Sunday, November 8, 2009

தோசம் தராமல் போவாயோ சனி பகவானே.


இராமரைக் காட்டிற்குப் போக வைத்த அரிச்சந்திரனை சுடலை காக்க வைத்த சனியின் ஆட்ட தோசம் இன்றும் தொடர்கிறதா?

புரட்டாதி சனிக் காலைகளும் விரைவில் விடிந்து விடும்.
உதயத்தில் எண்ணெய் ஸ்ஞானம் செய்து, விரதம் இருப்பர் பல பேர்.

கோவிலுக்குச் சென்று சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் எள்ளுப் பொட்டளி விளக்கேற்றி வணங்கினால்தான் பலருக்கும் தாபம் அடங்கும்.


இருகரம் கூப்பி
ஒன்பது,
பன்னிரண்டு,
இருபத்தொன்று எனப்
பலதரம் வலம் வருவர்.

கால் கடுக்க வலம் வந்த பின்
அர்ச்சனை, ஆராதனை செய்தால்தான்
தோசம் நீங்குமாம்.

'சனீஸ்வர பகவானே நல்வரம் அளியுங்கள்';
என அருள் வேண்டி கசிந்துருகி வணங்குவர்
பக்கத்தில் இருப்பவள்
'என்ன விலையில் சேலை கட்டியிருக்கிறாள்'
என்பதைக் கடைக் கண்ணால் பார்த்தவாறே.

'கோள் என் செயும் கொடுங் கூற்று என் செயும்' என நாயனார் சொன்னதை மறந்த மாந்தர் வேறேன்ன செய்வர்.

அன்று கோவிலிலும் விளக்குச் சட்டிக்கு தட்டுப்பாடு வந்துவிடும்.

சந்தையிலும் 10 ரூபா விலையானது இருபது ரூபாவாகும்.

சட்டியில் மட்டுமல்ல எள்ளு,
கோயிலிலும் எள்ளுப் போட இடமில்லாமல்
மனிதத் தலைகள் நிறைந்திருக்கும்.

நான் முந்தி நீ முந்தி என முண்டியடிக்கும்
கூட்டத்தின் நெரிசலில் இடிபட்டு
தாங்களே எண்ணெயாகக் கசிவர்.


எள், எண்ணெய் அபிசேகம் யாவற்றையும்
தரையோடு,
உடையும்
தாராளமாகப் பெற்றுக் கொள்ளும்.

பக்தர்களுக்கு ஸ்கேட்டிங் தேவையில்லை.
எண்ணெய் சறுக்கியே
விரைவில் வீதி வலம் வந்து
தப்பிவிடலாம்.

சனி பகவானின் பார்வை
சற்றுக் குறைவாக இருந்தால்.
அட்டமத்துச் சனியன்
ஏழரைச் சனியன் ஆனால்
டொங், டமார், டுமார்தான்.

பிறகென்ன!

மண்மூட்டை, சிலிங், POP யில் போய்
சாஸ்டாங்க நமஸ்காரமாய்
மாத காலம் படுக்கையில்
கிடக்க வேண்டியதுதான்.

சனி பகவானை அல்லும் பகலும் துதிபாட
ஓரிரு மாதம்
போதிய நேரம்
தாராளமாய்க் கிட்டும்.

தப்பி வீடு வந்தோர் பாடு இரட்டிப்பு கொண்டாட்டம்தான்!

அடுத்த கிழமை கோயிலுக்குச் செல்ல
புது ஆடை வாங்கலாம்.
வீட்டுக்காரருக்கு சாட்டுச் சொல்ல
கோவிலில் எண்ணெய்க் குளியல் செய்த
ஆடை சாட்சி கூறுமே!

புரட்டாதிச் சனியின் அருளால்
இவர்களுக்குக் கிடைக்கப் பெற்றது
'ஆடைப் பொங்கு சனி'
எனச் சொல்லலாம்.


அம்மாதம் முடியும் வரை
வீட்டுக்காரருக்கோ
மங்கு சனியாகி
'பர்ஸ் காலி'.
பணப் பிணி சனியாகிவிடும்.

சனீஸ்வரன் பூரண அருள் வேண்டுமெனில்
அவரது வாகனாரையும் கவனிக்க வேண்டுமே!

அறுசுவை உணவு சமைத்து படையல் செய்து வணங்கி,
நீர் தெளித்து, கவளம் உருட்டி,
ல்ஞ்ச் சீட்டில் இட்டு, (வாழையிலை தொடர் மாடியில் கிடைக்குமா?)
மாப்பால் பெட்டியின் மட்டை மேல் வைத்து,
பல்கணி ஒட்டில் அமர்ந்து விடும்.

'கா கா' என அழைக்க முடியுமா?

அவ்வாறு அழைத்த காலம் மலையேறி விட்டது.
கூவி அழைத்தால்
ஏனைய மாடிக் குடித்தனக்காரருக்குத்
தெரிந்துவிடுமே!

சி ச் சீ வெட்கம்.

இன்றைய சினிமா பாட்டுக்கள் போல என்று
ஊ ஊ என ஊளையிட்டவள்
போல் அழைக்கிறாள்.

வந்த காகமும் பயத்தால் ஜெட் வேகத்தில் திரும்பி ஓடிவிடும்.

அரை மணித்தியாலம் அழைத்த பின்
'வாராயோ தோழி'
என வானத்தை ஊடறுத்து நோக்கி அழைத்தவள்,
இப்பொழுது
'வராயே'
என அலுத்துச் சலித்துக் கொள்கிறாள்.

காகம் வராவிட்டால் சாப்பாட்டைத் துறக்க முடியுமா?


'மன்னியுங்கள் சனி பகவானே' மனம் முணுமுணுக்க,
உள்ளே சென்று உணவருந்தி
சனி விரதம் முடித்ததன் சாட்சியாக
ஏப்பமும் வெளியே வந்தது.

'உண்டு விட்டாயா சனி பகவானே?' அங்கலாகிக்கிறது மனது.

பல்கணியில் இருந்து எட்டிப் பார்க்க,
'பறந்தோடிப் போனேனே'
என கீழ்மாடி பல்கணியிலிருந்து
சிரிக்கிறது சனிப் படையல்.

பொங்கு சனியாகப் கீழ்மாடி வீட்டுக்காரருக்குப்
பொழிந்து வந்த சாத மழை,
பல்கணி எங்கும் சிதறிக் கிடக்கிறது.

கொடியில் கிடக்கும் தோய்த்த ஆடையில் விழாத வரை
வீட்டுக்காரரின் ஜாதகத்தில் சனியின் ஸ்தானம்
நல்ல நிலையில் இருப்பதாகக் கொள்ளலாம்.

சனியின் பார்வை தொலையுமா? தொடர்ந்து வருமா?

உங்கள் ஊர்களில் எப்படி?

லண்டன் கனடாவிலும் வருமா காகம்.

மாதேவி

Thursday, October 22, 2009

கண்ணன் இல்லாத கோகுலம் அம்பேவல

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியினில் கன்றினைப் போல் மாயக் கண்ணன் .... லீலைகள் பல புரிந்த சியாமள கண்ணனின் கோகிலத்தின் நினைவுகள் எழுந்து ஓடின.

இலங்கையின் மத்தியப் பிரதேசமான நுவரெலியாவிலும் கோகுலத்தை ஒத்த இடம் உண்டு. ஆனால் மாயக் கண்ணன்தான் இல்லை.

அம்பேவல பச்சைப்பசேலென்ற பரந்த புல் சமவெளி இயற்கை கொழிக்க வரவேற்கிறது. பாம் (Farm) யைச் சுற்றிலும் அமைந்துள்ள மிகப் பரந்த நிலப் பரப்புக்களில் வெள்ளை, கறுப்பு, பிறவுன் என பலவித நிறங்கள் கொண்ட மேனியுடன் உடலில் கொழுத்த ஜேஸி இனத்தைச் சேர்ந்த உயர்தர மாடுகள் கூட்டம் கூட்டமாக புற்களை மேய்ந்து சென்றன.

பயத்தை விட்டுவிட்டு மெல்லத் தொட்டுப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. பாம்மைத் தாண்டி ஓரிரு மைல்கள் பிரயாணம் செய்தால் அழகிய சுத்தமான லேக்கைக் காணலாம். பத்துப் பதினைந்து பேர் செல்லக்கூடிய அழகிய இரு படகுகள் காத்திருக்கின்றன.

லேக்கைக் சுற்றிக் காட்டுவதற்கு. நல்ல காலம் செல்ப் போட்டிங்கைக் காணவில்லை. தப்பித்தோம் பிள்ளைகளிடமிருந்து.

இதையும் கடந்து ஹைலண்ட் பால் பக்டரி வளாகத்தை அடைந்தோம்.


வழியில் நெடிய காட்டு மரங்கள் செடி கொடிகள் என சுற்றிச் சூழ்ந்திருக்க நடுவே பாதை செல்கிறது. இனிய காட்டு வழிப்பயணம் பயத்தை நீக்கி நல்ல அனுபவத்தைத் தருகிறது.




பக்டரியைச் சென்று அடைந்தால் அங்கும் பலர் பெரிய ரூரிஸ்ட் பஸ்களில் ஏற்கனவே பார்வையிட வந்திருந்தார்கள்.


நாங்கள் சென்ற நேரம் மதியமாகிவிட்டதால் எங்கள் துர்ரதிஸ்டம் பக்டரி மதிய உணவுக்காக மூடப்பட்டுள்ளது.

ஒரு மணிநேரத்தின் பின் திறக்கும் எனக் கூறினார்கள். அருகே அமைந்திருந்த சிறிய பூங்காவில் உல்லாசப் பயணிகள் பலர் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். சிலர் உணவருந்தினர். பாம் (Farm)யை பார்த்துவிட்டு மீண்டும் திரும்பி வருவோம் எனக் கூறியபடியே வந்தவழியே திரும்பினோம்.

பண்ணையின் முன்வாயிலில் இருந்து நடந்து செல்லும் பாதையின் இருபுறமும் அழகுப் பூக்கன்றுகள் பூத்துக் குலுங்கின.






























இடையிடையே மலை நாட்டு மரக்கறிகள் கரட்,























கோவா, லீக்ஸ் பயிரிடப்பட்டு பசுமைத் தோட்டங்களாகக் காட்சி தந்தன.

















லெடியூஸ் இனத்தில் புதிய சிவத்த வகை பயிரிடப்பட்டிருந்தது.
அனைவரையும் கவர்ந்தது.
















பசுக்கள் பெரிய செட்போன்ற தொழுவத்தில் அடைக்கப்பட்டு உணவூட்டப் பட்டுக்கொண்டிருந்தன.
















உடனுக்குடன் அவற்றின் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவற்றின் சாண நெடி உள்ளே நீண்ட நேரம் நிற்க முடியாதபடி எம்மை வெளியே செல்லத்தான் செய்தது.

இவ்வாறு அதிக அளவில் தொகையாக வைத்துப் பராமரிப்பது என்பது சிரமமானது என்பது பார்க்கும் போதே புரிந்தது.

பால் கறக்கும் இடம் இனிய அனுபவம். பசுக்கள் நிரையாக நிற்பாட்டப்பட்டு யந்திரங்களின் உதவியுடன் பால் கறக்கப்படுகிறது.




ஒவ்வொரு முலைகளுக்கும் ரியூப் போட்டு மின் அசைவினால் கறக்கப்படுகிறது. பின் அவற்றை ஒன்றோடு ஒன்று இணைத்து பெரிய போத்தல்களில் கை படாமலே சேர்க்கப்படுகிறது.




மூடிய கண்ணாடிகள் ஊடாக பார்வையிடுவோர் முண்டியடித்துக் கொண்டிருக்க இடையே புகுந்து கண்டு களிக்க வேண்டியிருந்தது.















கோகிலத்துப் பசுக்கள் எல்லாம் கோபாலன் குரலைக் கேட்டு நாலுபடி பால் கறக்குது கிருஷ்ணாயி ..

அடுத்து நாம்பன் பசுக்கள் தனியே பராமரிக்கப்பட்டு தொழுவத்தில் நிற்கின்றன.















தாயாகப் போகும் அன்னையருக்கு தனியே விசேட பராமரிப்புடன் கூடிய கவனம் எடுக்கப்படுவதை அவதானித்தோம்.
















பாற்கட்டி பெரிய தட்டையான தட்டுக்களில் உறைநிலையில் வைக்கப்பட்டு உறைந்த பின் எடுத்து சிறிய பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.




இது மெசினினால் அல்ல மனித வலுவினால். இதுவும் கண்ணாடியால் மூடப்பட்ட அறையிலேயே. நாம் வெளியே நின்று பார்க்கக் கூடியதாக இருக்கிறது.





எங்கும் பசுக்கள் பராமரிப்பு எனஅனைத்தையும் ரசித்தபடி வந்த பொழுது கத்தரித் தோட்ட வெருளிகளாக பசுக்களின் மண்டை ஓட்டை வைத்திருப்பது மனத்தைக் குடையவே செய்தது.
















மாதேவி

Tuesday, October 6, 2009

1887 ல் கட்டப்பட்ட ஏரியில் 2009ல் போட் சவாரி


கிறகரி லேக் நோக்கி எமது வாகனம் பயணப்பட்டது. இது நகரிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

அக்காலத்தில் கவர்னராக (1872 - 1877) இருந்த Gregory அவர்களால் 1887ல் கட்டப்பட்டதாம். பீதுருதாலகால மலையிலிருந்து பாயந்து வரும் நனுஓயா அருவியை (Nanu Oya stream) மறித்துக் கட்டப்பட்டதாக அறிகிறோம்.


அருவியைச் சுற்றி வர வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாம் போகும் பாதையின் அருகே ஓரிடத்தில் பாரிய யந்திரங்கள் மண்ணை அள்ளி போட்டுக் கொண்டிருந்தன. பள்ளமாக இருக்கும் நிலத்தை நிரவிக் கொண்டிருந்தார்கள். ஹோட்டலோ அல்லது கடைத் தொகுதியோ எதுவோ கட்டப் போகிறார்கள் போலும்.


புற்றீசல் போல அமைக்கப்படும் ஹோட்டல்கள், நகரமயமாதல் மற்றும் விவசாய ஆக்கிரமிப்புகளால் ஏரியின் இயற்கை வனப்பு பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது.




கால நிலையும் நன்றாக இருந்தது. அதிகாலையில் பெய்த மழை ஓய்ந்துவிட்டது. சூரியன் எட்டிப் பார்க்க இதமான வெயிலில் உடல் சுகம் கண்டது. நகர் உயிர்த்துக் கொண்டிருந்தது. படகுச் சவாரி செல்ல ஏற்றதாக இருந்தது.


லேக்கை அடைந்தோம். முன்பு மழை பெய்து விட்டிருந்ததால் லேக்கை சுற்றியுள்ள தரை சேறும் சகதியுமாக இருந்தது. ஒரு வழிப்பாதையாய் காலை எட்டி வைத்து நடந்து சென்று டிக்கற் பெற்று போட்டில் சுற்றிப்பார்க்க ஏறிக் கொண்டோம்.


ஓடும் நீரின் ஊடே போட் நீரைக் கிழித்துச் சென்றது. சுற்றி வரவும் நுவரெலியா நகரின் அழகிய கட்டிடங்கள் இள வெயிலில் சிலிர்த்து நின்றன.

அழகிய நீண்ட பாலம் ஏரியை ஊடறுத்துச் செல்கிறது. பாலத்தின் கீழால் போட் விரைந்து பாய்கிறது. தலையில் இடித்து விடுமோ!


எம்மை அறியாது தலை சற்றுக் குனிகிறது. குனிந்து நிமிர்வதற்கிடையில் நாம் பாலத்தின் மறுபக்கத்தில். 'வாவ்' கூச்சலிடுகிறார்கள். பிள்ளைகளுக்கு உல்லாசம்.

அடர்ந்த நீர்த் தாவரங்கள் ஊடே போட் நகரத் தொடங்கியது. காற்றும் நன்றாக வீசிப் படர்ந்தது. காட்டாற்றின் ஊடே பயணிப்பது போலப் பிரமை. சுற்றுப்புற அழகையும் இரசித்த படியே பயணிப்பதில் ஏற்படும் ஆனந்தம் சொல்லும் தரம் அன்றோ!


அட இறந்கு துறை வந்துவிட்டதா! போட் புறப்பட்ட இடத்தில் மீண்டு நின்றோம். விரைவிலேயே வந்து சேர்ந்து விட்டது என எண்ணிக்கோண்டோம். தண்ணீரையும் போட்டையும் விட்டு வெளிவர மனம் வரவில்லை. 'வன்ஸ் மோர்' என அனைவரும் வாய்விட்டுக் கூறினர். வேறு இடங்களும் பார்க்கச் செல்ல வேண்டி இருந்ததால் மறுபடியும் செல்லாது நிறுத்திக் கொண்டோம்.

இருவர் செல்லும் self boating வசதி அங்கிருந்தது. Life jacket உடன் தாங்களே படகோட்டலாம். சின்னு மிது இருவரும் அதில் போக வேண்டும் என நட்டுப் பிடித்தார்கள்.




படகுகள் கவிழும் கதைகள் நினைவுக்கு வர டாட் மறுத்துவிட்டார். போட்டிங் செல்லாதது இருவருக்கும் மிகுந்த வருத்தம்தான். மறுமுறை எனச்சாட்டுக் கூறிவிட்டோம்.

லேக் அருகே குதூகலம் ஊட்டும் குதிரைச் சாவாரி செய்யலாம். சவாரிக்கு நேரம் இல்லை. முன்பு பல இடங்களில் செய்ததுதானே. குதிரையுடன் படம் மட்டும் எடுத்துக் கொண்டோம்.



குதிரை வண்டிச் சவாரியும் கிடைக்கிறது. திரைப்படங்களில் வருவது போல அழகிய வர்ணப் பூச்சு வண்டி. அதிகாலையில் சவாரி கிடைக்காததால் குதிரை புல் மேயமுயன்று கொண்டிருந்தது. பிரிட்டிஸ் கால குதிரைச் சவாரியை நினைவு ஊட்டுகிறது.

ராஜா ராணி போல பிரயாணம் செய்யலாம்.


குதிரையும் வண்டியும் அழகாக இருக்கிறதா?

சின்னுவிற்கு தான் எடுத்த படங்களில் இப்படம் ரொம்பப் பிடித்தது.

மாதேவி

Thursday, September 24, 2009

சீதா சிறை வைக்கப்பட்ட சீதா எலிய



ஆலய தர்சனத்துடன் ஆரம்பித்தோம் பத்தினித் தெய்வமான சீதையை இராவணன் கவர்ந்து சிறை வைத்திருந்த நந்தவனம் எனக்கூறப்படும் சீதா எலிய கோயிலை தரிசிக்கச் சென்றோம். சிறிய இக் கோவில் அழகில் அனைவரையும் மயக்க வைக்கும். நீண்டு உயர்ந்த மரங்கள் நிறைந்த மலையைப் பின்னணியாகக் கொண்டு இது அமைக்கப்பட்டுள்ளது.



சீதா அம்மனுக்கு இலங்கையில் உள்ள ஒரே கோயில் இதுதான்.

சிலர் உலகத்திலேயே இதுதான் சீதா பிராட்டிக்கான ஒரே கோயில் என்கிறார்கள்.

வேறு கோயில்கள் இருந்தால் சொல்லுங்களேன்.


முன்வாசலைத் தொட்டதுமே கோயிலின் பின்புறமுள்ள மலையின் இயற்கை வனப்பு, அருவியின் சலசலக்கும் சத்தம், குளிர் காற்று, ராமர் சீதா, இலட்சுமணன் மூலஸ்தான தரிசனம் என யாவும் சேர்ந்து அகமுகமும் குளிர அத்துணை இனிய அனுபவம் கிடைக்கப் பெறுகிறது.


கோவிலைத் தரிசிப்பதற்கு பிரதான பாதையிலிருந்து கீழே இறங்கிச் செல்ல வேண்டும். வழமையாக மலை மேலிருக்கும் கோயில்களை நோக்கி படிகளால் ஏறிச் சென்று அனுபவப்பட்ட எங்களுக்கு, இது புதுமையாக இருந்தது.

கோயிலிருந்து மேலும் இறங்கினால் பாய்ந்தோடும் அருவி வரும்.



கைகள் தானாகவே கூப்பி வணங்கி நிற்கின்றன. ஸ்தான மூர்த்திகளைச் சுற்றி வந்தால் கோயில் பின்புறம் அடைத்த தடுப்புக் கம்பிகள் ஊடே ஓடும் ஆறு சலசலத்து முதலில் அழைக்கிறது.

அதைப் பார்த்துக் கொண்டே பின்புறம் சுற்றி வந்தால் அனுமார் பாதம் பதித்த இடம் கற்பாறையில் தெரிகிறது.


அது மிகவும் தெளிவாகத் தெரியும் வண்ணம் சுற்றி வர மஞ்சள் நிறத்தை வட்டமாக அடித்துக் காட்டியுள்ளார்கள்.

அதன் அருகே ஆற்று நீர் அழகாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மூலஸ்தானத்தைச் சுற்றி வந்தால் இடது மூலையில் பாதம் பதித்த இடத்தைப் பார்த்தவாறே அனுமார் மூலஸ்தானத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரை வணங்கிவிட்டு இடது புறமாகச் சென்றால் படிகளின் ஊடே இறங்கி அவர் பாதம் பதித்திருக்கும் இடத்தை அடைந்து வணங்க முடியும்.

வணங்கிவிட்டு நீரோடை தவழ்ந்து ஓடும் அழகையும் மலையினின்று தழுவி வரும் குளிர் காற்றையும் உட்சுவாசித்துக் கொண்டே உடலும் உள்ளமும் சிலிர்க்க மேலே ஏறி வந்தோம். அனுமார் சந்நிதியைச் சுற்றி வணங்கினோம்.

நாங்கள் சென்ற நேரம் பூசை முடியும் நேரம் ஆதலால் விபூதி குங்குமம் வழங்கினார்கள். குளிருக்கு இதமாக சுடச்சுட சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாக அனைவருக்கும் கொடுத்தார்கள்.

சுவையில் அமிர்தம் போல இருந்தது.

சாப்பிட்டுவிட்டு, கையலம்ப திரும்பிய போது சிறிது சலசலப்பு. திரும்பிப் பார்த்த போது அனுமருக்கு துணையிருக்க வந்துவிட்டார்கள் இருவர். பயமற்று பக்தர்களிடையே வீரநடையில் ஓடித்திரிந்தனர்.



இராமர்,சீதா கல்யாணம் காடேறல் பொன்மானைப் பிடித்துத் தரும்படி வேண்டுதல் பரதன் பாதரட்சை பெறுதல் புஸ்பவாகனத்தில் இராவணன் சீதையைக் கவர்ந்து வருதல்,


மற்றும் அசோகவனத்தில் சீதை அனுமார் கணையாளியுடன் சீதையைக் காணுதல் எனத் தல வரலாறு வர்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.



தீயிட்ட வாலுடன் அனுமர் திரும்பிச் சென்ற மலை கறுத்த மரங்கள் கொண்டதாகவே காணப்படுகிறது. மண்ணும் கறுப்பாகவே இருக்குமாம்.



அழகிய சீதை ஆலயத்தை முன்பும் இரு தடவைகள் தரிசித்து இருந்தாலும் இயற்கையுடன் சேர்ந்த கோயிலின் வடிவ அமைப்பு மீண்டும் மீண்டும் சென்று தரிசிக்கத் தூண்டுகிறது.

கோயிலைத் தாண்டிச் சென்றால் ஹக்கல கார்டினை அடையலாம். இம் முறை நாங்கள் ஹக்கல செல்லாது ஆலயத்துடன் திரும்பிப் புதிய இடங்கள் பார்ப்பதென தீர்மானித்து இருந்தோம்.

ஆயினும் கோயில் வாசலுக்கு எதிர்ப்புறமாக பூங்கன்றுகளின் விற்பனைச் சாலை ஒன்று உள்ளது. அதில் நுழைந்தோம்.


நிறம் நிறமாக, வெவ்வேறு விதமான பூ மரங்கள். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது.


கொழும்புச் சுழலுக்கு ஏற்றதாக ஓரிரு செடிகளை வாங்கிக் கொண்டோம்.


நாம் வாங்கியதில் இதுவும் ஒன்று. சிறிய செடி. பச்சையாகக் காய்க்கும். பின் மேலுள்ளவாறு ஓரேஜ் கலராக வரும்.

கொண்டு வந்தது ஒரு மாதமாகவும் கருகிவிடாமல் இன்னும் உயிரோடு இருப்பதே சந்தோசமாக இருக்கிறது.


மாதேவி

Saturday, September 19, 2009

ஹொலிடே கொண்டாட்டம் 2

தலவாக்கலை நகர் நெருங்கியது மனதும் சிலு சிலுத்துப் பொங்குகிறது. ஆம் சில்லெனக் குளிர் மேலைத் தழுவ எதிரே அருவியினின்று பாயும் நீரைக் கண்குளிரக் கண்டதும் வேறென்ன செய்யும்?





கற் பாறையினின்று கொட்டும் சென் கிளயர் எனும் சிறிய அருவி. சென் கிளயர் பள்ளத் தாக்கில் தெரிகிறது வெண் பால் போன்ற அருவி.



அருகே பிரமாண்டமான அழகிய தோற்றத்துடன் காட்சி தரும் St Clares Tea Factory. . மத்திய கால சுவீடிஸ் பாணியில் கட்டப்பட்ட இந்த Mlesna Tea Castle பக்டரி அழகா எதிரே இருக்கும் அருவி அழகா? கிறங்கி நிற்கிறோம்.
உலகப் புகழ் பெற்ற Mlesna Tea இங்குதான் உற்பத்தியாகிறது. வாயிலில் அந்தக் காலத்தில் தேயிலை கொழுந்துகளை அவிப்பதற்கான பென்னம் பெரிய பொயிலர் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.


ஒன்றுக்கு ஒன்று அழகில் போட்டி போடுவனவாய் இவையெல்லாம் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

சுற்றுலாவின் படங்கள் யாவும் சின்னு 'கிளிக்'கியதே.

படத்தின் மேலே கிளிக்குங்கள் காட்சிகள் அழகாக முழுமையாக விரிந்து தெரியும்.

இந்தப் பக்டரி அருகே ஒரு நீண்ட பாலம். அதில் நின்றுதான் மேற் கண்ட நீர் வீழ்ச்சியைப் பாரத்தோம்.

சற்றுத் தூரம் செல்ல சலசலக்கும் டிவோன் (Devon Fall) என்னும் மற்றொரு நீர் வீழ்ச்சி.


கண்ணையும் மனத்தையும் கொள்ளை கொள்ளும் அழகுடன் சோ என்ற இரைச்சலுடன் குன்றின் உச்சியிலிருந்து கொட்டி கற்பாறைகளில் விரைந்து பாய்ந்தோடி வருகிறது.

மழைக்காலத்தில் நயகரா நீர் வீழ்ச்சி போன்று கொட்டிப் பாயும் என இங்குள்ளோர் வர்ணிக்கிறார்கள். அவர்களும் நயகரா நேரில் பார்த்ததில்லை. நானும் பாரத்ததில்லை. நீங்கள் கூறுங்கள்.

இவை காணும் தோறும் குதூகலத்தை அள்ளி வழங்குகின்றன. இயற்கையின் படைப்பில் இவ்வளவு அற்புதங்களா?

சிந்தனையுடன் ரசிக்க வைக்கிறது. இயற்கையின் உவகை எம்மையும் தொற்றிக் கொண்டு மனத்திற்கு இதத்தைக் கொடுப்பதில் வியப்பில்லை.

இருபுறமும் பச்சைப் பசேலென பரந்து விரிந்த மலைச் சரிவின்; ஓரமாக கிளை பரப்பி விரிந்து நின்ற மரத்தில் சிவப்பு நிறப் பூக்கள் பூத்துக் கொட்டுகிறது.

கண்ணைப் பறித்துத் திரும்பிப் பார் பார் என அழைக்கிறது. இவற்றையெல்லாம் பார்த்து மனம் நிறைந்து மகிழ்ச்சி கொள்ள ஹெயர் பின் வளைவுகளுடாக உயர்ந்து சென்று கொண்டிருந்தது பாதை.

அடுத்து அழகு தேவதையின் தோற்றத்தில் அழகிய நுவரெலியா நகர்.


பிரிட்டிஸ் காலக் கட்டிடத்தில் நுவரெலியா போஸ்ட் ஓபீஸ் காண்போரை மயக்க வைக்கிறது. ஐரோப்பிய கட்டிடக் கலைப் பாணியில் எழுந்து நிற்கிறது

சற்றுத் தூரம் சென்றதும் பிரமாண்டமான கிரான்ட்ஹோட்டல்.


வெளி நாட்டுப் பயணிகளுக்கும் பணம் செழித்தவர்கள் தங்குவதற்குமானது. நாளொன்றுக்கு ரூம் வாடகை 15-20 ஆயிரத்தைத் தாண்டுமாம். இது நகருக்கே அழகைக் கொடுக்கிறது.

அருகே கிரான்ட் இன்டியன் ரெஸ்ரோறன்ட் அமைந்துள்ளது. இதுவும் அழகுதான்.

இவற்றை எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டே நகர்வலம் வந்தோம்.

நடுத்தர வர்க்கத்தினர் தங்கிச் செல்லக் கூடிய Angel Park எமது தங்கும் மடமாயிற்று.


இக் ஹோட்டலின் பின் புறம் நுவரேலியா நகரின் மையமாக விளங்கும் விக்டோரியா பார்க் அமைந்துள்ளது. ஹோட்டலின் ஒரு புறம் வீதிக்கு அப்பால் Good Sheperd Convent.

பயணப் பொதிகளை வைத்துவிட்டு உடலுக்கு இதமாக வெந்நீரில் நீராடி சிறிய வோக் செல்லத் தீர்மானித்தோம்.

இரவு 7.30- 8 மணி இருக்கும். குளிர் அதிகரித்து விட்டதால் நகர் அடங்கத் தொடங்கி விட்டது. வீதியில் ஓரிருவர் நடந்து சென்றனர். வாகனங்கள் சில ஓடிக் கொண்டிருந்தன. 15-20 நிமிட நடை தூரம் சென்று அத்தியாவசிய சில பொருட்களை வாங்கிக் கொண்டு ரூம் திரும்பினோம்.

இரவுக் குளிரில் ஜில் என்ற காற்றின் ஊடே வீதியில் நடந்து செல்வதில் சுகம் இருக்கத்தான் செய்தது. யாழ்ப்பாணம் கொழும்பு என வெப்பப் பிரதேசத்தில் வாழும் எங்களுக்கு ஓரிரு நாட்கள் மட்டும் தங்குவதால் குளிர் சுவாத்தியம் மனதுக்குப் பிடித்துப் போய்விடுகிறது.

தொடர்ந்தும் பல வருடங்களாக குளிரிலேயே வாழும் நிலையில் வாழ்க்கைப் பிரச்சனைகள் இருக்கலாம் என்பது லயன் வீடுகளைப் பார்த்ததும் புலப்பட்டது.

அதிகாலை ஆறு மணியளவில் எழுந்து பார்த்த போது நகரம் பனி மூடலுக்கு ஊடாக அமைதியாகக் காட்சியளித்தது.


மேல் மாடி ரூமின் முன்புற யன்னலூடாக நோக்கிய போது அடுத்து இருந்த நிலப்பரப்பில் லீக்ஸ் நாட்டப்பட்டிருந்தது. மரங்களின் இடையே பறவைகளின் சேதாரம் இல்லாது இருக்கப் போலும் சிறிய காகிதக் கொடிகள் நாட்டப்பட்டிருந்தன.

மிகுந்த குளிரிலும் பல்கணியில் சென்று ரசித்தோம்.

வீதியில் சன நடமாட்டம் இல்லை. மழை சிறியதாக தூறத் தொடங்கியிருந்தது. தடித்த கம்பளி கோட்டுடன் ஓரிருவர் குளிர் துரத்த விரைந்து சென்றனர்.

முழங் காலுக்கு கீழ் குளிர் வெடவெடக்க, வெள்ளை யூனி போர்ம், சூஸ் சொக்ஸ் அணிந்த சின்னப் பெண்கள் ஏ.எல் சோதனைக்காக குளிரிலும் புறப்பட்டிருந்தார்கள்.

ஹோலுக்கு வந்து மறுபுறம் உள்ள யன்னல் ஊடே பார்த்த போது அடுத்துள்ள நிலத்தில் கிறீன் கவுஸ் அமைக்கப்பட்டிருந்தது.



உள்ளே அழகிய செடிகள் பூத்துக் குலுங்கின.

வெளி நிலப் பரப்பில் சிகப்பு மொட்டுக்கள் விரித்தாற் போல் சிறியதாய் பீற்ரூட் செடிகள் முளைத்திருந்து அழகில் மயங்கியவரை எல்லாம் சாப்பிட வருமாறு அழைத்தன.

சின்னுவிற்கும் மிதுவுக்கும் ஒரே கொண்டாட்டம்தான். நான் முந்தி நீ முந்தி எனப் படங்கள் எடுத்து கிளிக்கிக் கொண்டார்கள்.

எட்டு மணியளவில்தான் குளிருக்கு இதமாகத் தேநீர் கிடைத்தது. நடுஇரவு முதல் Electricity Failure ஆனதால் Electric kettle வேலை செய்யவில்லையாம்.

காலைக் குளியல். குளிரில் தயங்கிய போதும் வெந்நீர்க் குளிப்பு உடலுக்கு இதமாகத்தான் இருந்தது.

குளிப்பு முடிந்ததும் சாப்பாட்டு மேசை வரவேற்றது. சான்ட்விச் தவிர மற்றதெல்லாம் எமது வழமையான உணவுகள்தான். மெத்தென்ற வெள்ளை இடியாப்பம், மஞ்சள் சொதி, இடி சம்பல் கிழங்கு மசாலா என ராஜீ கொண்டு வந்து வைத்தான்.

இடிசம்பல் மாத்திரம் சிங்களப் பக்குவம். ருசியோ ருசி. ரெசிப்பி என்னவெனக் கேட்க வைத்தது. வயிற்றை நிறைத்துக் கொண்டு வாகனத்தில் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம்.

மாதேவி