இலங்கை சிறிய தீவாக இருந்தபோதிலும் மலைகள், நீர்வீழ்ச்சிகள், நதிகள், காடுகள், சரணாலயங்கள், அழகான கடற்கரைகள் என இயற்கை வளங்கள் அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கின்றன.
நீரும் வனமும்
மகாசேனனால் கட்டப்பட்ட மின்னேரியா குளம் 4670 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட கடல் போன்ற பெரும் குளம் இது.
மகாசேன மன்னன்
மிகவும் கடின உழைப்பின் மூலமே இது கட்டப்பட்டிருக்கும் எனப் பார்த்த மாத்திரத்தில் தெரிகிறது.
இதனைக் கட்டி முடித்தபடியால் இவனுக்கு மின்னேரியாக் கடவுள் என்ற பெயரும் கிடைத்தது.
தூரத்தில் வெண் புள்ளிகளாக பறவைகள்
இதைத் தவிர மகாசேனன் ஏறத்தாள 16 குளங்களைக் கட்டுவித்து நீர்ப்பாசனத் துறைக்கு வித்திட்டுள்ளான்.
மின்னேரியாக் காடு, நீர் எனச் சூழல் இனிதாக அமைந்ததால் இயற்கையுடன் மிருகங்கள் வாழ ஏற்ற இடமாக அமைந்துவிட்டது. காடும் பசுமையாக இருக்கிறது.
காட்டுடனான எமது நான்கு ஐந்து மணி நேர வாழ்க்கைக்காக இரவுத் தூக்கத்தைக் கலைத்து எமது பிரயாணத்தை ஆரம்பித்தோம். கொழும்பிலிருந்து 4 மணிநேரப் பணயத்தில் ஹபரணையை அடைந்தோம். அதிகாலை 5 மணி அளவில்.
காட்டிற்குள் செல்வதற்கு திறந்த ஜீப்பொன்றை அமர்த்திக் கொண்டோம். உயர்ந்த ஜீப்பில் நாலுகால் மனிதர்களாகப் பாய்ந்து ஏறப் பழகிக் கொண்டோம்.
காட்டில் யானை ஜீப்பில் மனிதர்கள்
இனிய அதிகாலைப் பொழுதில் இதமாக குளிர் காற்று எம்மைத் தழுவிச் செல்ல ஜீப்பும் வேகத்துடன் பயணித்தது.
மேலே உள்ள இரும்பு பாறில் (bar) கைகளைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டோம்.
வாசலில் மின்னேரிய வனம் என்ற போர்ட்டுடன் அழகிய காட்டின் ஆரம்பமாக உயர்ந்த நெருங்கிய சோலைகள் தென்பட்டது.
உள்ளே சென்று பதிந்து ரிக்கெற் பெற்றுக் கொண்டோம்.ஒருவருக்கு எண்பது ரூபாவும் ஜீப்புக்கும் கமராவுக்கும் தனித்தனியாகப் கட்டிக் கொண்டோம்.
காட்டின் ஊடான பயணம் ஆரம்பமானது.
காட்டின் ஆரம்பம்
இருபுறமும் மரங்கள் நெருங்கி அமைந்திருக்க நடுவே குறுகிய மண்பாதை தொடர்ந்து செல்கிறது. ஓரிரு மைல்கள் சென்றதும் நெருங்கிய அடர்ந்த காடு தொடங்கியது. ஜீப் விரைந்து கொண்டிருந்தது.
நீலவானில் பறவைகள் சுதந்திரமாக கீக் கீக் கீதமிசைத்துச் சிறகடித்தன.
அதோ அந்தப் பறவை போல...
சடுதியில் ஒரு பக்கமாக அழகிய இந்திய தேசியப் பறவைகள் "Wait Wait" எனக் கத்தி வாகனத்தை நிறுத்திக் கொண்டோம்.
கிளிக்கியவர் கீழே. 'கொற கொற' எனக் கேவிக் கொண்டே விரைந்து ஒளிந்தன.
மறு பக்கம் திரும்பினால் தூரத்தில் யானை.
உள்ளே நிறையப் பார்க்கலாம் எனச் சொல்லி வழிகாட்டி அழைத்துச் சென்றார். விரைந்த வாகனத்தை திடீர் பிறேக் போட்டு காட்டினூடே காட்டினார்.
இலைகளை வளைத்து உண்டு கொண்டிருந்த அழகிய புள்ளி மான் கூட்டங்கள்.
பார்க்காத மான்
ஆ! என நாம் ரசிக்கவும் ஒரு நொடியில் விரைந்து காட்டினுள்ளே மறைந்தன. கிளிக்க முடியவில்லை.
மனிதர்களுக்கும் ஏனைய ஜீவராசிகளுக்கும் உயிர் வாழ்வதற்கு சுத்தமான நீர் மிகவும் அவசியம் என சிறுவயது முதலே படித்து வருகிறோம்.
நாம் பருகுவது சுத்தமான நீராக இருக்க வேண்டும்.
நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்து எடுத்த நீர் அல்லது பில்டரில் வடிகட்டிய நீர் குடிப்பதற்கு ஏற்றது.
குழாய் நீரை நேரடியாக எடுத்து அருந்துவதை நிறுத்த வேண்டும்.
நீரில் பக்றீரியாக்கள் இருப்பதால் டயரியா, டைபொயிட், கொலரா, மஞ்சள் காமாலை போலியோ, குடற் புழுக்கள், போன்ற நோய்கள் வரும் என்பதை நாங்கள் எல்லோரும் அறிந்திருக்கிறோம். ஆயினும் எத்தனை பேர் இதனை சரியாகக் கடைப்பிடிக்கிறோம்?
ஆனால் உலக சுகாதார ஸ்தாபனம் மேற் கூறிய நோய்களுக்கு மேலாக நீரினாலும் நீர் மாசடைவதாலும் பரவும் நோய்கள் என நீண்டதொரு பட்டியலையே தந்திருக்கிறது.
ஆபிரிக்க நாடுகளில் நீர் பற்றாக் குறையால் முகத்தை நன்கு சுத்தம் செய்யாததாலும், இலையான்கள் (ஈ) பெருகுவதாலும் ரக்கோமா (tracoma)நோய் ஏற்பட்டு குணப்படுத்த முடியாத பார்வை இழப்புகள் இன்றும் நடப்பது எத்தனை கொடுமை.
6 மில்லியன் மக்கள் ஏற்கனவே நிரந்தரப் பார்வை இழப்பிற்கு ஆளாகியிருக்கிறார்கள். மேலும் 146 மில்லியன் மக்கள் பார்வை இழக்கும் ஆபத்தை எதிர் நோக்குகிறார்கள்.
போதியளவு சுத்தமான நீர் கிடைக்காமையால் ஏற்படக் கூடிய ஆபத்திற்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்.
கிராமங்களில் வீட்டுக் கூரைகளின் பீலிகளை ஒட்டி கீழே பெரிய தொட்டிகள் கட்டி வைத்திருப்பார்கள். மழைக் காலத்தில் பீலிகளிலிருந்து விழும் நீர் தொட்டிகளில் நிரம்பி இருக்கும். பாத்திரங்கள் வீடு கழுவ, உடைகள் அலச, பூமரங்கள் பயிர்கள் நீர்ப் பாய்ச்சுவதற்கும், இந் நீரைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
மழை நீர் மிகவும் சுத்தமானது. அதில் இரசாயனப் பொருட்கள் கலக்க வாய்ப்பில்லை.
எங்கள் முன்னோர் நேரடியாகப் பெறும் மழை நீரை எடுத்து வைத்து தேநீர் தயாரிக்கவும் பருப்பு அவிக்கவும் பயன்படுத்துவார்கள்.
அவற்றின் தரமோ சொல்லி மாளாது.
ஏனெனில் எமது யாழ்ப்பாண நீர் பல பகுதிகளில் சற்று உவர்ப்பாக இருப்பதால் பருப்பு அவிவது குறைவு. தேநீரும் சற்று சுவை குறைவாகவே இருப்பதால் அவ்வாறு மழை நீரை பயன்படுத்தி சமையலை அசத்துவார்கள்.
மழை நீர் சேகரிப்பு என்பது கடலை அண்டியுள்ள உப்பு நீர் உள்ள பிரதேசங்கள், நிலத்தடி நீர் வளம் குறைவாக இருக்கும் பிரதேசங்கள், ஆழக் கிணறு ஊற்றுக்கள், வரண்ட பூமியில் உள்ளவர்களுக்கு மிகவும் பயன்தர வல்லன.
முன்னைய காலத்தில் குளம், ஏரி, கேணிகள் மழை நீரைத் தேக்கி வைத்து நீர் பாசனத்திற்கும், விலங்குகள் குடிப்பதற்கும் இருந்தன.
சலவைத் தொழிலாளர் தொழில் செய்வதற்கு என்றே தனியான குளங்களும் இருந்தன.
அத்துடன் வெள்ள நீர் கடலுடன் கலக்காது நிலத்தடி நீராகச் சேகரிப்பதற்கும் இவை அவசியமானவையாகும்.
நிலத் தட்டுப்பாடுகள் காரணமாக இருந்த கேணி குளங்கள் பல படிப்படியாக வீட்டு மனைகளாகவும், விளையாட்டுத் திடல்களாகவும் மாறியதை நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன்.
கோயில்கள் தோறும் குளம் வைத்திருப்பது எமது மரபு.
இன்றும் பெரும்பாலான குளங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இவற்றில் எத்தனை குளங்கள் சுத்தமாக இருக்கின்றன?
புனித நதிகள் யாவும் படும்பாடு சமயச் சடங்குகள் என்ற பெயரால் தொலைக்கின்றோம்.
உயிர் வாழ்வதற்குச் சுத்தம் முதலாம் பட்சம் சமயச் சடங்குகள் இரண்டாம் பட்சம் என்ற நிலையை எப்போ உணரப் போகிறோம்?
அணு மின்நிலையம், நூல் பனியன் தொழிற்சாலை, உலோகக் கழிவுகளை ஆறுகளில் கலக்க விடுவதால் மீன்கள் ஆடுமாடுகள் இறப்பதையும் அந்த நீரை பயன்படுத்தும் மனிதர்களுக்கு வரும் நோய்கள் பற்றியும் அன்றாடம் நிறையச் செய்திகளைத்தான் பத்திரிகைகளில் படித்துக் கொண்டிருக்கிறோம்.
"வெப்ப மிகுதியால் நீர்த் தேக்கங்களில் தண்ணீர் வற்றி விட்டது தண்ணீர் வெட்டு".
"குடி நீர் கிடைக்காமையால் மக்கள் பெரும் கஷ்டம்" என்ற செய்திகள் தொடர்ந்தபடிதான் இருக்கின்றன.
குடிநீருக்காக பல மைல் தூரம் குடத்துடன் நடந்து செல்லும் சனங்கள் எத்தனையோ பேர் கிராமங்களில் இருப்பதை இன்றும் காண்கிறோம்.
கழிவு நீரைப் பயன்படுத்தல்
உலகம் முழவதும் எத்தனை நாடுகள் நீர்ப் பற்றாக் குறையினால் துன்பப்படுகிறார்கள் என்பதை இங்குள்ள வரை படத்தைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
நீர் கிடைக்காமல் இருப்பது பரிதாபத்திற்குரியது. ஆனால் கிடைக்கும் நீரையும் சரியான முறையில் பயன்படுத்தத் தெரியாது எத்தனை நாடுகள் துன்பப்படுகின்றன.
கழிவு நீரை மீள் சுழற்சிசெய்வதை இப்பொழுது பல நாடுகள் செய்யத் தொடங்கியுள்ளன. வருடாவரும்1,500 cubic kilometresகழிவு நீர் உலகளாவிய பெறப்படுகிறது.
கழிவு நீரில் நோயை உண்டாக்கும் கிருமிகள் மட்டுமின்றி பல போசனைப் பொருட்களும் உள்ளன.
கிருமிகளை நீக்கினால் நல்ல பசளையைப் பெற முடியும். நீரை நீர்ப்பாசனத்திற்கும், மிகுதியை சக்தி உற்பத்திக்கும் பயன்படுத்த முடியும்.
வளர்முக நாடுகளில் 80 சதவிகிதமான கழிவு நீர்கள் சுத்தப்படாது வெளியேற விடப்படுகின்றன.
அதனால் பல விதமான நோய்கள் பரவுகின்றன. இவற்றை சரியான முறையில் சுத்திகரித்தால் பயிர்களுக்காவது போதிய நீர் கிடைக்கும்.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு கிடைக்கும் நீரையும் அளவுடன் பயன் படுத்துவோம். மாசு படுத்தாது பாதுகாப்போம். எதிர் காலத்தில் நீருக்காக ஏற்படப் போகும் பிரச்சனைகளைத் தடுப்போம்.
காடுகள் எரியூட்டலைத் தடுப்போம்.
இயற்கை எமக்கு அளித்துள்ள வளங்களை அழியாது பாதுக்காத்துக் கொண்டோமேயானால் பருவ மழைகள் நீர் வளம் குன்றாது. பூமியில் வெப்பமும் அதிகர்க்காது தடுக்கலாம்.
புவியைக் காத்து நாமும் வளம்பெறுவோம். வருங்கால சந்ததிக்கும் விட்டுச் செல்வோம்.
உலகத் தண்ணீர் தினத்திற்கான தொடர் பதிவுக்கு அழைத்த சந்தனமுல்லைகிளிக் பண்ணுங்கள் அவர்களுக்கு நன்றி.
இத் தொடரைத் தொடர்ந்தும் கொண்டு செல்ல எனது பதிவுலக நண்பர்களில் சிலரான
வீட்டின் பின் முற்றத்தில் கிணறு. அதை சுற்றி கமுக மரங்கள், வாழை மரங்கள். கருவேற்பிலை ஒரு புறமிருக்க அதற்கு சற்றே தள்ளி மாமரங்கள் இருபுறமும் நின்று சோலையாக இருக்கும். உச்சி வெயிலுக்கு குளிர்மையைத் தரும்.
கிணற்றை ஒட்டி பெரிய சீமேந்துத் தொட்டி.
இந்தத் தொட்டிதான் எனக்கு மிகவும் பிடித்தது.
எனது அக்கால சுவிமிங் பூல் அல்லவா?
அண்ணாமார்கள் கடல், குளம் எனக் நீந்தவும் குளிக்கவும் செல்வார்கள்.
எங்களுக்கு இதெல்லாம் கிடைக்காது.
லீவு நாட்களில் தொட்டியை நிரப்பிவிட்டு தொட்டியில் ஏறி இருந்து காலையும் கையையும் அடிப்பேன். எனது நீச்சல் அழகைப் பார்த்து கிணற்று நீரில் வந்த மீன்கள் தோற்றுப் போய் ஓடிவிடும்.
பாடசாலைகள், நூல்நிலையம், கோயிற் பணிவேலைகள் என ஊரின் முக்கிய வேலைகளில் முன்நின்று வந்த பிரபலமான ஒருவர்தான் எனது அப்பா.
மிகவும் அன்பானவர். அதே நேரம் கண்டிப்பையும் நல்லொழுக்கத்தையும் கடைப்பிடித்தவர். எங்களிலும் எதிர்பார்ப்பவர்.
சிறுவயதில் தந்தை தாயாரை இழந்து விட குடும்ப பாரம் சுமந்தவர். தனது அயராத முயற்சியால் முன்னேறி தென் பகுதியில் வியாபாரம் செய்து நல்ல நிலையில் இருந்தார்.
புகைப்படம் நன்றி uyirmmai.com
சத்தம் போட்டுப் பேசத் தெரியாத மிகவும் சாதுவான அம்மா.
இவர்களுக்கு நண்டு சிண்டுகள் என எத்தனை எனக் கேட்கப்படாது....
ஆனால் குசேலர் வீடு அல்ல.
அப்பாவிற்கு கட்டுப்பட்டே அனைவரும் வளர்ந்தோம். பிள்ளைகளுக்கு இடையே பதின்மத்தின் கீழ் வயதில் கூட சண்டைகள் வருவதில்லை. ஒட்டுறவுவோடுதான் இருந்தோம்.
இதில் கடைக்குட்டியாக நான்.
உருப்பட்ட மாதிரித்தான் எனச் சொல்வது கேட்கிறது.
அக்கா ஒருவர். ஏனையோர் அண்ணாமார்தான்.
அக்காவிற்கும் எனக்குமான வயது வித்தியாசம் 10. என் மீது மிகுந்த அன்பானவர். கூடிய வயது இடைவெளியே எம்மை நன்கு பிணைத்தும் இருக்கலாம்.
சிறுவயதில் எனக்கான உடைகளை தானே தைத்து எனக்குப் போட வைத்து அழகு பார்ப்பார் அக்கா.
எனது பதின்ம வயதிற்கு எட்ட முன்பே அக்காவின் திருமணம் நடைபெற்றது. நம் ஊர் வழக்கப்படி பெண்கள் திருமணத்தின் பின்பு அப்பா அம்மாவுடன்தான் வசித்து வருவார்கள். அம்மம்மாவும் எங்களுடனேயே இருந்தார்.
பெண்ணிற்குத்தான் வீடு பண்ட பாத்திரங்கள் கொடுப்பார்கள். அதிலேயே போண்டியாகி விடுவார்கள் பலபேர்.
ஆண் பிள்ளைகளுக்கு கொடுக்கும் வழக்கம் இல்லை. ஆண்கள் திருமணம் முடித்து பெண் வீட்டிற்கே போய் விடுவார்கள். இப்பொழுதும் இந்த வழக்கம்தான் இருக்கிறது. ஆனால் என் அப்பாவை ஆண்பிள்ளைகளுக்கும் சீதனம் கொடுத்தவர் என சிலர் சீண்டுவார்கள்.
மாமனார் மருமகன் கொடுமை இருந்ததாகத் தெரியவில்லை :)
இம்முறைப்படி அக்காவும் அத்தானும் எங்களுடனேயே ஒரு வருடம் இருந்தார்கள். அப்பா அவர்களுக்கு நமது வீட்டுக்கு அருகே புதிய வீடு கட்டத் தொடங்கியிருந்தார். கட்டி முடிந்ததும் அவர்கள் அங்கே குடி போனார்கள்.
அத்தான் வெளி ஊரில் வேலை என்பதால் அக்காவிற்கு உதவியாக அம்மம்மா பெரும்பாலும் அங்கேயே இருப்பார்.
அக்காவும் தனியே சென்றுவிட வீட்டு ராணி யாரென உங்களுக்குப் புரிந்திருக்கும்.
இருந்தாலும் அதட்ட அடம்பிடிக்க மாட்டேன். நல்ல பிள்ளையாகவே இருப்பேன். சந்தேகம் என்றால் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பாருங்களேன்.
எல்லாம்தான் கிடைத்துவிடுமே. பிறகு ஏன் பிரளி செய்வான் என எண்ணம். :) அண்ணாமார்களும் தங்கையின் மேல் உயிராக இருந்தார்கள் எனச் சொல்ல வேண்டியதில்லை.
பத்து வயதுவரை எங்கள் வீட்டில் இருபுறத்து வேலிகளிலும் பொட்டுக்கள் இருக்கும். ஒரு வீட்டியிலிருந்து மற்றதற்கு தவழ்ந்து சென்று வரக் கூடிய பொட்டுக்கள்.
கீரிப்பிள்ளை போல அவற்றிற்குள்ளால் நுழைந்து ஒவ்வொரு வீடுகளாய் கடந்து ஐந்தாம் வீட்டில் உள்ள ராஜன் தம்பி வீடுவரை சென்று விளையாடி வருவேன்.
அவர்களும் அவ்வாறே தவழல்தான் தெருவால் சுற்றிப் போகும் வழக்கம் எல்லாம் இருந்ததில்லை. அணில்கள் போல எல்லோருக்கும் பொட்டுக்களே பாதைகளாக இருந்தன.
இடைப்பட்ட வீடுகளில் பிள்ளைகள் இல்லை. இருந்தும் அன்னியோன்யமாக அனுமதித்திருந்தார்கள்.
ராஜன் வீட்டு நெல்லிக்காய் கொய்யா மரம் ஏறுவதிலிருந்து மாமி வீட்டு விளாம் பழம், கமலா அக்கா வீட்டு ஆட்டுக் குட்டி, மாட்டுக் கன்றுவரை குறுமன்களுக்குத்தான் சொந்தமாக இருந்தன.
லீவு நாட்களில் அண்டை அயலிலுள்ள பிள்ளைகள் எல்லாம் கூடி விளையாடுவோம். மாபிள் குண்டு, கிரிக்கற், கிளித்தட்டு, சடுகுடு, உயரம் பாய்தல் எனத் தொடர்ந்தது. தென்னை மரங்களில் கட்டிய ஊஞ்சல்கள் .....
கிளிசரியா மரத்துப் பொன்வண்டுகள் எமது நெருப்புப் பெட்டிக்குள் சிறையாவர்கள். தும்பி, தம்பளப் பூச்சி யாவும் கைக்குள் அடங்கின.
மயில் இல்லாவிடினும் அவற்றின் சிறகுகள் புத்தகங்களுக்குள்.
வீட்டு முற்றத்திலேயே பூங்காவனம், தேர்த் திருவிழாவிற்கும் குறைவில்லை. மேளக் கச்சேரி, கதாப்பிரங்கம் வில்லுப்பாட்டு என தொடர்கதையாக நடைபெறும்.
சின்ன மேளம் என பையன்கள் ஆட்டமும் போடுவார்கள்.
இதில் குண்டாக நல்ல வளர்த்தியாக சிவத்தப்பையன் ஒருவன் இருப்பான். புதிய கோலிக் குண்டுகள் வைத்திருப்பான் முகம் சுளிக்காமல் எங்களுக்கும் தருவான்.
மிகவும் நல்ல உள்ளம் அவனிடத்தில் இருந்தது. எல்லோருடனும் சிரிக்கப் பேசி எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்பான். ஒருவருடனும் சண்டைக்குப் போக மாட்டான். எல்லோருக்குமே அவனைப் பிடித்திருந்தது.
அடிக்கடி வருத்தம் வரும் அவனுக்கு. ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருப்பான். பின் சுகமாகி வீடு வந்ததும் விளையாட வந்துவிடுவான். நாங்கள் மகிழ்ந்திருப்போம்.
வழமையாகப் இப்படியாகச் சென்று அட்மிட் ஆகி திரும்பி வரும் அவன் ஒரு முறை மீண்டும் விளையாட வரவேயில்லை.
"அவன் வயிறு வீங்கி ஆஸ்பத்திரியிலேயே செத்துவிட்டான்" என்று அண்ணா கூறினார்.
அதுதான் முதல் கேட்ட சாவு இடியாக இருந்தது.
இவனைப் புதைப்பார்களா? ஏரிப்பார்களா? என்ற கேள்வி சிறுசுகள் எல்லோருக்கும் எழுந்தது.
"எரித்தால் அவனுக்குச் சுடாதா?" எனக் கேட்டேன்.
செத்த வீட்டுக்குப் போகவிடமாட்டார்கள்.
அன்று மரண ஊர்வலத்தை ஒழித்து நின்று களவாகப் பார்க்க முடிந்தது. பாவம் அவனெனக் கூறி அழத்தான் முடிந்தது எங்களால்.
நீண்டகாலமாக மாபிள் விளையாட்டை விளையாட மனமே வரவில்லை. அவன் எங்களுக்குத் தந்திருந்த புதிய மாபிள்க் குண்டுகள் எப்போதும் அவன் நினைவை எழுப்பிக் கொண்டே இருந்தன.
நுவரெலியாவில் அமைந்துள்ள அம்பேவல பாற்பண்ணையில் வெள்ளாடுகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு இன ஆடுகள் குட்டிகள், காடாய்கள் தனித்தனியாக பாராமரிக்கப்பட்டு வருவதை காணக் கூடியதாக இருந்தது.
நெதர்லாந்து சாணன் இன வெள்ளாடுகள் இருந்தன. இவை ஏறத்தாள 40 கிலோவிலிருந்து 60 கிலோ வரை நிறை உடையன.
ஒன்று ஒன்றரை வருட காலங்களில் தாய்மையடையும் தன்மையன. வயிற்றில் சுமக்கும் காலம் 5 மாதங்களாகும்.
நீண்ட முடிகளுடன் கூடிய ஆடுகளும் இங்கு இருந்தன. அவை சிம்பு ஸ்டைலில் தாடி வைத்து தம்மை அழகுபடுத்தி்ப் பார்த்தன.
ஒழுங்கு பற்றி நிறையவே படித்திருந்தன. நாங்கள் இவைகளிடம்தான் கத்துக்கணும். கொம்புச் சண்டையெல்லாம் போடுக்கல.
இளம் ஆடுகள் ஒழுங்காக நின்று, கம்பி வேலிக்கு வெளியே போடப்பட்டிருந்த புற்களை தலையை நீட்டிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன.
இணையத்தில் வரப்போறம் எனத் தெரிஞ்சிடிச்சுப் போல. வெள்ளாட்டார் மிடுக்கான தோற்றத்தில் நிற்கிறார்.
ஒருவருக்கு ஏனிந்தக் கோபமோ? யார் மேல்? வீட்டுக்காரி கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு போய்விட்டாவோ?
தனியே ஒரு மூலையில் சுவருடன்கொம்பை வைத்து மோதிக் கொண்டிருந்தார்.
நல்ல காலம் அடைத்திருந்ததால் நாம் தப்பினோம்.
நல்ல புத்திசாலி முகத்தைக் காட்டாமல் தனக்குக் கிடைத்த 'அடையாள அட்டையைக் காட்டி நிற்கிறார். சுவரில் ஏறிநின்று குதித்துக் கொண்டு என்னைப் பார்... ஒழுங்காகப் படங்கள் எடு என சர்க்கஸ் காட்டிக் கொண்டு நின்றார்.
கிளிக் .. கிளிக் செய்த பின்னர்தான் தனது ஆட்டம் யாவும் முடித்து சந்தோசமாகக் கீழே இறங்கி நின்றார்.
எப்படியெல்லாம் கற்று வைத்திருக்கிறார் நிறையக் குத்துப் பாட்டுக்கு ஆடுவார் போல்.
பல வர்ண ரோஸாச் செடிகள் அழகாகக் கத்தரிக்கப்பட்ட மரங்களிலிருந்து பூத்துக்குலங்கின.
கிளைம்பர் இன ரோஜாக்கள் கொத்துக் கொத்தாக மலர்ந்திருந்தன. சிறிய மினி ரோஜாக்கள் மழலையாய் சிரித்தன.
புதிய இன ரோஜாக்கள் பெரிதாய் மலர்ந்து நின்று வா வா என அழைத்து மனத்தைகிறங்கடித்து நின்றன. இதில் பிங் நிறத்தாலான பூ எங்கள் எல்லோரின் அன்பையும் பிடித்துக் கொண்டது.
மிக நீண்ட நேரம் இனிய நறுமணத்தை நுகர்ந்து இன்புற்றோம்.
ரோஜா என்றதும் கருவி பாலகிருஷ்ணன் புன்னகை என்ற தலைப்பில் எழுதிய கவிதை ஞாபகத்திற்கு வந்தது.
புன்னகை பூக்கள்தான் இந்த பூவுலகை நிறைக்கிறது. ரோஜாக்களின் புன்னகைதான் அதன் முட்களை மறைக்கிறது....
ரோஜாக்களைப் பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றோம்.
பதியமிடப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிறிய பூச்செடிகள்,ஓக்கிற் மலர்கள்,பிகோனியாஸ் கிறீன்கவுஸ் இரண்டினுள்ளே நின்று கவர்ந்திழுத்தது.
விரைந்து சென்றோம் எங்கள் போதாதகாலம் மூடியிருந்தது. கவலையுடன் வெளியே சுற்றி வந்து ஆசையைத் தீர்த்துக்கொண்டு அப்பால் சென்றோம்.
அழகிய மரவேலைப்பாட்டுடன் இளைப்பாறுவதற்கான கொட்டேஜ் அமைக்கப்பட்டிருந்தது.
பாதியாக வெட்டப்பட்டிருந்த மூங்கில்குழாய்களில் பசளையிடப்பட்டு சிறிய பூக்கன்றுகள் மரக்குத்திகளின் மேல் இருந்து குடிலுக்கு மெருகு சேர்த்தது. சற்று இளைப்பாறி விட்டுத் தொடர்ந்தோம்.
சிறீலங்கா வரைபடம் போன்று கட்டப்பட்டிருந்த குளம் சுற்றிவர மரங்கள் நாட்டப்பட்டு குளத்தின் நடுவே நீரினிடையே பெரிய கற்கள் வைக்கப்பட்டிருந்தது.
குளத்தில் சிவப்பு, கறுப்பு பெரிய இனமீன்கள் துள்ளித் திரிந்தன. நடுவே கல்மேல் தாவிச்சென்று படம் எடுத்துக் கொண்டோம் புதிய அனுபவமாக இருந்தது.