Thursday, March 20, 2014

தென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்

நின்றபடியே இருப்பான் நன்மைகளைச் செய்வான். அவன் யார்?

Thanks :- en.wikipedia.org
முற்காலத்தில் மரங்களைத் தெய்வங்களாக வழிபட்டு வந்தனர். கோவில்களில் தல விருட்சங்கள் நின்று சிறப்புற்றன. சிவனுக்கு உகந்ததான உருத்திராக்க மரம் வில்வ மரங்கள், நாகலிங்க மரங்கள் அமைந்திருந்தன.

Thanks:- ta.wikipedia.org 
விஷ்ணுவிற்கு துளசிச் செடியும், பிள்ளையாருக்கு எருக்கலை மரமும், அறுகம் புல்லும். அம்மனுக்கு வேப்பமரமும் இலையும், கொன்றையும் சிறப்பாக வைத்து வணங்குகின்றார்கள்.

இரவில் ஒட்சிசனை வெளியேற்றும் தாவரங்கள் அரச மரமும்; துளசிச் செடியும் ஆகும்.

கொம்பஸ் செடி என்று அழைக்கப்படும் திசைகாட்டும் செடி ஒன்று வட ஆபிரிக்க நாட்டில் இருக்கிறது. சில்பியம் லெசினியேட்டம் (Silphium laciniatum)
என்ற செடி. இந்தச் செடி 6 அடி உயரம் வரை வளரக் கூடியது. தண்டின் அடிப்பகுதிகளில் நிறைய இலைகள் காணப்படும். மேலே செல்லச் செல்ல இலைகள் குறைந்து கொண்டே செல்லும்.

Thanks :- fjordnaer.com
இந்த இலைகள் எதிர் எதிராக மொரமொரப்பாக இருக்கும். இந்த இலைகள் வடக்கும் தெற்குமாகவே எப்பொழுதும் இருக்கும். அதனால் திசை காட்டும் செடி என்கிறார்கள்.

6000 ஆண்டுகள் வரை வாழக் கூடிய மரங்களும் இருக்கின்றனவாம். இவ்வகை மரங்கள் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காணப்படுகின்றன. இம் மரங்கள் பிரிஸில் கோர்ன் எனப்படுகின்றன. கடல் மட்டத்திலிருந்து 9000 அடிக்கு மேல்தான் இம் மரங்கள் வளர்கின்றன. உலகிலேயே பெரிய மரமும் உயரமான மரமும் இங்குதான் இருக்கின்றன. பெரிய மரம் அடிப்பாகத்தில் 101 அடி சுற்றளவைக் கொண்டதாக இருக்கிறது. உயரம் 272 அடி. சுpல மரங்கள் 366 அடி உயரத்தையும் கொண்டிருக்கின்றன.

உலகின் மிக மூத்த மரம் நோர்வே ஊசியிலை மரமாகும். சுவீடனில் இம்மரம் உள்ளது. இது 9550 ஆண்டுகள் முதிர்ந்ததாம்.

பிரேசில் நாட்டில் jabuticaba என்ற மரம் இருக்கின்றது. இதன் பழங்கள் பிரேசில் திராட்சை என்று அழைக்கப்படுகிறது. திராட்சை போல குலையாகக் காய்ப்பதில்லை. பழங்கள் மரத்தின் தண்டுகளில் காய்க்கின்றன. மரத்தின் அடியிலிருந்து உச்சி வரை அனைத்துத் தண்டுகளிலும் பழங்கள் காய்த்து இருக்கும்.

Thanks :- timanseeuw.wordpress.com
இப்பழத்திலிருந்து வைன் தயாரிக்கிறார்கள். இதன் வைன் பிரபல்யமாக இருக்கின்றது.

சிட்டினியில் ஒலிம்பிக் பார்க் அருகாமையில் homebush bay என்ற இடத்தில் உலகப் போரின் போது உபயோகித்த கப்பல் இங்கே அனாதரவாக விடப்பட்டு இருந்தது.

Thanks :- www.mymodernmet.com
நாளடைவில் இக்கப்பலில் செடிகள் முளைத்து வளர்ந்து பெரிய மரங்களாக வளர்ந்துவிட்டன. இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பலரும் சென்று பார்த்து மகிழ்ந்து வருகின்றார்கள். அதை மிதக்கும் காடு floating forest  என அழைகின்றார்கள்.

மூங்கில் புளியை முதிரை
நிகழ்வாகை
சேர்ந்தடைந்த காட்டில்
சிறுபறவைக் கூட்டமாய்
வாழ்ந்து வந்தோம் நாங்கள்
காட்டுத் தீ மூட்டும்
கலைதேர்ந்த மேதைகளே
கூட்டுக்குள் கத்தும் எங்கள்
குஞ்சுகளுக்கு இரை தேடி
தூரப் பறந்த துணைவன்
உணவோடு கூடு வருமுன்னே
கொல்லும் நெருப்பள்ளி
போடுவீர்.

பாதை புதிது கவிதைத் தொகுதியில் மு.சடாச்சரன் இக்கவியை தருகின்றார்.

நேற்றும் பத்திரிகைச் செய்தி இலங்கையில் பரந்த மலைக் காடுகளாகத் திகழும் சிங்கராஜ தெனியாயப் பகுதிகளில் 25 ஏக்கர் காடுகள் எரிந்து நாசம். யாரோ விசமிகள் வைத்த தீயாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர்.

உலகளாவிய ரீதியில் காட்டு மரங்களை அழிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது.காடழித்தலைத் தடுப்போம். மர நடுகையை முன்னெடுப்போம்.

Thanks :-   en.wikipedia.org
இலங்கையிலும் மரநடுகை திட்டங்களை முன்னெடுத்துள்ளார்கள். சிங்கராஜ கன்னெலிய பகுதிகளில்1000 ற்கும் அதிகமான மரங்களை நடும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Thanks :- o.canada.com 
வீடுகளிலும் நாட்டி மகிழ்வோம். கோடையைக் குளிர்விப்போம். உலக நலன் பெறுவோம்.

0.00.0

Tuesday, October 29, 2013

நிலாவெளிக் கடலை எழிலூட்டும் புறாமலை (Pigeon Island)

உல்லாசப் பயணிகள் இலங்கையை நோக்கி படை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். யுத்த காலத்தின் பின் வருகை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இலங்கையின் இயற்கை அழகு அவர்களைக் கவர்ந்து இழுக்கிறது. விடுமுறையைக் கழிப்பதற்காக அக் காலங்களில் பெரும் தொகையாக வருகின்றார்கள்.கிழக்கு இலங்கையின் இயற்கை எழில் அனைவரையும் தன்வசம் இழுத்துக் கொள்ளும். அழகு கொஞ்சும் மாவட்டமாக திருகோணமலை விளங்குகிறது.கோணேசர் ஆலயம், கன்னியா நீரூற்று புராதன சின்னங்கள் கிண்ணியா சேருவில நிலாவெளிகடல் புறாமலை என உல்லாசப் பயணிகளுக்கு கண்டு களிக்க அநேக இடங்கள் இங்கு இருக்கின்றன.


படகுப் பயணம் சூரியக் குளியல் நீச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த இடம்.

திருகோணமலையில் இருந்து 20கிலோ மீற்றர் தூரத்தில் வடமேற்கில் அமைந்துள்ளது நிலாவெளி.

  • இது கரையோரப் பிரதேசமாக இருக்கிறது.இங்கு கடலில் மீன்பிடித்தொழில் நடைபெறுகிறது. 
  • மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்று.
  • நட்சத்திர சுற்றுலா விடுதிகள் பலவும் இங்குள்ளன. 
  • சுனாமியின் தாக்கமும் இங்கு அதிகம் ஏற்பட்டு காலப்போக்கில் மாற்றம் பெற்றுள்ளது.திருமணமானபின்பு நிலாவெளி சென்றிருந்தோம். கணவனின் பாட்டனார் பல வருடங்களுக்கு முன் அங்கு சென்று குடியேறியிருந்தார்கள்.

வீட்டிற்கு முன்னால் வெங்காயத் தோட்டம். வீட்டின் ஒரு பக்கத்திலே கத்தரி, பூசணி, வெண்டித் தோட்டங்கள் சூழ்ந்திருக்க பழைய வீடுகள் இரண்டு. வீட்டின் பின்புறம் கிணறு. கிணற்றைச் சுற்றி எலுமிச்சை மரங்கள். வாழைத் தோட்டங்கள். பலா முருங்கை இளநீர் தென்னை கமுகு மரங்கள் என சோலை வனம்.

அடுத்த காணியில் பசுமாடு கன்றுகளுடன் மாட்டுக் கொட்டகம்.

காலை மாலை என பாலுக்கு எந்நேரமும் குறைவில்லை. நெல் வயல்கள் உப்பளம் என சற்று தொலைவே இருக்கின்றன. வீட்டில் இருந்து பார்த்தால் நிலாவெளிக் கடல் தெரியும். இடையே இவர்களுக்குச் சொந்தமான தென்னம் தோட்டங்கள். அவற்றின் ஊடே நடந்து சென்றால் கடலை அடையலாம்.


பாட்டியும் கடல் குளியலுக்கு தம்பி தங்கை கூட்டத்துடன் சேர்ந்து கொண்டாள். ஆசை தீர அனைவரும் கடலில் குளித்து வந்தோம். நின்ற ஒரு வாரமும் கடல் குளியல்தான். அவ்வளவு ஆனந்தம்.

உப்பளம் நெல்வயல் அதை ஒட்டிக் கோயில் எனச் சுற்றிப் பார்த்தோம். அப்பொழுதுதான் உல்லாசப் பயணிகளுக்கான ஹோட்டல்கள் முளைக்கத் தொடங்கியிருந்தன. குடும்பமாக அங்கும் ஒரு விசிட் அடித்தோம்.


இம் முறை சென்ற போது முன்னால் இருந்த வெங்காயத் தோட்டத்தில் வீடு கட்டி இருக்கிறார்கள். இப்பொழுதும் வீட்டைச் சுற்றி வர மாதுளை, கொய்யா மரங்கள், வாழை என இருந்ததால் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் கடற்கரையையும் தென்னந்தோட்டங்களையும் வீட்டுவாயிலில் நின்றபடியே காணமுடியவில்லை என்பது ஏமாற்றமே.

காலத்தின்மாற்றத்தால் தென்னந்தோப்புகள் எல்லாம் நவீன ஹோட்டல்களாக மாறிவிட்டிருந்தன. கட்டிடங்கள் கடலை மறைத்துவிட்டன. அவற்றைத்தாண்டித்தான் கடலுக்கு செல்லக் கூடியதாகஇருந்தது

கோணேசர் கோயில் கன்னியா புறாமலை எனச் சுற்றி வந்தோம்.


நிலாவெளிக் கடற்கரையில் இருந்து புறாமலை 2.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.


நிலாவெளிக் கடற்கரை மிகவும் அழகானது. ஆதற்கு மேலும் அழகு ஊட்டி நிற்பது புறாமலை. முன்னர் மக்கள் தனியாரின் படகுகளில் சென்று குளித்து சாப்பிட்டு மகிழ்ந்து வருவார்கள்.

புறாமலை என்று சொன்ன போதும் இவற்றில் இரண்டு தீவுகள் உள்ளன. பெரிய தீவு சுமார் 200 மீற்டர் நீளமும் 100 மீற்றர் அகலமும் கொண்டது.


இப்பொழுது இவ்விடம் தேசிய விலங்கு சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது. படகு போக்குவரத்து நடாத்துகின்றார்கள்.மலையைச் சுற்றி ஆழம் குறைந்த கடல். அழகிய முருங்கைக் கற்களோடு கூடியது. கற்களைப் பாரத்து இரசிக்கலாம்.


புறாக்கள் அக் காலத்தில் இங்கு நிறைந்திருந்ததால் புறாமலை என்ற பெயர் வந்தது.


இங்கு 100 வகையான பவளப் பாறைகளும் முன்னூறு வகையான பவள பாறை மீன்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்


சூரிய ஒளியில் Glittering coral  சிறு சிறு வர்ணக் கற்கள் தெறிக்கும் அழகே தனிதான்.  நீரினினுள் கடல் வாழ் மீன்கள் உயிரினங்கள் நீந்திச் செல்வதை கண்டு மகிழலாம்.


 வெண் மணலுடன் கூடிய இடம் சிறுமரங்கள் கிளை பரப்பி நிழல்களாக கூடலாக அமைந்திருக்கும். அவற்றின் கீழ் அமர்ந்து கடலை இரசித்தோம்.


அப்புறம் ஆனந்தக் கடல் குளியல்.மீன்களும் காலைத் தொட்டு சுவைத்துச் சென்றன. கடல் குளியலுடன் பசியும் பிடிக்க கொண்டு சென்ற உணவுகளை மரங்களின் கீழ் அமர்ந்து ஒரு பிடி பிடித்தோம்.

சூரியனும் மதியத்தைத் தாண்டிச் சென்றான். திரும்ப மனமில்லாது மீண்டும் படகில் ஏறி வந்தோம்.

மாதேவி 

Monday, September 16, 2013

சுட்டி முயலாருக்கு குட்டை வால் வந்தது எப்படி? - பாலர் கதைகதை கேட்க வாறீங்களா?  குழந்தைகளே! ஒரு இரகசியம் சொல்லப் போகிறேன்.


அடர்ந்த காடு நெடுது உயர்ந்து வானை முட்டும் மரங்கள். பரந்து விரிந்து கிளை பரப்பி நிற்கும் கூடல்கள்.

அவற்றின் கீழே சிறு மரங்கள். படரும் கொடிகள், புதர்கள் புல்லுகள் முட்செடிகள் என நிறைந்து இருக்கும் இடம். மிருகங்கள். பறவைகள், ஊர்வன என்பனவற்றின் வீடும் அதுதான். 


கீச் கீச் என இசைக்கும் குருவிகள். ரீங்காரம் பாடும் வண்டு. தாவிப் பறந்து திரியும் குரங்கார் கூட்டம். தோகை விரித்தாடும் மயில்கள். நிலம் அதிர நடந்து வரும் பெரிய யானைக் கூட்டம். கழுத்தை நீட்டி நிமிர்ந்து வரும் ஒட்டகச் சிவிங்கிகள்.

வேறு காட்டு மிருகங்கள் நீங்கள் சொல்லுங்கள் குழந்தைகளே!

சிங்கம்... புலி... கரடி,... மான்.. நரி.. முயல்.....

நன்று நன்று இப்படி இருக்கும் காட்டில் காட்டிற்கு ராஜா யாரு?

சிங்கம். ஆமாம். ஒரு நாள் சிங்க ராஜா நீர் அருந்த குளக் கரைக்கு சென்றார். குளத்தில் தண்ணீர் குடித்துவிட்டு நிமிர்ந்த போது தனது நிழலை அங்கு கண்டார். எதுவோ ஒன்று தனது கம்பீரத்தை குறைப்பதாக நினைத்தார். அது எது என தனது உருவத்தை தலையிலிருந்து உடல் வரை பார்த்தார்.


இப்பொழுதான் புரிந்தது வால் இல்லை என. மிருகங்களுக்கு அப்பொழுது வால் இருக்கவில்லை.


சிங்க ராஜா யோசித்தார். வால் இருந்தால் தனது அழகு மேலும் கம்பீரமாகத் தோன்றும் என்று. உடனே மரக் குத்தியில் வால் ஒன்றைச் செதுக்கி தனக்கு ஒட்ட வைத்தார்.


நதிக் கரைக்கு மீண்டும் சென்று பார்த்தார். கம்பீரம் கூடியிருந்தது. சிங்க ராஜாவிற்கு மிக்க மகிழ்ச்சி.


சிங்க ராஜாவைப் பார்த்த நரியார் "அழகாக இருக்கிறாய் ராஜாவே" என்றார்.

சிங்க ராஜா நினைத்தார் எனக்கு மட்டும் வால் உண்டு மற்றைய மிருகங்கள் பாவமே அவற்றிற்கும்; வால் செய்து கொடுப்போம் என்று. வால் தயாரிப்பில் சிங்க ராஜாவுடன் நரியாரும் வரிக் குதிரையாரும் வேறு சில மிருகங்களும் ஈடுபட்டன.

ஒரு வாரம் மரவால் தயாரிப்பில் களிந்துவிட்டது. சிங்க ராஜா நரியாருக்கு கட்டளை இட்டார் ஏனைய மிருகங்களுக்கு அறிவிக்கும்படி.

டும்....டும்...டும் என பறை ஓலித்தது

"சிங்க ராஜாவின் அறிவிப்பு மிருகங்களே நாளை எல்லோரும் வந்து வால் பொருத்திச் செல்லுங்கள்"

டும்... டும்... டும்...

காடெல்லாம் சென்று அறிவித்தார் நரியார். மிருகங்கள் எல்லாம் கூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன.

பொழுது விடிந்தது. புலியார், நரியார் முதலே சென்று வால் பொருத்திவிட்டார்கள். ஏனைய யானைக் கூட்டம, ஒட்டகத்தார்கள், எருமை மாடுகள் வேறு நீங்கள் சொல்லுங்கள் பிள்ளைகளே

ஓநாய் கூட்டம்.. மாடுகள்.. மரைகள்...

சரி.. சரி

இப்படியாக அனைவரும் வால் பொருத்தியபடி தங்கள் வீடுகளுக்குச் செல்கிறார்கள். பொந்தின் உள்ளே இருந்து முயலார் ஒருத்தர் இப்பொழுதுதான் நித்திரை கலைந்து மெதுவாக எட்டிப் பார்க்கிறார்.

 அவருக்கு காலை பனிக் குளிரில் வெளியே வரப் பயம். தனது வெள்ளை ஜக்கற் சட்டை நனைந்து சிலிர்த்துவிடும் என்று பதுங்கி இருந்த படியே வால் வாங்கப் போவோமா வேண்டாமா என நினைக்கின்றார்.


அதற்குள் குளிர் காற்றுடன் மழையும் தூறல் எடுக்க சோம்பல் பட்டு தனது பொந்து வீட்டினுள் சென்று தூங்கிவிட்டார்.

நேரமோ மதியம் தாண்டி மாலை நேரம் ஆகிவிட்டது. அனைத்து மிருகங்களும் வால் பொருத்திக் கொண்டு சென்றுவிட்டன. இவரோ இன்னமும் தூக்கத்தால் எழும்பவில்லை. வாலும் பொருத்தப் போகவில்லை.


வெளியில் பலத்த சண்டைச் சத்தம். அந்தச் சத்தத்தில்தான் அவரது தூக்கம் கலைந்தது. வெளியே வந்து எட்டிப் பார்க்கிறார்.

பூனையார் ஒருவரும் நாயார் ஒருவரும் என்னுடைய வால் அழகா? உன்னுடைய வால் அழகா?

"எனக்குத்தான் நீண்ட வால்" என்கிறது பூனை.

நாயோ "என்னுடையதுதான் அழகு" என்கிறது.

கோபம் முற்றி ஒருவரை ஒருவர் பாய்ந்து கடித்து மோதுகின்றனர்.


முயலாரோ நடுங்கி  ஒட்டி மறைந்து பார்க்கிறார். கோப உக்கிரகத்தில் நாயார் பூனையாரைப் பலமாகத் தாக்கி பூனையாரின் வாலில் ஒரு துண்டைதனது பல்லால் கடித்து துண்டித்துவிட்டார்.


வாலில் ஒரு சிறு பகுதியை இழந்த பூனையார் சீறியபடியே நாயைத் துரத்தித் துரத்தித் தாக்கியபடி ஓடுகிறார்.


இவற்றை எல்லாம் வாயிலில் இருந்து பார்த்த முயலார் மெதுவாக வெளியே வந்து துண்டித்துக் கிடந்த சிறியவாலை எடுத்து தனக்குப் பொருத்திக் கொண்டார்.


அதுவும் அழகாகவே இருந்தது. முயலாருக்கும்; மகிழ்ச்சியாயிற்று. பாய்ந்து பாய்ந்து ஓடினார்.

பண்ணையில் பார்த்த முயலார்கள் பற்றி அறியப்போகின்றீர்களா ? 


பண்ணை ஒன்றிற்கு சென்றபோது இக்கதை நினைவுக்கு வந்தது.

எனது குழந்தைகளுக்கு சிறுவயதில் வாங்கிய ஆங்கில கதைப்புத்தகம் ஒன்றில் வந்த கதை இது.


அவர்கள் அந்நாளில் விரும்பிக் கேட்பார்கள்.


புத்தகம் இப்பொழுது கையில் இல்லை. எனது நினைவில் உள்ளதை சுருக்கமாகத் தந்திருக்கின்றேன்.
சிங்கராஜாவின் படங்களின் கலையாக்கம் மகள் (சின்னு) செய்து தந்தவையாகும். அவளுக்கு எனது நன்றிகள்.

-மாதேவி-

Friday, August 16, 2013

கொழும்பு மயூராபதி ஆடிப்பூரத் தேர் தீர்த்தம்

தலைநகர் கொழும்பு 6 மயூரா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் மயூரபதி சிறீ பத்திரகாளி அம்மன் ஆலயம். "அம்பிகையே  ஈஸ்வரியே எம்மை ஆளவந்து கோயில்கொண்ட வேப்பிலைக்காரி " ஆக வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் அருளும் அன்னையாக விளங்குகின்றாள்.

செவ்வாய் வெள்ளி தினங்களில் சிறப்பான பூசைகளும், பெளர்ணமி, நவராத்திரி, சிவராத்திரி, திருவெம்பாவை போன்ற  தினங்களில் விசேடஅபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

வருடாந்த திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வருடம் 26வது வருடாந்த மஹோற்சவம் ஆடி மாதம் நடாத்தப்பட்டது. ஆடிப்பூரம் தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்த உற்சவமும் வெகுசிறப்பாக நடாத்தப்படுகிறது.

தேர்  வண்ண நிறங்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் சூழ வீதிவரும் காட்சி மனதுக்கு இதத்தை தரும்.தலைநகர் கொழும்பு வாழைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு பக்தி மயம் வீசி விளங்குவதைக் காணலாம். வீடு, கடை வாயில்களில் பூரண கும்பம்வைத்து அம்பாள் வீதிவலம்வரும்போது வழிபடுவார்கள். ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெறுவர்.

தேர்த் திருவிழா அன்று பெண்களின் பாற்குட பவனி காலையில் ஆரம்பமாகும். பால்குடபவனியையும் அம்பாள் பால் அபிசேகத்தையும் கண்ணாரக் காண்பது குளிர்ச்சி.அங்கப்பிரதட்சணை, காவடி, கற்பூச்சட்டி,  துலாக்காவடி எனத் தங்கள் நேர்த்திக் கடன்களை அடியார்கள் செலுத்துவார்கள்.

பஞ்சரதத்தில் அம்பாள் தேரேறி வீதி உலா வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.தீர்த்தோற்சவம் இந்து மாக்கடலில் நடாத்தப்படுகிறது.


அம்மன் தீர்த்தமாட வீதி வரும்போது தவில் நாதஸ்வர கோஸ்டியினர் முன்னே வரும் காட்சி இது.
 அம்பாள் தீர்த்தோற்சவத்துக்காக எழுந்தருளி வரும்காட்சிகள்.


ஆரம்பத்தில்  இரு அரச மரங்களுக்கு நடுவில் வேப்பமரம் அமைந்திருக்க அதன் கீழ் சூலமாக வைத்து மக்களால் வழிபடப்பட்டு வந்தாள்அம்மன். பின் சிறிய தகரக் கொட்டகையில் அமைந்திருந்து 1980களில் அடியார்களுக்கு அருள் பாலித்து வந்தார்ள்.

நாளடைவில் பெருகி வரும் பக்தஅடியார்களின் விருப்பத்தின் படி 85 அளவில் ஆலயம் கட்டத் தீர்மானித்து ஆலயத் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.


1987 அளவில் பொன் வல்லிபுரம் அவர்கள் மேற்பார்வையில் ஆலயப் புணருத்தாரணங்கள் ஆரம்பிக்பப்பட்டன. இந்தியாவிலிருந்து தெய்வ விக்கிரகங்கள் வரழைக்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டன.

1987 நவம்பர் மாதம் அம்மனுக்கு கும்பாபிசேகம் நடாத்தப்பட்டு விழா சிறப்புற எடுக்கப்பட்டது.

கலைக் கூடம் ஒன்று ஆலய சூழலில் அமைக்கப்பட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

ஆலய முகப்பில் கல்யாண மண்டபமும் கட்டப்பட்டது. திருமணங்கள், பூனூல் சடங்குகள், நடாத்தப்பட்டு வருகின்றன.

மக்கள் ஜாதி மத பேதமின்றி கோவிலில் வழிபட்டு வருகின்றனர்.


கடற்கரைக்கு  தீர்த்தம் ஆட அம்பாளுடன் செல்லும் அடியார்கள் கூட்டம்.

அனைவரும்  மயூரபதிசிறீ பத்ரகாளிஅம்மன்  அருள் பெற்று வாழ்வோம்.

Saturday, July 27, 2013

தொடர் பதிவு - கணினியில் தவளல்

எனக்கும் கிடைத்தது ஒரு வாய்ப்பு. பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தன்னார்வ நிறுவனம் ஒன்று நடாத்திய கணினியின் பயன்பாடு பற்றிய உரை நிகழ்வு அது.  அந்த நிகழ்வில் பங்கு பற்ற எனக்கும் ஒரு அழைப்பு கிடைத்தது.

கனவுகளில்தான் கணினியை அன்று கண்டோம்.


இது போர் முற்றி யாழ் குடாநாட்டில் நாம் முடங்கியிருந்த காலத்தில் நடந்தது. காலம் சரியாக ஞாபகம் இல்லை. 1994 அல்லது 1995 ஆக இருக்கலாம்.

அப்பொழுதுதான் முதன் முதலாக கடலளவு விடயங்கள் அந்தப் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறது. அள்ளத்தான் எமக்கு வழி தெரியவில்லை என்பது புரிந்தது.

அடு்ப்பை மூட்டுவதுடன் நின்றுவிடாது கணினியையும் ஒரு கை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அப்பொழுதே தோன்றிவிட்டது. ஆனால் அந்நேரம் கண்ணாலும் காணவில்லை.

நாங்கள் வசித்தது வட மாநிலம். வீட்டுக்கு வெளியே சென்றால் "போன மச்சான் திரும்பி வருவாரா" என்பது சந்தேகம். அப்போது நிலத்தைப் பார்க்காது வானத்தைப் பார்த்துத்தான் நடப்போம்.

ஹெலியிலிருந்து சூடு வருமா, பொம்பருக்குள் இருந்து குண்டுகள் விழுமா எனப் பார்க்க வேண்டியிருந்தது.  வானத்திலிருந்து கொட்டாமலும் காலன் அசுமிசமின்றி வருவான்.

ஆம் பாலாலி காம்பிலிருந்து ஷெல்  கூவி வருவதின் சத்தம் கேட்பதற்கிடையில் தலையில் விழுந்துவிடும்.

இப்படியான சூழலில் காலம் தவழ்ந்து கொண்டிருந்தது . ஒரு தடவை ஆன்மீக நிறுவனம் ஒன்று ஒழுங்கு செய்திருந்த பாடசாலை மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சியில் கணினியை இயக்குவது எப்படி என காட்டும் கருத்தரங்கு அப் பகுதியில் நடாத்தப்பட்டது.

அப்பொழுது நீயும் மாணவியாக இருந்தாயா எனக் கேட்கிறீர்களா?  ஆம் கணனியை கற்க விரும்பிய குடும்பத் தலைவியான மாணவியாக  இருந்தேன்.  கணினி எப்படி இருக்கும் என்பதை முதன்முதலாகக் காண ஆர்வம் கொண்டு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

அங்குதான் காணாததைக் கண்டு ஆ!  என்று விழி விரியப் பார்த்து நின்றேன்.

எப்படியும் கணனி ஒன்றைச் சொந்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததும் அன்றுதான்.காலம் அலுக்காது ஓடிக்கொண்டிருந்தது. யுத்தம் ஓயவிடாது அதைத் துரத்திக் கொண்டே இருந்தது. உணவுக்கே மக்கள் துன்பப் பட்டுக் கொண்டிருந்த நேரம். பல வருடங்களாக எலக்ரிசிட்டியும் கிடையாது. இந் நிலையில் கொழும்பிலிருந்து எங்ஙனம் கணினியை வரவழைப்பது?

தாண்டிக்குளத்தடியால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வந்து கேரதீவுக் கடலில் படகில் ஏறி மறுகரை வருவதே  மனிதருக்கு பெரிய பாடாக இருக்கும்போது கணினியாவது மண்ணாங்கட்டியாவது?

கனவு களிமண்ணாக நீரில் கசிந்து கரைந்து வடிந்துவிட்டது.

சிறிது காலம்போனது. 1996 மீண்டும் இலங்கை இராணுவம் யாழ் குடாவைக் கைப்பற்றியது.. நாங்களும் 1997 ஆரம்பத்தில் குடும்பமாக கொழும்பு வந்து சேர்ந்தோம்.

வந்த புதிதில் மீண்டும் தொழில் தொடங்கி அம் முயற்சியில் ஈடுபட்டு ஆறு மாதங்கள் அளவில் ஓரளவு முன்னேற்றத்தை அடைந்தோம்.

அப்பொழுதுதான்  நீண்ட நாள் கணினி ஆசைக்கு வீட்டில் முடிவு வந்தது.

கணவரும் பிள்ளைகளும் விரல் தேயத் தேய தட்டித் தட்டிப் பழகினார்கள். நானோ தட்டவும் இல்லை. பழகவும் இல்லை. எப்படியோ கணினியை திறக்கவும் மூடவும் மட்டும் பழகியிருந்தேன் :))


இது போதாதா?.  மற்றையபடி பிள்ளைகள் கணவர் செய்வதை பார்த்துக் கொண்டிருப்பேன். எல்லோரும் முறுக்கிய முறுக்கில் கணினியின்  உயிரும் ஊஞ்சல் ஆடும். ரெக்னீசியனும் அடிக்கடி வீசிட் அடிப்பார்.

பிள்ளைகள்  கேம் விளையாடுவார்கள். அம்மாவும் பலூனை வெடிக்க வையேன் என்பார்கள். முயற்சிப்பேன் சரியாக வருவதில்லை. Tom rider  சுட்டு விளையாடு என்பார்கள். சுடப்போனாலும் அம்மாவுக்கு வடைதான் சுடத் தெரியும் எனச் சிரிப்பார்கள்..

கணவரும் கணனி கற்கச் சென்றதில்லை. தனது நிறுவனத்திற்காக தானே படித்து இயக்கக் கற்றுக் கொண்டார். வாடிக்கையாளர்கள் விபரங்கள்,  நிறுவனக் கொள்வனவு அவற்றி்ற்கான விபரங்கள்,கணக்குகள், என பதியப் பழகியிருந்தார்.

நானும் கணவருடன் வேலைக்கு சென்று உதவுவதுண்டு. அப்பொழுது தொடங்கி வாடிக்கையாளர்களின் பதிவு, விபரங்கள் அறிவதற்காக தட்டித் தட்டிப் பழகிக் கொண்டேன்.

நிறுவனத்தில் இரு கணனிகள் இருந்தன. ஒன்று கணவரின் பாவனைக்கு மற்றது ஊழியர்களின் பாவனைக்கு.  தொழிலுக்கு வேண்டிய விபரங்களை பார்வையிடப் பழகிவிட்டேன்.

 நானும் கணவரிடம் இருந்து அறிந்ததுதான். ஆங்கில எழுத்தின் மேல் தமிழ் எழுத்தை எழுதி ஒட்டிஅதைப் பார்த்துப் பார்த்து தமிழிலும் அடிக்கப் பழகினேன்.

கணவரின் ஆபீஸ் தேவைகளை வாசித்து திருத்திக் கொடுப்பதற்காக என செய்து பழகிக் கொண்டதுதான் எனது அனுபவம்.

அத்துடன் எங்கள் இருவருக்குமே வாசிக்கும் ஆர்வம் நிறைய இருந்ததால் கணினியி்ல் பத்திரிகைகள்,  தினமணி, நக்கிரன், பதிவுகள் போன்றவற்றில் கட்டுரைகள்  வாசிக்கப் பழகியிருந்தேன்.

பலரின் பதிவுகளையும் விரும்பிப் படித்திருக்கிறேன். அவ்வாறான வாசிப்பும் தேடலும்தான் தமிழ்மணத்தையும் அறிமுகமாக்கியது.

சமையல் திரட்டி நடாத்திய 'வாரத் திட்டம்' என் கண்முன் வந்தது. அதைப் பார்த்ததும் நானும் அதில் கலந்து கொள்ளலாம் எனத் தோன்றியது. கணவரும் உதவி புரிந்தார்.

சமையல் அனுபவத்தை தூயா அவர்களுக்கு அனுப்பினேன். அவரும் உற்சாகத்தோடு வரவேற்பு தந்தார். அப்படியாக காலடி எடுத்து வைத்தவள்தான் இவள். துயாவின் சமையல்கட்டு அவர்களுக்கு நன்றிகள்.

இப்பொழுதும் என்ன வாழுது எனக் கேட்கிறீர்களா?

 "வந்தாள் மஹாலஷ்மியே .........." என கட்டிய பாவத்திற்கு கணவரும்,

 "அம்மாவை வணங்காத உயிர் இல்லையே"  என மகளும்  சொல்லித் தருவதால் ஓடுகின்றது கணினியுடன் நாட்கள்.

அதுதான் உப்பைப் புளியைப் போட்டு அவர்களின் வாயை அடைத்து விடுகிறேனே என கணவரே கூறிவிட்டார்.... ஹா.. ஹா....

ஆனால் "உப்பு கூடி பிரஷர் உன்னால்தான்" எனச் சொல்ல இன்னும் நேரம் வரவில்லை..

சின்னுரேஸ்ரி முகப்புப் பட டிசைன் மகள் சின்னுவின் கைவண்ணம்.


என்னை எழுத அழைத்த "எனது எண்ணங்கள்" தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு நன்றிகள்.

பலரும் எழுதிவிட்டார்கள்

இன்னும் பலரும் தங்கள் அனுபவங்களை பகிர ஆவலுடன் இருப்பார்கள்.

என்னை  ஒருவரும் அழைக்கவில்லையே என நினையாது அனைவரையும் உங்கள் அனுபவங்களை தருமாறு அன்புடன் அழைக்கின்றேன்.  

உங்கள் அனுபவங்களைப் படித்து சுவைக்க காத்திருக்கின்றோம்.

சிலரையாவது அழைக்க வேண்டும் அல்லவா? சுவையாகத் தரும் இவர்கள் அனுபவங்களைப் படிக்க விரும்புகின்றேன்.

 நாச்சியார் வல்லிசிம்ஹன்

முத்துச்சரம் ராமலஷ்மி

 தீராத விளையாட்டுப் பிள்ளை  RVS

கவிதை வீதி செளந்தர்

சேட்டைக்காரன்  

-: மாதேவி :-