Friday, March 1, 2013

தெஹிவல மிருகக் காட்சிசாலையில் பறவையினங்கள்

இலங்கையின் தேசிய மிருகக் காட்சிச்சாலை தெஹிவலவில் அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப் பழமை வாய்ந்த மிருகக் காட்சிச்சாலைகளுள் இதுவும் ஒன்றாக அடங்குகிறது.


 "நானேதான் முகப்பு வாயில் ரிக்கட் வாங்கிட்டு வாங்கோ!"

பலவகை இன மிருகங்களும், பறவைகளும் ,ஊர்வனவும், மீனினங்களும்,வண்ணத்துப் பூச்சிகளும் இங்கு இருக்கின்றன. நகர்ப்புறத்திற்கு சற்று ஒதுக்குப் புறமாக இயற்கையுடன் கூடிய பசிய சூழலில் தாழ் உயர் பிரதேசங்களுடன் அமைந்திருப்பது மிகவும் கவர்ச்சியாக இருக்கின்றது.

John hagenbeckம என்பவரால் 1920 ல் சிறியதாக ஆரம்பிக்கப்பட்டது. மிருக சேர்கஸ் நடத்தும் குடு்ம்பத்தவர் இவர். ஜேர்மனியிலுள்ள தனது சகோரனுக்கு மிருகங்களை ஏற்மதி செய்த இவர் அதில் உழைத்த பணத்தைக் கொண்டு 5 ஏக்கரில் இருந்த இவ்விடத்தை 11 ஏக்கராக விஸ்தரித்தார்.

.
 "மிருகங்களைப் பார்க்கிறவங்கள் என்னை மறந்திட்டாங்கள்."

 இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தின்போது 1939ல் மூடப்பட்டது. காரணம் ஜேர்மனியராக இருந்ததால்  பின்னர் Neil weilman  என்பவரே முகாமையாளராக இருந்தார். இக்காலத்தில் விஸ்தரிக்கப்பட்டது.

படிப்படியாக ஏற்பட்ட முன்னேற்றங்களில் இப்பொழுது 23 ஏக்கருள்ள பரந்த நிலப்பரப்பாக விஸ்தீரணம் அடைந்துள்ளது. நிறைந்த மிருகங்களை வைத்துப் பராமரிக்கின்றார்கள். எத்தனை தடவைகள் சென்று பார்த்தாலும் சலிப்பதே இல்லை.


"காதலர்களும் ஜோடிகளாக குடும்பங்களும் கூட்டமாக என நிழலில் தஞ்சம்"

அழகிய சிறு சிறு பூந்தோட்டங்களும் மரநிழல் பாதைகளும் சிறுபாலங்களும் அமைந்திருந்து கவர்ச்சி ஊட்டுகின்றன. விருட்சங்களில் படரும் கொடிகள், சிறுநீரோடைகள் குளிர்ச்சி தருகின்றன. இங்குள் தாவரங்களில் பல மருத்துவத் தாவரங்களாகும்.

மிருகங்களின் சாகசக் காட்சிகளும் நடாத்தப்படுகின்றன.


"யானை டான்சுக்கு நேரம் இருக்கு. இங்கை இவ என்னத்திற்கு காத்திருக்கிறா?"

கடற்சிங்கம், சிம்பன்சி யானை நடனம், என்பனவும் இங்கு மாலை நேரங்களில் நடாத்தப்படுகினறன. யானை குதிரைகளில் சவாரியும் செய்யலாம்.

நாங்கள் சென்ற மாலை மழை இருள் மூடி இருந்தது. அதனால் படங்கள் தெளிவாக இல்லை. அப்புறம் மழையும் பொழியத்தொடங்கியதால் எல்லா இடங்களையும் பார்க்க முடியவில்லை. எடுத்த படங்களை  பகிர்கின்றேன்.

முதலில் பறவை இனங்களை கண்டுகளிப்போமே.


"மற்றவர்கள் வருவதற்கிடையில் சாப்பாட்டை அவசர அவசரமாக விழுங்குகிறேன்."


"நானும் தொப்பி போட்டால் எப்படி இருக்கும்"


 "நான ஒளித்தும் பாதி படத்தில் சிக்கிவிட்டதே"


" நான்தான் ஹீரோயின்"


"சாம்பல் நிறமென்பதால் ஒருவருக்கும் என்னைப் பிடிக்கவில்லையோ?"


 "விஸ்வரூபம் பார்த்துவிட்டீர்களா? நான்தான் வெல்வேன்"

 "நீலச்சடடை வாங்கித் தரவில்லை என டூ விட்டுவிட்டாள்"


 "அவள் முன்னே நான் எப்பொழுதும் தலையாட்டும் பொம்மைதான்"


 "உப்புப் புளி இல்லாத அவளின் சாப்பாட்டைவிட இதற்குள் ஏதாவது ருசியாகக் கிடைக்கும்"


"எனது அழகுக்கு ஏற்ற ஜோடி இன்னமும் கிடைக்கவில்லை."
 

"காத்திருங்கள் இன்னமும் சில நாட்களில் சொக்கிளட் தருவோம்"


"என்னைக் கும்பிட கழுகுமலைக்கு வரவேண்டாம். இங்கேயே கும்பிடு போடுங்கள்"


 "நான் முடி சூடிய கிளியோபாட்ரா இராணியாக்கும்"


 "இவள் இங்கு வந்து என அழகைக் கெடுக்கிறாள்"


 "சோம்பேறிப் பசங்கள் காற்று வாங்குறாங்கள். நான் சாப்பிடப் போறன்"

" என்ரை கரண்டிதான் நீளம். இதாலைதான் குழம்பு அள்ளலாம்"


 "ஓட்டப் போட்டிக்கு நான தயார். யார் போட்டிக்கு வாறீங்கள்"


 மயிலக்கா அழகுப் போட்டிக்கு வருகிறாயா?


"அழகு கெட்ட இவளைக் கட்டி வைத்த அப்பனை என்ன செய்யலாம்?" 



"சுத்திப் பார்த்துக் களைத்துப் போனேன் கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வாறன்"

நீங்களும் காலாறிவிட்டு வாங்கோ. பார்க்க இன்னமும் நிறைய இருக்கு. கெதியா வரவேணும்"

மாதேவி

Friday, February 1, 2013

ரோஜா ரோஜா கண்ட பின்பே ......

ரோஜா மலரே ராஜகுமாரியில் தொடங்கி ரோஜா ரோஜா ....ரோஜா ரோஜா கண்ட பின்பே காதல் கொண்டேன்என சிலிர்த்து பல்வேறு பாடல்களில் தொடர்ந்து இடம் பிடித்து வருகின்றது ரோஜா.

பூவை விரும்பாதவர்கள் இருக்கின்றார்களா? காதலை வெளிப்படுத்த பெரும்பாலும் சிவப்பு ரோஜாக்களின் மலர்க் கொத்து பயன்படுத்தப்படுகிறது. திருமண சூட்டில் ரோஜா இடம் பிடித்துவருகின்றது. அன்பின் பரிசாக ரோஜா மலர்கள் பரிசளிக்கபட்டு வருகின்றன.


பாரம்பரியமாக நன்றி கூறுவதற்காகவும் ரோஜா மலர்களை பரிசாக அளித்து வந்திருக்கிறார்கள். ரோஜாக்கள் பல ரகங்களில் அமைந்து காண்போரை தம்வசம் இழுத்து பரவசத்தில் ஆழத்துகின்றன.

தமிழர் அக வாழ்விலும் புற வாழ்விலும் பூக்கள் முக்கிய இடம் பிடித்திருக்கின்றன. இறைவழிபாட்டிற்கு மலர்கள் அர்ச்சிக்ப்படுகின்றன. 'பூவார் மலர் கொண்டு அடியார் தொழுவார்...' என நாயனார் பாடினார். தமிழர் கலாசாரத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை பூக்கள்  பங்கு வகிக்கின்றன. பூக்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

மலர் அலங்காரம் கலையாக மிளிர்கின்றது. இலை தழை காய்ந்த தடிகள் இலைகளைக் கொண்டு அலங்கரிக்கும் இக்பானா அலங்காரமும் பிரசித்தமானது.

காதலின் சின்னமாக பத்து மலர்கள் பரிசாக வழங்கப்பட்டு வருகின்றன என்கிறார்கள். அதனுள் முதலிடம் சிகப்பு ரோஜாவிற்கு உள்ளது.


Rosacae குடும்பத்தைச் சார்ந்தது. ஆண்டு முழுவதும் பூக்கக் கூடியது. கொடியாகவும் மரமாகவும் வளரக் கூடியது. 100ற்கு மேற்பட்ட வகைகளுள் பல வித வண்ணங்களும் இவ் இனத்தில் இருந்தன. தற்போது ஆயிரத்துக்கு மேற்பட்ட சாரந்த இனங்கள் உருவாக்கப்படுள்ளன.

பூர்வீக இனத்திலிருந்து ஒட்டப்பட இனங்கள் பல உருவாக்கப்பட்டன. அழகினாலும் நறுமணத்தினாலும் பலரும்; ரோஜாவை விரும்பி வளர்க்கின்றார்கள். காட்டு ரோஜாக்கள் பல நிறங்களில் உள்ளன.


ரோசா ஆஸ்கன் மொழியிலிருந்து பெறப்பட்ட லத்தீன் வார்த்தையாகும்.

அத்தர் எனப்படும் நறுமணத் திரவம் ரோஜாவிலிருந்து தயாரிக்கப் பட்டது. ரோஜா மலர்களிலிருந்து நீராவி முறையில் பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெய் தயாரிக்கிறார்கள். 1 கிராம் எண்ணெய் தயாரிக்க சுமார் 2000 பூக்கள் தேவைப்படுகின்றன. ரோஜா இதழ்களின் சாறிலிருந்து ரோஜாப் பானகம் தயாரிகப்படுகிறது. இது பிரென்ஞ் மக்களிடையே பிரபலமானது.


Rose water, rose essence கேக் புடிங்,சமையல்களில் பயன்படுத்தப்படுகிறது.

இதன் பழம் ரோஜாவின் இடுப்பு என அழைக்கப்படுகின்றது. பழக்கூழ்ப் பாகு செய்யப்படுகின்றது.

இதில் அடங்கியுள்ள விற்றமின் 'சீ' க்காக தேநீரில் காய்ச்சப்படுகின்றது

இளம்சிவப்பு ரோஜாக்கள் நன்றி சொல்வதற்காகவும் சில கலாச்சாரங்களில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றது.

மஞ்சள் ரோஜா மகிழ்ச்சியின் அடையாளமாகக் கருதப்படுகின்றது. உற்சாகப்படுத்துவதற்காக மஞ்சள் நிற மலர்கள் பரிமாறப்படுகின்றன. நட்புணர்வையும் வளர்க்கின்றது.


செம்மஞ்சள் ரோஜா மதிப்பு அளிக்கும் அடையாளமாக விளங்குகிறது. ஒருவரை மதிப்பளிக்க செம்மஞ்சள் ரோஜாவை வழங்குகிறார்கள்.


வெள்ளை ரோஜா தூய்மையின் அடையாளமாக விளங்குகிறது. கௌரவம் மதிப்பையும் தருகின்றது. தொடக்க காலத்தில் காதலின் குறியீடாகவும் பயன்படுத்தினர்.


வெள்ளை ரோஜாக்கள் மரணமடைந்தவர்களுக்கு வைத்து வணங்கப்பட்டும் வருகின்றது.


ஊதாநிற ரோஜா ராஜ குடும்பத்துடன் தொடர்புடையதாக கருதப்பட்டு வந்திருக்கின்றது.

http://www.floristworks.com.au/flowers/black-roses/Red-roses-bouquet.jpg

ரோஜா இதழ்களை நீரில் இட்டுக் குளிப்பதால் நறுமணம் கிடைப்பதுடன் சர்மநோய்களுக்கும் நல்லது என்கிறார்கள்.

பழங்கால கிரேக்கர்களும் உரோமானியர்களும் ரோஜாவை தமது காதல் தேவதைகளான வீனஸ். அபிரோடைட் இன் அடையாளம் எனக் கருதினார்கள்.

ரோம் நகரத்தில் இரகசிய விவாதங்கள் நடக்கும்போது அறையின் வாசலில் ஒரு காட்டு ரோஜா வைக்கப்பட்டது. 1800 களில் ஐரொப்பாவில் சீனாவிலிருந்து பூக்கும் ரோஜாக்களின் அறிமுகத்துடன் ரோஜா வேளாண்மை ஆரம்பித்தது.

இங்கிலாந்தின் தேசிய மலர் ரோஜா.

ரோஜா வளர்ப்பில் பெரும் பங்கு வகிப்பது அமெரிக்காவின் 'டெக்ஸாஸ் இன் டைலர்' அமெரிக்காவின் ரோஜாத் தலைநகர் என்ற புனைபெயர் இதற்கு உண்டு. ஓவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 'டெக்சாஸ்' ரோஜாத் திருவிழாவை நடாத்துகிறது. இது ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும்.

இலங்கையில் நுவரெலியா மாவட்டம் ரோஜாவிற்கு புகழ்பெற்றது. இங்கு ரோஜாத்தோட்டங்கள் பலவும் அமைக்கப்பட்டுள்ளன..

இது Albrighton, Shrophshire.விலுள்ள David Austin Rose Gardens




மாதேவி

Monday, December 17, 2012

Beira லேக்கில் ஒரு குட்டித் தீவு

லேக் ஓரமாக நடந்து செல்கின்றோம். மேலே சற்று உயர ரோட்டில் வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.




சாலை ஓர பெரிய மரங்கள் கிளைவிரித்து நிற்கின்றன.



 பல மரங்களின் அடிப்பாக வேர்கள் சிமெந்து தரையில் வேர் பாச்சி வெளித்தள்ளி முறுகிப் பருத்துக் காணப்படுகின்றன.

லேக் ஓரம் பேரீச்சமரம் குலை தள்ளி நிற்கின்றது. அடடா... பறித்துச் சாப்பிடாமல் விட்டுவிட்டார்களே.


காக்கைக் கூட்டத்தாரும் எங்கிருந்தோ சுட்டு வந்த தேங்காய் மூடியை கொத்தித் தின்னுகின்றன.

 

லேக்கில் கூளக்கடாக்கள் குடில் அமைத்து இனிய இல்லறம் நடத்துகின்றன. சில அடிதடிகளும் அவர்களுக்குள்.

 


பிரமச்சாரி ஒருவர் தனி உலகில் நீந்தி மகிழ்கின்றார்.


பல அன்னப் பட்சிகளும் நீந்தி மகிழ்கின்றன. நாமும் பட்சியுடன் பட்சியாக மாறி நீரில் ஓடி மகிழ்கின்றோம். அம்மாவின் முதுகில் குட்டியார் ஏறிச் சவாரி செய்கிறார்.



மாலைச் சூரியன் நீரில் தெறித்து ஒளி தருகின்றான்.



வாத்துக் கூட்டத்தாரும் ஓட்டப் போட்டி வைத்து மகிழ்கின்றார்கள்.


லேக் ஓரமிருந்து குட்டிப் பூங்காத் தீவிற்கு அலுமினிய சீட் பூட்டிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.



கீழே லேக் நீர் ஓட பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்று பூங்காவை அடையலாம். நீர் ஓட்டத்தில் பாலத்தில் நடந்து செல்லும்போது பாலமே ஆடுவதுபோல உணர்வு ஏற்படுகிறது. விரைந்து நடந்தால் அலுமினிய சீட்டின் தாம்தோம் சத்தமும் பயமுறுத்துகிறது.

ஜோடி ஜோடியாகவும் குடும்பமாகவும் பலர் பாலத்தைக் கடந்து குட்டித் தீவிற்கு வருகின்றார்கள். பாலத்திலிருந்து அன்னப் பட்சிகள் ஓடித்திரியும் அழகையும் கூளக்கடாக்கள் சிறகு விரித்து வானத்தில் பறக்கும் அழகையும் கண்டு களிக்கலாம்.



குட்டிப் பூங்காத் தீவில் மரங்களின் கீழே இருக்கைகள் அமைத்துள்ளார்கள்.



அமர்ந்திருந்து லேக்கின் மறுகரையையும் சுற்றியுள்ள கட்டடங்களையும் கோவிலையும் பார்த்து மகிழலாம்.




சிறுசிறு அழகிய மரங்கள் குட்டித் தீவின் ஓரமாக நாட்டப்பட்டுள்ளன. பூஞ்செடிகள் கரையோரமாக நிரையாக நின்று பூத்துக் குலுங்கி கண் சிமிட்டுகின்றன.




தீவின் நடுவே கூடாரம் அமைத்து மக்கள் அமர்ந்திருக்க வசதி செய்துள்ளார்கள்.




பலரும் வந்திருந்து நாட்பொழுதை இனிமையாகக் கழித்து செல்கின்றார்கள்.
வெளிநாட்டினரும் வருகின்றார்கள். நாங்கள் சென்ற நேரம் சீன நாட்டவர்கள் வந்து அமர்ந்திருந்தார்கள்.

குட்டித் தீவைப் பார்க்க மிகவும் சுறுசுறுப்பாக ஒரு அழகிய வெள்ளையரும் வோக்கிங் வருகின்றார். அவரின் மகிழ்ச்சியைப் பார்த்து நாங்கள் குதூகலிக்கின்றோம்.


தீவிற்கு நடுவே அமைந்திருந்த சிறிய சுற்றுச் சுவரில் அமர்ந்திருந்து சூழலை ரசித்தோம். சூரியனும் இருள் சூழ மறைந்து இறங்குகின்றான். மக்கள் வீடு திரும்புகிறார்கள்.



விளையாடி மகிழ்ந்த குழந்தைகள் மனமின்றி எப்போ திரும்பி வருவோம் என பெற்றோரிடம் கேட்டபடி சென்றார்கள்.


வெள்ளைக் குட்டியாரும் ஓடித் திரிந்து மகிழ்ந்து ஓய்ந்து களைத்து நிற்கின்றார்.


நாங்களும் படங்களைக் கிளிக்கிக் கொண்டு பாலத்தால் நடந்து வருகின்றோம்.

நீரில் சூரியக் கதிரும் பட்டு செவ்நிறமாக தெறிக்கின்றது.

பாலத்தால் இறங்கி படிகளில் ஏறி வீதிக்கு வருகின்றோம்.






ஐஸ் வண்டியும் நிற்கின்றது.






ஒருவர் அமைதியாக மரத்தின கீழ் கண் மூடி அமர்ந்திருக்கின்றார். 
நாம் ரோட்டைக் கடந்து மறுபுறம் வருகின்றோம்.


கோவறு குதிரையார் ஒருத்தர் தெருவோரம் உள்ள காணியில் புல் மேய்ந்து கொண்டு நின்றார்.


சிறிது தூரம் நடந்து விட்டு நாமும் இனிதாக வீடு திரும்பினோம்.


மாதேவி.