Friday, September 4, 2009

ஹொலிடே கொண்டாட்டம்

இன்னும் மூன்று நான்கு நாட்களில் ஸ்கூல் ஹொலிடேஸ் முடிந்து விடும். பிள்ளைகள் எல்லோருமே விளையாட்டு மூட் தாண்டி படிக்கத் தொடங்குவதற்கு ஆயத்தமாகிறார்கள். அரை மனத்துடன் தான்.

இந்த நேரத்தில் சற்று முன்னோக்கி ஹொலிடேயின் ஆரம்ப காலத்தில் இருந்த மகிழ்ச்சிப் பொழுது பற்றி அசைபோடத் தோன்றுகிறது.

முதல் ஓரிரு வாரம் தொலைக்காட்சி பார்ப்பது உண்பது உறங்குவது என ஜாலியாகப் பொழுது போனது.

கொறிப்பதற்கு உணவுகளும் காதுக்கு இனிமை சேர்க்க இசையும் ஒன்று கூடின.

வீட்டில் உறவினர் வருகை என அமர்க்களம். வீடே அதிரும் அளவிற்கு ஒரே சத்தமும் சிரிப்பொலியும்தான்.

அம்மா பிள்ளைகளுக்கு விரும்பிய உணவுகளை செய்து அசத்திக் கொண்டிருந்தா. வீடே சமையல் மணத்தில் மூழ்கிக் கிடந்தது.

இரவில் அயல் வீடுகளில் எல்லாம் வெளிச்சம் அணைக்கப்பட்டு தூக்கத்தில் மூழ்கிக் கிடக்க இங்கே இரவு 12 - 2 மணிவரை மின்னொளி பரவிக் கொண்டிருந்தது. பிள்ளைகள் படம் பார்ப்பது அல்லது இணையத்தில் இருப்பது என நேரம் போய் தூங்கப் பின்னிரவு ஆகிவிடும்.

சிறிது நாட்களில் இதுவும் அவர்களுக்கு அலுக்கத் தொடங்கியது.

பகலில் இன்டோர் கேம்ஸ் ஆன Sudoku,Puzzle, Scrabble, chess. அலுமாரி அடியில் ஒளிந்து கிடந்தவை பொழுதுக்கு ஒன்றாய் வெளிவந்து கொண்டே இருந்தன.

அதுவும் சலிக்க Trip என நச்சரிப்புத் தொடங்கியது.

Dad நல்ல மூட்டில் இருக்கும் நேரம் பார்த்து அவரை வளைத்துப் போட்டுவிட்டனர். லீவு எடுப்பதென்பது தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சிம்ம சொப்பனம்தான் எனச் சொல்லவும் வேண்டுமா?

ஒருவாறு இரண்டு நாட்கள் லீவிற்கு ஓகே கூறிவிட்டார். சின்னுவிற்கோ கொண்டாட்டம்தான்.

எங்கே செல்வது என டிஸ்கஸ் பண்ணத் தொடங்கிவிட்டனர்.

ரிப்பில் என்ஜோய் செய்வதற்கு கூடவே மைத்துனி, அவரின் மகள் மிது இருவரும் துணை சேர்ந்தனர்.


செல்லுமிடம் மலை நாடு நுவரெலியா என முடிவாயிற்று.

மலைநாட்டின் கொள்ளை அழகு எத்தனை முறைகள் சுற்றுலாக்களின் போது சென்று ரசித்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் ரசனையில் புதிய மாற்றங்களைக் கொடுக்க வைக்கும் அற்புதமான அனுபவங்களாகத் திகழும்.


கொழும்பில் இருந்து புறப்பட்டால் அவிசாவளையில் ஆரம்பிக்கும் மலைவனப் பாதை. கித்துள், ஈரப்பலா, மிளகு, கொக்கோ, கோப்பிச்செடி என ஒரு புறமாயும் மறுபுறம் கூடல்களாக தென்னை மரங்களாகவும் காட்சி கொடுக்கும்.

பசுமையில் தொடங்கி உயர்ந்து செல்லும் மலைப் பிரதேசத்தில் ரப்பர் மரங்களென அடர்ந்து செல்லும் பாதை.


அவிசாவளையைக் கடந்ததும் கித்துல்கம வருகிறது. ஊரின் பெயரே வாயில் இனித்தது.

கித்துள் மரத்திலிருந்து கள்ளு எடுக்கப்படுகிறது. அதிலிருந்து பெறப்படும் கித்துள் பாணி, கித்துள் கக்குறு ஆகியன சுவையில் பிரசித்தி பெற்றவை.

இவை எமது பனம்பாணி, பனங்கட்டி போன்றது. ஆனால் சுவையில் வித்தியாசம் உண்டு.

மழை வீழ்ச்சி மிக அதிகமான இடம் இதுவாகும்.

எயர் கொண்டிசனை அணைத்து வாகனத்தின் கண்ணாடியைத் திறக்க கொழும்பை தூற்ற வேண்டும் போலிருந்தது. அத்தனை சுகமான சுவாத்தியம்.
உடலுக்கு இதமான குளிர்காற்று தழுவிச் செல்லும். குளிரும் அதிகரித்து உடலை சிலிர்க்கச் செய்கிறது.

இங்கு வசிப்பவர்கள் எவ்வளவு பாக்கியசாலிகள்!

மேலே செல்லச் செல்ல தேயிலைச் செடிகள், சைப்பிரஸ் மரங்களென விரிந்து செல்லும் அழகோ கொள்ளை அழகுதான்.

ஹினிகத்தனை தாண்ட வட்டவளை வருகிறது.

வட்டவளையின் மலைச் சரிவுகள் நாற்புறமும் பரந்து அழகிய மலைப் படிவங்களாக கவர்ந்து இழுக்கிறது. இங்கு விளையும் தேயிலைக்கு உயர்ரகம் எனப் பெயர் உண்டு.


Zesta வின் தேயிலைத் தொழிற்சாலைப் பெயர் கண்ணில் பட்டது. அழகிய பெரிய ரீ கப் வடிவில் விளம்பரப் பலகை பிரயாணிப்பவரை வரவேற்கிறது. இது இயற்கையுடன் சேர்ந்து அழகு தருகிறது.

வீதி ஓரத்தில் அவர்களது தேநீர் விடுதி வாகனத்தில் போகும்போது தெரிந்தது.

இறங்கிப் பார்க்க பொழுது கிட்டவில்லை.

மலைச் சரிவுகளில் அழகிய வட்டவளை நகரின் கட்டிடங்கள், பங்களாக்கள் கொண்ட வியூ மாலை நேர மூடு பனியில் படிந்து மனதைக் கவர்ந்து, வாகனம் முன்னேற, பின்நோக்கி மறைகின்றன.

ஹோலிடே கொண்டாட்டம் தொடரும்.....

மாதேவி

2 comments:

  1. அருமையான பதிவு - நன்றிகள்!

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    தங்க முகுந்தன்.

    ReplyDelete