Sunday, February 7, 2010

அம்பேவல ஹீரோயினின் குத்தாட்டம்

நுவரெலியாவில் அமைந்துள்ள அம்பேவல பாற்பண்ணையில் வெள்ளாடுகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.


இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு இன ஆடுகள் குட்டிகள், காடாய்கள் தனித்தனியாக பாராமரிக்கப்பட்டு வருவதை காணக் கூடியதாக இருந்தது.

நெதர்லாந்து சாணன் இன வெள்ளாடுகள் இருந்தன. இவை ஏறத்தாள 40 கிலோவிலிருந்து 60 கிலோ வரை நிறை உடையன.


ஒன்று ஒன்றரை வருட காலங்களில் தாய்மையடையும் தன்மையன. வயிற்றில் சுமக்கும் காலம் 5 மாதங்களாகும்.

நீண்ட முடிகளுடன் கூடிய ஆடுகளும் இங்கு இருந்தன. அவை சிம்பு ஸ்டைலில் தாடி வைத்து தம்மை அழகுபடுத்தி்ப் பார்த்தன.

ஒழுங்கு பற்றி நிறையவே படித்திருந்தன. நாங்கள் இவைகளிடம்தான் கத்துக்கணும். கொம்புச் சண்டையெல்லாம் போடுக்கல.


இளம் ஆடுகள் ஒழுங்காக நின்று, கம்பி வேலிக்கு வெளியே போடப்பட்டிருந்த புற்களை தலையை நீட்டிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன.


இணையத்தில் வரப்போறம் எனத் தெரிஞ்சிடிச்சுப் போல. வெள்ளாட்டார் மிடுக்கான தோற்றத்தில் நிற்கிறார்.


ஒருவருக்கு ஏனிந்தக் கோபமோ? யார் மேல்?
வீட்டுக்காரி கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு போய்விட்டாவோ?


தனியே ஒரு மூலையில் சுவருடன்கொம்பை வைத்து மோதிக் கொண்டிருந்தார்.

நல்ல காலம் அடைத்திருந்ததால் நாம் தப்பினோம்.

நல்ல புத்திசாலி முகத்தைக் காட்டாமல் தனக்குக் கிடைத்த 'அடையாள அட்டையைக் காட்டி நிற்கிறார்.


சுவரில் ஏறிநின்று குதித்துக் கொண்டு என்னைப் பார்... ஒழுங்காகப் படங்கள் எடு என சர்க்கஸ் காட்டிக் கொண்டு நின்றார்.


கிளிக் .. கிளிக் செய்த பின்னர்தான் தனது ஆட்டம் யாவும் முடித்து சந்தோசமாகக் கீழே இறங்கி நின்றார்.

எப்படியெல்லாம் கற்று வைத்திருக்கிறார் நிறையக் குத்துப் பாட்டுக்கு ஆடுவார் போல்.

அடுத்த தமிழ்பட சான்ஸ் நிச்சயம் இவருக்குத்தான்.

மாதேவி

Wednesday, January 20, 2010

ஹொலிடே தீர சோர்ந்த மலர்கள்.

அழகிய மரவேலைப்பாடுகளுடன் கூடிய குடில் இளைப்பாறும் இடம் போல அமைந்திருக்கிறது.

அருகே பட்ட மரத்தின் வெட்டப்பட்ட அடிப்பகுதி கைவிடப்பட்ட காவல் அரண்போல நிற்பது பார்க்க ரம்யமாக இருந்தது.

இலங்கையை மாங்காய் வடிவத்திற்கு ஒப்பிடுவர். பசுமையான தரையின் மத்தியில் இலங்கை வடிவில் ஒரு நீர்த் தேக்கம். அதற்குள் தீவு போல ஒரு நிலப்பரப்பு.

தீவுக்குள் மற்றொரு தீவா?

அந்தத் தீவிற்கு போவதற்கு ஒரு பாதை.
அனுமான் போட்ட கற் பாலம்போல என எண்ணத் தோன்றுகிறது.

விக்டோரியா பார்க்கில் பூப்பறிக்க முடியுமா? பறித்தால் தண்டம் போடுவார்களா தெரியாது.

பூ வாங்குவதற்கு என நகரத்தின் மையத்தில் உள்ள பஸ் நிலையத்தின் மத்தியில் உள்ள கட்டிடத்தின் மாடியில் பல கடைகளில் பூப் பூவாக கடை விரித்திருக்கிறார்கள்.


பிளாஸ்டிக் வாளிகளில் நிறம் நிறமாக பல்வேறு பூக்கள் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன.

கொழும்பு விலையோடு பார்க்கும்போது கொள்ளை மலிவு. ஆயினும் நிறைய வாங்க பர்சில் காசுத்தாள்கள் மலர்ந்து கொட்டுகின்றனவா?


கொழும்பிலிருந்து நுவரெலியா பார்க்கப் போனவர்களுடன் தொற்றிக் கொண்டு சில பூங் கொத்துகள் கொழும்பு பார்க்க வந்தன.






கொழும்பு பார்க்க மலர்ச்சியுடன் வந்த அவை சின்னுவின் பூச்சாடிக்குள் ஓரிரு நாள் சிலிர்த்திருந்து மறுநாள் முதல் அழுது வடியத் தொடங்கின.


ஆனாலும் எங்களுக்கு இன்னும் நாலு நாளாவது பார்திருந்தால்தான் ஆசை தீரும் போலிருந்தது.

அடுத்த விடுமுறைக்கு சின்னு விடுமுறையில் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு என்பது போல தலை விரித்து வாடி வதங்கிக் காத்திருக்கிறது.


மாதேவி

Sunday, January 3, 2010

ரோஜா மலர்வனம் விக்டோரியா பார்க்கில்

ரோஜாத் தோட்டம் கண்ணில் பட்டு அழைத்தது. தனியே பிரத்தியேகமாக உயர்ந்த இடத்தில் தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது.


ரோஜாக்கள் என்றாலே எல்லோருக்கும் ஆனந்தம்தான்.

ரோஜாக்களில் சிறிய இனத்தில் தொடங்கி இருபது அடி உயரம்வரை ஏறி வளரக்கூடிய இனங்களும் உண்டு.


நூற்றுக்கு மேற்பட்ட இனங்களுடன் பல வர்ணங்களில் செடிகளும் உள்ளன.
தென் இத்தாலியின் ஆஸ்கன் மொழியிலிருந்து வந்த லத்தீன் சொல் ரோசா என்பது.

நடையும் துள்ளல் நடையாகி, சிரித்து மகிழ்ந்தபடியே உட் புகுந்தோம்.


பல வர்ண ரோஸாச் செடிகள் அழகாகக் கத்தரிக்கப்பட்ட மரங்களிலிருந்து பூத்துக்குலங்கின.

கிளைம்பர் இன ரோஜாக்கள் கொத்துக் கொத்தாக மலர்ந்திருந்தன. சிறிய மினி ரோஜாக்கள் மழலையாய் சிரித்தன.

புதிய இன ரோஜாக்கள் பெரிதாய் மலர்ந்து நின்று வா வா என அழைத்து மனத்தைகிறங்கடித்து நின்றன. இதில் பிங் நிறத்தாலான பூ எங்கள் எல்லோரின் அன்பையும் பிடித்துக் கொண்டது.


மிக நீண்ட நேரம் இனிய நறுமணத்தை நுகர்ந்து இன்புற்றோம்.


ரோஜா என்றதும் கருவி பாலகிருஷ்ணன் புன்னகை என்ற தலைப்பில் எழுதிய கவிதை ஞாபகத்திற்கு வந்தது.


புன்னகை
பூக்கள்தான் இந்த
பூவுலகை
நிறைக்கிறது.
ரோஜாக்களின்
புன்னகைதான் அதன்
முட்களை
மறைக்கிறது....

ரோஜாக்களைப் பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றோம்.


பதியமிடப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிறிய பூச்செடிகள்,ஓக்கிற் மலர்கள்,பிகோனியாஸ் கிறீன்கவுஸ் இரண்டினுள்ளே நின்று கவர்ந்திழுத்தது.


விரைந்து சென்றோம் எங்கள் போதாதகாலம் மூடியிருந்தது. கவலையுடன் வெளியே சுற்றி வந்து ஆசையைத் தீர்த்துக்கொண்டு அப்பால் சென்றோம்.


அழகிய மரவேலைப்பாட்டுடன் இளைப்பாறுவதற்கான கொட்டேஜ் அமைக்கப்பட்டிருந்தது.

பாதியாக வெட்டப்பட்டிருந்த மூங்கில்குழாய்களில் பசளையிடப்பட்டு சிறிய பூக்கன்றுகள் மரக்குத்திகளின் மேல் இருந்து குடிலுக்கு மெருகு சேர்த்தது. சற்று இளைப்பாறி விட்டுத் தொடர்ந்தோம்.

சிறீலங்கா வரைபடம் போன்று கட்டப்பட்டிருந்த குளம் சுற்றிவர மரங்கள் நாட்டப்பட்டு குளத்தின் நடுவே நீரினிடையே பெரிய கற்கள் வைக்கப்பட்டிருந்தது.


குளத்தில் சிவப்பு, கறுப்பு பெரிய இனமீன்கள் துள்ளித் திரிந்தன. நடுவே கல்மேல் தாவிச்சென்று படம் எடுத்துக் கொண்டோம் புதிய அனுபவமாக இருந்தது.

மாதேவி

Thursday, December 17, 2009

நுவரெலியா விக்டோரியா பார்க்


நுவரெலியா Nuwara eliya நகரின் நடுமையமாக இருக்கும் விக்டோரியா பார்க் சென்றோம்.


சிறிய கார்டின் ஆக இருந்தாலும் அமைப்பில் அனைவரையும் ஈர்த்துக் கொள்ளும். வாசலில் ரிக்கற் பெற்று உள்ளே சென்றோம்.


வாசலிலேயே மிகப் பெரிய டெயிலியாஸ் பூக்கள் வெள்ளை,


ரோஸ், கத்தரிப்பூ,

ஓரெஞ் வர்ணங்களில்


இருபுறமும் வரிசையாக நாட்டப்பட்டு நின்று வரவேற்புக் கூறின.


வெள்ளை, கத்தரிப்பூ என இரு வர்ணம் கலந்த டெயிலியாஸ் புதிய இனமாகத் தோன்றியது. அதன் கலரில் சற்று நேரம் மனங்கிறங்கி மகிழ்ந்தோம்.


அழகில் மனமும் மகிழ்ந்து போயிற்று. லயித்து மாறிமாறிஅனைவரும் நின்று படம் எடுத்துக் கொண்டு தொடர்ந்தோம்.

அடுத்து கோலியாஸ் இன வர்ண இலைச் செடிகள் அழகூட்டி நின்றன.இத்துடன் செவ்வந்திப் பூக்கள் பாத்திகளில் அடுக்காய் மலர்ந்திருந்தது.

மணி வாழை கொத்தாய் பூக்களைத் தள்ளி நின்றது.


மணிவாழை போலவே பூக்களைக் கொண்ட மற்றொரு செடியில் மஞ்சள், ஓரேஞ் கலர்களில் அழகு விரித்திருந்தது.


அவற்றைத் தாண்டிச் சென்ற போது பெரிய அகண்ட சைப்பிரஸ் மரங்கள், அதனூடே பாலம். பாலத்தின் கீழ் ஓடும் நீரோடை என குளிர் காற்றும் தழுவ உடல் நடுக்கம் கொண்டது. சிலிர்த்துப் போய் ஜெர்சி அணிந்து கொண்டோம். இதமாக நடையைத் தொடர்ந்தோம்.

ஒரு புறம் பொட்டில் பிரஸ் மரங்களும்,


பெரிய காட்டு ரோஜா மரங்களும் பிங் நிறத்தில் பூவாய் பூத்து சொரிந்திருந்தன. நிலத்திலும் கொட்டிக் கிடந்தன.


அடுத்து அல்லிப் பூக்கள் பூத்துக்குலுங்கும் குளம் அழகாக அமைக்கப்பட்டிருந்தது,


அதற்கு எதிரே குமுதமலர்கள் நீரின்மேல்தலைகாட்டிநின்றன.


அதன் நடுவே பூவாய் விரிந்து தெறிக்கும் நீர் நாற்புறமும் தெளித்து சிதறியது. பாதையால் தொடர்ந்தோம் பெயர் தெரியாத மஞ்சள் பூக்கள்


சிவப்புப் பூக்கள், சிறிய செடிகளில் கூட்டமாய் நின்று கண்ணைப் பறித்தன.


அதையொட்டி பசிய புல்தரை மேலும் அழகைக் கூட்டியது.

பார்த்துக் கொண்டே மறுபுறம் செல்ல வெள்ளை நிற லில்லீஸ் பூக்கள் தலை உயர்ந்து நின்று பூத்து அழகு ஊட்டின. ஜப்பான் ரோஸ் என அழைக்கப்படும் பூக்களின் புதிய இனங்கள் தரையுடன் ஒட்டி முளைத்திருந்து ரோஸ், கத்தரிப்பூ வர்ணத்தில் பூக்களை குவித்திருந்தன.

பச்சைப் பசிய மரத்தை வளர்த்து வளைத்து வெட்டி உள்ளே வீடு போன்று அமைத்திருக்கிறார்கள் இதிலே பெஞ்சும் உள்ளது. இது சுற்றுலாப்பயணிகள் எல்லோரையுமே கவர்வதால் அனைவரும் புகைப்படம் எடுப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.


நடுவே பூட் ஸ்டால் ஒன்று சிற்றுண்டிகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. வர்ணப் பைக்கற் உணவுகள் தொங்கி நின்று சாப்பிட அழைத்தன.

அதைத் தொடர்ந்து புல்தரை பாரிய மரங்கள்.

இவற்றுடன் கூடிக் கிளைவிட்டு பரந்து நின்ற மரங்கள் நடந்த களைக்கு உட்கார்ந்து கால்களைத் தொங்கப் போட்டு இளைப்பாற இடம் கொடுத்தன.

அங்கே ஒரு குட்டிக் குருவி முறிந்த மரத்தின் கொப்பின் நுனியில் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார்.

சூழலுடன் இசைந்த அதன் கலர் கண்ணாம் மூஞ்சி காட்டியது. கண்டு பிடித்து ரசித்துக் கொள்ளுங்கள்


அவரைப் பார்த்ததும் எமக்கும் ஆசை பிறந்தது. சற்று அமர்ந்து இளைப்பாறிவிட்டு நடந்தோம். படமும் எடுத்துக்கொண்டோம்.


நீண்டகுளம் அதன் மேல்அழகிய உயர்ந்து வளைந்த பாலம் தென்பட கால்கள் அங்கே விரைந்து சென்றன.


பாலத்தில் ஏறிச் சுற்றுச் சூழலை ரசித்தோம்.


சடைத்த இளம் மூங்கில் மரங்கள் மஞ்சள் பச்சை நிறமாய் விரிந்து நின்று பசும் காட்டை நினைவூட்டியது.