Sunday, November 8, 2009

தோசம் தராமல் போவாயோ சனி பகவானே.


இராமரைக் காட்டிற்குப் போக வைத்த அரிச்சந்திரனை சுடலை காக்க வைத்த சனியின் ஆட்ட தோசம் இன்றும் தொடர்கிறதா?

புரட்டாதி சனிக் காலைகளும் விரைவில் விடிந்து விடும்.
உதயத்தில் எண்ணெய் ஸ்ஞானம் செய்து, விரதம் இருப்பர் பல பேர்.

கோவிலுக்குச் சென்று சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் எள்ளுப் பொட்டளி விளக்கேற்றி வணங்கினால்தான் பலருக்கும் தாபம் அடங்கும்.


இருகரம் கூப்பி
ஒன்பது,
பன்னிரண்டு,
இருபத்தொன்று எனப்
பலதரம் வலம் வருவர்.

கால் கடுக்க வலம் வந்த பின்
அர்ச்சனை, ஆராதனை செய்தால்தான்
தோசம் நீங்குமாம்.

'சனீஸ்வர பகவானே நல்வரம் அளியுங்கள்';
என அருள் வேண்டி கசிந்துருகி வணங்குவர்
பக்கத்தில் இருப்பவள்
'என்ன விலையில் சேலை கட்டியிருக்கிறாள்'
என்பதைக் கடைக் கண்ணால் பார்த்தவாறே.

'கோள் என் செயும் கொடுங் கூற்று என் செயும்' என நாயனார் சொன்னதை மறந்த மாந்தர் வேறேன்ன செய்வர்.

அன்று கோவிலிலும் விளக்குச் சட்டிக்கு தட்டுப்பாடு வந்துவிடும்.

சந்தையிலும் 10 ரூபா விலையானது இருபது ரூபாவாகும்.

சட்டியில் மட்டுமல்ல எள்ளு,
கோயிலிலும் எள்ளுப் போட இடமில்லாமல்
மனிதத் தலைகள் நிறைந்திருக்கும்.

நான் முந்தி நீ முந்தி என முண்டியடிக்கும்
கூட்டத்தின் நெரிசலில் இடிபட்டு
தாங்களே எண்ணெயாகக் கசிவர்.


எள், எண்ணெய் அபிசேகம் யாவற்றையும்
தரையோடு,
உடையும்
தாராளமாகப் பெற்றுக் கொள்ளும்.

பக்தர்களுக்கு ஸ்கேட்டிங் தேவையில்லை.
எண்ணெய் சறுக்கியே
விரைவில் வீதி வலம் வந்து
தப்பிவிடலாம்.

சனி பகவானின் பார்வை
சற்றுக் குறைவாக இருந்தால்.
அட்டமத்துச் சனியன்
ஏழரைச் சனியன் ஆனால்
டொங், டமார், டுமார்தான்.

பிறகென்ன!

மண்மூட்டை, சிலிங், POP யில் போய்
சாஸ்டாங்க நமஸ்காரமாய்
மாத காலம் படுக்கையில்
கிடக்க வேண்டியதுதான்.

சனி பகவானை அல்லும் பகலும் துதிபாட
ஓரிரு மாதம்
போதிய நேரம்
தாராளமாய்க் கிட்டும்.

தப்பி வீடு வந்தோர் பாடு இரட்டிப்பு கொண்டாட்டம்தான்!

அடுத்த கிழமை கோயிலுக்குச் செல்ல
புது ஆடை வாங்கலாம்.
வீட்டுக்காரருக்கு சாட்டுச் சொல்ல
கோவிலில் எண்ணெய்க் குளியல் செய்த
ஆடை சாட்சி கூறுமே!

புரட்டாதிச் சனியின் அருளால்
இவர்களுக்குக் கிடைக்கப் பெற்றது
'ஆடைப் பொங்கு சனி'
எனச் சொல்லலாம்.


அம்மாதம் முடியும் வரை
வீட்டுக்காரருக்கோ
மங்கு சனியாகி
'பர்ஸ் காலி'.
பணப் பிணி சனியாகிவிடும்.

சனீஸ்வரன் பூரண அருள் வேண்டுமெனில்
அவரது வாகனாரையும் கவனிக்க வேண்டுமே!

அறுசுவை உணவு சமைத்து படையல் செய்து வணங்கி,
நீர் தெளித்து, கவளம் உருட்டி,
ல்ஞ்ச் சீட்டில் இட்டு, (வாழையிலை தொடர் மாடியில் கிடைக்குமா?)
மாப்பால் பெட்டியின் மட்டை மேல் வைத்து,
பல்கணி ஒட்டில் அமர்ந்து விடும்.

'கா கா' என அழைக்க முடியுமா?

அவ்வாறு அழைத்த காலம் மலையேறி விட்டது.
கூவி அழைத்தால்
ஏனைய மாடிக் குடித்தனக்காரருக்குத்
தெரிந்துவிடுமே!

சி ச் சீ வெட்கம்.

இன்றைய சினிமா பாட்டுக்கள் போல என்று
ஊ ஊ என ஊளையிட்டவள்
போல் அழைக்கிறாள்.

வந்த காகமும் பயத்தால் ஜெட் வேகத்தில் திரும்பி ஓடிவிடும்.

அரை மணித்தியாலம் அழைத்த பின்
'வாராயோ தோழி'
என வானத்தை ஊடறுத்து நோக்கி அழைத்தவள்,
இப்பொழுது
'வராயே'
என அலுத்துச் சலித்துக் கொள்கிறாள்.

காகம் வராவிட்டால் சாப்பாட்டைத் துறக்க முடியுமா?


'மன்னியுங்கள் சனி பகவானே' மனம் முணுமுணுக்க,
உள்ளே சென்று உணவருந்தி
சனி விரதம் முடித்ததன் சாட்சியாக
ஏப்பமும் வெளியே வந்தது.

'உண்டு விட்டாயா சனி பகவானே?' அங்கலாகிக்கிறது மனது.

பல்கணியில் இருந்து எட்டிப் பார்க்க,
'பறந்தோடிப் போனேனே'
என கீழ்மாடி பல்கணியிலிருந்து
சிரிக்கிறது சனிப் படையல்.

பொங்கு சனியாகப் கீழ்மாடி வீட்டுக்காரருக்குப்
பொழிந்து வந்த சாத மழை,
பல்கணி எங்கும் சிதறிக் கிடக்கிறது.

கொடியில் கிடக்கும் தோய்த்த ஆடையில் விழாத வரை
வீட்டுக்காரரின் ஜாதகத்தில் சனியின் ஸ்தானம்
நல்ல நிலையில் இருப்பதாகக் கொள்ளலாம்.

சனியின் பார்வை தொலையுமா? தொடர்ந்து வருமா?

உங்கள் ஊர்களில் எப்படி?

லண்டன் கனடாவிலும் வருமா காகம்.

மாதேவி

7 comments:

  1. அருமை.. அருமை.. அருமை..!

    அசத்தியிருக்கிறீர்கள்..!

    கடைசி வரையிலும் படித்தே தீர வேண்டும் என்று கட்டாயத்தைத் தந்தது உங்களது எழுத்து..!

    வாழ்க வளமுடன்..!

    ReplyDelete
  2. வாருங்கள் உண்மைத்தமிழன் உங்கள் மிகுந்த பாராட்டுக்கு நன்றி்.

    ReplyDelete
  3. சிரித்து சிரித்து வயிறு நொகிறது... உண்மையை சிரிப்புடன் தந்து இருக்கிறீர்கள்.. முட நம்பிகைகளை உடைக்கும் இப்படிப்பட்ட பதிகளை தொடர்ந்து எதி்ர்பார்க்கின்றேன்.

    ReplyDelete
  4. நன்றி Ellel.M. நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். பாராட்டுகிறீர்கள். ஆனால் பலருக்கும் மூடநம்பிக்கைகளை மறுக்கும் பகுத்தறிவுக் கொள்கையும், வெளிப்படுத்தும் துணிவும் இல்லையே.

    ReplyDelete
  5. நல்ல விடயங்களை பதிவிட்டிருக்கிறீர்கள்

    ReplyDelete
  6. "சந்ரு said...

    நல்ல விடயங்களை பதிவிட்டிருக்கிறீர்கள்".

    கருத்துக்கு மிக்கநன்றி சந்ரு.

    ReplyDelete
  7. //லண்டன் கனடாவிலும் வருமா காகம்.//
    காக்காய்க்கு சோறு போடுற நம்ம ஆளுங்க எங்க இருந்தாலும் அது வந்திடும் :-)

    ReplyDelete