Tuesday, March 22, 2011

உலக தண்ணீர் தினம் 2011. சோகமான புன்னகை

இன்று உலக தண்ணீர் தினம்.  ஐ.நா ‘நோயுள்ள நீர்’ என சென்ற ஆண்டு விடுத்திருந்த அறிக்கையை மீண்டும் நினைவு கொள்வோம்.

இந்த ஆண்டுக்கானது  Water for Cities: Responding to the Urban Challenge.

கோடிக்கணக்கான மக்கள் சுத்தமான நீருக்கு அவதிப்படுகிறார்கள்.

சுத்தமான நீரைப் பெறமுடியாமல் வருடாந்தம் 5 வயதிற்கு உட்பட்ட 18 இலட்சம் சிறுவர்கள் பலியாகுகிறார்கள்.


அசுத்தமான நீரால் ஏற்படும் நோய்களான வயிற்றுப்போக்கு,வாந்திபேதியால் வருடத்துக்கு 22 இலட்சம்பேர்வரை இறப்பதாகக் கூறியுள்ளார்கள். அசுத்தமான நீர் இவ்வாறு மக்களைப் பலியாக்குகிறது.


நீருக்கான நெருக்கடியில் மனித நடவடிக்கைகளும் அடங்கியுள்ளன இவற்றை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாம் கைக்கொண்டு வந்தால் உலகமும் உயிர்களும் வாழும்.



சிரிக்க சிந்திக்க –


ஒருவர் - இன்றைய செய்தி கேட்டீர்களா ?
மற்றவர் - என்ன…. என்ன ?
ஒருவர் - தண்ணிக் கப்பலை பக்கத்து நாட்டுக்காரன் கடத்திக்கொண்டு போட்டான்.
மற்றவர் - இதென்னடா கொடுமை அவன் தண்ணி விற்ற காசில் வல்லரசாகி விடுவானே!!

0.0.0.0.0.

அம்மா – நீண்ட நேரமாய் பாத்ரூமில் நின்று விசில் அடித்துக் குளித்தது போதும் வா வெளியே.
மகன் - நான்  அடிக்கேலை பைப்தான் விசில் அடிக்குது.


அம்மா - !!!

0.0.0.0.0.

நிரூபர் - இந்தத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றதன் ரகசியம் என்ன?
அரசியல்வாதி – நாளொன்றுக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் ஐந்துகுடம் தண்ணி  தருவேன் எனக் கூறியிருந்தேன்.
நிருபர் - !!!


0.0.0.0.0.

பாத்ரூமில்  கணவனின் அலறல் - இன்று காலை ஆருடைய முகத்தில் விளித்தேனோ!
மனைவி – ஏனப்பா
கணவன் - முகம் கழுவ வை…த்…..த..த… ஒருகிளாஸ் தண்ணியை உடை….ச்…சு..ப.;…போட்…டன்.
மனைவி கோபாவேசத்துடன் -  அய்யோ…அய்யோ… இந்த மனுசன் நாசமாகப் போக…..   படித்துப் படித்துச் சொன்னேன்தானே  கவனம் என்று….. துவாயிலை சும்மா முகத்தைத் துடைத்துக்கொண்டு ஆபீசுக்குப் போங்கோ.
கணவன்- !!!

0.0.0.0.0.

Thursday, March 17, 2011

விடுதலை கொடுத்த தலங்கள் விடுதலை பெற்றன

சோழநாட்டு இளவரசி மாருதப்புர வீரவல்லி குன்ம நோய் தாக்கப்பட்டு குதிரைமுகம் உடையவளானாள். அவளுக்கு மருந்துகள் கொடுத்தும் நோய் குணமடையவில்லை. இங்கு வந்து இறைவனை வழிபட்டு நீராடி குதிரைமுகம் நீங்கி அழகிய பெண்ணாகினாள் என தல வரலாறு கூறுகின்றது.

எங்கள் பயணத்தில் நாங்கள் அடுத்து சென்றது மிகவும் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற தலங்கள் இரண்டில் இதுவும் ஒன்றாகும்.



மாவிட்டபுரம் கீரிமலைக்கு அண்மையில் அமைந்துள்ள இடம். வடக்கு எல்லையில் காங்கேசன்துறையும் தெற்கே தெல்லிப்பளையும் அமைந்துள்ளன. யாழ் காங்கேசன் துறை வீதியில் ஒன்பது மைல் தொலைவில் மாவிட்டபுரம் உள்ளது. தொன்மையான ஆலயம் இது.

மாருதப்புரவல்லி கந்தக் கடவுளுக்கு அமைத்த ஆலயம் மாவிட்டபுரம் என அழைக்கப்படுகிறது. அதாவது குதிரை முகம் நீங்கப் பெற்ற இடம். சிதம்பரத்திலிருந்து சிலை செய்து கொண்டுவரப் பட்டு பிரதிட்சை செய்யப்பட்டது என்கிறார்கள். 

இலங்கை ஆலயங்களிலிருந்த தேர்களுள் பெரிய தேர் இங்கு இருந்ததாகச் சொல்கிறார்கள். கோயில் கருங்கற் சிற்பவேலைப்பாடுகளுடன் கட்டப் பட்டுள்ளது. உட்பிரகாரங்களில் அற்புதமான சித்திரங்கள், தூண்கள்,சுவர்கள் காணப்படுகின்றன. மூன்று வீதிகளை உடையது.


போர்த்துக்கேயர் படையெடுத்தபோது கந்தன் சிலையை அவ்வூர் மக்கள் கிணற்றுள் மறைத்து வைத்திருந்தார்கள். அதன்பின் ஆலயம் புணரமைக்கப் பட்டதாகத் தெரிகிறது. கந்தன் உருவத்துடன் வேலும் வைத்து வழிபடுகிறார்கள்.

பழைய காலங்களில் திருவிழாவிற்கு மாட்டுவண்டி கட்டிச் சென்று வந்திருக்கிறார்கள் எம் முன்னோர்கள். எனது பாட்டி தான் மூன்று நாட்கள் அங்கு தங்கி நின்று சப்பறம், தேர், தீர்த்தம் பார்த்து வந்ததாகக் முன்பு கூறியிருக்கிறார். நாங்கள் சென்ற நேரம் மதியம் என்பதால் உள்ளே சென்று படங்கள் எடுக்கமுடியவில்லை.

கீரிமலை நகுலேஸ்வரம் இதுவும் மிகவும் தொன்மை வாய்ந்த சிவத்தலமாகும். பாடல்பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்று. போரினால் மக்கள் செல்லமுடியாது பல வருடங்களாக மூடப்பட்டுக் கிடந்தது. பத்தொன்பது வருடங்களின் பின்பு 2009 இறுதியில் திறந்துவிடப்பட்டது. கோயில் புனரமைக்கப் பட்டுவருகிறது.


கோயிலை அண்டி பழைய மடங்களும் இருக்கின்றன. 

கேணிக்கு முன்பாக  பிள்ளையாருக்கு சிறிய கோவில் உள்ளது. கேணியில் நீராடிய பின்னர் பிள்ளையாருக்கு முதலில் தோப்புக் கரணம் போட்டு வணங்கிவிட்டே பிரதான ஆலயத்திற்குச் செல்வது மரபு.


கீரிமலைக் கேணி இங்குள்ளது. கடல் மட்டத்திலிருந்து நூறுஅடி உயரமான இடத்தில் அமைந்துள்ளது. கடலுடன் இணைக்கப்பட்ட கேணி அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.


ஆண்கள் கடலுடன் அண்டிய கேணியில் நீராடி மகிழலாம் கடல் நீர் உள்ளே வந்து செல்லும். பெண்களுக்கு தனியாக மறைவான இடத்தில் நீராட வசதி இருக்கிறது.


இப்பொழுது கடலுக்குப் பக்கத்தே புதிய மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
புண்ணிய தீர்த்தமாகக் கொண்டு கீரிமலையில் பிதிர்காரியங்கள்  நடத்துவார்கள்.

ஆடிஅமாவாசை பிரசித்தமான நாள். அன்று கடலில் தீர்த்தம் ஆடி பிதிர்காரியங்கள் சிறப்பாக செய்வார்கள். நெருங்க முடியாதபடி சனக்கூட்டம் அலை மோதும்.

மூர்த்தி, தலம்,தீர்த்தம் மூன்றும் கைவரப்பெற்று மிளிர்கிறது. கபாலிகர் பஞ்ச கௌமார மதப்பிரிவினர் இங்கு வாழ்ந்ததற்கான தடயங்களும் கிடைத்திருக்கின்றன என்கிறார்கள்.

ஆதிகாலத்தில் நகுலேஸ்வரம் ‘திருத்தம்பேஸ்வரம்’ என அழைக்கப்பட்டது. யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூலில் விஜயன் ஆட்சியில் பாதுகாப்பிற்காக நான்கு பக்கமும் சிவாலயங்களை அமைத்தான் என்கிறது. ஆனால் விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முதலே இவ்வாலயம் இருந்ததாக புராணங்கள் கூறுவதாகச் சொல்கிறார்கள். முன்பிருந்த ஆலயத்தைப் புனரமைத்திருக்கலாம் என்கிறார்கள்.

பஞ்ச பாண்டவர்களுள் அர்ச்சுனன் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டு நகுலேஸ்வரத்துக்கு வந்ததாக மகாபாரதக் குறிப்புக்கூறுவதாக எடுத்துக் காட்டுகிறார்கள்.


நகுலமுனி சாபம் காரணமாகப் பெற்ற கீரிமுகத்தை நீக்குவதற்காக இந்கு வந்து தங்கியிருந்து புனிததீத்தத்தில் நீராடிகுறை நீக்கப் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. இதனால்தான் கீரிமலை என்ற பெயர் வழங்கப்பட்டது.

நகுலேஸ்வரத்தின் மிகப்பழைய கோயில் கடலில் அமிழ்ந்துவிட்டது. பின்பு இரண்டாவது கோயில் போர்த்துக்கீசப் படையெடுப்பில் அழிக்கப்பட்டது.


அதன் பின் கட்டிய மூன்றாவது கோயில்தான் இது என்ற கருத்தும் இருக்கிறது.

நாங்கள் சென்று பார்த்தபோது கீரிமலை தீர்த்தக் கேணிக்கு அருகே மிகவும் பழமையான கோயில் ஒன்று  இடிந்துபோய் காணப்படுகிறது.

குதிரை முகத்தையுடைய சிலைகளும் இருக்கின்றன. இது மாருதப்புரவீரவல்லியை நினைவுபடுத்துவதாக இருக்கலாம்.

குடாநாட்டுமக்கள் மிகவும் விரும்பிச் சென்று தரிசிக்கும் தலம்.


இப்பொழுது ஜாதி மத இன பேதமின்றி நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்து தர்சித்துச் செல்வதைப் பார்க்கக் கூடியதாக இருந்தது.

குதிரை முகத்திலிருந்தும், கீரி முகத்திலிருந்தும் அடியார்களுக்கு விடுதலை கொடுத்த தலங்கள் இப்பொழுது விடுதலை பெற்று தரிசிக்கக்  கூடியதாக இருப்பது அனைவரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

மாதேவி
0.0.0.0.0.0

Friday, February 18, 2011

வல்லைவெளி முனியப்பர்

அண்மையில் குடா நாட்டிற்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. யாழ் குடாநாடு இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள வெப்பவலயப் பிரதேசம்.

யாழ் மண்ணின் வளமே பனை என்றொரு காலம்....

கடற்கரையை அண்டிய கடலோரக் கிராமங்கள் தென்னந் தோப்புகள், மணலை அண்டிய சவுக்கங் காடுகள், பனங்கூடல்கள். வெங்காயம், கத்தரி, மிளகாய், மரவெள்ளி தோட்டங்கள், வயல் வெளிகள், புகையிலை எனப் பரந்து விரிந்து கிடக்கின்றன.

வரண்ட பூமி

பிரசித்திபெற்ற கோயில்களும் இங்கு பல அமைந்துள்ளன. சில இடங்களுக்கு உங்களையும் அழைத்துச் செல்லலாம் என நினைக்கிறேன்.

வல்லை முனியப்பர் கோவில் பின்வாயிலில் பிள்ளையார்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ரோட்டின் தெருவோரத்தில் வல்லை வெளியில் வல்லை முனியப்பர் கோவில் இருக்கிறது.

பிரதேசம் மிகவும் வரண்ட பரந்த வெளியாகும். மழைக்காலங்களில் மட்டும் இவ்வெளிகளில் நீர் நிறைந்து கடல்போன்று இருக்கும்.

வல்லைப் பாலத்தருகே தொண்டைமனாற்றில் கூடடித்து இரால் பிடித்தல்
 இதற்கு அருகேயுள்ள தொண்டமனாற்றில் இரால் மீன்பிடியில் பலர் ஈடுபட்டிருப்பதைக் காணலாம். இரால் கூடுவைத்து அடைத்தும், சிறுவலை வீசிப் பிடித்தும் இராலைச் சேகரித்துக் கொள்வார்கள்.

வல்லை முனியப்பர் மிகவும் பழமையான கோவில். வாகனங்களில் செல்பவர்கள் உண்டியலில் காசு போட்டு கற்பூரம் கொழுத்தி வணங்கிச் செல்வார்கள்.

திருப்பணி உண்டியலில் காணிக்கை செய்வர்

அதீத நம்பிக்கை உள்ளவர்கள் வாகனத்திற்கு திருநீறு  பூசுவதையும் காணலாம்.

கற்பூரம் கொழுத்தி விபூதி பூசி...
இவ்வாறு வணங்காது சென்றால் தங்களது வாகனத்திற்கு அல்லது தமது பிரயாணத்திற்கு இடர் ஏற்படும் என்ற பயம் மக்களிடையே நீண்டகாலமாகப் நிலவி வந்துள்ளது. இன்னமும் அந்தப் பயம் முற்றாக நீங்கிவிட்டதெனச் சொல்ல முடியாது

ஆதியில் முனியடித்துச் செத்தார் என்றேல்லாம் பயமுறுத்துவார்கள். வெளியாக இருந்ததால் மாலையானால் தனியே செல்லப் பயப்படுவார்கள். சுற்றியுள்ள முட்புதர்களும், கிலி கொள்ள வைக்கும்.

ஈச்சம் பழங்கள் இருக்கின்றனவா என ஏங்கிய காலம் நினைவுக்கு வருகிறது.

ஈச்சம் பற்றைகள் மிகுதியாகக் காணப்பட்ட இடம். பாதையோரத்தில் ஈச்சம் பழங்கள் வெட்டுவோரைக் காணக்கூடியதாக இருக்கும். இப்பொழுது ஈச்சமரங்கள் குறைந்துவிட்டன. 

நள்ளிரவில் முனியப்பர் வெளிப்பட்டு உலாவுவார் என்பர். ஊளையிட்டபடி வாகனத்தை கடந்ததாகவும் கூறுவர். சனநடமாட்டம் அற்ற வெட்டவெளியில் வேகமாகக் காற்றடிக்கும் போது அவ்வழியே வாகனத்தில் சென்றால் வாகனத்தின் வேகமும், காற்றின் வீச்சும் ஒன்று கூடி பயத்தில் உறைந்திருப்பவருக்கு ஊளையாகக் கேட்டிருக்கலாம் என விஞ்ஞான ரீதியாகக் கருத்தும் கூறலாம்.

இரவில் கொள்ளிவாய்ப் பிசாசின் அட்டகாசம் அப்பகுதியில் இருந்ததாக பல வயதானவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆயினும் சதுப்பு நிலத்திலிருந்து வெளிவரும் மீதேன் போன்ற வாயுக்கள் வெப்பத்தால் தீப்பிடிப்பதால்தான் அவ்வாறு நிகழ்ந்ததாக ஒருவர் விளக்கம் கூறினார்.

வல்லை முனியப்பருக்கு துணையாக பிள்ளையாரும் வந்துவிட்டார்
இவை எல்லாம்; மின்சாரம் இல்லா காலத்தில் பயமாகத்தான் இருந்திருக்கும்.

தொடக்காலத்தில் பெரிய மரத்தின் கீழ் சூலம் அமைக்கப்பட்டு வணங்கினார்கள். பின்னர் படிப்படியாக மாற்றமுற்று இப்பொழுது பிள்ளையாருக்குக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

போரில் சிதைந்த வல்லைப் பாலம் புதுக்கோலம் பெறுகிறது
மழைக்காலத்தில் இப்பகுதி கண்ணுக்கு விருந்தளிக்கும். பல வகைப் பறவைகளைக் கூட்டம் கூட்டமாகக் காணலாம். குளிர்ப் பிரதேசங்களிலிருந்து புலம்பெயரும் பறவைகள் அவையாகும்.

மாதேவி

Saturday, February 5, 2011

புதன் நீச்சத்தால் நீச்சமடைந்த வீடு

கண்கவர் விளம்பரங்களில் காட்டும் அழகிய அளவான குடும்பம். அப்பா, அம்மா, குட்டித் தங்கைக்கு ஒரு அண்ணா இனிதே மகிழ்ந்திருக்கும். அம்மா ராஜி படித்தவள். வேலை செய்யும் பெண். அப்பா குமார் ஆபீஸ் செல்பவர்.


இருந்தும் புரிந்துணர்வுடன் வேலையில் பெரும் பங்கெடுத்துக் கொள்வார். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து இருவருமே காலைச் சமையல், மதியச் சாப்பாடு இரண்டையும் முடித்துக்கொள்வார்கள்.

அதன் பின்பு அன்புச் செல்வங்களை எழுப்பி தேத்தண்ணிக் கடை ஆரம்பிக்கும். தேநீர் குடித்ததன் பின் ஒவ்வொருவராய் குளித்து காலை உணவு உண்டு மதியச் சாப்பாடு பக்கிங் செய்து பிள்ளைகள் முதலில் பாடசாலை செல்ல இவர்கள் இருவரும் தத்தமது வேலைக்குச் செல்வார்கள்.

வாழ்க்கை இனிய தென்றலாக வீசிக் கொண்டிருந்தது.


இனிதாய் இருந்த குடும்பத்தில் நுழைந்ததே புதன்..

புதன்கிழமை அல்ல.

நீச்சக் கிரகம்.

ஆபீஸில் ராஜியின் நண்பி தனது ஜாதகத்தை சாத்திரியார் ஒருவரிடம் காண்பித்துக் கேட்டதாகவும் நன்றாக பார்த்துக் கூறியதாக ஆசை காட்ட இவளுக்கும் ஆசை தொட்டது. குழந்தைகளின் பலனைப் பார்க்கலாம் என்று..

சிந்தித்துக் கருமங்களை ஆற்ற புத்தியிருக்கும்போது அதை நம்பாது இரண்டு கால் மனிதனொருவன், மூளையே இல்லாத கிரகம் சொல்வதாகச் சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்கப் புறப்பட்டாள் ஒரு நாளில்.

மகனின் ஜாதகத்தை முதலில் காட்டினாள்.

பார்த்த சாத்திரியார் "மிகவும் நல்ல ஜாதகம் எல்லாம் உச்சத்தில் இருக்கிறது. நன்கு சிறப்புறப் படிப்பான், சித்திகள் பெறுவான், சௌகரியமாக வாழ்வான் ..

ஆனால்…. "

ஆழமாக யோசித்து ஞானிபோலக் கண்ணை மூடி…

"..புதன் நீச்சம் ஒன்று இருக்கிறது. வாழ்க்கையில் அதற்கு ஏற்றதாக பொருத்தமான ஜாதகம் பார்த்துத்தான் பெண் எடுக்க வேண்டும்" என்றார்.


சாத்திரியாரின் கேட் வாசற்படியிலிருந்து கீழே கால் வைக்கு முன்னரே ராஜியின் மூளையில் புதனானது விட்டுப்போகாத ஸ்ரிக்கர் பொட்டாக ஒட்டிக்கொண்டது.

தொடர்கதையாக சிந்தனை போனது புதனின் வழியில்.

தொடர்ந்து வாராவாரம் புதன் கிழமைகளும் வந்தன. நீச்சம்  இப்பொழுதே தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கியது.

வீட்டு வேலைகளும் ஒழுங்கில்லாது போனது.

அதிகாலைச் சமையல், குழந்தைகளின் உணவு எல்லாம் கெட்டன.

சிரிப்பும் கிண்டலும் தொலைந்து போயின.

சஞ்சலமும், ஏக்கமும் அவளை ஆட்கொண்டன.


கணவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்துவிட்டான்.

கதைத்து வேலையில்லை.

காலை எழுந்து மலமசல கூடம் போவதிலிருந்து ஆரம்பித்துவிடும்.

மகனுக்கு பொருத்தமான ஜாதகம் உள்ள பெண் கிடைப்பாளா?

கிடைக்காவிட்டால் என்னவாகும். இவனது வாழ்வு சூனியமாகிவிடுமா. வாழ்வுக்குத் தேவையான பொருளாதாரம் வசதி கிட்டுமா?

குளிக்கப் போனாலும் இதே சிந்தனைதான்.

குளிக்கப் போவது தாமதமாகும், வேலைக்கு தாமதமாவதால் மேலதிகாரியின் ஏச்சுக் கிடைக்கும் என்பன வேறு கதைகள்.

அவனுக்கு பிள்ளைப் பாக்கியம் கிட்டாது போய்விடுமா?

சமைக்கப் போனால்....

இவனுக்கு ஜாதகம் கெட்ட மனைவி வந்தால் வாய்க்கு ருசியாகச் சாப்பாடும் கிடைக்காது அல்லாடப் போகிறானே என இவள் மனம் இப்பொழுதே அல்லாடத் தொடங்கிவிடும்.

தூக்கு வாளியுடன் காலையில் எழுந்து சாப்பாட்டுக் கடைக்கு செல்ல வேண்டிய கடமை கணவன் தலையில் விழுந்தது.

குட்டி மகனின் எதிர்கால குடும்ப வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது தான் ஒருத்திதான். தன்தலையில்தான் எல்லாம் பொறுத்திருக்கிறது என நினைக்கிறாளா ராஜி.

இல்லை! இல்லை!!

புதனின் தலையில்தான் எல்லாம் என எண்ணுகிறாள்.

மகன் வளர்ந்து யுனிவர்சிட்டி செல்லும்போது அழகிய பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து அவள் பின்னே சென்று அவள் புதன் நீச்சம் கொண்டவளாயின் என்னவாகும்? என்பது அவள் சிந்தனையின் மற்றொரு பக்கம்.


ராஜியைப் போன்ற அம்மாக்கள் ஐயோ பாவம் என்றாகிறது.

“அம்மா சாப்பாடு செய்தனீங்களா?”

“தேத்தண்ணி போட்டுத்தாங்கோ”

என்றெல்லாம் வாயால் கேட்டும் சாப்பிடக் கிடைக்காத குழந்தைகளின் நிலை பரிதாபம்

அவர்கள் கேட்கும் கேள்விகளும் அவள் காதில் விழுவதாக இல்லை. நீச்சப் புதனின் ஓசை மட்டும் காது, மூளை எங்கும் நீக்கமறப் பரவி நிற்கின்றன.

எல்லாம் புதன் மயம்தான் அவளுக்கு இப்பொழுது. இனி எப்பொழுதும் அதுவாகத் தொடரவும் போகிறதா?

பரிதாபம்.

வளரும் குழந்தைகளுக்கு நேரத்திற்கு உணவு சமைத்து கொடுக்க வேண்டும் என்ற புத்தி அற்ற ராஜிக்கு குழந்தைகளின் உடல் நீச்சம் பற்றி புரியவில்லையா?

புதன் நீச்ச மாயை உடல் நீச்சம், குடும்ப நீச்சம், வாழ்க்கையே நீச்சம் எனத் தொடர்கதையாய்…

மாதேவி

Sunday, January 23, 2011

மட்டக்களப்பு மாவட்டம் கமராப் பார்வை - வெள்ள அனர்த்தத்திற்கு முன்.

அண்மையில் பெய்த மழையினால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளான இடம் மட்டக்களப்பு மாவட்டம். கிழக்கு மாகாணம் முழுவதுமே பாதிப்பிற்கு உள்ளானது.

பல இலட்சம் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி வீடுகளை இழந்து, நிர்க்கதியாகித் துயருற்றனர். இன்னல்களை அனுபவித்து வரும் மக்களுக்கு அனுதாபங்களைத் தெரிவிப்போம்.


சுனாமியால் இழந்தது அளப்பரியது. ஆனால் அதனையும் தாண்டி முன் நகர்ந்தனர் மக்கள். இப்  பெருவெள்ள அனர்த்தங்களிலிருந்து மீண்டு ,புதுவாழ்வு பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டும். அதற்காக பிரார்த்திப்போம். முயற்சிப்போம்.



சுனாமியிலிருந்து பாதுகாக்க அலையால் அள்ளுப்படாது இருக்க கூம்பு வடிவில், பொத்துவிலில் கட்டிய வீடுகள்.

மட்டக்களப்பு வாவி நகருக்கு அழகூட்டிக் கொண்டிருக்கிறது. மீன்பாடும் தேன்நாடு என்ற பெயரையும் தன்னகத்தே கொண்டு மிளிர்ந்து நிற்கிறது.

வாவியோர வீடு

ஆலயங்கள் பள்ளிவாசல்கள் சூழ உள்ள இடம். வியாபார ஸ்தலமாகவும் திகழ்கிறது.

மணிக்கூட்டுக் கோபுரம் நகரின் மத்தியில்.


அதன் அருகே குழந்தைகளின் விளையாட்டுப் பூங்கா.


நகரத்தின் வாயில் முதல் கிழக்கு மாகாணம் முழுவதுமே நீண்ட நெடும் பாலங்கள். அவற்றில் பல புதியவை.  துரித வளர்ச்சிக்கு சான்றாக நிற்கின்றன.


இவை கண்ணுக்குக் குளிர்ச்சி, மனித வாழ்வின் நெருக்கமான ஊடாடலுக்கு பேருதவி. எளிதான போக்குவரத்திற்கு பெரும்பேறு.


வயல்கள் நிறைந்த விவசாயக் கிராமங்களும் இங்கிருப்பதால் மட்டக்களப்பு அரிசி, அவல், கஜீ ஆகியவற்றிக்கு பெயர் பெற்றது.

பண்ணைகள் இருப்பதால் எருமைத் தயிர் பிரபல்யமாக இருக்கிறது. எருமைத் தயிர் சட்டிகளில் உறைய வைக்கப்பட்டு பிறமாநிலங்களுககு எடுத்துவரப்பட்டு விற்பளையாகிறது. மட்டக்களப்பு ரெயின் என்றாலே உறியில் அடுக்கப்பட்ட தயிர்கள்தான் கூடை கூடையாக இறங்கும்.

வாவி இருப்பதால் மீன்கள் இங்கு அதிகம். மீன் உணவுக்குப் பெயர் பெற்றது.

வாவியில் மீன்பிடிப் படகுகள்

இங்கு விளையும் இறால் சிங்க இறால் என் அழைக்கப்படும். இந்த இறால் மிகவும் பெரியதாக இருக்கும்.


தென்னந்தோப்புடன் கூடிய வீடுகளை காணக் கூடியதாக இருந்தது. வாழைச்சேனை இங்கு உள்ளது. இலங்கையில் உள்ள ஒரே ஒரு காகித உற்பத்திச் சாலை இதுதான்.


கிழக்குப் பல்கலைக் கழகம் இங்கு அமைந்துள்ளது.


 கல்வி குழந்தைகளின் அடிப்படை உரிமை. அதனை இழக்க வேண்டிய காலகட்டம் இருந்தது. இலவசமாகக் கிடைக்கும் அதனைப் பயன்படுத்த வேணடிய வலு வேண்டும். கல்வி கிட்டினால் வாழ்வு உன்னதமாகும்.


நலவியலுக்கான பீடம் நகரிலுள்ளது.


பிரபல இராம கிருஷ்ண மிசன் இங்குள்ளது.

காத்தான்குடி,  ஓட்டமாவடி போன்ற பல்வேறு பாரம்பரியக் கிராமங்களும் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளன.


மாந்தீரிகத்திற்குப் பெயர் பெற்ற இடமாகவும் இருக்கிறது. மருத்துவம், நோய் தீர்த்தல், தற்காப்புப் பாவனைக்கு மாந்திரீகம் செய்வார்கள். நாட்டுக் கூத்து, இசை நாடகம், பறை, வில்லுப்பாட்டு கலைகளின் பிறப்படமாகவும் இருந்திருக்கிறது.

நாட்டுப்புறக் கலைகள் பற்றி ஈழத்துப் பூராடனார் பல நூல்களைத் தந்துள்ளார்.

பல கோயில்களைத் தன்னகத்தே கொண்ட நகர்.


மாமாங்கம் பிள்ளையார், கொக்கட்டிச் சோலை தான்தேன்றீஸ்வரர், பட்டிப்பளை தந்தாமலை முருகன் ஆலயம்,  இது இந்துக்களின் பூர்வீக வழிபாட்டிடமாகும். இது சின்னக் கதிர்காமம் என்றும் அழைக்கப்படுகிறது.

இவ்வாறு பல சிறப்புக்களுடன் மட்டக்களப்பு நகர் விளங்குகின்றது.

மாதேவி

Wednesday, December 22, 2010

மாங்காய்த் தீவில் கிருஸ்மஸ் ஒளித் திருவிழா

அனைவருக்கும் இனிய கிருஸ்மஸ் தின வாழ்த்துக்கள்

உலகெங்கும் உள்ள கிருஸ்தவர்கள் அனைவரும் பாலகன் யேசு பிறந்த டிசம்பர் 25ம் திகதியை கிருஸ்மஸ் தினமாகக் கொண்டாடி வருகின்றனர்.


2010 ஆண்டுகளுக்கு முன் அவதரித்த அவர் இன்றும் நிதம் நிதம் கோடிக்கணகான மகள் உள்ளங்களில் நிறைந்திருந்திருக்கிறார். நம்பிக்கையூட்டி, வாழ்வில் நிம்மதியை நிறைவித்து போதிக்கவும் புதுமைகள் செய்யவும் செய்கிறார்.


முற்று முழுதாக சைவப் பாரம்பரியம் நிறைந்த கிராமத்தில் பிறந்த எனக்கு முதல் முதல் கிருஸ்மஸ் பற்றிய நினைவுகளுக்கு காலாக இருப்பவர் வேதக்கார அம்மா என எங்கள் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி சாமுவேல்  முது அன்னையாவர்.

கரோல் பாட்டுக்கள், கிருஸ்மஸ் பப்பா ஆகியவை எமக்கு புதுமையானதாகவும், ஆச்சரியம் ஊட்டுவதாகவும் அமைந்திருந்தன.

விசேட தினத்தில் அவர் அனுப்பும் கேக்கின் சுவை இன்றும் வாயில் நீர் ஊற வைக்கிறது.

பியானே இசையில் முதல் முதல் கிறங்கியதும் அவரது இல்லத்தில்தான். இசைக்கு மேலாக பெரிய பெட்டகம் போன்ற கறுத்த அந்த வாத்தியம் எங்களுக்கு கிளர்ச்சியளிப்பதாக இருந்தது.

சின்னுவின்  கிறிஸ்மஸ்ற் பொழுதுகளில் கீதங்கள் இசைக்கப் பழக்கிய  செல்வி நல்லதம்பி  ரீச்சருக்கும் எங்கள் அன்பும் நன்றியும் என்றும் இருக்கும்.


இப்பொழுது கொழும்பு வாசி்.

அண்மையில் கடைத்தெருவுக்கு சென்றிருந்தேன்.


பம்பலப்பிட்டி மஜஸ்டிக் சிட்டி இது மிகவும் பிரபலமான Shopping complex . பலநூறு கடைகள் அங்கு நிறைந்திருக்கும். உடைகள், பொம்மை, நகை,செருப்பு, கம்பியூட்டர், டிவீடி, உணவுவகை என எந்தப் பொருளின் பெயரைச் சொன்னாலும் அவற்றிற்கான கடைகள் அங்கிருக்கும்.

பண்டிகைக் காலம் என்பதால் அழகுற அலங்கரித்திருக்கிறார்கள்.கண்டுகளிக்க ஒரே சனக்கூட்டம். நேரம் போனது தெரியவில்லை.


பெரிய கிருஸ்மஸ் மரம் வைத்து, பலூன், ஒளிர் விளக்குகள் என அலங்காரம் பிரமாதம்.


இசைக் குழு தனது கைவரிசையைக் காட்டுவதற்கு தயார் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.


இறங்கி வந்தால் சன்டா குழந்தைகளுக்கு ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார். கையில் கமரா இல்லை. மொபைல் போன் கமராவில் சிறைப் பிடித்தோம் அவரை.


வெளியே வந்தால் கண்ணைப் பறிக்கும் மஞ்சள் ஒளிக்குமிழ்கள் மனத்துக்கு உச்சாகத்தைத் தந்துகொண்டிருக்கின்றன.


அவற்றையும் அடக்கினோம் மொபைல் கமராவில்.



காலி வீதி ஓரமாகவும், ஸ்டேசன் வீதி முடக்கிலும்  அலங்கார விளக்குகள் ரம்யமாக ஒளிர்ந்து கொண்டிருந்தன.


வீதி ஓர மரத்தில் மின் குமிளிகள் ஓணான் போல ஊர்ந்து ஏறி ஒளி பரப்பிக் கொண்டிருக்கின்றன.


அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டுவோம் பரமபிதாவிடம்.