ஆலய தர்சனத்துடன் ஆரம்பித்தோம் பத்தினித் தெய்வமான சீதையை இராவணன் கவர்ந்து சிறை வைத்திருந்த நந்தவனம் எனக்கூறப்படும் சீதா எலிய கோயிலை தரிசிக்கச் சென்றோம். சிறிய இக் கோவில் அழகில் அனைவரையும் மயக்க வைக்கும். நீண்டு உயர்ந்த மரங்கள் நிறைந்த மலையைப் பின்னணியாகக் கொண்டு இது அமைக்கப்பட்டுள்ளது.
சீதா அம்மனுக்கு இலங்கையில் உள்ள ஒரே கோயில் இதுதான்.
சிலர் உலகத்திலேயே இதுதான் சீதா பிராட்டிக்கான ஒரே கோயில் என்கிறார்கள்.
வேறு கோயில்கள் இருந்தால் சொல்லுங்களேன்.
முன்வாசலைத் தொட்டதுமே கோயிலின் பின்புறமுள்ள மலையின் இயற்கை வனப்பு, அருவியின் சலசலக்கும் சத்தம், குளிர் காற்று, ராமர் சீதா, இலட்சுமணன் மூலஸ்தான தரிசனம் என யாவும் சேர்ந்து அகமுகமும் குளிர அத்துணை இனிய அனுபவம் கிடைக்கப் பெறுகிறது.
கோவிலைத் தரிசிப்பதற்கு பிரதான பாதையிலிருந்து கீழே இறங்கிச் செல்ல வேண்டும். வழமையாக மலை மேலிருக்கும் கோயில்களை நோக்கி படிகளால் ஏறிச் சென்று அனுபவப்பட்ட எங்களுக்கு, இது புதுமையாக இருந்தது.
கோயிலிருந்து மேலும் இறங்கினால் பாய்ந்தோடும் அருவி வரும்.
கைகள் தானாகவே கூப்பி வணங்கி நிற்கின்றன. ஸ்தான மூர்த்திகளைச் சுற்றி வந்தால் கோயில் பின்புறம் அடைத்த தடுப்புக் கம்பிகள் ஊடே ஓடும் ஆறு சலசலத்து முதலில் அழைக்கிறது.
அதைப் பார்த்துக் கொண்டே பின்புறம் சுற்றி வந்தால் அனுமார் பாதம் பதித்த இடம் கற்பாறையில் தெரிகிறது.
அது மிகவும் தெளிவாகத் தெரியும் வண்ணம் சுற்றி வர மஞ்சள் நிறத்தை வட்டமாக அடித்துக் காட்டியுள்ளார்கள்.
அதன் அருகே ஆற்று நீர் அழகாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மூலஸ்தானத்தைச் சுற்றி வந்தால் இடது மூலையில் பாதம் பதித்த இடத்தைப் பார்த்தவாறே அனுமார் மூலஸ்தானத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரை வணங்கிவிட்டு இடது புறமாகச் சென்றால் படிகளின் ஊடே இறங்கி அவர் பாதம் பதித்திருக்கும் இடத்தை அடைந்து வணங்க முடியும்.
வணங்கிவிட்டு நீரோடை தவழ்ந்து ஓடும் அழகையும் மலையினின்று தழுவி வரும் குளிர் காற்றையும் உட்சுவாசித்துக் கொண்டே உடலும் உள்ளமும் சிலிர்க்க மேலே ஏறி வந்தோம். அனுமார் சந்நிதியைச் சுற்றி வணங்கினோம்.
நாங்கள் சென்ற நேரம் பூசை முடியும் நேரம் ஆதலால் விபூதி குங்குமம் வழங்கினார்கள். குளிருக்கு இதமாக சுடச்சுட சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாக அனைவருக்கும் கொடுத்தார்கள்.
சுவையில் அமிர்தம் போல இருந்தது.
சாப்பிட்டுவிட்டு, கையலம்ப திரும்பிய போது சிறிது சலசலப்பு. திரும்பிப் பார்த்த போது அனுமருக்கு துணையிருக்க வந்துவிட்டார்கள் இருவர். பயமற்று பக்தர்களிடையே வீரநடையில் ஓடித்திரிந்தனர்.
இராமர்,சீதா கல்யாணம் காடேறல் பொன்மானைப் பிடித்துத் தரும்படி வேண்டுதல் பரதன் பாதரட்சை பெறுதல் புஸ்பவாகனத்தில் இராவணன் சீதையைக் கவர்ந்து வருதல்,
மற்றும் அசோகவனத்தில் சீதை அனுமார் கணையாளியுடன் சீதையைக் காணுதல் எனத் தல வரலாறு வர்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.
தீயிட்ட வாலுடன் அனுமர் திரும்பிச் சென்ற மலை கறுத்த மரங்கள் கொண்டதாகவே காணப்படுகிறது. மண்ணும் கறுப்பாகவே இருக்குமாம்.
அழகிய சீதை ஆலயத்தை முன்பும் இரு தடவைகள் தரிசித்து இருந்தாலும் இயற்கையுடன் சேர்ந்த கோயிலின் வடிவ அமைப்பு மீண்டும் மீண்டும் சென்று தரிசிக்கத் தூண்டுகிறது.
கோயிலைத் தாண்டிச் சென்றால் ஹக்கல கார்டினை அடையலாம். இம் முறை நாங்கள் ஹக்கல செல்லாது ஆலயத்துடன் திரும்பிப் புதிய இடங்கள் பார்ப்பதென தீர்மானித்து இருந்தோம்.
ஆயினும் கோயில் வாசலுக்கு எதிர்ப்புறமாக பூங்கன்றுகளின் விற்பனைச் சாலை ஒன்று உள்ளது. அதில் நுழைந்தோம்.
நிறம் நிறமாக, வெவ்வேறு விதமான பூ மரங்கள். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது.
கொழும்புச் சுழலுக்கு ஏற்றதாக ஓரிரு செடிகளை வாங்கிக் கொண்டோம்.
நாம் வாங்கியதில் இதுவும் ஒன்று. சிறிய செடி. பச்சையாகக் காய்க்கும். பின் மேலுள்ளவாறு ஓரேஜ் கலராக வரும்.
கொண்டு வந்தது ஒரு மாதமாகவும் கருகிவிடாமல் இன்னும் உயிரோடு இருப்பதே சந்தோசமாக இருக்கிறது.
மாதேவி