கடைந்தெழும்
மத்தொலியும்
மீட்டியதும் நரம்பதனில்
கிளர்தெழும்
வீணையின் கானமும்
ஒழுங்கை தாண்டி
ஊரெங்கும் அதிர்ந்து
எதிரொலிக்கும்
சேமக்கல ஓசையும்

குருத்தெலும்பு
உடைத்தெறிந்து
செவிப்பறை கிழித்தழிக்கும்
சில்வண்டின்
கீச்சிடும் ஓசையும்
வேட்டைத் திருவிழாவில்
விலங்காடும் விடலைகளின்
வீறோசை மறைந்தொழிக்கும்
லைட்மெசினின்
உதறல் ஒலியும்
கொட்டமடித்து குளநீர்
கலந்துளையும்
மாரித்தவளைக் கூப்பாடும்

நெஞ்சதிர வானடங்கி
பிளந்தொலிக்கும்
கருங்கல் மலையுடைப்பும் ....
எத்தனை எத்தனை ஓசைகள்!
இங்கு படைத்தாய் மனிதா!

இத்தனையும் பிரசவித்து
முளைத்தெழும்
தொடர் மாடிப் புதுமனையில்
பேச்சுக்கும் துணையின்றித்
பேரோசைகளின் மௌனத்துள்
தனிமையில் உறையும்
நான்.

மாதேவி