
ரோஜாத் தோட்டம் கண்ணில் பட்டு அழைத்தது. தனியே பிரத்தியேகமாக உயர்ந்த இடத்தில் தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது.

ரோஜாக்கள் என்றாலே எல்லோருக்கும் ஆனந்தம்தான்.
ரோஜாக்களில் சிறிய இனத்தில் தொடங்கி இருபது அடி உயரம்வரை ஏறி வளரக்கூடிய இனங்களும் உண்டு.

நூற்றுக்கு மேற்பட்ட இனங்களுடன் பல வர்ணங்களில் செடிகளும் உள்ளன.
தென் இத்தாலியின் ஆஸ்கன் மொழியிலிருந்து வந்த லத்தீன் சொல் ரோசா என்பது.
நடையும் துள்ளல் நடையாகி, சிரித்து மகிழ்ந்தபடியே உட் புகுந்தோம்.

பல வர்ண ரோஸாச் செடிகள் அழகாகக் கத்தரிக்கப்பட்ட மரங்களிலிருந்து பூத்துக்குலங்கின.
கிளைம்பர் இன ரோஜாக்கள் கொத்துக் கொத்தாக மலர்ந்திருந்தன. சிறிய மினி ரோஜாக்கள் மழலையாய் சிரித்தன.
புதிய இன ரோஜாக்கள் பெரிதாய் மலர்ந்து நின்று வா வா என அழைத்து மனத்தைகிறங்கடித்து நின்றன. இதில் பிங் நிறத்தாலான பூ எங்கள் எல்லோரின் அன்பையும் பிடித்துக் கொண்டது.

மிக நீண்ட நேரம் இனிய நறுமணத்தை நுகர்ந்து இன்புற்றோம்.

ரோஜா என்றதும் கருவி பாலகிருஷ்ணன் புன்னகை என்ற தலைப்பில் எழுதிய கவிதை ஞாபகத்திற்கு வந்தது.

புன்னகை
பூக்கள்தான் இந்த
பூவுலகை
நிறைக்கிறது.
ரோஜாக்களின்
புன்னகைதான் அதன்
முட்களை
மறைக்கிறது....
ரோஜாக்களைப் பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றோம்.

பதியமிடப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிறிய பூச்செடிகள்,ஓக்கிற் மலர்கள்,பிகோனியாஸ் கிறீன்கவுஸ் இரண்டினுள்ளே நின்று கவர்ந்திழுத்தது.

விரைந்து சென்றோம் எங்கள் போதாதகாலம் மூடியிருந்தது. கவலையுடன் வெளியே சுற்றி வந்து ஆசையைத் தீர்த்துக்கொண்டு அப்பால் சென்றோம்.

அழகிய மரவேலைப்பாட்டுடன் இளைப்பாறுவதற்கான கொட்டேஜ் அமைக்கப்பட்டிருந்தது.
பாதியாக வெட்டப்பட்டிருந்த மூங்கில்குழாய்களில் பசளையிடப்பட்டு சிறிய பூக்கன்றுகள் மரக்குத்திகளின் மேல் இருந்து குடிலுக்கு மெருகு சேர்த்தது. சற்று இளைப்பாறி விட்டுத் தொடர்ந்தோம்.
சிறீலங்கா வரைபடம் போன்று கட்டப்பட்டிருந்த குளம் சுற்றிவர மரங்கள் நாட்டப்பட்டு குளத்தின் நடுவே நீரினிடையே பெரிய கற்கள் வைக்கப்பட்டிருந்தது.

குளத்தில் சிவப்பு, கறுப்பு பெரிய இனமீன்கள் துள்ளித் திரிந்தன. நடுவே கல்மேல் தாவிச்சென்று படம் எடுத்துக் கொண்டோம் புதிய அனுபவமாக இருந்தது.
மாதேவி