Saturday, September 19, 2009

ஹொலிடே கொண்டாட்டம் 2

தலவாக்கலை நகர் நெருங்கியது மனதும் சிலு சிலுத்துப் பொங்குகிறது. ஆம் சில்லெனக் குளிர் மேலைத் தழுவ எதிரே அருவியினின்று பாயும் நீரைக் கண்குளிரக் கண்டதும் வேறென்ன செய்யும்?





கற் பாறையினின்று கொட்டும் சென் கிளயர் எனும் சிறிய அருவி. சென் கிளயர் பள்ளத் தாக்கில் தெரிகிறது வெண் பால் போன்ற அருவி.



அருகே பிரமாண்டமான அழகிய தோற்றத்துடன் காட்சி தரும் St Clares Tea Factory. . மத்திய கால சுவீடிஸ் பாணியில் கட்டப்பட்ட இந்த Mlesna Tea Castle பக்டரி அழகா எதிரே இருக்கும் அருவி அழகா? கிறங்கி நிற்கிறோம்.
உலகப் புகழ் பெற்ற Mlesna Tea இங்குதான் உற்பத்தியாகிறது. வாயிலில் அந்தக் காலத்தில் தேயிலை கொழுந்துகளை அவிப்பதற்கான பென்னம் பெரிய பொயிலர் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.


ஒன்றுக்கு ஒன்று அழகில் போட்டி போடுவனவாய் இவையெல்லாம் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

சுற்றுலாவின் படங்கள் யாவும் சின்னு 'கிளிக்'கியதே.

படத்தின் மேலே கிளிக்குங்கள் காட்சிகள் அழகாக முழுமையாக விரிந்து தெரியும்.

இந்தப் பக்டரி அருகே ஒரு நீண்ட பாலம். அதில் நின்றுதான் மேற் கண்ட நீர் வீழ்ச்சியைப் பாரத்தோம்.

சற்றுத் தூரம் செல்ல சலசலக்கும் டிவோன் (Devon Fall) என்னும் மற்றொரு நீர் வீழ்ச்சி.


கண்ணையும் மனத்தையும் கொள்ளை கொள்ளும் அழகுடன் சோ என்ற இரைச்சலுடன் குன்றின் உச்சியிலிருந்து கொட்டி கற்பாறைகளில் விரைந்து பாய்ந்தோடி வருகிறது.

மழைக்காலத்தில் நயகரா நீர் வீழ்ச்சி போன்று கொட்டிப் பாயும் என இங்குள்ளோர் வர்ணிக்கிறார்கள். அவர்களும் நயகரா நேரில் பார்த்ததில்லை. நானும் பாரத்ததில்லை. நீங்கள் கூறுங்கள்.

இவை காணும் தோறும் குதூகலத்தை அள்ளி வழங்குகின்றன. இயற்கையின் படைப்பில் இவ்வளவு அற்புதங்களா?

சிந்தனையுடன் ரசிக்க வைக்கிறது. இயற்கையின் உவகை எம்மையும் தொற்றிக் கொண்டு மனத்திற்கு இதத்தைக் கொடுப்பதில் வியப்பில்லை.

இருபுறமும் பச்சைப் பசேலென பரந்து விரிந்த மலைச் சரிவின்; ஓரமாக கிளை பரப்பி விரிந்து நின்ற மரத்தில் சிவப்பு நிறப் பூக்கள் பூத்துக் கொட்டுகிறது.

கண்ணைப் பறித்துத் திரும்பிப் பார் பார் என அழைக்கிறது. இவற்றையெல்லாம் பார்த்து மனம் நிறைந்து மகிழ்ச்சி கொள்ள ஹெயர் பின் வளைவுகளுடாக உயர்ந்து சென்று கொண்டிருந்தது பாதை.

அடுத்து அழகு தேவதையின் தோற்றத்தில் அழகிய நுவரெலியா நகர்.


பிரிட்டிஸ் காலக் கட்டிடத்தில் நுவரெலியா போஸ்ட் ஓபீஸ் காண்போரை மயக்க வைக்கிறது. ஐரோப்பிய கட்டிடக் கலைப் பாணியில் எழுந்து நிற்கிறது

சற்றுத் தூரம் சென்றதும் பிரமாண்டமான கிரான்ட்ஹோட்டல்.


வெளி நாட்டுப் பயணிகளுக்கும் பணம் செழித்தவர்கள் தங்குவதற்குமானது. நாளொன்றுக்கு ரூம் வாடகை 15-20 ஆயிரத்தைத் தாண்டுமாம். இது நகருக்கே அழகைக் கொடுக்கிறது.

அருகே கிரான்ட் இன்டியன் ரெஸ்ரோறன்ட் அமைந்துள்ளது. இதுவும் அழகுதான்.

இவற்றை எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டே நகர்வலம் வந்தோம்.

நடுத்தர வர்க்கத்தினர் தங்கிச் செல்லக் கூடிய Angel Park எமது தங்கும் மடமாயிற்று.


இக் ஹோட்டலின் பின் புறம் நுவரேலியா நகரின் மையமாக விளங்கும் விக்டோரியா பார்க் அமைந்துள்ளது. ஹோட்டலின் ஒரு புறம் வீதிக்கு அப்பால் Good Sheperd Convent.

பயணப் பொதிகளை வைத்துவிட்டு உடலுக்கு இதமாக வெந்நீரில் நீராடி சிறிய வோக் செல்லத் தீர்மானித்தோம்.

இரவு 7.30- 8 மணி இருக்கும். குளிர் அதிகரித்து விட்டதால் நகர் அடங்கத் தொடங்கி விட்டது. வீதியில் ஓரிருவர் நடந்து சென்றனர். வாகனங்கள் சில ஓடிக் கொண்டிருந்தன. 15-20 நிமிட நடை தூரம் சென்று அத்தியாவசிய சில பொருட்களை வாங்கிக் கொண்டு ரூம் திரும்பினோம்.

இரவுக் குளிரில் ஜில் என்ற காற்றின் ஊடே வீதியில் நடந்து செல்வதில் சுகம் இருக்கத்தான் செய்தது. யாழ்ப்பாணம் கொழும்பு என வெப்பப் பிரதேசத்தில் வாழும் எங்களுக்கு ஓரிரு நாட்கள் மட்டும் தங்குவதால் குளிர் சுவாத்தியம் மனதுக்குப் பிடித்துப் போய்விடுகிறது.

தொடர்ந்தும் பல வருடங்களாக குளிரிலேயே வாழும் நிலையில் வாழ்க்கைப் பிரச்சனைகள் இருக்கலாம் என்பது லயன் வீடுகளைப் பார்த்ததும் புலப்பட்டது.

அதிகாலை ஆறு மணியளவில் எழுந்து பார்த்த போது நகரம் பனி மூடலுக்கு ஊடாக அமைதியாகக் காட்சியளித்தது.


மேல் மாடி ரூமின் முன்புற யன்னலூடாக நோக்கிய போது அடுத்து இருந்த நிலப்பரப்பில் லீக்ஸ் நாட்டப்பட்டிருந்தது. மரங்களின் இடையே பறவைகளின் சேதாரம் இல்லாது இருக்கப் போலும் சிறிய காகிதக் கொடிகள் நாட்டப்பட்டிருந்தன.

மிகுந்த குளிரிலும் பல்கணியில் சென்று ரசித்தோம்.

வீதியில் சன நடமாட்டம் இல்லை. மழை சிறியதாக தூறத் தொடங்கியிருந்தது. தடித்த கம்பளி கோட்டுடன் ஓரிருவர் குளிர் துரத்த விரைந்து சென்றனர்.

முழங் காலுக்கு கீழ் குளிர் வெடவெடக்க, வெள்ளை யூனி போர்ம், சூஸ் சொக்ஸ் அணிந்த சின்னப் பெண்கள் ஏ.எல் சோதனைக்காக குளிரிலும் புறப்பட்டிருந்தார்கள்.

ஹோலுக்கு வந்து மறுபுறம் உள்ள யன்னல் ஊடே பார்த்த போது அடுத்துள்ள நிலத்தில் கிறீன் கவுஸ் அமைக்கப்பட்டிருந்தது.



உள்ளே அழகிய செடிகள் பூத்துக் குலுங்கின.

வெளி நிலப் பரப்பில் சிகப்பு மொட்டுக்கள் விரித்தாற் போல் சிறியதாய் பீற்ரூட் செடிகள் முளைத்திருந்து அழகில் மயங்கியவரை எல்லாம் சாப்பிட வருமாறு அழைத்தன.

சின்னுவிற்கும் மிதுவுக்கும் ஒரே கொண்டாட்டம்தான். நான் முந்தி நீ முந்தி எனப் படங்கள் எடுத்து கிளிக்கிக் கொண்டார்கள்.

எட்டு மணியளவில்தான் குளிருக்கு இதமாகத் தேநீர் கிடைத்தது. நடுஇரவு முதல் Electricity Failure ஆனதால் Electric kettle வேலை செய்யவில்லையாம்.

காலைக் குளியல். குளிரில் தயங்கிய போதும் வெந்நீர்க் குளிப்பு உடலுக்கு இதமாகத்தான் இருந்தது.

குளிப்பு முடிந்ததும் சாப்பாட்டு மேசை வரவேற்றது. சான்ட்விச் தவிர மற்றதெல்லாம் எமது வழமையான உணவுகள்தான். மெத்தென்ற வெள்ளை இடியாப்பம், மஞ்சள் சொதி, இடி சம்பல் கிழங்கு மசாலா என ராஜீ கொண்டு வந்து வைத்தான்.

இடிசம்பல் மாத்திரம் சிங்களப் பக்குவம். ருசியோ ருசி. ரெசிப்பி என்னவெனக் கேட்க வைத்தது. வயிற்றை நிறைத்துக் கொண்டு வாகனத்தில் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம்.

மாதேவி

4 comments:

  1. மலையகத்தை அடிக்கடி சுற்றிப் பார்த்த எனக்கு இப்படங்கள் என் பழைய நினைவுகளைக் கொண்டுவந்தது! அருமை! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஆம். அடிக்கடி சுற்றிப் பார்க்க வைக்கும் இடம்தான் மலையகம் என்பது உண்மைதான்.

    ReplyDelete
  3. சண்டை முடிந்ததும் ஒரு முறை இலங்கைக்கு வர வேண்டும். இவ்வளவு அருமையான இடங்களா ? வாவ்..

    ReplyDelete
  4. பின்னோக்கி. உங்கள் வரவையும். அது தொடர்பான பதிவுகளையும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம்.

    ReplyDelete