பட்டாம் பூச்சி, தட்டாரப் பூச்சி, வண்ணாத்திப் பூச்சி என்ற பெயர்களாலும் அழைப்பார்கள்.
சிறுவயதில் வண்ணத்துப் பூச்சியார்களாகி கைகளை சிறகுகளாக்கிப் பாடிய பாலர் பாடல் ஒன்று நினைவுக்கு வருகின்றது.
வண்ணத்துப் பூச்சி வண்ணத்துப் பூச்சி
பறக்கிறது பார் பறக்கிறது பார்
அழகான செட்டை அழகான செட்டை
அடிக்குது பார் அடிக்குது பார்
சிவப்பு மஞ்சள் நீலம் பச்சை
பொட்டுக்கள் பார் பொட்டுக்கள்
பார்
தொட்டதுமுடனே தொட்டதுமுடனே
பட் என பறக்கிறது பார்
தேனதைக் குடித்து தேனதைக் குடித்து
களிக்குது பார் களிக்குது பார்
வண்ணத்துப் பூச்சி வண்ணத்துப் பூச்சி
பறக்கிறது பார் பறக்கிறது பார்.
எங்க வீட்டு வண்ணத்துப் பூச்சி பறக்கிறது பார் பறக்கிறது பார் |
வண்ணத்துப் பூச்சிகள் இலைகளில் முட்டைகளைப் போடும். அவை 3-12 நாட்களில் கட்டர்பிலர்களாக வெளி வரும். இவை இலைகளை உண்டு வளரும்.
இரு வாரங்களின் பின் கம்பளிப் புழுவாக வளர்ந்து திரியும். மயிர்கொட்டி, மசுக்குட்டி என்றும் அழைப்பார்கள். கம்பளிப் புழுக்கள் இலைகளின் அடிப்புறம் ஒட்டிக் கொண்டு இருந்து தலை கீழாகத் தொங்கும். அது தோலை சிறிது சிறிதாகக் கழற்றி கூட்டுப் புழுவாக மாறிவிடும்.
இவையே இரு வாரங்களின் பின் வண்ணத்துப் பூச்சிகளாக வெளிவருகின்றன. பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும். உணவு உற்பத்திக்கு வழிகோலும் ஒரு அழகிய உயிரினம்.
இவை வண்ணத்தை மாற்றிக் கொள்ளும் இயல்புடையன. சூழலுக்கு ஏற்றதுபோல தமது வண்ணங்களை மாற்றிக் கொள்ளும்.மீண்டும் பழைய வர்ணத்திற்குத் திரும்பும் என்கிறார்கள் இதன் ஆராச்சியாளர்கள்.
![]() |
Blue glaxy tiger butterfly. Thanks:- dreamstime.com |
![]() |
Ceylon Rose Butterfly Thanks:- http://en.wikipedia.org/wiki/Butterflies_of_Sri_Lanka |
பறவைகள் பருவ காலங்களில் கண்டம் விட்டுக் கண்டங்களுக்குச் செல்வதுபோல வண்ணத்துப் பூச்சிகளிலும் சில இனங்கள், குறிப்பாக மோனார்ச் Monarch இனங்கள் நீண்ட நாட்கள் வாழும் இயல்புடையவை. 4000- 4800 கிலோ மீற்றர் தூரம் வரை நீண்ட தூரங்கள் பறந்து செல்லும் வல்லமையுடையன.
வசந்தம் வந்ததற்கு அறிகுறியாக சில மாதங்களுக்கு முன் மெக்சிகோ நாட்டில் பெரும்தொகையான வண்ணத்துப் பூச்சிகள் ஒன்று கூடியிருக்கின்றன. அதைப் பல நாட்டினரும் சென்று கண்டு களித்திருக்கிறார்கள்.
வண்ணத்துப் பூச்சிகளில் காடுகளில் வசிப்பவையில் சில விஷமுள்ளவை. வண்ணத்துப் பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகை இனங்கள் உள்ளன என்கிறார்கள். தென்னிந்தியாவில் 315 வகைகள் இருக்கின்றனவாம்.
இலங்கையில் சிவனொளிபாத யாத்திரை காலத்தில் பெரும்தொகையான வண்ணத்துப் பூச்சிகள் கூட்டமாக அப் பகுதியில் சிறகடித்துப் பறந்து செல்வதைக் காணலாம்.
![]() |
Thanks:- ceylonbestholiday4u.lk |
இப்பொழுது கொலம்பியாவில் வீட்டுவளர்புப் தொழிலாகவும் வண்ணத்துப்பூச்சிகளை வளர்க்கிறார்கள். வண்ணத்துப்பூச்சிகளின் ஆராச்சிகள் விரிவடைந்திருப்பதால் வளர்ப்பும் அதிகரித்து இருப்பதாகச் சொல்கிறார்கள்.
சிங்கப்பூரில் ஷாங்கி விமான நிலையத்தில் பட்டாம் பூச்சிப் பூங்கா அமைத்து இனங்கள் அழியாமல் காத்து வருகிறார்கள்.
3500 வருடங்களுக்கு முன்பிருந்தே எகிப்தில் வண்ணத்துப் பூச்சிகள் வர்ணம் தீட்டப்பட்டிருக்கினறன. பெரும்பாலும் ஆலயங்கள் கட்டிடங்களில் செதுக்கப்பட்டிருப்பதும் காண முடிகிறது.
இப்பொழுதும் ஆடை ஆபரண அணிகலங்களில் வண்ணத்துப் பூச்சிகள் முதலிடம் பிடித்து வருவதைக் காணலாம்.
சிறுவர்கள், இளம் வயதினர், பெரும்பாலும் விரும்பி அணிந்திருப்பதைக் காணலாம்.
மரங்களை அழிப்பதால் அமர்வதற்கே இடமின்றி அலைந்து திரிகின்றன வண்ணத்துப் பூச்சிகள்.
ஆனால் தபால் முத்திரையிலும் தேசங்கள் கடந்து பறந்து திரிகிறது.
அண்மையில் படித்த கவிதை ஒன்று,
பேசிப்பழக ஆசைதான்.... என்று தொடங்கி
"....ஓவியம் தீட்ட ஆசைதான்
ஆனாலும்
வண்ணத்துப் பூச்சியே
நீதான் என் யன்னல் ஓரம்
மழைச்சாரலுக்குக்
கூடத் தங்குவதில்லையே..."
இக் கவிதை மனதில் சோகமாக அமர்ந்து விட்டது. இயற்கையைப் பேணுவதில் நாம் காட்டும் அக்கறையின்மை பல உயிரினங்கள் அரிதாகிக் கொண்டே செல்கின்றன. இந்நிலையில் வண்ணத்துப்பூச்சியார் விதிவிலக்கா?
வண்ணத்துப்பூச்சிகளை கவர்ந்து இழுக்கக் கூடியதாக தோட்டங்கள் அமைத்தால் அவற்றைப் பாதுகாக்கலாம். அவற்றின் உணவுக்காக மலர்த் தோட்டங்களை அமைப்பதுடன் கவரும் வகையில் செடிகள் கொடிகள் அமைத்தால் அவற்றின் இனவிருத்திக்கும் வழிவகுக்கும் என்கிறார்கள்.
பூக்கள் இருக்கும் அனைத்துச் செடிகளிலும் தேனை அருந்தாது தனக்குப் பிடித்த செடியின் பூவை மட்டும் பருகும். அடர் சிவப்பு நிறப் பூக்கள் வண்ணத்துப்பூச்சிக்குப் பிடித்தமானவை. செம்பருத்திப் பூக்கள், சூரியகாந்தி, டெய்சி, பெடூனியா இனங்கள் சில வகை அல்லிப் பூக்கள், மஞ்சள் கூம்பு மலர்கள் பிடித்தமானவை எனச் சொல்கிறார்கள்.
என்ன? பூந்தோட்டம் அமைக்கத் தயாராகிவிட்டீர்களா?
வீட்டில் தோட்டம் அமைப்பதின் மூலம் அழியும் இனத்தைப் பாதுகாக்கலாம்.. உங்களைச் சுற்றியும் அழகிய வண்ணக் கூட்டத்தினர் சிறகடித்துப் பறப்பர்.
நீங்களும் இரு கைகளையும் விரித்து அவையுடன் சேர்ந்து மகிழ்ச்சியாகப் பறக்கலாம்.
மாதேவி