Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, May 14, 2009

பேரோசைகளின் மௌனம்

கோகிலத்தின் குடிலெங்கும்
கடைந்தெழும்
மத்தொலியும்

மீட்டியதும் நரம்பதனில்
கிளர்தெழும்
வீணையின் கானமும்

ஒழுங்கை தாண்டி
ஊரெங்கும் அதிர்ந்து
எதிரொலிக்கும்
சேமக்கல ஓசையும்

குருத்தெலும்பு
உடைத்தெறிந்து
செவிப்பறை கிழித்தழிக்கும்
சில்வண்டின்
கீச்சிடும் ஓசையும்

வேட்டைத் திருவிழாவில்
விலங்காடும் விடலைகளின்
வீறோசை மறைந்தொழிக்கும்
லைட்மெசினின்
உதறல் ஒலியும்

கொட்டமடித்து குளநீர்
கலந்துளையும்
மாரித்தவளைக் கூப்பாடும்

நெஞ்சதிர வானடங்கி
பிளந்தொலிக்கும்
கருங்கல் மலையுடைப்பும் ....

எத்தனை எத்தனை ஓசைகள்!
இங்கு படைத்தாய் மனிதா!

இத்தனையும் பிரசவித்து
முளைத்தெழும்
தொடர் மாடிப் புதுமனையில்
பேச்சுக்கும் துணையின்றித்
பேரோசைகளின் மௌனத்துள்
தனிமையில் உறையும்
நான்.


மாதேவி

Thursday, December 25, 2008

மாம்பழ ரிறிப்

மாம்பழமாம் மாம்பழம் .
சுவையான மாம்பழம்.
கறுப்பாக இருக்காது .
கறுத்தகொழும்பு மாம்பழம்.
கவர்ந்திழுக்கும் கண்களை..


மூக்கை நிறைக்கும் வாசனை
முத்தமிட்டாலும்
தொற்றுமே
சூப்பித் தின்ற போதிலும்
நக்கிய கொட்டையை
வீசியெறிய
விடாது...

இன்னும் இன்னும்
மாம்பழங்கள்
செம்பாடு, அம்பலவி
வெள்ளைக் கொழும்பு, விலாட்
கிளி மூக்கு
என்றெல்லாம்
இன்னும் இன்னும்
எத்தனையோ..


பச்சைதின்னி
தெரியுமா? ...
கல்லில் குத்தி
உடைத்தெடுத்து
கார உப்பு
கலந்தெடுத்து
வாயிலிட்டால்
சுவை என்ன?
குட்டீசுகளிடம் கேளுங்க..


வரண்ட மண் யாழ்ப்பாணம்.
மழையைக் காண முடியாது.
என்றபோதும்
கெட்டியான மாம்பழ
விளைச்சலுக்கு
உலகெங்கும் பிரபலம்..


அவற்றின சுவை
சொல்லி மாளாது
வாரீங்களா
ஒரு ரிறிப் அடிப்போம்.
சுவைத்து மகிழ்வோம்..

மாம்பழ விலை
இருபத்தைந்து
போய்வர பிளெனுக்கு
இருபத்தைந்தாயிரம்
மட்டுமே...




------மாதேவி--------






Thursday, November 13, 2008

மணநாள் பான விருந்து


மெல்லுடல்
ரீங்கரிக்கும் வீணையெனும்
குரலோசை
சிட்டெனப் பறக்கும்
சுறுசுறுப்பு
கண்டதும் காதல் பிறக்காதா?


பிறந்தது காதல்
மயங்கினேன் அவளில்
ஆயினும்
ஏற்பாளா என்னை
வெறுப்பாளா?
சேரிக்கரையான் என


கண்ணால் காதல் பேச
சென்றேன் அவளகம் தேடி
பங்களாக்களின் வீதி
வெற்று கோலாப் போத்தல்கள்
சிதறிக் கிடந்தன
அந்தஸ்தின் சின்னமா
அகங்காரத்தின் முகமா?


மெல்லிடையாள் பின்நகர்ந்து
களவாய்ப் பின்தொடர்நதேன்
பட்டு மெத்தையில்
சரிந்தாள் சோர்வாக
பசிக் களையா
அல்ல
உண்ட களை
எந் நாசியில் படர்ந்தது
அவள் மேனியில் பிறந்த உணவின் நெடி


போஸாக்கு உணவு
புரதமோ அளவிற்கதிகம்
கொழுப்பிற்கும் குறைவில்லை
பூரித்து மினுங்கியது அவள் முகம்
பாதங்களும் கவர்ந்திழுத்தன


தினம் தினம் தொடர்ந்தேன்
பாவம் என்றெண்ணினாளோ
மோகத்தை புரிந்து கொண்டாளோ
என் கருமேனியில் மயங்கினாளோ?
காதலில் வீழ்ந்தாள்!
கல்யாணமும் வேண்டுமென்றாள்.


விடுவேனா வாய்ப்பை
பெண்வீட்டு மாப்பிளையானாலும்
பரவாயில்லை
மார்கழிக் கூதலுக்கு
மெதுமெது மெத்தை
அணைப்பதற்கு அவள்.
வாய் திறந்தால்
வயிறு நிறையுமளவு
உணவு.
வேறென்ன வேணும்


திருமண நாள்
விருந்தினர் பலர் கூடினர்
அனைவருக்கும் இனிய பானம்
வைன் கலரில்
கண்ணுக்கும் கவர்ச்சி
உடலுக்கும் தென்பு.. உற்சாகமும் கூட

சொகுசு பங்களாக்களில்
கொழுத்த மனிதர்கள் மது
பானங்களில் திளைத்தனர்.




பாடினோம்
பறந்தோம்
பாடிப்பாடிப் பறந்தோம்.
மறைவில் அவர்தம் மேனியில்
படர்ந்தோம்.
வாயிடைப் பிறந்த
மென் ஸ்ரோவால்
உறிஞ்சினோம்
அவர் தம் தமனிகளிலிருந்து
மணநாள் விருந்தாயிற்று!


பாடுவோம்
பறப்போம்
எம் இனம்
பெருக்குவோம்


பரப்புவோம்
டெங்கு, சிக்கன் குனியா
மலேரியா, யானைக் கால்நோய்
இன்னும் பல.. பல நோய்கள்
பெருக்குவோம்.

-: மாதேவி :-