எத்தனை எத்தனை ஓசைகள்! இங்கு படைத்தாய் மனிதா! இத்தனையும் பிரசவித்து முளைத்தெழும் தொடர் மாடிப் புதுமனையில் பேச்சுக்கும் துணையின்றித் பேரோசைகளின் மௌனத்துள் தனிமையில் உறையும் நான்.
பாவித்து வந்த மூக்குக் கண்ணாடியை பவர் போதவில்லை எனப் புதிதாக ஒப்ரீசியனிடம் (Optician) புது மூக்குக் கண்ணாடி வாங்கி வந்தார் அப்பா.
வாங்கிய நாள் முதல் அதற்கு ராஜபோக மரியாதைதான். அழகான வெள்ளை பிளாஸ்டிக் பெட்டியின் அடியில் அடுக்கிய லினன் துணியின் மேல் மிகவும் அலங்காரமாக ஆடாது அசையாது வீற்றிருந்தது கண்ணாடி.
அத்துடன் பாதுகாப்பு போதாது என்று பிரீவ் கேசின் உள்ளும் பூட்டி வைத்துவிட்டார். மாதக்கணக்கில் அங்கு அடைக்கலம் புகுந்திருந்தது அது.
இடையே இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை கண்ணாடியைப் போட்டுப் பார்ப்போம் எனக் கூறுவார். ஆனால் பலநாட்களாக அது வெளியே வந்ததை நாம் காணவில்லை.
ஓரிரு மாதங்களின் பின் கவனமாக ஒரு நாள் வெளியே எடுத்து மிக அவதானமாக ஒரே ஒரு தடவை போட்டார். ஓரிரு நிமிடம் கழிந்திருக்காது. 'இது இப்போதைக்கு சரிப்பட்டு வராது. பிறகு போட்டுப் பார்ப்போம்' என்று கூறியவர் கண்ணாடிக்கு நோகாமல் கழற்றி பெட்டியுள் தூங்க வைத்து விட்டார்.
அடிக்கடி முருங்கை மரத்தில் வேதாளம் ஏறிய கதை தொடர்ந்தது.
இறுதியில் கண்ணாடியார் வெளியே வந்து விட்டார்.
அன்றிலிருந்து தொடங்கியது சனிப் பெயர்ச்சி.
எங்களுக்கு இந்த சனியில் எல்லாம் என்றுமே நம்பிக்கை கிடையாது. ஆனால் அப்பாவின் கண்ணாடி பட்ட பாட்டிற்குப் பிறகு சனியின் ஆட்டமும் உண்டோ என்று எண்ணத் தோன்றியது.
கண்ணாடியார் பாவனைக்கு வந்த மறுதினமே, 'ஆடிக்கொண்டு நிற்கிறார். வழுகிக்கொண்டு வாறார்' என்றெல்லாம் குறை.
இறுக்க வேண்டும் என ஒப்டிசியனிடம் சென்று சரிபார்த்து வந்தார்.
ஒருமாதிரி சரியாகிவிட்டதே என ஆறுதலில் இருந்த எங்களுக்கு 4-5 நாட்களில் மீண்டும் தொடர்ந்தது சனிப்பெயர்ச்சி.
'மூக்கால் இறங்கி வருகிறதே' என்று சொல்லிச் சொல்லி மேலே தள்ளிக் கொண்டே இருந்தார்.
அப்பப்பாவின் மூக்குத் தேய்ந்துவிடுமோ என்று மகள் பயந்தாள்.
ஒரு சில நாட்களுக்கு மட்டுமே இவ்வாறு தொடர்ந்தது.
மீண்டும் புறப்பட்டார்.
வளைத்து நெளித்து சரிபார்ப்பித்து வீடு மீண்டார்.
வந்ததும் 'ஒரளவு சரி' என்றார்.
இருந்தும் அப்பாவின் முகத்தில் சிரிப்பைக் காண முடியவில்லை.
'உவனுடைய கண்ணாடி சரியில்லை' என்று இடையிடையே புலம்பிக்கொண்டே இருந்தார்.
இவ்வாறு ஓரிரு வாரம் சென்றது. அப்பாவின் கண்ணாடியை நாங்கள் மறந்தே போய்விட்டோம்.
'ஓடி வாருங்கோ' என்று மகள் எங்களைச் சத்தமாக நேற்று அழைத்தாள்.
அப்பாவின் அறைக்குள் இருந்துதான்.
என்னவோ ஏதோ என ஓடிச் சென்று பார்த்தால் மகள் காட்டிய மேசையில் ஹெலிக்கொப்டர் வடிவில் இருபுறமும் செட்டை வைத்துப் பறக்கத் தயாராக இருந்தது மூக்குக் கண்ணாடி.
அப்பாவின் அறை வீட்டில் உள்ள அனைவருக்கும் நூதனசாலையானது.
செட்டையைப் பார்த்த எங்களுக்கு முதலில் வயிறு குலுங்கச் சிரிப்புத்தான். அப்பாவோ நூறு ரூபா கொடுத்து செட்டை பூட்டியதாக அழுவார்போலச் சொன்னார். காசு போனால் பரவாயில்லை கொம்பினால் எதுவும் பிரயோசனம் இருக்குமா?
அத்துடன் இது காதின் பின் பகுதியை அழுத்தி ஏதாவது புதுப் பிரச்சனையை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் எங்களுக்கு.
அப்பா இப்பொழுது கண்ணாடி போடுவதென்பது ஒரு நீண்ட செயற்பாடாகும்.
கூட்டுக்குள் கொம்பு மடிந்து கிடக்கும் கண்ணாடியைக் கவனமாக எடுப்பார். பின்பு இரு கொம்புகளையும் பறவைகள் சிறக்கு விரித்துப் பறப்பது போல வெளிப்பக்கமாக மடக்கி எடுப்பார். கண்ணாடியை முகத்துக்கு நேரே பிடித்து கொம்புகள் காதைக் குத்தாதவாறு கண்ணாடிக்குள் முகத்தை மெதுவாக நுழைப்பார்.
அப்பாடி முடிந்தது என்கிறீர்களா?
இல்லை! அதன் பின் வெளிப்பக்கமாக வளைந்திருந்து கொம்புகளை அழுத்தி காதுக்குப் பின்புறமாக இறுக்கிப்; பிடிக்குமாறு செய்வார்.
இவ்வளவும் செய்து முடியக் களைத்துவிடுவார். 'ஒரு ரீ' கண்ணாடி போட்ட களை தீர்க்க.
பார்த்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு அதற்கு மேல் களை வந்துவிடும்.
அப்பாவின் கண்ணாடி சிந்திக்க வைக்கிறது.
ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் என்பார்கள்
போடத் தெரியதவனுக்கு கண்ணாடி லூஸ் என்று நீங்கள் கேட்கிறீர்களா?
உங்கள் யாருக்காவது கொம்புக் கண்ணாடி போட்ட அனுபவம் உண்டா?
இது ஒரு சிற்றாறு என எண்ணாதீர்கள். வரண்ட யாழ் மண்ணின் ஒரு வீதி இது. மழை வெள்ளத்தால் ஆறுபோல காட்சியளிக்கிறது. கோண்டாவிலில் உள்ள ஒரு வீதிதான் இது. 2008 நவம்பர் மாதத்தில் ஒரு நாள் அவ்வாறு காட்சியளித்தது.
உலக தண்ணீர் தினம் எதிர்வரும் மார்ச் 22ல் வருகிறதாம். அதனை நினைவூட்டுமுகமாக பதிவுகள் இடுமாறு வின்செனட் கேட்டிருந்தார்.
உலக தண்ணீர் தினத்தின் 2009 அதிகாரபூர்வமான வலைதளத்தின் இணைப்பு:- http://www.unwater.org/worldwaterday/flashindex.html
யாழ்மண் வரட்சிக்குப் பேர்போனது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் மட்டும் மழை கிடைக்கும். ஆயினும் ஏனைய நாட்களிலும் கிணற்றின் மூலம் நீர் கிடைக்கும்.
இப்பொழுது தண்ணீர் பம்புகள் மூலம் அதிகளவு நீர் இறைக்கப்படுவதால் நிலக்கீழ் நீர் உவராக மாறிவருகிறது. இதனைத் தடுப்பதற்கு பாரிய முயற்சிகள் எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. போர்ச் சூழலால் எந்தவித அபிவிருத்திகளும் கிடையாது. இந்தநிலையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் பெய்த கடும் மழையால் யாழ் குடாநாடே தவித்தது. வயல்வெளிகளில் வெள்ளநீர் நிரம்பிக் கிடக்கும் படம் மேலே உள்ளது. மேலே உள்ள இரண்டு படங்களும் துவாரகனது.
இந்த மழையின் தாக்கம் பற்றி மேலும் படிக்க கீழே சொடுக்குங்கள். http://www.inllanka.com/infonation/news/more_news.asp?ty=lo&id=5608
எங்களுக்கெல்லாம் தொடர் மாடிவீடு ஒன்றில் வீடு கிடைத்தவுடன் ஒரே குதூகலம். இனிமேல் வேலை சற்றே குறைவு. சிறிது ரெஸ்ட் கிடைக்கும்.
ஹாயாக இருக்கலாம். மிக்க எதிர்பார்ப்புக்களுடனும் குதூகலத்துடனும் குடி புகுந்தோம்.
காலை அவசரத்தில் முற்றம் கூட்டும் வேலை இல்லை. உள்வீட்டை மாத்திரம் ஒரு தட்டு தட்டினால் சரி. மண் கூட வராது. வெறும் தூசிதான்.
சுதந்திரமாக கேட்பார் யாருமில்லை என்றாற் போல தன்போக்கில் வளர்ந்திருக்கும் பூமரங்களையும் புல்லையும் அடிக்கடி வெட்டி துப்பரவாக்கி அழகுபடுத்தும் வேலையும் கிடையாது. காற்றில் அடித்து வரும் பக்கத்து வீட்டு மாவிலைகளையும் சொப்பிங் பைகளையும் பொறுக்கத் தேவையில்லை.
ஒரே ஜாலி. கனவுகள் ஏராளம்.
ஒவ்வொரு படிபடியாக முழங்கால் துவளப் படியேறும் துன்பம் இல்லை. சொகுசு லிப்ட் சவாரி. ஏழாம் மாடியின் மொட்டைமாடி வெளியில் நின்றால் கொழும்பு மாநகரம் முழுவதுமே கண்களுக்குள் சிறையாகும்.
கனவுகள் எல்லாமே நன்றாகத்தான் இருந்தன.
இன்று காலை வழமைபோலப் பொழுது விடிந்தது.
மார்க்கற் சென்று மரக்கறிகள், கீரை, பழங்கள் வாங்கிக் கொண்டு காலாற மெதுநடையில் திரும்பி எங்கள் வீதியால் வந்து கொண்டிருந்தேன். வழியில் எங்கள் மாடி மனையில் வசிக்கும் இரு பெண்கள். எனது கைவலிக்கத் தொங்கும் மரக்கறிப் பைகளைப் பார்த்துவிட்டு ஒரு சிறு சிரிப்பு.
'இன்றைக்கு என்னென்று சமைக்கப் போறா' எனச் சிரித்தார்களோ?
விடயம் புரியாவிட்டாலும் அவர்கள் சிரிப்புக்கு எதிர்வினையாக என் முகத்தில் பதில் முறுவல்.
'தண்ணி நின்றுவிட்டது. மோட்டார் வேலை செய்யவில்லை' என குறும்புச் சிரிப்புடன் அவர்களிடம் இருந்து பதில் வந்தது.
வந்த சிரிப்பு எங்கே போனது என்றே தெரியவில்லை.
மெதுநடை குதிரை நடையாக விரைந்தது.
எமது வீடு கீழே முதல் மாடியில். அடித் தண்ணியாவது வரும். அதையாவது பிடித்து இண்டையப்பாட்டை முடிப்பம்.
கதவு திறந்ததும் திறவாததுமாக குசினியை நோக்கி ஓடினேன். சமைக்கத் தண்ணி வேண்டுமே. பைகளை ஒரு ஓரமாக வீசி எறியாத குறையாக வைத்துவிட்டு குழாயைத் திருகினேன். நல்ல காலம் தண்ணீர் லேசாக வந்து கொண்டிருந்தது. மதியம் சாப்பிட வரும் மனுஷனுக்கு, பாடசாலையால் வரும் பிள்ளைகளுக்கு சாப்பாடு தயார் படுத்திவிடலாம். சற்று நம்பிக்கை பிறந்தது.
பாத்திரம் ஒன்றில் ஒழுகும் நீரை நிறைய விட்டுவிட்டு பாத்ரூமை நோக்கி பாய்ந்தேன. மார்பிள் தரையில் வழுக்கி விழாத குறையாக. வாளியை எடுத்து குழாயைத் திறந்து வைத்தபோது வயதான கிழவனின் வாயிலிருந்து எச்சில் ஒழுகுவதுபோல நீர் சிந்தியது. கிடைப்பது மிச்சம் என எண்ணியபடி மீண்டும் குசுனிக்கு விரைந்தேன்.
பாத்திரத்து நீரை ஒரு துளியும் சிந்தாது பக்குவமாக எடுத்து வைத்துவிட்டு இன்னொரு பாத்திரத்தை நிரப்பலுக்காக வைத்தேன். அடுத்த பாத்ரூமை நோக்கி ஓடினேன். வாளியை வைத்தேன். குழாயைத் திருப்பிவிட்டேன். மீண்டும் நீர் நிறைந்து கொண்டிருக்கும் முதல் பாத்ரூமை நோக்கி ஓடினேன். அப்பாடா! வாளி நிறைந்திருந்தது. தப்பித்தேன்.
சற்று நிம்மதி. முகம் கழுவவும், பாத்ரூம் போனால் ஊற்றவும் தண்ணி போதும்.
மறுபடி குசினி நீரை எடுத்து வைத்து பானை ஒன்றை வைத்து நிரப்பத் தெடங்கினேன். இப்பொழுது குசினிக் குழாயில் மட்டும் தண்ணீர் வந்தது. பாத்ரூமில் அடியோடு தண்ணீர் ஓடும் சத்தம் இல்லை.
குசினிக்குள்தான் ஒழுகிக் கொண்டிருந்தது.
'உங்களுக்குத் தண்ணீர் வருகிறதா எனக்கு இல்லை' நிமிர்ந்து பார்த்தேன். தண்ணி ஓடும் சப்தம் கேட்டுவிட்டது போலும்.
மேல் வீட்டுப் பெண்மணி தனது வீட்டிலிருந்து எமது குசினிப் பைப்பை நோக்கியவாறு கேட்டார். கண்ணாடி யன்னல்களால் இப்படியும் பல இன்பங்கள்!
வீட்டில் சமைப்பதிலிருந்து சகலமும் மேல் மாடியினருக்கு விருந்துதான் போலும்.
வேண்டாம் தொல்லை எனத் திரைச்சீலையைத் தட்டிவிட்டால் இருட்டு மூடிவிடும்.
தடார்! தடார்!
ஒழுகும் தண்ணீர் ஓசை காணாமல் போய்விட்டது.
வாயிற் கதவு தட்டப்படும் ஓசைதான்.
வந்து திறந்தால். 5 லீட்டர் கானுடன் மேல்வீட்டுக்காரி!
'நான் கொஞ்சம் தண்ணி பிடிக்கிறேன்' எனது பதிலுக்குக் காத்திருக்காது குசினியை நோக்கி விரைந்தார்.
எனது பானையை ஒரு புறம் தூக்கி ஒதுக்கி வைத்துவிட்டு மிச்ச கொஞ்சத்தையும் தான் பிடித்துக் கொண்டு சென்றுவிட்டா.
அவவிற்கும் குழந்தைகள் இருப்பது நினைவு வந்தது.
என்ன கூறுவது எனத் தெரியாத நிலையில் நான். மிகுதியாக வந்த நீரைப் பிடிக்க. பானையை மீண்டும் வைத்தேன். பயறு சோயா சாப்பிட்டவனுக்கு வாய்வு பறிவது போலச் சத்தம் எழுந்தது.
காற்றுத்தான் வந்து கொண்டிருந்தது!.
கழுவிச் சுத்தம் செய்ய அதிக தண்ணீ தேவைப்படும் கீரை பிரிட்ஜில் தஞ்சம் புகுந்தது என்று சொல்லத் தேவையில்லை.
மரக்கறிகளுடன் சமையலை ஒருவாறு முடித்தேன்.
கீழே ஏதேதோ சத்தம் மோட்டர் திருத்துகிறார்கள் போலும்.
மதியத்தின் பின்பு சற்று தண்ணீர் வருவது போலத் தோன்றியது. இதுவும் ஒரு வாளியுடன் முடிந்து விட்டது.
அடடா தண்ணி வருமா வருமா என அரற்றியபடியே பொழுது கழிந்தது.
அடிக்கடி குழாயைத் திருகிப் பார்ப்பதில் நேரம் கடந்தது.
குழாய்தான் அழுதது.
அன்று வேறு என்ன வேலை.
மாலையில் திருகினால் மீண்டும் ஒரு வாளி மட்டும்.
இரவு உணவு பச்சை மிளகாய், வெங்காயத்துடன். மதியச் சோற்றுக்கு தண்ணீர் ஊற்றிச் சாப்பிட வேண்டி நேரவில்லை!
பச்சை மிளகாய் வெங்காயத்தை வெட்டிப் போட்டு ரொட்டி சுட்டு, இடிசம்பல் வாழைப்பழத்துடன் கழிந்தது.
அதிகாலையை யோசித்ததுமே பயம் பற்றிக் கொண்டது. ஒவ்வொருவராக ரொயிலட் போய்வர எப்படிச் சமாளிப்பது?
இரவே வாளிகளுடன் கீழே சென்று தரையோடு தரையாகப் படுத்திருந்து மிகவும் சிரமத்துடன் சம்மிலிருந்து நீரை வாளியால் கோலி எடுத்து, லிப்ட்டின் உதவியுடன் மேலே கொண்டு வந்தார் எங்கள் வீட்டுக்காரர்.
அதிகாலையும் புஷ் புஷ் சத்தம்தான்!
தண்ணீர் குழாயில் வரவேயில்லை.
வாளியில் இருந்த நீரில் உடலைக் கழுவிக் கொண்டு கணவர் பிள்ளைகள் சென்று விட்டார்கள்.
காலை 9 மணியளவில் நீர் வரத் தொடங்கியது. மீண்டும் நிரப்பல்கள்!
இவை முடித்து குளியல் தொடங்க தண்ணீர் குறையத் தொடங்கியது. அரைவாசிக் குளியலுடன் குழாயில் காற்றுத்தான் வந்தது. Dry Cleaning செய்யாத குறை.
ஒருவாறு முடித்துக்கொண்டு வெளியே வந்தால் மழை சோ எனக் கொட்டிக் கொண்டிருந்தது.
வெளியே மழை கொட்டுகிறது. குழாயில் காற்று.
சிமென்ட் சுவர்களுக்கள் சிறை. யன்னலை அடைத்தால் மூச்சுவிடக் காற்று இல்லை. பைப்பைத் திறந்தால் ஓசையுடன் வருகிறது.
என்ன வாழ்க்கை! சலித்துவிட்டது.
வசதிகளைத் தேடி இயற்கையைப் புறக்கணித்தோம்.
இயற்கை அள்ளிக் கொட்டுகிறது.
வசதியில் சற்று தடங்கல் ஏற்பட்டாலும் வாழ்வே நரகமாகிவிடுகிறது.
தொடர் கதைகள் தொடர்கின்றன. வெற்றுப் பிளாஸ்டிக் ஐஸ்கிறீம் கோப்பைகள் தயிர் கோப்பை, இட்லிப் பாத்திரம், குக்கர், ரைஸ்குக்கர் பாத்திரம் என சமையல் மேடையச் சுற்றி யாவரும் 'கொலர் அப்பில்' தண்ணீரில் மூழ்கிவிட்டார்கள்.
அவர்களுக்கும் வெளிவீதி உலா மவுசு கிடைத்துள்ளது.
தொடர்கதை முடிவது எப்போ?
என்றாவது முடிவது சாத்தியமா?
மோட்டர் திருத்தி விட்டார்கள்.
திருப்திதான். ஆனால் !
நீர்த் தேக்கங்களில் நீர் குறைந்து வருகிறது. விரைவில் 'வோட்டர் கட்' வரப்போகிறது. ரூபவாஹினி செய்தி சொல்கிறது.
நித்திய கண்டம்தான்.
நாய்க்கு நடுக்கடல் போனாலும் நக்குத் தண்ணீர்தான்.
கொழும்பில் மழை. குழாயில் காற்று
குழாயடிச் சண்டைகளை ஏளனமாகப் பார்த்த காலம் மலை ஏறப்போகிறதா? அதன் தாற்பரியம் இப்பொழுது எங்களுக்கும் புரிந்துவிட்டது.
இரண்டு மூன்று நாட்களாக பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து முதுகு வலி வந்து மருந்துகள் எடுத்தது பிறிதொரு கதை.
கிணறு, ஆறு, குளம் என இயற்கையை விட்டு செயற்கைக்கு மாறியதால் வந்த வினைகள்தான் இவைகளா? .......
இன்னும் இன்னும் மாம்பழங்கள் செம்பாடு, அம்பலவி வெள்ளைக் கொழும்பு, விலாட் கிளி மூக்கு என்றெல்லாம் இன்னும் இன்னும் எத்தனையோ..
பச்சைதின்னி தெரியுமா? ... கல்லில் குத்தி உடைத்தெடுத்து கார உப்பு கலந்தெடுத்து வாயிலிட்டால் சுவை என்ன? குட்டீசுகளிடம் கேளுங்க..
வரண்ட மண் யாழ்ப்பாணம். மழையைக் காண முடியாது. என்றபோதும் கெட்டியான மாம்பழ விளைச்சலுக்கு உலகெங்கும் பிரபலம்..
அவற்றின சுவை சொல்லி மாளாது வாரீங்களா ஒரு ரிறிப் அடிப்போம். சுவைத்து மகிழ்வோம்.. மாம்பழ விலை இருபத்தைந்து போய்வர பிளெனுக்கு இருபத்தைந்தாயிரம் மட்டுமே...
25- 30 வருடங்கள் பின்நோக்கிப் பார்த்தோமானால் அப்பொழுதும் இந்த இதே வயிறுதானே?
அப்பொழுது ஆசைகள் ஓரளவு கட்டுக்குள் இருந்தன. ஆசைப்படுவதற்கும் வாங்கிக் குவிப்பதற்கும் படோபடப் பொருட்கள் அதிகம் இல்லை. இப்பொழுது கடை கொள்ளாப் பாவனைப் பொருட்கள்? டிஜிட்டல் ரிவி, டிஜிட்டல் கமரா,விடியோ, மொபைல், கொம்பியூட்ர், டிவீடி, மிக்ஸி…
வாழ்க்கைச் செலவோ ஜெட் வேகத்தில் மேலே சென்று கொண்டிருக்கிறது. ஆனால் ஆசை அதைவிட வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கிறது.
ஓரிரு தலைமுறைகள் தாண்டுவதற்கிடையில் வாழ்க்கை முறையில்தான் எத்தனை மாற்றங்கள்? பிறந்த ஊரை விட்டுப் பிரிந்தோம். வேலை செய்யும் நகரை நோக்கி நகர்ந்தோம். நகரின் நெருங்கிய நொருங்கிய, சூழல் மாசடைந்த வாழ்க்கையே இசைவாகிவிட்டது. இயற்கை கிராமச் சூழல் கனவாகிவிட நகரச் சூழலின் தொடர் மாடிகளுக்குள் சிறையானோம்.
சூரியனைக் காண்பது பலருக்கு வீதிக்கு இறங்கினால்தான் கை கூடும். விடிவதும் சாய்வதும் மணிக் கூட்டைப் பார்த்துத்தான். இத்தகு வாழ்க்கைக்கு அனைவரும் பழக்கப்பட்டுக் கொண்டோம். நகரங்களில் பெரும்பாலும் அனைவரும் மாடிமனை வீட்டு வாசிகளாகிவிட்டோம்.
கிராமத்தில் வசிப்பதைவிட நகரங்களில் சில வசதிகளும் உண்டு. வசிப்பதற்கு அளவான அடக்கமான வீடுகள், கூட்டுவதும், துடைப்பதும் சுலபம். வீட்டு வேலைகள் குறைவு, உழைப்புக்கு ஒதுக்க வேண்டியது அதிகம்.
இருந்தும் அடிக்கடி கிராமத்தை நினைக்கத் தோன்றும்.இலந்தைப் பழம் என்றொரு சொல். 2ம் வகுப்பு தமிழ்பாடப் புத்தகத்தில். பழவகைகள் என்ற பாடத்தில் வருகிறது. “இலந்தைப்பழமா அது எப்படி இருக்கும்” என்றுதான் கேட்கிறார்கள் குழந்தைகள். இதுதான் இலந்தைப்பழம் என்று எங்கள் பிள்ளைகளுக்கு இங்கு காட்ட முடியுமா? சந்தைக்குப் போனாலும் காணக் கிடைக்காது.
‘இலந்தைக் காணி’ சிறுவர்களாக நாங்கள் ஓடி ஆடி கிராமங்களில் திரிந்த போது அடிக்கடி விசிட் செய்யும் இடம். ‘இலந்தைக் காணி’ இது இடு பெயர். இப் பெயரில் ஒவ்வொரு ஊரிலும் பெரிய நிலப்பரப்புக்கள் இருந்தன. உள்ளே சென்றால் கொண்டாட்டம்தான்.
முள்ளுக் குத்தாவிடில்!
பத்துப் பதினைந்து இலந்தை மரங்களாவது இருக்கும். ஊர்ப் பிள்ளைகளைக் கேட்டால் எவரும் சொல்வார்கள். “இது சீனி இலந்தை, இது மாப்பிடியான இலந்தை, புளி இலந்தை, அது வேப்பங்காய் இலந்தை”.
இறுதியில் இருப்பது புழு இலந்தை.
ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு பெயர். அடுக்கிக் கொண்டே போவார்கள். பொறுக்கி வாயில் போடுவோம். மிகுதியை மடியில் கட்டி வந்தும் சாப்பிடுவோம்.
அந்தப் பழங்களின் ருசி, அந்தச் சூழல் இவை எல்லாம் எங்கள் குழந்தைகளுக்கு கிடைக்குமா? கூட்டிச் சென்று காட்டும் காலமும் மலை ஏறிவிட்டது.
இதே போன்றுதான் பனைமரம்; படத்தில் காட்டி “இதுதான் பனை. கிளை இல்லாதது” என்று பாடமாகக் கற்பிக்க வேண்டிய நிலை. ‘பேரதெனியா போடனிக்கல் கார்டனு’க்கு கூட்டிக் கொண்டு போய்த்தான் காட்ட வேண்டியுள்ளது. வடமராட்சி வல்லிபுர ஆழ்வார்; கோவிலுக்கு செல்லும் வழியில் கிளைப் பனைகளை பார்த்துப் பரவசம் அடைந்ததும் நினைவுக்கு வருகிறது.
இந்நிலையில் குழந்தைகளுக்காக நாமும் மரம் செடி நடுவோம்.
பனைமரமா நட முடியும்?
துளசிச் செடி, கற்பூரவள்ளிச் செடி, மிளகாய்ச் செடி, கருவேற்பிலை, தூதுவளை, நித்திய கல்யாணி என அடுக்கு மாடியாக இருந்தாலும் கூட ஓரிரு செடிகளையாவது வளர்க்கலாம் அல்லவா?.
காற்றின்றி, ஒளியின்றி நோஞ்சல் செடியாக வளர்ந்தாலும் கூட. வீட்டில் வளரும் ஓரிரு செடிகளிலிருந்து ஒட்சிசனையாவது பெறுவோம். காய்த்தால் பூத்தால் ரசிப்போம். உண்ண முடிந்தால் உண்போம். அதனின்று வரும் சிறு நலத்தையாவது பெற முயல்வோம்.
அத்துடன் குழந்தைகளின் இயற்கை அறிவையும் வளர்ப்போம்.
மெல்லுடல் ரீங்கரிக்கும் வீணையெனும் குரலோசை சிட்டெனப் பறக்கும் சுறுசுறுப்பு கண்டதும் காதல் பிறக்காதா?
பிறந்தது காதல் மயங்கினேன் அவளில் ஆயினும் ஏற்பாளா என்னை வெறுப்பாளா? சேரிக்கரையான் என
கண்ணால் காதல் பேச சென்றேன் அவளகம் தேடி பங்களாக்களின் வீதி வெற்று கோலாப் போத்தல்கள் சிதறிக் கிடந்தன அந்தஸ்தின் சின்னமா அகங்காரத்தின் முகமா?
மெல்லிடையாள் பின்நகர்ந்து களவாய்ப் பின்தொடர்நதேன் பட்டு மெத்தையில் சரிந்தாள் சோர்வாக பசிக் களையா அல்ல உண்ட களை எந் நாசியில் படர்ந்தது அவள் மேனியில் பிறந்த உணவின் நெடி
போஸாக்கு உணவு புரதமோ அளவிற்கதிகம் கொழுப்பிற்கும் குறைவில்லை பூரித்து மினுங்கியது அவள் முகம் பாதங்களும் கவர்ந்திழுத்தன
தினம் தினம் தொடர்ந்தேன் பாவம் என்றெண்ணினாளோ மோகத்தை புரிந்து கொண்டாளோ என் கருமேனியில் மயங்கினாளோ? காதலில் வீழ்ந்தாள்! கல்யாணமும் வேண்டுமென்றாள்.
விடுவேனா வாய்ப்பை பெண்வீட்டு மாப்பிளையானாலும் பரவாயில்லை மார்கழிக் கூதலுக்கு மெதுமெது மெத்தை அணைப்பதற்கு அவள். வாய் திறந்தால் வயிறு நிறையுமளவு உணவு. வேறென்ன வேணும்
திருமண நாள் விருந்தினர் பலர் கூடினர் அனைவருக்கும் இனிய பானம் வைன் கலரில் கண்ணுக்கும் கவர்ச்சி உடலுக்கும் தென்பு.. உற்சாகமும் கூட
சொகுசு பங்களாக்களில் கொழுத்த மனிதர்கள் மது பானங்களில் திளைத்தனர்.
பாடினோம் பறந்தோம் பாடிப்பாடிப் பறந்தோம். மறைவில் அவர்தம் மேனியில் படர்ந்தோம். வாயிடைப் பிறந்த மென் ஸ்ரோவால் உறிஞ்சினோம் அவர் தம் தமனிகளிலிருந்து மணநாள் விருந்தாயிற்று!
பாடுவோம் பறப்போம் எம் இனம் பெருக்குவோம்
பரப்புவோம் டெங்கு, சிக்கன் குனியா மலேரியா, யானைக் கால்நோய் இன்னும் பல.. பல நோய்கள் பெருக்குவோம்.