Thursday, October 22, 2009

கண்ணன் இல்லாத கோகுலம் அம்பேவல

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியினில் கன்றினைப் போல் மாயக் கண்ணன் .... லீலைகள் பல புரிந்த சியாமள கண்ணனின் கோகிலத்தின் நினைவுகள் எழுந்து ஓடின.

இலங்கையின் மத்தியப் பிரதேசமான நுவரெலியாவிலும் கோகுலத்தை ஒத்த இடம் உண்டு. ஆனால் மாயக் கண்ணன்தான் இல்லை.

அம்பேவல பச்சைப்பசேலென்ற பரந்த புல் சமவெளி இயற்கை கொழிக்க வரவேற்கிறது. பாம் (Farm) யைச் சுற்றிலும் அமைந்துள்ள மிகப் பரந்த நிலப் பரப்புக்களில் வெள்ளை, கறுப்பு, பிறவுன் என பலவித நிறங்கள் கொண்ட மேனியுடன் உடலில் கொழுத்த ஜேஸி இனத்தைச் சேர்ந்த உயர்தர மாடுகள் கூட்டம் கூட்டமாக புற்களை மேய்ந்து சென்றன.

பயத்தை விட்டுவிட்டு மெல்லத் தொட்டுப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. பாம்மைத் தாண்டி ஓரிரு மைல்கள் பிரயாணம் செய்தால் அழகிய சுத்தமான லேக்கைக் காணலாம். பத்துப் பதினைந்து பேர் செல்லக்கூடிய அழகிய இரு படகுகள் காத்திருக்கின்றன.

லேக்கைக் சுற்றிக் காட்டுவதற்கு. நல்ல காலம் செல்ப் போட்டிங்கைக் காணவில்லை. தப்பித்தோம் பிள்ளைகளிடமிருந்து.

இதையும் கடந்து ஹைலண்ட் பால் பக்டரி வளாகத்தை அடைந்தோம்.


வழியில் நெடிய காட்டு மரங்கள் செடி கொடிகள் என சுற்றிச் சூழ்ந்திருக்க நடுவே பாதை செல்கிறது. இனிய காட்டு வழிப்பயணம் பயத்தை நீக்கி நல்ல அனுபவத்தைத் தருகிறது.
பக்டரியைச் சென்று அடைந்தால் அங்கும் பலர் பெரிய ரூரிஸ்ட் பஸ்களில் ஏற்கனவே பார்வையிட வந்திருந்தார்கள்.


நாங்கள் சென்ற நேரம் மதியமாகிவிட்டதால் எங்கள் துர்ரதிஸ்டம் பக்டரி மதிய உணவுக்காக மூடப்பட்டுள்ளது.

ஒரு மணிநேரத்தின் பின் திறக்கும் எனக் கூறினார்கள். அருகே அமைந்திருந்த சிறிய பூங்காவில் உல்லாசப் பயணிகள் பலர் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். சிலர் உணவருந்தினர். பாம் (Farm)யை பார்த்துவிட்டு மீண்டும் திரும்பி வருவோம் எனக் கூறியபடியே வந்தவழியே திரும்பினோம்.

பண்ணையின் முன்வாயிலில் இருந்து நடந்து செல்லும் பாதையின் இருபுறமும் அழகுப் பூக்கன்றுகள் பூத்துக் குலுங்கின.


இடையிடையே மலை நாட்டு மரக்கறிகள் கரட்,கோவா, லீக்ஸ் பயிரிடப்பட்டு பசுமைத் தோட்டங்களாகக் காட்சி தந்தன.

லெடியூஸ் இனத்தில் புதிய சிவத்த வகை பயிரிடப்பட்டிருந்தது.
அனைவரையும் கவர்ந்தது.
பசுக்கள் பெரிய செட்போன்ற தொழுவத்தில் அடைக்கப்பட்டு உணவூட்டப் பட்டுக்கொண்டிருந்தன.
உடனுக்குடன் அவற்றின் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவற்றின் சாண நெடி உள்ளே நீண்ட நேரம் நிற்க முடியாதபடி எம்மை வெளியே செல்லத்தான் செய்தது.

இவ்வாறு அதிக அளவில் தொகையாக வைத்துப் பராமரிப்பது என்பது சிரமமானது என்பது பார்க்கும் போதே புரிந்தது.

பால் கறக்கும் இடம் இனிய அனுபவம். பசுக்கள் நிரையாக நிற்பாட்டப்பட்டு யந்திரங்களின் உதவியுடன் பால் கறக்கப்படுகிறது.
ஒவ்வொரு முலைகளுக்கும் ரியூப் போட்டு மின் அசைவினால் கறக்கப்படுகிறது. பின் அவற்றை ஒன்றோடு ஒன்று இணைத்து பெரிய போத்தல்களில் கை படாமலே சேர்க்கப்படுகிறது.
மூடிய கண்ணாடிகள் ஊடாக பார்வையிடுவோர் முண்டியடித்துக் கொண்டிருக்க இடையே புகுந்து கண்டு களிக்க வேண்டியிருந்தது.கோகிலத்துப் பசுக்கள் எல்லாம் கோபாலன் குரலைக் கேட்டு நாலுபடி பால் கறக்குது கிருஷ்ணாயி ..

அடுத்து நாம்பன் பசுக்கள் தனியே பராமரிக்கப்பட்டு தொழுவத்தில் நிற்கின்றன.தாயாகப் போகும் அன்னையருக்கு தனியே விசேட பராமரிப்புடன் கூடிய கவனம் எடுக்கப்படுவதை அவதானித்தோம்.
பாற்கட்டி பெரிய தட்டையான தட்டுக்களில் உறைநிலையில் வைக்கப்பட்டு உறைந்த பின் எடுத்து சிறிய பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
இது மெசினினால் அல்ல மனித வலுவினால். இதுவும் கண்ணாடியால் மூடப்பட்ட அறையிலேயே. நாம் வெளியே நின்று பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

எங்கும் பசுக்கள் பராமரிப்பு எனஅனைத்தையும் ரசித்தபடி வந்த பொழுது கத்தரித் தோட்ட வெருளிகளாக பசுக்களின் மண்டை ஓட்டை வைத்திருப்பது மனத்தைக் குடையவே செய்தது.
மாதேவி

4 comments:

  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிஜமா நல்லவன்.

    ReplyDelete
  2. ரொம்ப அழகான போட்டோக்கள்

    ReplyDelete