Saturday, July 27, 2013

தொடர் பதிவு - கணினியில் தவளல்

எனக்கும் கிடைத்தது ஒரு வாய்ப்பு. பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தன்னார்வ நிறுவனம் ஒன்று நடாத்திய கணினியின் பயன்பாடு பற்றிய உரை நிகழ்வு அது.  அந்த நிகழ்வில் பங்கு பற்ற எனக்கும் ஒரு அழைப்பு கிடைத்தது.

கனவுகளில்தான் கணினியை அன்று கண்டோம்.


இது போர் முற்றி யாழ் குடாநாட்டில் நாம் முடங்கியிருந்த காலத்தில் நடந்தது. காலம் சரியாக ஞாபகம் இல்லை. 1994 அல்லது 1995 ஆக இருக்கலாம்.

அப்பொழுதுதான் முதன் முதலாக கடலளவு விடயங்கள் அந்தப் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறது. அள்ளத்தான் எமக்கு வழி தெரியவில்லை என்பது புரிந்தது.

அடு்ப்பை மூட்டுவதுடன் நின்றுவிடாது கணினியையும் ஒரு கை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அப்பொழுதே தோன்றிவிட்டது. ஆனால் அந்நேரம் கண்ணாலும் காணவில்லை.

நாங்கள் வசித்தது வட மாநிலம். வீட்டுக்கு வெளியே சென்றால் "போன மச்சான் திரும்பி வருவாரா" என்பது சந்தேகம். அப்போது நிலத்தைப் பார்க்காது வானத்தைப் பார்த்துத்தான் நடப்போம்.

ஹெலியிலிருந்து சூடு வருமா, பொம்பருக்குள் இருந்து குண்டுகள் விழுமா எனப் பார்க்க வேண்டியிருந்தது.  வானத்திலிருந்து கொட்டாமலும் காலன் அசுமிசமின்றி வருவான்.

ஆம் பாலாலி காம்பிலிருந்து ஷெல்  கூவி வருவதின் சத்தம் கேட்பதற்கிடையில் தலையில் விழுந்துவிடும்.

இப்படியான சூழலில் காலம் தவழ்ந்து கொண்டிருந்தது . ஒரு தடவை ஆன்மீக நிறுவனம் ஒன்று ஒழுங்கு செய்திருந்த பாடசாலை மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சியில் கணினியை இயக்குவது எப்படி என காட்டும் கருத்தரங்கு அப் பகுதியில் நடாத்தப்பட்டது.

அப்பொழுது நீயும் மாணவியாக இருந்தாயா எனக் கேட்கிறீர்களா?  ஆம் கணனியை கற்க விரும்பிய குடும்பத் தலைவியான மாணவியாக  இருந்தேன்.  கணினி எப்படி இருக்கும் என்பதை முதன்முதலாகக் காண ஆர்வம் கொண்டு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

அங்குதான் காணாததைக் கண்டு ஆ!  என்று விழி விரியப் பார்த்து நின்றேன்.

எப்படியும் கணனி ஒன்றைச் சொந்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததும் அன்றுதான்.



காலம் அலுக்காது ஓடிக்கொண்டிருந்தது. யுத்தம் ஓயவிடாது அதைத் துரத்திக் கொண்டே இருந்தது. உணவுக்கே மக்கள் துன்பப் பட்டுக் கொண்டிருந்த நேரம். பல வருடங்களாக எலக்ரிசிட்டியும் கிடையாது. இந் நிலையில் கொழும்பிலிருந்து எங்ஙனம் கணினியை வரவழைப்பது?

தாண்டிக்குளத்தடியால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வந்து கேரதீவுக் கடலில் படகில் ஏறி மறுகரை வருவதே  மனிதருக்கு பெரிய பாடாக இருக்கும்போது கணினியாவது மண்ணாங்கட்டியாவது?

கனவு களிமண்ணாக நீரில் கசிந்து கரைந்து வடிந்துவிட்டது.

சிறிது காலம்போனது. 1996 மீண்டும் இலங்கை இராணுவம் யாழ் குடாவைக் கைப்பற்றியது.. நாங்களும் 1997 ஆரம்பத்தில் குடும்பமாக கொழும்பு வந்து சேர்ந்தோம்.

வந்த புதிதில் மீண்டும் தொழில் தொடங்கி அம் முயற்சியில் ஈடுபட்டு ஆறு மாதங்கள் அளவில் ஓரளவு முன்னேற்றத்தை அடைந்தோம்.

அப்பொழுதுதான்  நீண்ட நாள் கணினி ஆசைக்கு வீட்டில் முடிவு வந்தது.

கணவரும் பிள்ளைகளும் விரல் தேயத் தேய தட்டித் தட்டிப் பழகினார்கள். நானோ தட்டவும் இல்லை. பழகவும் இல்லை. எப்படியோ கணினியை திறக்கவும் மூடவும் மட்டும் பழகியிருந்தேன் :))


இது போதாதா?.  மற்றையபடி பிள்ளைகள் கணவர் செய்வதை பார்த்துக் கொண்டிருப்பேன். எல்லோரும் முறுக்கிய முறுக்கில் கணினியின்  உயிரும் ஊஞ்சல் ஆடும். ரெக்னீசியனும் அடிக்கடி வீசிட் அடிப்பார்.

பிள்ளைகள்  கேம் விளையாடுவார்கள். அம்மாவும் பலூனை வெடிக்க வையேன் என்பார்கள். முயற்சிப்பேன் சரியாக வருவதில்லை. Tom rider  சுட்டு விளையாடு என்பார்கள். சுடப்போனாலும் அம்மாவுக்கு வடைதான் சுடத் தெரியும் எனச் சிரிப்பார்கள்..

கணவரும் கணனி கற்கச் சென்றதில்லை. தனது நிறுவனத்திற்காக தானே படித்து இயக்கக் கற்றுக் கொண்டார். வாடிக்கையாளர்கள் விபரங்கள்,  நிறுவனக் கொள்வனவு அவற்றி்ற்கான விபரங்கள்,கணக்குகள், என பதியப் பழகியிருந்தார்.

நானும் கணவருடன் வேலைக்கு சென்று உதவுவதுண்டு. அப்பொழுது தொடங்கி வாடிக்கையாளர்களின் பதிவு, விபரங்கள் அறிவதற்காக தட்டித் தட்டிப் பழகிக் கொண்டேன்.

நிறுவனத்தில் இரு கணனிகள் இருந்தன. ஒன்று கணவரின் பாவனைக்கு மற்றது ஊழியர்களின் பாவனைக்கு.  தொழிலுக்கு வேண்டிய விபரங்களை பார்வையிடப் பழகிவிட்டேன்.

 நானும் கணவரிடம் இருந்து அறிந்ததுதான். ஆங்கில எழுத்தின் மேல் தமிழ் எழுத்தை எழுதி ஒட்டிஅதைப் பார்த்துப் பார்த்து தமிழிலும் அடிக்கப் பழகினேன்.

கணவரின் ஆபீஸ் தேவைகளை வாசித்து திருத்திக் கொடுப்பதற்காக என செய்து பழகிக் கொண்டதுதான் எனது அனுபவம்.

அத்துடன் எங்கள் இருவருக்குமே வாசிக்கும் ஆர்வம் நிறைய இருந்ததால் கணினியி்ல் பத்திரிகைகள்,  தினமணி, நக்கிரன், பதிவுகள் போன்றவற்றில் கட்டுரைகள்  வாசிக்கப் பழகியிருந்தேன்.

பலரின் பதிவுகளையும் விரும்பிப் படித்திருக்கிறேன். அவ்வாறான வாசிப்பும் தேடலும்தான் தமிழ்மணத்தையும் அறிமுகமாக்கியது.

சமையல் திரட்டி நடாத்திய 'வாரத் திட்டம்' என் கண்முன் வந்தது. அதைப் பார்த்ததும் நானும் அதில் கலந்து கொள்ளலாம் எனத் தோன்றியது. கணவரும் உதவி புரிந்தார்.

சமையல் அனுபவத்தை தூயா அவர்களுக்கு அனுப்பினேன். அவரும் உற்சாகத்தோடு வரவேற்பு தந்தார். அப்படியாக காலடி எடுத்து வைத்தவள்தான் இவள். துயாவின் சமையல்கட்டு அவர்களுக்கு நன்றிகள்.

இப்பொழுதும் என்ன வாழுது எனக் கேட்கிறீர்களா?

 "வந்தாள் மஹாலஷ்மியே .........." என கட்டிய பாவத்திற்கு கணவரும்,

 "அம்மாவை வணங்காத உயிர் இல்லையே"  என மகளும்  சொல்லித் தருவதால் ஓடுகின்றது கணினியுடன் நாட்கள்.

அதுதான் உப்பைப் புளியைப் போட்டு அவர்களின் வாயை அடைத்து விடுகிறேனே என கணவரே கூறிவிட்டார்.... ஹா.. ஹா....

ஆனால் "உப்பு கூடி பிரஷர் உன்னால்தான்" எனச் சொல்ல இன்னும் நேரம் வரவில்லை..

சின்னுரேஸ்ரி முகப்புப் பட டிசைன் மகள் சின்னுவின் கைவண்ணம்.


என்னை எழுத அழைத்த "எனது எண்ணங்கள்" தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு நன்றிகள்.

பலரும் எழுதிவிட்டார்கள்

இன்னும் பலரும் தங்கள் அனுபவங்களை பகிர ஆவலுடன் இருப்பார்கள்.

என்னை  ஒருவரும் அழைக்கவில்லையே என நினையாது அனைவரையும் உங்கள் அனுபவங்களை தருமாறு அன்புடன் அழைக்கின்றேன்.  

உங்கள் அனுபவங்களைப் படித்து சுவைக்க காத்திருக்கின்றோம்.

சிலரையாவது அழைக்க வேண்டும் அல்லவா? சுவையாகத் தரும் இவர்கள் அனுபவங்களைப் படிக்க விரும்புகின்றேன்.

 நாச்சியார் வல்லிசிம்ஹன்

முத்துச்சரம் ராமலஷ்மி

 தீராத விளையாட்டுப் பிள்ளை  RVS

கவிதை வீதி செளந்தர்

சேட்டைக்காரன்  

-: மாதேவி :-

28 comments:

  1. சுவைபடச் சொல்லியுள்ளீர்கள். சின்னு ரேஸ்ரி முகப்பு மகளின் கைவண்ணமா? அவருக்கு என் வாழ்த்துகள்:)! தொடர அழைத்த அன்புக்கு நன்றி. நேரமிருக்கையில் செய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களை மகளிடம் சொல்லிவிட்டேன் நன்றி கூறச்சொன்னாள்.

      அன்புடன் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. படிக்க ஆவலுடன் இருக்கி்ன்றேன்.

      Delete
  2. அனுபவம் சுவாரஸ்யம்...!

    குறிப்பிட்ட சிலர் ஏற்கனவே அழைத்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்... கவனிக்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      "அனைவரையும் உங்கள் அனுபவங்களை தருமாறு அன்புடன் அழைக்கின்றேன். " பதிவர்கள் எல்லோரையும் அழைத்துள்ளேன். அனைவரும் எழுதினால் மகிழ்ச்சிதானே..

      Delete
  3. போர்க்காலப் பின்னணியில் சொல்லிச்சென்ற விதம் அருமை....

    //காலம் அலுக்காது ஓடிக்கொண்டிருந்தது. யுத்தம் ஓயவிடாது அதைத் துரத்திக் கொண்டே இருந்தது. உணவுக்கே மக்கள் துன்பப் பட்டுக் கொண்டிருந்த நேரம். பல வருடங்களாக எலக்ரிசிட்டியும் கிடையாது.//

    அதிக அளவில் துன்பங்களை அனுபவித்திருக்கிறீர்கள்....

    பகிர்வுக்கு நன்றி சகோதரி..

    ReplyDelete
  4. இப்போ பிளாக்ல ஓடுற விஷயமே இதுதானே .உங்கள் தொகுப்பும் அனுபவமும் நன்று.

    ReplyDelete
  5. அழகாக இயல்பாக எழுதி இருக்கிறீர்கள்

    ReplyDelete
  6. பல்வேறு சூழலுக்கு மத்தியிலும் கம்ப்யூட்டரை இயக்க கற்றுக் கொண்ட தங்கள் ஆர்வம் பாராட்டத்தக்கது. நீங்கள் அழைத்த மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

    ReplyDelete
  7. பல்வேறு கஷ்ட நஷ்டங்களுடன் தாங்கள் கணினி கற்ற அனுபவத்தை மிகச்சிறப்பாக நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். படத்தேர்வுகள் அனைத்தும் அருமை. பாராட்டுக்கள், வாழ்த்துகள். நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தட்டித் தவண்டோம். :))

      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  8. பல நடைமுறை சிக்கல்களுக்கிடையில் கணினி கற்றிருக்கிறீர்கள் .சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மகிழ்கின்றேன்.

      Delete
  9. கணிணியில் தவழ்ந்த அருமையான
    காலங்களை சிறப்பாகப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  10. இலங்கைத் தமிழர்களின் இருண்ட அந்தக் காலத்திலும் நம்பிக்கையோடு இயங்கியிருக்கிறீர்கள்.

    அதற்குள் நகைச்சுவையையும் பதமாக நுளைத்திருப்பதால் சுவையான கட்டுரையாக இருந்தது.

    ReplyDelete
  11. யுத்த அபாயங்களுக்கிடையிலும் கணினிக் கல்வியைக் கற்றீர்களே, அந்த முயற்சி பாராட்டுக்குரியது. நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  12. உயிருக்கே உத்தரவாதமில்லை என்னும் நிலையில் கணினிக்காக ஆசைப் பட்டதைப் போற்றியே ஆக வேண்டும் சகோதரி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. good Mr Elangi called me also...I will write....
    பதிவு சுவையாக இருந்தது. நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  14. இன்னல்களுக்கிடையாலும் விடா முயற்சியுடன் கணினையை வசப்படுத்தி விட்டீர்கள்

    ReplyDelete
  15. அழகான அனுபவம்... பாராட்டுகள்...!

    ReplyDelete
  16. தங்கள் கணினி அனுபவம் நிச்சயம்
    எல்லோரையும் போல சாதாரணமானதில்லை
    வானம் பார்த்து நடக்கிற சூழலைச் சொன்னவிதம்
    மனம் சிலிர்க்கச் செய்தது
    மனம் தொட்ட பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. படிக்க சுவையாக இருந்தது பதிவு..

    ReplyDelete