Wednesday, April 1, 2009

அப்பாவின் ஹெலிக்கொப்டர் கண்ணாடி


பாவித்து வந்த மூக்குக் கண்ணாடியை பவர் போதவில்லை எனப் புதிதாக ஒப்ரீசியனிடம் (Optician) புது மூக்குக் கண்ணாடி வாங்கி வந்தார் அப்பா.

வாங்கிய நாள் முதல் அதற்கு ராஜபோக மரியாதைதான். அழகான வெள்ளை பிளாஸ்டிக் பெட்டியின் அடியில் அடுக்கிய லினன் துணியின் மேல் மிகவும் அலங்காரமாக ஆடாது அசையாது வீற்றிருந்தது கண்ணாடி.

அத்துடன் பாதுகாப்பு போதாது என்று பிரீவ் கேசின் உள்ளும் பூட்டி வைத்துவிட்டார். மாதக்கணக்கில் அங்கு அடைக்கலம் புகுந்திருந்தது அது.

இடையே இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை கண்ணாடியைப் போட்டுப் பார்ப்போம் எனக் கூறுவார். ஆனால் பலநாட்களாக அது வெளியே வந்ததை நாம் காணவில்லை.

ஓரிரு மாதங்களின் பின் கவனமாக ஒரு நாள் வெளியே எடுத்து மிக அவதானமாக ஒரே ஒரு தடவை போட்டார். ஓரிரு நிமிடம் கழிந்திருக்காது. 'இது இப்போதைக்கு சரிப்பட்டு வராது. பிறகு போட்டுப் பார்ப்போம்' என்று கூறியவர் கண்ணாடிக்கு நோகாமல் கழற்றி பெட்டியுள் தூங்க வைத்து விட்டார்.

அடிக்கடி முருங்கை மரத்தில் வேதாளம் ஏறிய கதை தொடர்ந்தது.

இறுதியில் கண்ணாடியார் வெளியே வந்து விட்டார்.

அன்றிலிருந்து தொடங்கியது சனிப் பெயர்ச்சி.

எங்களுக்கு இந்த சனியில் எல்லாம் என்றுமே நம்பிக்கை கிடையாது. ஆனால் அப்பாவின் கண்ணாடி பட்ட பாட்டிற்குப் பிறகு சனியின் ஆட்டமும் உண்டோ என்று எண்ணத் தோன்றியது.

கண்ணாடியார் பாவனைக்கு வந்த மறுதினமே, 'ஆடிக்கொண்டு நிற்கிறார். வழுகிக்கொண்டு வாறார்' என்றெல்லாம் குறை.

இறுக்க வேண்டும் என ஒப்டிசியனிடம் சென்று சரிபார்த்து வந்தார்.

ஒருமாதிரி சரியாகிவிட்டதே என ஆறுதலில் இருந்த எங்களுக்கு 4-5 நாட்களில் மீண்டும் தொடர்ந்தது சனிப்பெயர்ச்சி.

'மூக்கால் இறங்கி வருகிறதே' என்று சொல்லிச் சொல்லி மேலே தள்ளிக் கொண்டே இருந்தார்.

அப்பப்பாவின் மூக்குத் தேய்ந்துவிடுமோ என்று மகள் பயந்தாள்.
ஒரு சில நாட்களுக்கு மட்டுமே இவ்வாறு தொடர்ந்தது.

மீண்டும் புறப்பட்டார்.

வளைத்து நெளித்து சரிபார்ப்பித்து வீடு மீண்டார்.

வந்ததும் 'ஒரளவு சரி' என்றார்.

இருந்தும் அப்பாவின் முகத்தில் சிரிப்பைக் காண முடியவில்லை.

'உவனுடைய கண்ணாடி சரியில்லை' என்று இடையிடையே புலம்பிக்கொண்டே இருந்தார்.

இவ்வாறு ஓரிரு வாரம் சென்றது. அப்பாவின் கண்ணாடியை நாங்கள் மறந்தே போய்விட்டோம்.

'ஓடி வாருங்கோ' என்று மகள் எங்களைச் சத்தமாக நேற்று அழைத்தாள்.
அப்பாவின் அறைக்குள் இருந்துதான்.

என்னவோ ஏதோ என ஓடிச் சென்று பார்த்தால் மகள் காட்டிய மேசையில் ஹெலிக்கொப்டர் வடிவில் இருபுறமும் செட்டை வைத்துப் பறக்கத் தயாராக இருந்தது மூக்குக் கண்ணாடி.

அப்பாவின் அறை வீட்டில் உள்ள அனைவருக்கும் நூதனசாலையானது.

செட்டையைப் பார்த்த எங்களுக்கு முதலில் வயிறு குலுங்கச் சிரிப்புத்தான். அப்பாவோ நூறு ரூபா கொடுத்து செட்டை பூட்டியதாக அழுவார்போலச் சொன்னார். காசு போனால் பரவாயில்லை கொம்பினால் எதுவும் பிரயோசனம் இருக்குமா?

அத்துடன் இது காதின் பின் பகுதியை அழுத்தி ஏதாவது புதுப் பிரச்சனையை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் எங்களுக்கு.

அப்பா இப்பொழுது கண்ணாடி போடுவதென்பது ஒரு நீண்ட செயற்பாடாகும்.

கூட்டுக்குள் கொம்பு மடிந்து கிடக்கும் கண்ணாடியைக் கவனமாக எடுப்பார். பின்பு இரு கொம்புகளையும் பறவைகள் சிறக்கு விரித்துப் பறப்பது போல வெளிப்பக்கமாக மடக்கி எடுப்பார். கண்ணாடியை முகத்துக்கு நேரே பிடித்து கொம்புகள் காதைக் குத்தாதவாறு கண்ணாடிக்குள் முகத்தை மெதுவாக நுழைப்பார்.

அப்பாடி முடிந்தது என்கிறீர்களா?

இல்லை! அதன் பின் வெளிப்பக்கமாக வளைந்திருந்து கொம்புகளை அழுத்தி காதுக்குப் பின்புறமாக இறுக்கிப்; பிடிக்குமாறு செய்வார்.

இவ்வளவும் செய்து முடியக் களைத்துவிடுவார். 'ஒரு ரீ' கண்ணாடி போட்ட களை தீர்க்க.

பார்த்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு அதற்கு மேல் களை வந்துவிடும்.

அப்பாவின் கண்ணாடி சிந்திக்க வைக்கிறது.

ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் என்பார்கள்

போடத் தெரியதவனுக்கு கண்ணாடி லூஸ் என்று நீங்கள் கேட்கிறீர்களா?

உங்கள் யாருக்காவது கொம்புக் கண்ணாடி போட்ட அனுபவம் உண்டா?

மாதேவி

11 comments:

 1. ஆடித்தான் போனேன்

  கண்ணாடியின் கதையில்

  ReplyDelete
 2. ஒ அப்பா கண்ணாடி வீடு ஃபுல்லா பரவலான பேச்சாக இருந்து இப்ப ஊர் உலகம் பூரா பரவ விட்டாச்சா இருக்கட்டும்!

  //'ஒரு ரீ' கண்ணாடி போட்ட களை தீர்க்க/

  ஆனா இது கொஞ்சம் ஓவருதான் :)))

  ReplyDelete
 3. ""காசு போனால் பரவாயில்லை கொம்பினால் எதுவும் பிரயோசனம் இருக்குமா? ""

  ""அப்பாவின் கண்ணாடி எல்லோரையும் சிந்திக்க வைத்தது""
  ம்ம்ம்..........
  சிரிப்புடன் சிந்திக்க வைக்கும் உங்கள் பதிவு சிறப்பானதே,
  இன்னும் வரட்டும் மாதேவி
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதயுடன்)
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

  இவன்
  உலவு.காம்

  ReplyDelete
 5. நல்ல ஹாஸ்யம் கலந்த சுவாரஸ்யம் :)

  அனுஜன்யா

  ReplyDelete
 6. மாதேவி...

  நீங்களும் கொழும்பு தானோ???
  சந்தோஷம்..
  நானும் கொழும்பில் தான் இருக்கிறேன்...

  எனது வலைப்பூ பக்கம் வந்தது அறிந்தேன் மகிழ்ச்சி...

  இனிமேல் உங்களுடைய பக்கமும் வருகிறேன்...

  தொடர்ந்து வந்துட்டுப் போங்க...
  :-)

  ReplyDelete
 7. கருத்துரைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. நட்புடன் ஜமால், ஆயில்யன், கரவைக்குரல்,அனுஜன்யா, Rose மற்றும் வேத்தியன்.

  ReplyDelete
 8. மாதேவி,
  மிகவும் நல்ல நகைச்சுவை பதிவு,
  ரசித்தேன்

  ReplyDelete
 9. ரசித்ததற்கு நன்றி கார்த்திகேயன்.

  ReplyDelete