Sunday, July 29, 2012

காற்று வாங்க காலாற மனம் சிறகடிக்க ஹோல்பேஸ் கடற்கரை

கொழும்பு நகரின் முகமாக இருக்கும் அழகிய கடலை ஒட்டிய பரந்த பிரதேசம் கோல்பேஸ் கடற்கரை. காலிமுகத்திடல் என தமிழில் அழகாக அழைக்கப்படுகிறது.

இங்கு Galle Face Hotel காலிமுகத் திடலைப் பார்த்துக் கம்பீரமாக நிற்கிறது.
1864ல் கட்டப்பட்ட இது சுவஸ் (Suez) கால்வாய்க்குக் கிழக்குப்புறமுள்ள மிகப் பழமை வாய்ந்த ஹொட்டேல் என்ற புகழ் பெற்றது.

One of the "1000 Places to See Before You Die" என்ற பட்டியலில் அடங்குகிறது.


காலிமுகத்திடல் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற இடமுமாகும். இங்கு பல அரசியல் கூட்டங்களும்,  ஊர்வலங்களும்,  நடை பெற்றிருக்கின்றன. விழாக்கால இசை நிகழ்ச்சிகளுக்கும் குறைவில்லை.

விடுமுறை நாட்களில் மாலையின் இனிய சூழலில் பெருந்திரளாக மக்கள் உல்லாசமாக இக் கடற்கரைக்கு வருகிறார்கள். சுகம் தரும் கடற்காற்றைச் சுவாசித்து இன்புற்றுக் களிக்கிறார்கள். அவசர யுகம் இது. சிறிய கூடுகளான வீடுகளில் வாழ்க்கை. நடந்து உலாவுவதற்கு இடமில்லாதவர்களுக்கு  காலாறவும், மனத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தவும் ஏற்ற இடமாக இருக்கிறது.

 குழந்தைகள் விளையாட என இங்கு கூடுகிறார்கள்.


குழந்தைகள் கடலலைகளில் கால் நனைத்து விளையாடும் காட்சிகள் மனதுக்கு இதமளிக்கின்றன.


குழந்தைகளுடன் கொக்குகள், குருவிகள் எனப் பறந்து திரிகின்றன. பறக்க முடியாத பாம்புகள் கூட நீல வானிலே சுழன்றாடுகின்றன.

கொப்ரா பறந்து திரிகிறது பாருங்கள்.


கொக்கைப் பிடிக்க பாம்பு முயல்கிறது. கொக்கோ அதியுயர பறந்து சென்று பாம்பாரைப் பார்த்துச் சிரிக்கின்றது. பாம்பாரை விரட்டும் பருந்து என போட்டா போட்டி நடக்கின்றது.


கடற்கரை ஓரம் தென்னை பனை மரங்கள் வளர்த்து இயற்கையை உருவாக்க முயல்கிறார்கள். தென்னை மரங்கள் குரும்பை காய் என குலை தள்ளி நிற்கின்றன.


கடற்கரைக்குச் சென்றால் கொறிப்பதற்கு மீனுணவு வேண்டாமா? பொரித்த நண்டு, இஸ்சோ வடை கண்ணாடிப் பெட்டிகளுள் எண்ணெயில் பொரிந்து நின்று யார் வாயில் புகுவோமோ எனக் காத்திருக்கினறன.


ஐஸ் கிறீம் வண்டிகள், சிப்ஸ், மிளகாய் உப்பிட்ட மாங்காய்த் துண்டங்கள், அம்பரல்லா, வெரளு அன்னாசி, என காரப் புளிப்புடன் நாவுக்குச் சுவையாக சுவைத்துக் கொண்டே காலாற நடக்கின்றார்கள் சிலர்.

காண்ணாடிப் பெட்டிகளுள் உள்ள காய்களை படம் எடுக்க முயல விற்பனைப் பெண்மணி உசாராகிவிட்டார். அதனால் படம் இல்லை.

கலர் கலராகப் பந்துகள் விளையாடக் காத்திருக்கின்றன. பாருங்கள் எவ்வளவு அழகு. நீங்களும் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்.


குழந்தைகளின் பெற்றோருக்கு பர்ஸ்சுகள் காலியாகிக் கொண்டிருந்தன.

குரங்காட்டியும் தன் பங்கிற்கு குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்ட வந்திருந்தார். பாவம் குரங்கார் கடல்பார்த்து மகிழ்வோம் என வந்தவர் மாட்டிக்கொண்டார். 


கடலினுள் சிறிய பாலம் அமைத்துள்ளார்கள். உள்ளே ஒரு மேடை.  சில படிகள் ஏறி பாலத்தினுள் ஏறிச் சென்று கடலினுள்ளிருந்து கரையையும் அடித்துச் செல்லும் கடலலைகளையும் கண்டு களிக்கலாம்.

கொழும்புத் துறைமுகத்தில் புதிதாக கட்டப்படும் இறங்குதுறையும், அங்கு கப்பல் தரித்து நிற்பதும், நீர் வானவில் போல மேலெழுந்து   பாய்வதும் மங்கலாகத் தெரிகின்றன.



அங்கிருந்து கொழும்பு நகரின் ஒரு பகுதியை நடுக்கடலிலுள்ள கப்பலில் நின்று கொண்டு பார்ப்பது போன்ற உணர்வுடன் பார்த்து மகிழலாம்.


காலிமுகத் திடலின் எதிர்ப்புறம் ரான்ஸ் ஏசியா ஹோட்டேல். இங்கு நடக்கும் காட்சிகளைப் பார்த்து ரசித்தபடியே மௌனமாக நிற்கிறது. தூரத்தே உயர்ந்து நிற்பது Cinnamon Grand Hotel. மற்றொன்று புதிதாக எழுந்து கொண்டிருப்பதையும் காணலாம்.

இன்னும் காலிவீதியை அண்டியபடி  சிலோன் கொன்டினென்டல் ஹோட்டேல், ருவின் ரவர், கலதாரி ஹோட்டல், பழைய பாராளுமன்றக் கட்டிடம் என கொழும்பின் பாரிய மற்றும் பாரம்பரிய கட்டிடங்கள் நிமிர்ந்து நிற்பதைக் காணலாம். கலதாரி ஹோட்டலுக்குப் பின்னே  Bank of Ceylon கட்டடம் BOC என முடிசூடி நிற்பது தெரிகிறது.


இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகள் தங்கும் உயர்தர வர்க்கத்தினரின் பாரம்பரிய ஹோட்டலாக இருப்பது கடலை ஒட்டி அமைந்துள்ள கோல்பேஸ் ஹொட்டேல். அதன் வெளிப்புறம் திறந்த வெளியில். வெளி மக்களும் சாப்பிட வசதி செய்துள்ளார்கள்.விலை சற்று அதிகம். கடலலைகளை ரசித்தபடியே இருந்து கொண்டு உணவு அருந்தலாம்.

உல்லாசப் பயணிகள் இருவர் கடற்காற்று வாங்குகிறார்கள்.



காலையில் ஏற்றப்படும் தேசியக் கொடியை மாலை மங்கும்போது கடற்படை வீரர்கள் இறக்கும் காட்சியையும் பார்க்கக் கிடைத்தது.




மழைமேகம் இருட்டிவர சூரியனும் மறையத்தொடங்குகின்றான். 


மழைத்துளிகளுக்குப் பயந்தபடியே நாங்களும் கிறஸ்கற் Crescat Shopping centre நோக்கி  செல்கின்றோம். மூன்று மாடிக் கட்டடமான இதற்குள் நுழைந்தால் பல மணி நேரங்களுக்கு பொழுது போவதே தெரியாது.  . கொம்ளக்சில் சிறிது சொப்பிங் .பின்னர் அங்குள்ள உணவகத்தில் இரவு  உணவு முடித்துவிட்டு ஆனந்தமாக வீடுதிரும்பினோம்.

மேலும் கடற்கரை உலாக்கள்
கசூரினா கடற்கரை
மணற்காடு

:- மாதேவி -:
000.0.000