Thursday, November 13, 2008

மணநாள் பான விருந்து


மெல்லுடல்
ரீங்கரிக்கும் வீணையெனும்
குரலோசை
சிட்டெனப் பறக்கும்
சுறுசுறுப்பு
கண்டதும் காதல் பிறக்காதா?


பிறந்தது காதல்
மயங்கினேன் அவளில்
ஆயினும்
ஏற்பாளா என்னை
வெறுப்பாளா?
சேரிக்கரையான் என


கண்ணால் காதல் பேச
சென்றேன் அவளகம் தேடி
பங்களாக்களின் வீதி
வெற்று கோலாப் போத்தல்கள்
சிதறிக் கிடந்தன
அந்தஸ்தின் சின்னமா
அகங்காரத்தின் முகமா?


மெல்லிடையாள் பின்நகர்ந்து
களவாய்ப் பின்தொடர்நதேன்
பட்டு மெத்தையில்
சரிந்தாள் சோர்வாக
பசிக் களையா
அல்ல
உண்ட களை
எந் நாசியில் படர்ந்தது
அவள் மேனியில் பிறந்த உணவின் நெடி


போஸாக்கு உணவு
புரதமோ அளவிற்கதிகம்
கொழுப்பிற்கும் குறைவில்லை
பூரித்து மினுங்கியது அவள் முகம்
பாதங்களும் கவர்ந்திழுத்தன


தினம் தினம் தொடர்ந்தேன்
பாவம் என்றெண்ணினாளோ
மோகத்தை புரிந்து கொண்டாளோ
என் கருமேனியில் மயங்கினாளோ?
காதலில் வீழ்ந்தாள்!
கல்யாணமும் வேண்டுமென்றாள்.


விடுவேனா வாய்ப்பை
பெண்வீட்டு மாப்பிளையானாலும்
பரவாயில்லை
மார்கழிக் கூதலுக்கு
மெதுமெது மெத்தை
அணைப்பதற்கு அவள்.
வாய் திறந்தால்
வயிறு நிறையுமளவு
உணவு.
வேறென்ன வேணும்


திருமண நாள்
விருந்தினர் பலர் கூடினர்
அனைவருக்கும் இனிய பானம்
வைன் கலரில்
கண்ணுக்கும் கவர்ச்சி
உடலுக்கும் தென்பு.. உற்சாகமும் கூட

சொகுசு பங்களாக்களில்
கொழுத்த மனிதர்கள் மது
பானங்களில் திளைத்தனர்.




பாடினோம்
பறந்தோம்
பாடிப்பாடிப் பறந்தோம்.
மறைவில் அவர்தம் மேனியில்
படர்ந்தோம்.
வாயிடைப் பிறந்த
மென் ஸ்ரோவால்
உறிஞ்சினோம்
அவர் தம் தமனிகளிலிருந்து
மணநாள் விருந்தாயிற்று!


பாடுவோம்
பறப்போம்
எம் இனம்
பெருக்குவோம்


பரப்புவோம்
டெங்கு, சிக்கன் குனியா
மலேரியா, யானைக் கால்நோய்
இன்னும் பல.. பல நோய்கள்
பெருக்குவோம்.

-: மாதேவி :-


No comments:

Post a Comment