Saturday, February 27, 2010

பதின்ம நினைவுகள்

பாடசாலைகள், நூல்நிலையம், கோயிற் பணிவேலைகள் என ஊரின் முக்கிய வேலைகளில் முன்நின்று வந்த பிரபலமான ஒருவர்தான் எனது அப்பா.

மிகவும் அன்பானவர். அதே நேரம் கண்டிப்பையும் நல்லொழுக்கத்தையும் கடைப்பிடித்தவர். எங்களிலும் எதிர்பார்ப்பவர்.

சிறுவயதில் தந்தை தாயாரை இழந்து விட குடும்ப பாரம் சுமந்தவர். தனது அயராத முயற்சியால் முன்னேறி தென் பகுதியில் வியாபாரம் செய்து நல்ல நிலையில் இருந்தார்.

புகைப்படம் நன்றி uyirmmai.com

சத்தம் போட்டுப் பேசத் தெரியாத மிகவும் சாதுவான அம்மா.

இவர்களுக்கு நண்டு சிண்டுகள் என எத்தனை எனக் கேட்கப்படாது....

ஆனால் குசேலர் வீடு அல்ல.

அப்பாவிற்கு கட்டுப்பட்டே அனைவரும் வளர்ந்தோம். பிள்ளைகளுக்கு இடையே பதின்மத்தின் கீழ் வயதில் கூட சண்டைகள் வருவதில்லை. ஒட்டுறவுவோடுதான் இருந்தோம்.

இதில் கடைக்குட்டியாக நான்.

உருப்பட்ட மாதிரித்தான் எனச் சொல்வது கேட்கிறது.

அக்கா ஒருவர். ஏனையோர் அண்ணாமார்தான்.

அக்காவிற்கும் எனக்குமான வயது வித்தியாசம் 10. என் மீது மிகுந்த அன்பானவர். கூடிய வயது இடைவெளியே எம்மை நன்கு பிணைத்தும் இருக்கலாம்.

சிறுவயதில் எனக்கான உடைகளை தானே தைத்து எனக்குப் போட வைத்து அழகு பார்ப்பார் அக்கா.

எனது பதின்ம வயதிற்கு எட்ட முன்பே அக்காவின் திருமணம் நடைபெற்றது. நம் ஊர் வழக்கப்படி பெண்கள் திருமணத்தின் பின்பு அப்பா அம்மாவுடன்தான் வசித்து வருவார்கள். அம்மம்மாவும் எங்களுடனேயே இருந்தார்.

பெண்ணிற்குத்தான் வீடு பண்ட பாத்திரங்கள் கொடுப்பார்கள். அதிலேயே போண்டியாகி விடுவார்கள் பலபேர்.

ஆண் பிள்ளைகளுக்கு கொடுக்கும் வழக்கம் இல்லை. ஆண்கள் திருமணம் முடித்து பெண் வீட்டிற்கே போய் விடுவார்கள். இப்பொழுதும் இந்த வழக்கம்தான் இருக்கிறது. ஆனால் என் அப்பாவை ஆண்பிள்ளைகளுக்கும் சீதனம் கொடுத்தவர் என சிலர் சீண்டுவார்கள்.

மாமனார் மருமகன் கொடுமை இருந்ததாகத் தெரியவில்லை :)

இம்முறைப்படி அக்காவும் அத்தானும் எங்களுடனேயே ஒரு வருடம் இருந்தார்கள். அப்பா அவர்களுக்கு நமது வீட்டுக்கு அருகே புதிய வீடு கட்டத் தொடங்கியிருந்தார். கட்டி முடிந்ததும் அவர்கள் அங்கே குடி போனார்கள்.

அத்தான் வெளி ஊரில் வேலை என்பதால் அக்காவிற்கு உதவியாக அம்மம்மா பெரும்பாலும் அங்கேயே இருப்பார்.

அக்காவும் தனியே சென்றுவிட வீட்டு ராணி யாரென உங்களுக்குப் புரிந்திருக்கும்.

இருந்தாலும் அதட்ட அடம்பிடிக்க மாட்டேன். நல்ல பிள்ளையாகவே இருப்பேன். சந்தேகம் என்றால் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பாருங்களேன்.

எல்லாம்தான் கிடைத்துவிடுமே. பிறகு ஏன் பிரளி செய்வான் என எண்ணம். :)
அண்ணாமார்களும் தங்கையின் மேல் உயிராக இருந்தார்கள் எனச் சொல்ல வேண்டியதில்லை.

பத்து வயதுவரை எங்கள் வீட்டில் இருபுறத்து வேலிகளிலும் பொட்டுக்கள் இருக்கும். ஒரு வீட்டியிலிருந்து மற்றதற்கு தவழ்ந்து சென்று வரக் கூடிய பொட்டுக்கள்.

கீரிப்பிள்ளை போல அவற்றிற்குள்ளால் நுழைந்து ஒவ்வொரு வீடுகளாய் கடந்து ஐந்தாம் வீட்டில் உள்ள ராஜன் தம்பி வீடுவரை சென்று விளையாடி வருவேன்.

அவர்களும் அவ்வாறே தவழல்தான் தெருவால் சுற்றிப் போகும் வழக்கம் எல்லாம் இருந்ததில்லை. அணில்கள் போல எல்லோருக்கும் பொட்டுக்களே பாதைகளாக இருந்தன.

இடைப்பட்ட வீடுகளில் பிள்ளைகள் இல்லை. இருந்தும் அன்னியோன்யமாக அனுமதித்திருந்தார்கள்.

ராஜன் வீட்டு நெல்லிக்காய் கொய்யா மரம் ஏறுவதிலிருந்து மாமி வீட்டு விளாம் பழம், கமலா அக்கா வீட்டு ஆட்டுக் குட்டி, மாட்டுக் கன்றுவரை குறுமன்களுக்குத்தான் சொந்தமாக இருந்தன.

லீவு நாட்களில் அண்டை அயலிலுள்ள பிள்ளைகள் எல்லாம் கூடி விளையாடுவோம். மாபிள் குண்டு, கிரிக்கற், கிளித்தட்டு, சடுகுடு, உயரம் பாய்தல் எனத் தொடர்ந்தது. தென்னை மரங்களில் கட்டிய ஊஞ்சல்கள் .....

கிளிசரியா மரத்துப் பொன்வண்டுகள் எமது நெருப்புப் பெட்டிக்குள் சிறையாவர்கள்.
தும்பி, தம்பளப் பூச்சி யாவும் கைக்குள் அடங்கின.

மயில் இல்லாவிடினும் அவற்றின் சிறகுகள் புத்தகங்களுக்குள்.

வீட்டு முற்றத்திலேயே பூங்காவனம், தேர்த் திருவிழாவிற்கும் குறைவில்லை. மேளக் கச்சேரி, கதாப்பிரங்கம் வில்லுப்பாட்டு என தொடர்கதையாக நடைபெறும்.

சின்ன மேளம் என பையன்கள் ஆட்டமும் போடுவார்கள்.

இதில் குண்டாக நல்ல வளர்த்தியாக சிவத்தப்பையன் ஒருவன் இருப்பான். புதிய கோலிக் குண்டுகள் வைத்திருப்பான் முகம் சுளிக்காமல் எங்களுக்கும் தருவான்.

மிகவும் நல்ல உள்ளம் அவனிடத்தில் இருந்தது. எல்லோருடனும் சிரிக்கப் பேசி எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்பான். ஒருவருடனும் சண்டைக்குப் போக மாட்டான். எல்லோருக்குமே அவனைப் பிடித்திருந்தது.

அடிக்கடி வருத்தம் வரும் அவனுக்கு. ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருப்பான். பின் சுகமாகி வீடு வந்ததும் விளையாட வந்துவிடுவான். நாங்கள் மகிழ்ந்திருப்போம்.

வழமையாகப் இப்படியாகச் சென்று அட்மிட் ஆகி திரும்பி வரும் அவன் ஒரு முறை மீண்டும் விளையாட வரவேயில்லை.

"அவன் வயிறு வீங்கி ஆஸ்பத்திரியிலேயே செத்துவிட்டான்" என்று அண்ணா கூறினார்.

அதுதான் முதல் கேட்ட சாவு இடியாக இருந்தது.

இவனைப் புதைப்பார்களா? ஏரிப்பார்களா? என்ற கேள்வி சிறுசுகள் எல்லோருக்கும் எழுந்தது.

"எரித்தால் அவனுக்குச் சுடாதா?" எனக் கேட்டேன்.

செத்த வீட்டுக்குப் போகவிடமாட்டார்கள்.

அன்று மரண ஊர்வலத்தை ஒழித்து நின்று களவாகப் பார்க்க முடிந்தது. பாவம் அவனெனக் கூறி அழத்தான் முடிந்தது எங்களால்.

நீண்டகாலமாக மாபிள் விளையாட்டை விளையாட மனமே வரவில்லை. அவன் எங்களுக்குத் தந்திருந்த புதிய மாபிள்க் குண்டுகள் எப்போதும் அவன் நினைவை எழுப்பிக் கொண்டே இருந்தன.
புகைப்படம் நன்றி veyililmazai.blogspot.com/2006/12/21.html

ஒரு நல்ல நண்பனை இழந்த சோகம் எல்லோர் மனங்களிலும் இன்றும் நிலைத்து நிற்கிறது.

சிலர் பகிர்ந்தார்கள். பகிரும்படி கேட்டிருந்தார்கள்.

நானும் ஏதோ சொன்னேன். இன்னும் சொல்வேன்.

நீங்களும் உங்கள் பதின்ம வயது டயறியையும் பிரித்து பார்த்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன.

மாதேவி.

28 comments:

  1. வெகு சுவாரசியம் சின்னு ரேஸ்ரி!
    கடைசியில் மனம் கலங்க வைத்து விட்டீர்கள். அப்புறம், தங்கள் ஊர் வழக்கம் இங்கேயும் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்....பெண்களுக்கு கல்யாணம் ஆகி அம்மா அப்பாக்கூடவே இருப்பது! :-)

    ReplyDelete
  2. சில நினைவுகள் என்றும் மறக்காது..

    ReplyDelete
  3. சுவாரஸ்யமான பதிவு. தொடர்ந்து மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அடடா, கண் முண் காட்சிகள் விரிகிறது, அழகிய பதிவு, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நல்லா இருக்கு. கடைசியில் அந்தப்பையனைப்பற்றி சொல்லி ...ம்ம்

    ReplyDelete
  6. அழகான தமிழுடன், சுவாரஸ்யமா இருந்தது மாதேவி.

    நண்பனின் இழப்பு கலங்க வைத்துவிட்டது.

    ReplyDelete
  7. சுவாரசியமாக ஆரம்பித்து உருக்கமாக முடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்

    ReplyDelete
  8. வேலி வழியாகப் போய் வந்துவிடுவீர்களா:)
    இது தெரியாமல் அப்பாவிட மாட்டி இருக்கேனெ.
    மாமனார் மருமகன் சண்டை வந்ததே கிடையாது என்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
    சுகமான நினைவுகளோடு, கோலிக் குண்டு பையனின் சோகம் வருத்திவிட்டது. வெகு இயல்பன எழுத்துப்பா உங்களுடையது. நன்றி.

    ReplyDelete
  9. வாருங்கள் சந்தனமுல்லை.

    எங்கள் ஊர் வழக்கம் உங்கிருந்தால் பப்பு உங்க கூடவே இருப்பார்கள் :)

    எல்லோரும் ஒருவரை ஒருவர் மதித்து நடந்தாலே குடும்பம் சிறப்புறுமே.

    ReplyDelete
  10. வாருங்கள் அண்ணாமலையான். கருத்திற்கு நன்றி.

    ReplyDelete
  11. உங்கள் வாழ்த்துக்கு நன்றி சசிகுமார்.

    ReplyDelete
  12. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சைவகொத்துப்பரோட்டா.

    ReplyDelete
  13. வாருங்கள் சின்னஅம்மணி உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  14. அமைதிச்சாரல் said...
    "நண்பனின் இழப்பு கலங்க வைத்துவிட்டது."

    எல்லோருக்கும் சிறிய வயது இழப்புகள் மனத்தை விட்டு நீங்காதவை.இப்பொழுதும் அண்ணாமாரும் நானும் சிறுவயது காலத்தைப் பற்றிப் பேசும் போது அவனுடைய பேச்சும் வரும்.

    உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  15. பாராட்டுக்கு நன்றி சேட்டைக்காரன்.

    ReplyDelete
  16. கடைசியில் நண்பனின் மரணம் சொல்லி என் கமென்ட் ஐடியா-வையே மாதிடிங்க

    ReplyDelete
  17. உங்கள் கருத்திற்கு நன்றி T.V.ராதாகிருஷ்ணன்.

    ReplyDelete
  18. வாருங்கள் வல்லிசிம்ஹன்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  19. வருகைக்கு நன்றி Jo Amalan Rayen Fernando.

    ReplyDelete
  20. வருகைக்கு நன்றி ஆடுமாடு.

    ReplyDelete
  21. உங்கள் முதல் வருகைக்கு நன்றி மங்குனி அமைச்சர்.

    ReplyDelete
  22. பதின்ம நினைவுகளில் மகிழ்ச்சி,சோகம் எல்லாம் கலந்து இருக்கு,மாதேவி.

    நண்பனின் பளிங்கு குண்டுகள் கண்ணை உறுத்த வைத்து விட்டது.

    ReplyDelete
  23. வணக்கம் சகோதரி,
    முதல் முறையாக உங்கள் பதிவை படிக்கிறேன். நான் தேடி வந்தது என் மனைவிக்கு பத்திய சாம்பாருக்காக ஆனால் இந்த பதிவை படித்த போது மீண்டும் நான் குழந்தையாகி போனேன். நன்றி.

    ReplyDelete
  24. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதி அரசு.

    ReplyDelete
  25. subi said...
    "மீண்டும் நான் குழந்தையாகி போனேன்." மிக்க மகிழ்ச்சி.
    வருகைக்கு நன்றி.

    ReplyDelete