Tuesday, October 29, 2013

நிலாவெளிக் கடலை எழிலூட்டும் புறாமலை (Pigeon Island)

உல்லாசப் பயணிகள் இலங்கையை நோக்கி படை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். யுத்த காலத்தின் பின் வருகை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இலங்கையின் இயற்கை அழகு அவர்களைக் கவர்ந்து இழுக்கிறது. விடுமுறையைக் கழிப்பதற்காக அக் காலங்களில் பெரும் தொகையாக வருகின்றார்கள்.



கிழக்கு இலங்கையின் இயற்கை எழில் அனைவரையும் தன்வசம் இழுத்துக் கொள்ளும். அழகு கொஞ்சும் மாவட்டமாக திருகோணமலை விளங்குகிறது.



கோணேசர் ஆலயம், கன்னியா நீரூற்று புராதன சின்னங்கள் கிண்ணியா சேருவில நிலாவெளிகடல் புறாமலை என உல்லாசப் பயணிகளுக்கு கண்டு களிக்க அநேக இடங்கள் இங்கு இருக்கின்றன.


படகுப் பயணம் சூரியக் குளியல் நீச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த இடம்.

திருகோணமலையில் இருந்து 20கிலோ மீற்றர் தூரத்தில் வடமேற்கில் அமைந்துள்ளது நிலாவெளி.

  • இது கரையோரப் பிரதேசமாக இருக்கிறது.இங்கு கடலில் மீன்பிடித்தொழில் நடைபெறுகிறது. 
  • மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்று.
  • நட்சத்திர சுற்றுலா விடுதிகள் பலவும் இங்குள்ளன. 
  • சுனாமியின் தாக்கமும் இங்கு அதிகம் ஏற்பட்டு காலப்போக்கில் மாற்றம் பெற்றுள்ளது.



திருமணமானபின்பு நிலாவெளி சென்றிருந்தோம். கணவனின் பாட்டனார் பல வருடங்களுக்கு முன் அங்கு சென்று குடியேறியிருந்தார்கள்.

வீட்டிற்கு முன்னால் வெங்காயத் தோட்டம். வீட்டின் ஒரு பக்கத்திலே கத்தரி, பூசணி, வெண்டித் தோட்டங்கள் சூழ்ந்திருக்க பழைய வீடுகள் இரண்டு. வீட்டின் பின்புறம் கிணறு. கிணற்றைச் சுற்றி எலுமிச்சை மரங்கள். வாழைத் தோட்டங்கள். பலா முருங்கை இளநீர் தென்னை கமுகு மரங்கள் என சோலை வனம்.

அடுத்த காணியில் பசுமாடு கன்றுகளுடன் மாட்டுக் கொட்டகம்.

காலை மாலை என பாலுக்கு எந்நேரமும் குறைவில்லை. நெல் வயல்கள் உப்பளம் என சற்று தொலைவே இருக்கின்றன. வீட்டில் இருந்து பார்த்தால் நிலாவெளிக் கடல் தெரியும். இடையே இவர்களுக்குச் சொந்தமான தென்னம் தோட்டங்கள். அவற்றின் ஊடே நடந்து சென்றால் கடலை அடையலாம்.


பாட்டியும் கடல் குளியலுக்கு தம்பி தங்கை கூட்டத்துடன் சேர்ந்து கொண்டாள். ஆசை தீர அனைவரும் கடலில் குளித்து வந்தோம். நின்ற ஒரு வாரமும் கடல் குளியல்தான். அவ்வளவு ஆனந்தம்.

உப்பளம் நெல்வயல் அதை ஒட்டிக் கோயில் எனச் சுற்றிப் பார்த்தோம். அப்பொழுதுதான் உல்லாசப் பயணிகளுக்கான ஹோட்டல்கள் முளைக்கத் தொடங்கியிருந்தன. குடும்பமாக அங்கும் ஒரு விசிட் அடித்தோம்.


இம் முறை சென்ற போது முன்னால் இருந்த வெங்காயத் தோட்டத்தில் வீடு கட்டி இருக்கிறார்கள். இப்பொழுதும் வீட்டைச் சுற்றி வர மாதுளை, கொய்யா மரங்கள், வாழை என இருந்ததால் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் கடற்கரையையும் தென்னந்தோட்டங்களையும் வீட்டுவாயிலில் நின்றபடியே காணமுடியவில்லை என்பது ஏமாற்றமே.

காலத்தின்மாற்றத்தால் தென்னந்தோப்புகள் எல்லாம் நவீன ஹோட்டல்களாக மாறிவிட்டிருந்தன. கட்டிடங்கள் கடலை மறைத்துவிட்டன. அவற்றைத்தாண்டித்தான் கடலுக்கு செல்லக் கூடியதாகஇருந்தது

கோணேசர் கோயில் கன்னியா புறாமலை எனச் சுற்றி வந்தோம்.


நிலாவெளிக் கடற்கரையில் இருந்து புறாமலை 2.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.


நிலாவெளிக் கடற்கரை மிகவும் அழகானது. ஆதற்கு மேலும் அழகு ஊட்டி நிற்பது புறாமலை. முன்னர் மக்கள் தனியாரின் படகுகளில் சென்று குளித்து சாப்பிட்டு மகிழ்ந்து வருவார்கள்.

புறாமலை என்று சொன்ன போதும் இவற்றில் இரண்டு தீவுகள் உள்ளன. பெரிய தீவு சுமார் 200 மீற்டர் நீளமும் 100 மீற்றர் அகலமும் கொண்டது.


இப்பொழுது இவ்விடம் தேசிய விலங்கு சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது. படகு போக்குவரத்து நடாத்துகின்றார்கள்.



மலையைச் சுற்றி ஆழம் குறைந்த கடல். அழகிய முருங்கைக் கற்களோடு கூடியது. கற்களைப் பாரத்து இரசிக்கலாம்.


புறாக்கள் அக் காலத்தில் இங்கு நிறைந்திருந்ததால் புறாமலை என்ற பெயர் வந்தது.


இங்கு 100 வகையான பவளப் பாறைகளும் முன்னூறு வகையான பவள பாறை மீன்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்


சூரிய ஒளியில் Glittering coral  சிறு சிறு வர்ணக் கற்கள் தெறிக்கும் அழகே தனிதான்.  நீரினினுள் கடல் வாழ் மீன்கள் உயிரினங்கள் நீந்திச் செல்வதை கண்டு மகிழலாம்.


 வெண் மணலுடன் கூடிய இடம் சிறுமரங்கள் கிளை பரப்பி நிழல்களாக கூடலாக அமைந்திருக்கும். அவற்றின் கீழ் அமர்ந்து கடலை இரசித்தோம்.


அப்புறம் ஆனந்தக் கடல் குளியல்.



மீன்களும் காலைத் தொட்டு சுவைத்துச் சென்றன. கடல் குளியலுடன் பசியும் பிடிக்க கொண்டு சென்ற உணவுகளை மரங்களின் கீழ் அமர்ந்து ஒரு பிடி பிடித்தோம்.

சூரியனும் மதியத்தைத் தாண்டிச் சென்றான். திரும்ப மனமில்லாது மீண்டும் படகில் ஏறி வந்தோம்.

மாதேவி 

30 comments:

  1. இவ்வளவு அழகா? இங்க குடிசை போட்டு வாழ்ந்தாலும்...வாழ்க்கை நிறைவடையும

    [[[மலையைச் சுற்றி ஆழம் குறைந்த கடல். அழகிய முருங்கைக் கற்களோடு கூடியது. கற்களைப் பாரத்து இரசிக்கலாம்.]]

    முருங்கைக் கற்களோடு--என்ன அர்த்தம்?
    கல்லில் முருங்கை?
    புரியவில்லை விளக்கினால் நலம்!
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. முருகைகல் என்றே வரவேண்டும் தட்டச்சுப்பிழை மன்னிக்கவும்.
      எடுத்துக் கூறியதற்கு நன்றி..

      Delete
  2. இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடம் பற்றிய அறிமுகம்.
    நெஞ்சம் இனித்தது சகோதரி...

    ReplyDelete
  3. வணக்கம்
    நம்ம ஊரு ஊருதான்... சிறப்பான பதிவு அருமை வாழ்த்துக்கள்
    இனி தொடருகிறேன் உங்கள் தளத்தை...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நம்மஊரு அழகானது :)

      நன்றி.

      Delete
  4. மிகவும் அழகான இடம் ரசிக்க வைத்தது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. எழிலான காட்சிகளை பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  6. அனைத்துப்படங்களும் தகவல்களும் மிக மிக ரம்யமாக உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  7. //வீட்டிற்கு முன்னால் வெங்காயத் தோட்டம். வீட்டின் ஒரு பக்கத்திலே கத்தரி, பூசணி, வெண்டித் தோட்டங்கள் சூழ்ந்திருக்க பழைய வீடுகள் இரண்டு. வீட்டின் பின்புறம் கிணறு. கிணற்றைச் சுற்றி எலுமிச்சை மரங்கள். வாழைத் தோட்டங்கள். பலா முருங்கை இளநீர் தென்னை கமுகு மரங்கள் என சோலை வனம்.

    அடுத்த காணியில் பசுமாடு கன்றுகளுடன் மாட்டுக் கொட்டகம்.

    காலை மாலை என பாலுக்கு எந்நேரமும் குறைவில்லை. நெல் வயல்கள் உப்பளம் என சற்று தொலைவே இருக்கின்றன. வீட்டில் இருந்து பார்த்தால் நிலாவெளிக் கடல் தெரியும். இடையே இவர்களுக்குச் சொந்தமான தென்னம் தோட்டங்கள். அவற்றின் ஊடே நடந்து சென்றால் கடலை அடையலாம்.//

    இவற்றையெல்லாம் கற்பனை செய்து பார்த்தேன். ஆஹா அந்த நாட்களில் என்ன ஒரு ரம்யமான சூழ்நிலையாக இருந்திருக்க வேண்டும்!!!!!

    படிக்கவே மகிழ்ச்சியாக உள்ளதே !

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு மாற்றங்கள் அந்த மகிழ்ச்சியான சூழல்எல்லாம் காணாமல்போய்விட்டன என்பது வருத்தமே.

      மிக்கநன்றி..

      Delete
  8. அற்புதமான சுற்றுலாத் தளமாக உள்ளதே
    படங்களுடன் பகிர்வு நேரடியாகப்
    பார்ப்பதைப்போன்ற உணர்வைத் தந்தது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிகவும் அருமையான இடம்தான்.

      தீபாவளி வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  9. அருமையான படங்களுடன் விளக்கிய விதம் அருமை... உங்கள் ஊருக்கு வரவேண்டும் போலத் தோன்றுகிறது.... நேரம் அமையட்டும்....

    ReplyDelete
  10. மிக அருமையான பதிவு .
    மிக்க நன்றி.
    இனிய தீபாவளி நல் வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. // உல்லாசப் பயணிகள் இலங்கையை நோக்கி படை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். யுத்த காலத்தின் பின் வருகை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இலங்கையின் இயற்கை அழகு அவர்களைக் கவர்ந்து இழுக்கிறது. விடுமுறையைக் கழிப்பதற்காக அக் காலங்களில் பெரும் தொகையாக வருகின்றார்கள். //

    மகிழ்ச்சியான செய்தி! இலங்கையில் பழைய அமைதியும் மகிழ்ச்சியும் திரும்ப வேண்டும்!

    ஒரு போட்டோகிராபர் என்ற முறையிலும், போட்டோகிராபியில் ஆர்வம் உள்ளவன் என்ற முறையிலும் உங்கள் பதிவில் உள்ள வண்ணப் பட்ங்களை ஆர்வத்துடன் பார்த்தேன். கேமராவை நன்றாக போகஸ் செய்து, காட்சிகளை பிரேமுக்குள் அழகாகவே கொண்டு வந்துள்ளீர்கள்..வாழ்த்துக்கள்!

    புறாமலை (PIGEON) சுற்றுலாதளம் பற்றிய கட்டுரை அங்கு செல்ல விரும்புவோருக்கு ஒரு நல்ல வழிகாட்டி ( GUIDE ).
    எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி திரும்ப வேண்டுவோம்.

      படங்கள் சில இணையத்திலிருந்து..

      தீபாவளி வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  12. அருமையான படங்கள்.
    பார்த்தும் படித்தும் இரசித்தேன்.
    நன்றி தோழி.

    ReplyDelete
  13. உங்கள் ரசனைக்கு நன்றி.

    ReplyDelete
  14. புறாமலை மிகவும் அழகு மாதேவி.
    உங்களுடன் வந்து நன்கு சுற்றிப்பார்த்தோம்.
    படங்கள் எல்லாம் மிக அழகு.

    ReplyDelete
    Replies
    1. வந்து சுற்றிப்பார்த்ததற்கு நன்றி.

      Delete
  15. இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள்.

    ReplyDelete
  16. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

    நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் !!

    ReplyDelete
  17. நிலவெளிக்கடல் பதிவிற்குப் பின் நீண்டதொரு இடைவெளி! வலையுலகில் தங்களது சேவை தொடரட்டும்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    ReplyDelete
  19. ரெம்ப அழகாக இருக்குங்க... ஒரு நாள் சென்று காண வேண்டும்

    ReplyDelete