Wednesday, December 2, 2009

தேடினோம் தேடினோம் லவர்ஸ் லீப்


நுவரெலிய நகரை ஓரிடத்தில் நின்றபடியே, நாற்புறமும் முழுமையாக ரசிக்கக் கூடியதாக ஒரு மலை உச்சியின் நட்ட நடுவே கட்டப்பட்டுள்ள சீ வியூ. கருடப் பார்வை என்றும் சொல்லலாமா? இதை சாந்திபுர என அழைக்கிறார்கள்.

கால்நடையாக மலை ஏறாமலே நேரடியாக வாகனத்தில் உச்சி வரை மேலேயே சென்று பார்க்கலாம். அழகிய தேயிலைத் தோட்டப் பாதைகளின் ஊடே சென்று மலை உச்சியை அடைந்தோம்.

உச்சியின் நடுவே ஒரு கட்டிடம். வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி கட்டடத்தின் ஏணிப்படிகளில் ஏறிச் சென்று காட்சிகளை ரசிக்கலாம்.

நன்கு குளிர்மையான காற்று வருடிச் செல்ல உடல் சிலிர்த்தது. நகர் ஒரு புறம், மறு புறம் தூரத்தே உயர்ந்தோங்கிய மலைத் தொடர்கள்.


நகரின் கட்டடிடங்கள் பொம்மை வீடுகளாக அழகு கூட்டின.


அங்கிருந்து பார்க்கும் போது கீழே தெரிகிறது ஒரு கோயிலின் உயர்ந்த கோபுரம்.


அதையொட்டி தேயிலை மலைச் சரிவுகள் பசுமை போர்த்தி நின்றன.

மற்றொரு புறம் ஒற்றை மரம் ஒன்று உயர்ந்து நிமிர்ந்து என்னை யார் அசைக்க முடியும் எனச் சொல்லி நிற்கிறது. இவ்விடத்தை சிங்கிள் ரீ என அழைக்கிறார்கள்.


மலைகளில் மேக மூட்டம் சூழ்ந்திருக்க ஏறத்தாள அரை மணிநேரம் நின்று சுற்றுச் சூழலை கண்களாலும் மனங்களாலும் ரசித்துவிட்டுத் திரும்பினோம்.

Lover Leap என்னுமிடத்தை நோக்கிச் சென்றோம். சிறிய வீடுகள் தேயிலைத் தோட்டங்கள் ஊடே மணல்பாதை மேல்நோக்கி வளைந்து வளைந்து சென்றது.

உயர்ந்து செல்ல ஒரு மரத்தின் கீழ் சூலம் நாட்டப்பட்டு முனியாண்டி கோவில் என்ற பலகை நாட்டப்பட்டிருந்தது. பாதையைக் கடந்து உயர தேயிலைத் தோட்டங்களின் ஊடே வாகனம் ஏறி ஏறிச் சென்றது.

ஒரு புறம் மலை. மறுபுறம் கிடு கிடு பள்ளம்.

நீண்ட தூரம் சென்றதும் திடீரென பாதை குருட்டு முனையாக நின்றுவிட்டது.

வாகனம் தொடர்ந்து செல்ல வழியில்லை. வாகனத்தை திரும்பவும் போதிய இடம் இல்லை.

பயத்தில் உதறல் எடுத்தது.

வாகனத்திலிருந்து கீழே எட்டிப் பார்த்தால் பாதாளச் சரிவு.

விழுந்தால் சிதறு தேங்காய்தான். அனைவருக்குமே கிலி தொற்றிக் கொண்டது.

சிறுமிகள் இருவரும் பயத்தில் கூச்சல் இடத் தொடங்கினர்.

ஓட்டுனர் ராஜா திறமைசாலி.

சிறு இடத்தில் கியரை மாற்றி மாற்றி முன்னும் பின்னும் நகர்த்தி வாகனம் கீழே உருண்டு விழுந்து விடாது ஒருவாறு திருப்பிவிட்டார் அனைவருக்கும் உயிர் மீண்டது போலிருந்தது. வாகனத்தை ஓட்டி திரும்பவும் ஒருபடியாக கீழே இறங்கி வந்தோம்.

சற்று கீழே வந்ததும் தேயிலைத் தோட்டதின் ஊடே கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்களிடம் வழி கேட்டோம். அவர்கள் இடது புறம் கையைக் காட்டினார்கள். அங்கு ஒரு பாதை இருந்தது. ஆனால் வாகனம் செல்லக் கூடியது அல்ல.

இறங்கி நடந்து அப்பாதையில் தேயிலைச் செடிகளுக்கு இடையே ஏறிச் சென்றோம். ஓரளவு தூரம் சென்றதும் கற்பாறைகள் இரண்டு உயர்ந்திருக்கும் இடம் தென்பட்டது.

ஆனால் நீரையும் காணவில்லை. நீர் வீழ்ச்சியையும் காணவில்லை.

பின் புறம் அடர்ந்த மலைக் காடுதான் தென்பட்டது..


... கற்பாறைகள்தானா லவேர்ஸ் லீப் என்றெண்ணிச் சோர்ந்து நின்றபோது

அவ்வழியாக ஒரு சிறுவன் வந்தான்.

கீழே முன்பு பார்த்த அதே முனியாண்டி கோயிலின் இடது புறம் உள்ள பாதையால் சென்றால்தான் லவேர்ஸ் லீப்ஸ் காணலாம் என்றான்.

"அது என்ன Lover Leap" எனக் கேட்டோம்"

'ஒரு வெள்ளைக்கார இளம் சோடி நீர்வீழச்சியின் அழகைப் பார்க்க மேலே சென்றார்களாம். பாறை ஒன்றில் கால்வைக்கும் போது அவளின் கால் சறுக்க உச்சியிலிருந்து விழுந்துவிட்டாளாம்.

பாவம் அவன்.

செய்வதறியாது திகைத்தான்.

சட்டென I Love You சொல்லிக் கொண்டே அவனும் குதித்துவிட்டான்.

அதிலிருந்து அது லவ்வேர்ஸ் பாறை என்றும் லவேர்ஸ் லீப் என்றெல்லாம் அழைக்கப்பட்டதாம்.'

தாஜ்மஹால் முதல் இந்த லவ்வேர்ஸ் பாறை வரை புகழ் பெற்ற இடங்கள் எல்லாமே காதலின் துயரத்தையே பேசுவதை யோசிக்க மனம் அழுத்துகிறது.

சரி வந்தது வந்தாயிற்று எனக் கூறி
திரும்ப முனைந்த போது
பிள்ளைகள் தாங்கள் 'கண்டு பிடித்த'
லவேர்ஸ் லீப் என எண்ணிய பாறைகள் மேல்
நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.

மூச்சு முட்ட சிரமத்துடன் மலைமேல் ஏறிச் சென்றது வீண் போகவில்லை.

ஒருவாறு இறங்கி கீழே வந்து வாகனத்தில் முனியாண்டி கோவிலை அடைந்து அதில் நின்று பார்த்த போது அங்கிருந்து மேலே நடை பாதையாக செல்லும் பாதை அரை மைல் தூரமளவு தெரிந்தது.

அம்மாக்கள் இருவருக்கும் பார்த்த உடனேயே களைப்பு வந்துவிட்டது. அதிலேயே நின்று விட்டார்கள். சிட்டுப் பெண்ணுகள் இரண்டும் டடியுடன் மேலே பறந்து விட்டார்கள்.


கீழிருந்து அடர்ந்த மரங்கள் ஊடே பார்த்த போது மிக உச்சத்தில் நீர்வீழ்ச்சி வழிந்தோடிக் கொண்டிருப்பது தெரிந்தது.

ஸ்டீப் ஆன ஒற்றை அடிப் பாதை ஊடே சலிக்காமல் ஏறிச் சென்றார்கள். நீர்வீழ்ச்சியுள்ள உயர்ந்த கல்பாறையின் அடிப்பகுதியை அடையலாம். படம் எடுத்துக் கொண்டார்கள்.

அம்மா குருவிகள் இல்லாத ஆனந்தத்தில்; நீர்வீழ்ச்சியில் நீராடி சிலிர்த்தபடியே சிட்டுகள் இரண்டும் திரும்பின.


இருளும் சூழத் தொடங்கியது. அனைவரும் களைத்துத்தான் போயிருந்தனர். டவுனை நோக்கிப் பிரயாணப்பட்டோம்.

மாதேவி

14 comments:

 1. Really very nice trip and your Green photos

  Thank you

  ReplyDelete
 2. அழகு அழகு அழகு.சொல்லில் அடக்கமுடியா அழகு.நானும் போயிருக்கிறேன்.

  ReplyDelete
 3. உங்கள் கருத்திற்கு நன்றி புதுவை சிவா.

  ReplyDelete
 4. ஹேமா "சொல்லில் அடக்கமுடியா அழகு."

  ஆமாம் சரியாகச் சொன்னீர்கள் நாங்களும் பார்த்து மிகவும் மகிழ்ந்தோம்.

  ReplyDelete
 5. படங்களும் பதிவும் அருமை.

  ReplyDelete
 6. எங்கு இருக்கிரது இந்த Lover Leap ரூட் மேப் பிலிஷ்.

  my email id : cdmsarans4u@yahoo.com

  ReplyDelete
 7. நாங்கள் எங்கள் ஹனிமூனுக்கு இலங்கையில் உள்ள நுவரேலியாவிற்குத்தான் வந்தோம். சிங்கிள் டிரீ என்ற இடத்தில் இருந்தும் நகரம் முழுவதும் தெரியும்.

  ReplyDelete
 8. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி blogpaandi.

  ReplyDelete
 9. சரவணன். ச said..."எங்கு இருக்கிரது இந்த Lover Leap ரூட் மேப் பிலிஷ்"

  கீழ்கண்ட தளத்திற்கு சென்று விபரம் காணுங்கள்.

  http://www.nuwaraeliya.org/attractions.htm

  ReplyDelete
 10. அழகு அத்தனையும்

  ReplyDelete
 11. வாங்க எம்.எம்.அப்துல்லா. இலங்கையில் ஹனிமூனுக்கு ஏற்ற இடம் நுவரேலியாதான்.

  ReplyDelete
 12. அம்மா குருவிகள் இல்லாத ஆனந்தத்தில்; நீர்வீழ்ச்சியில் நீராடி சிலிர்த்தபடியே சிட்டுகள் இரண்டும் திரும்பின. //
  அருமையான காண்க்கிடைக்காத படங்களும்,அனுபவங்களும். பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 13. பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

  எமது நாட்டில் அழகிய பல இடங்கள் இருக்கின்றன.

  ReplyDelete