ச்சி தருகின்றன..



பூக்களின் சமையலுக்கு பூக்களைப் பறியுங்கள்  பதிவைக் கிளிக்குங்கள்.

:-மாதேவி-:
0.0.0.0.0.0.0




Saturday, October 15, 2011

நீந்தி மகிழ கசூரினா கடற்கரைக்கு வாங்க

உயர்ந்த சவுக்க மரங்களுடன் இயற்கையின் படைப்பில் உருவான அழகிய கடற்கரை வடபகுதியின் கிழக்குக் கடற்கரை மணற்காடு ஒருவித அழகைத் தருகிறது என்றால் இங்கு கசூரினாவில் இன்னொரு அழகு மிளிர்கின்றது.


சவுக்க மரங்கள் நிறைந்திருப்பதால் கசூரினா Casuarina beach என்ற காரணப் பெயர் வந்திருக்கலாம். கடல் அரித்தாலும் சாய்திடாது மண்ணில் பற்றுக் கொண்டு இறுகப் பற்றி நிற்கும் சவுக்க மரங்கள் இதன் விசேஷம்.


வெற்றுக் கட்டுமரத்தில் கரைநோக்கி வருகிறார்கள் மீனவர்கள். மீன்கள் ஒழித்து ஓடிவிட்டனவா?

மகிழ்ச்சியான செய்தி அலைகள் அள்ளிச் சென்றுவிடும் என்ற பயம் இன்றி இங்கு குளித்து மகிழலாம்.


மணற்காட்டுக் கடல் ஆர்ப்பரிக்கும் கடல் என்பதால் அங்கு குளிக்க அனுமதி இல்லை.இங்கு மக்கள் தொலை தூரத்திலும் சென்று நீந்தி மகிழ்வதைக் காணலாம்.

மாலைச் சூரியனின் தண்மையான ஒளிக்கதிரில் நீச்சலிட்டு மகிழ்கிறார்கள் சுற்றுலா வந்தவர்கள்.

இவரைப்போல கடலில் மூழ்கிவிடுவேன் என கை உயர்த்தி உதவிக்கு மற்றவர்களை அழைக்க வேண்டிய அவசியம் இங்கில்லை. மிகவும் பாதுகாப்பான கடல்.


வட பகுதியின் காரை நகரில் இக்கடற்கரை அமைந்துள்ளது.யாழ் நகரில் இருந்து ஏறத்தாள இருபது கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. 45 நிமிடத்தில் வாகனத்தில் சென்றடையலாம்.


யாழ் குடாவின் மிகச் சிறந்த கடற்கரை எனலாம். பெரியஅலைகள் இல்லாத அமைதியான நீலக்கடல். கடலுள் சில மைல்கள் தூரம் வரை நடந்து செல்ல முடியும் என்கிறார்கள்.


வடக்கில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களில் இதுவும் ஒன்று. வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளை தன்னகத்தே இழுத்துக் கொள்ளும் இடமாக மிளிர்கின்றது.


சிலர் குடித்துக் கும்மாளமிடுவதும், காதல் சோடிகள்  கண்ணியக் குறைவாக நடப்பதும் சூழலுக்கு ஒவ்வாததாக மற்றவரை நாண வைக்கிறது.

சாரணியர் பயிற்சி முகாம்கள் இங்கு நடப்பதுண்டு. மிகவும் பிரபல்யமான இடமாக இருந்தாலும் லக்ஸரி ஹோட்டேல்ஸ் இங்கு கிடையாது. தங்கி இருந்து ரசிக்க விரும்புவோர் கடற்கரை ஓரம்  குறைந்த விலையில் வாடகைக்கு வீடுகள் எடுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.


பொலித்தீன் பைகளும் வெற்றுப் போத்தல்களும், உண்டு மிஞ்சிய எச்சங்களும் எனச் சூழல் மாசுபடாது இவ்வாறு அழகாக இருக்க எல்லோரது ஒத்துழைப்பு அவசியம்.

சுனாமியாலும் போராலும் பெரிதும் பாதிக்கபப்ட்டிருந்தது. போர் நின்ற பின் ஒரு சில வருடங்களாக மக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


யாழ் பெரு நிலப்பரப்பிலிருந்து காரை நகருக்குச் செல்லும் பாதை இப்பொழுது திருத்தப்பட்டு போக்குவரத்திற்கு வசதியாக இருக்கின்றது.


பெருந்திரளாக மக்கள் இங்கு வருகிறார்கள். கடலில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள்.


உப்பு நீரில் குளித்து வந்தவர்கள் தங்களை நல்ல நீரில் கழுவிக் கொள்ள நன்நீர்க் கிணறு இருக்கிறது.


கழிப்பிட வசதியும் உடைமாற்றுவதற்கான இடமும் இருக்கின்றன. ஆனால் சுகாதாரமானதாக அவை இல்லை. அவற்றைச் சீர்செய்துகொள்வது அவசியம்.


இயற்கை வழங்கியுள்ள அழகை பண்புடன் பாதுகாத்து வருவது மக்கள் கைகளில்தான் தங்கியுள்ளது. இங்கு வரும் மக்கள் இதற்கு ஒத்துழைப்பு நல்கி சுற்றுச் சூழலையும் கெடாது பாதுகாப்பார்களேயானால் அதுவே அவர்கள் இயற்கைக்குச் செய்யும் கைமாறாக இருக்கும்.


இயற்கையைப் பேணி நமக்கு அளித்துள்ள வளங்களைக் காத்து இன்புற்று இருப்போம்.

:-மாதேவி-: