Saturday, April 7, 2012

கிக்கி கிக்கி என்று வண்ணக்கிளி ஒன்று சத்தமிட்டே செல்லும்....

ஆசையுடன் பெத்தம்மா என்று அழைத்ததில்லையா? அவர்தான் கிளிப்பிள்ளை. அஞ்சுகம், தத்தை, கிள்ளை, என்ற பெயர்களும் இலக்கியத்தில் உண்டு.

சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை இது.

இந்தியாவில் அதிகப்படியான மக்கள் வீடுகளில் வளர்க்கும் பறவையினம் கிளி என்கிறார்கள். மகிழ்ச்சியான செய்தி இவற்றுள் ஏறத்தாள 86 இனங்களைச் சேர்ந்த 372 வகைகள் இருக்கின்றன.

கூண்டுக்குள் அடைபெற்ற சிறைக் களி

பச்சைக் கிளி ஒன்றையே நாம் கிளி (Parrot) என எண்ணிக் கொண்டிருந்தாலும் Macaws, Amazons, Lorikeets, Lovebirds, Cockatoos போன்ற யாவுமே இனத்தைச் சார்ந்தவைதான்.

கிளியினப் பறவைகள் அனைத்தும் வளைந்த சொண்டைக் கொண்டன.


கால்கள் ஒவ்வொன்றிலும் முன்பக்கம் பார்ப்பதாக இரண்டும், பின்பக்கம் பார்ப்பதாக இரண்டுமாக மொத்தம் நான்கு விரல்கள் அமையப்பெற்றிருக்கும்.


இவ்வாறிருப்பதை உயிரியலில் zygodactyls என்பார்கள்.





அலகின் மேற்புறத்தை மட்டுமே அசைக்க முடியும்.

கேட்கும் சக்தி இதற்கு அதிகம். உணவாக காய்கள், பழங்கள், மொட்டுக்கள், பூக்கள், கொட்டைகள், விதைகளையும் உண்ணும். நெற்கதிர், மாங்காய், மிளகாய்ப்பழம், கொய்யாப் பழம், பயிற்றங்காய், பீன்ஸ் காய்கள், மிகவும் பிடித்தமானவை. கோவைப் பழத்தை விரும்பி உண்ணும்.

ஆயினும் இவற்றில் சில பூச்சி புளுக்களையும் உண்ணக் கூடியவையாகும்.

உலக வளர்ச்சி, சுற்று சூழல் பாதிப்பு, ஏனைய உயிரினங்கள் மீதான அக்கறையீனம் காரணமாக இவ்வினமும் குறைந்துகொண்டே போகின்றது.

மாம்பழக் காலத்தில் கிராமத்து வீடுகளில் கூட்டமாக வரும் கிளிகளைத் துரத்த மணிகட்டி அடிப்பார்கள்.


மிளகாய்த் தோட்டங்களில் வலையால் மூடியிருப்பதைக் காணலாம்.

வெப்ப மண்டல, அதிவெப்ப மண்டலக் கண்டங்களில் வாழும் பறவையினம். ஆயினும் ஆஸ்திரேலியா, மத்திய அமெரிக்கா, தென் ஆபிரிக்கா போன்ற இடங்கள் கிளிகளின் வெவ்வேறு வகையினங்களுக்குப் பிரிசித்தமானவை ஆகும்.

இவற்றின் ஆயுற்காலம் 50 ஆண்டுகள் என்கிறார்கள். இவற்றின் நீளம் 8 செ.மி முதல் ஒரு மீற்றர் வரையாகும். எடை பத்துக் கிறாம் இல் இருந்து 4 கிலோ வரை இருக்கும்.

ஆண்டுக்கொருமுறை முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும். தனக்கெனக் கூடு கட்டி வாழும் இனம் அல்ல. தென்னை, பனை, இலுப்பை மரங்களின் பொந்துகளில் பெரும்பாலும் வசிக்கும்.

மனிதர்களைப் போல ஒலி எழுப்பக் கூடியவை. பயிற்சி அளிக்கும் கிளிகள் சில வார்த்தைகளை உச்சரிக்கும்.




"கிக்கி கிக்கி என்று
வண்ணக்கிளி ஒன்று சத்தமிட்டே செல்லும்
......" இந்த வரிகள் எந்தப் பாடலில் வருகின்றது சொல்லுங்கள் பார்க்கலாம்.

விடை தெரியல்லையா? 

 "காகிதத்தில் " வலைப்பதிவிற்கு செல்ல இது வழி

ஆபிரிக்காவைச் சேர்ந்த ஆண் சாம்பல் நிறக் கிளிகளை பார்க்க செல்கிறீர்களா? உசாராக இருங்கள். மனிதர்களின் பேச்சைப் புரிந்து கொள்வதில் சிறந்து விளங்குகின்றன இவ் இனம்.

உங்கள் பேச்சிற்கு பதில் பேச்சுத் தர தயாராகிவிடும். கவனம்.
ஒலிகளைத் துல்லியமாகக் கவனித்து மீண்டும் உச்சரிக்கக் கூடியன என்கிறார்கள். இவை முன்னால் பேசுவதற்கு பயப்படாமல் இருக்க முடியுமா சொல்லுங்கள்.

இவை 120 வகையான ஒலிகளை எழுப்பும் தன்மை உள்ளனவாம்.
சாம்பற் கிளிகள் 35,000 ரூபா வரை விற்பனையாகின்றன.

நன்கு வளர்ந்த கிளி ஒரு இலட்சம் ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பச்சைக் கிளிகள், பஞ்ச வரண்க் கிளிகள், வெள்ளை, நீலமான கிளிகள், வீட்டில் அழகு வளர்ப்பிற்காகவும் கிளி ஜோசியத்திற்காகவும், வாஸ்த்துவிற்காகவும் வளர்க்கப்படுகின்றன.


சிஐடி பொலிஸ் கிளி பற்றி கேள்விப்பட்டீர்களா?

இங்கிலாந்தில் கிளி ஒன்று உயிங் உயிங் என்று சவுண்ட் கொடுத்து கொள்ளையரையே விரட்டி அடித்திருக்கிறது. பாருங்களேன். இதற்கு தங்கப் கோப்பை ஒன்று பரிசளிக்கலாமா?

தனது கூட்டத்தில் ஒருவரை விழுங்கிய சாரைப்பாம்பாரை கொத்திக் கொத்தி ஆக்கிரோசமாகத் துரத்தின கிளிக் கூட்டங்கள் என்ற செய்தியும் சில வருடங்களுக்கு முன் வெளியாகியிருந்தது.

ஸ்ரீ லங்கா ஹாங்கிங் பரட் என்ற சிறிய இனமானது 13 செ.மி நீளம் உள்ளது.


குறுகிய வால், சிவப்புக் கிரீடம் உள்ளது. நாடியும் தொண்டையும் பேர்ள் புளு கலர் கொண்டது. காடுகளில் பெரும்பாலும் வசிக்கும்.

இரண்டு,மூன்று முட்டைகளை இடும்.



ஸ்ரீ லங்கன் முத்திரையிலும் இடம் பிடித்துள்ளது.




Flicer ல் கிளி

கிளி மீன் Parrot fish இருந்ததே அறிந்திருப்பீர்களே!


கிளிப் பூ பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோமே. கிளிப்பூ வைப் பாரக்காதவர்கள் கிளிக்குங்கள். பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை.  

இலக்கியங்களில் கிளி

சங்க இலக்கியங்களில் கிளிகள் பற்றிய செய்திகள் இருக்கின்றன. மலைவாழ் மக்களிலே பெண்கள் தினைப்புலங்களிற்குச் சென்று கிளியோட்டி முற்றிய தினைக் கதிர்களைக் காப்பது கடமையாகவும் விளையாட்டாகவும் இருந்திருக்கிறது. 

மலைவாழ் மகளிர் தினைப் புலங்களில் கிளியோட்டி தினைப் புலத்தினில் விளைந்த முற்றிய தினைக் கதிர்களைக் காத்தனர் என்பது சங்க இலக்கியத்தில் பலவிடங்களில் பேசப்படுகின்றது.

'களைப்பூக் குற்றுத் தொடலை தை இப்புனக்கிளி படியும் பூங்கட் பேதை'  
எனக் குறுந் தொகையில் ஒரு வரி வருகிறது.  

களைப்பு பூக்களைப் பறித்து மாலை தொடுப்பதும், தினைப் புனத்தில் காவல் செய்து கிளி ஓட்டுதலும் மலைவாழ் பெண்களின் விளையாட்டு என்பதைச் சுட்டுகிறது.

ஆண்டாள் பாடல்களில் கிளி பல இடங்களில் வருகிறது. அதில் கீழ் வரும் பாடல் கிளி பேசுவது பற்றியும் பாடுகிறது.

'கூட்டி லிருந்து கிளியெப்போதும்
கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்,
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில்
உலகளந் தான் என்று உயரக் கூவும்..'

கிளி தட்டு விளையாடப் போவோம் வாறீங்களா.


சின்ன வயசில் விளையாடியதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

கிளி பற்றிப் பேசும்வேளையில் ஒவ்வொரு ஊரிலும் வாழ்ந்த கிளி மாமா, கிளி மாமிகள் பற்றியும் ஞாபகம் வந்திருக்குமே.

சின்னக் கிளி, செல்லக்கிளி போன்ற பெயர்களுக்கும் குறைவிருக்கவில்லை.

அது சரி, நம்ம நாட்டு பிரசித்த நகரான கிளிநொச்சி  உலகெங்கும் பேசப்படுகிறதே. விக்கிபீடியாவில் கிளிநொச்சி

அதற்கு அந்த பெயர் வந்ததற்கு காரணம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.



-: மாதேவி :-